seshasamuthiram 600

1

கடந்த 15-8-2015 69ஆம் ஆண்டு சுதந்திரத்தை இந்திய ஆளும் வர்க்கமும், பாசிச மோடி கும்பலும் கோலாகலமாக கொண்டாடி முடிப்பதற்குள் பொது வீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் தேர் இழுக்க சுதந்திரமில்லை என ஊரையும் தேரையும் கொளுத்தி சாதி வெறியர்கள் இந்த நாட்டில் ‘சுதந்திரம் இல்லை’ என பறைசாற்றி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் சந்திப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ. மக்கள் விடுதலை கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ராமர், குப்புசாமி, கோபாலகிருஷ்ணன், ராஜசேகர், சாதி ஒழிப்பு முன்னணி அமைப்பின் பொதுச்செயலாளர் சிவராமன், ரமணி ஆகிய தோழர்கள் அடங்கிய குழு ஒன்று அப்பகுதிக்கு சென்று மக்களின் நிலவரங்களை ஆராய்ந்ததன் விவரம்.

விழுப்புரம் மாவட்டம் அங்கராபுரம் வட்டம் சேசசமுத்திரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் காலங் காலமாக மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தியும் மாட்டு வண்டியில் அம்மன் வீதியுலா வருவதும் வழக்கம். 2011ம் ஆண்டு வீதியுலாவிற்கு தேர் செய்வது என முடிவு செய்தனர்.

அதே ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட சுப்பிரமணியன் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்கும் படியும் அப்படி வாக்களித்தால் தேர் செய்ய நிதி தருவதாகவும் கேட்டுக் கொண்டார். அதே போல் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்து சுப்பிரமணியனை வெற்றி பெற செய்தனர். சுப்பிரமணியன் 1 இலட்சம் நிதியளித்து 4 இலட்சம் செலவில் தேர் செய்யப்பட்டது.

2012 இல் தேர் செய்து சுப்பிரமணி மற்றும் வன்னியர்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் இணைந்து தேர் வெள்ளோட்டம் இடப்பட்டது

2

குறிப்பாக மலைமேல் உள்ள முருகன் கோவிலில் அலகு குத்தி திருவிழா எடுக்கும் போது பறையர்களும் வன்னியர்களும் இணைந்தே கொண்டாடினார்கள். இதுவரை சாதி ரீதியான முரண்பாடுகள் பெரிதாக இல்லாத நிலையே நீடித்தது. சுப்பிரமணியனிடம் ஊராட்சி மன்ற தேர்தலில் தோல்வியுற்ற சின்னத்துரை சுப்பிரமணியனை பழிதீர்க்க மட்டுமே பொது வீதியில் தேர் இழுக்கக் கூடாது என பிரச்சனையை துவக்கினார். சின்னத் துரையின் சூழ்ச்சிக்கு பலியான வன்னியர்கள் பொது வீதியில் தேர் இழுப்பதற்கு எதிராக திரண்டனர். சுப்பிரமணியன் வன்னியர்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள சின்னத்துரையின் கோஷத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சேசசமுத்திரம் சாதி ரீதியான பிளவிற்கு சுப்பிரமணியன், சின்னத்துரை போட்டி அரசியலே காரணம்.

2012 திருவிழாவின் போது தேர் இழுக்க தடை விதித்தது மாவட்ட நிர்வாகம். கடந்த நான்காண்டு காலமாக 29 முறை பேச்சுவார்த்தை என்ற பெயரில் வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் சாதிய மனோபாவத்தோடும் நடந்து கொண்டது மாவட்ட நிர்வாகம்.

இறுதியாக 18-8-2015 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தேர் இழுப்பதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கினாலும் கலவரம் வருமென எதிர்பார்த்து கள்ள மௌனத்தோடு இந்த பணியை செய்து இருக்கிறது.

3

தேரோட்டத்தைத் தடுக்கமுடியாத சாதி வெறியர்கள் 14-8-2015 அன்று கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்த அன்புமணியைச் சந்தித்து ஆசிப்பெற்று வந்தனர்.

15-8-2015 அன்று மதியம் பாமக மாவட்ட தொண்டர் அணி செயலர் பாலு சேசசமுத்திரம் வந்து கலவரத்திற்கான திட்டங்களைத் தீட்டிக் கொடுத்துள்ளார். வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பெண்கள் இரு பிரிவாய் பிரிந்து ஒரு பிரிவினர் சாலை மறியல் செய்தும் ஒரு பிரிவினர் மலையிலிருந்து கல்லை எடுத்தும் வந்துள்ளனர். ஆண்களில் ஒரு பிரிவினர் பெட்ரோல் குண்டு வீசுவதும் மற்றொரு பிரிவினர் தேர் மற்றும் வீடுகள் டிரான்ஸ்ஃபாரம் மீதும் தாக்கினர். பல்வேறு முனைகளில் இருந்து தாக்குதல் வந்ததை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறை தடுமாறியது. ஏழு காவலர்கள் தாக்கப்பட்டனர். ஐந்து வீடுகள் எரிக்கப்பட்டன. பீரோக்கள் உடைத்து அனைத்து வீடுகளிலும் பணம் மற்றும் நகை திருடப்பட்டது. இரு சக்கர வாகனம் மற்றும் தேர் எரிக்கப்பட்டது. ஆறு மணி முதல் இரவு இரண்டு மணி வரை தாக்குதல் நடந்து கொண்டிருந்தது.

தாக்குதல் நடந்து 15 நாட்கள் கழித்து 144 தடை உத்தரவு அந்த இரவும் காவல் துறை பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்பொழுதே மீண்டும் இரண்டு வீடுகள் கொளுத்தப்பட்டது. இந்த தாக்குதலை நேரடியாக பார்த்து காவல் துறையினர் இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் குற்றப்பின்னணி கொண்ட வெளியூர் ஆட்களால் நடத்தப்படுகிறது என்று கூறுகின்றனர்.

 நான்கு ஆண்டுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனையில் தேரை ஓட்ட அனுமதித்த மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் கலவரம் வரும் என்பது நன்கு தெரிந்திருக்க வேண்டும். கலவரம் வரும் என்று தெரிந்தும் பாதுகப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் செயல்பட்ட மாவட்ட நிர்வாகம் கலவரத்தை எதிர்பார்த்தே செயல்பட்டிருக்கிறது.

4

நடைபெற்ற தாக்குதல் என்பது முழுக்க முழுக்க தர்மபுரி தாக்குதலைச் சார்ந்தே நடந்துள்ளது. பா.ம.க தனது தர்மபுரி அனுபவத்தை அச்சு பிசகாமல் செய்து காட்டியுள்ளது.

தலித்துக்களையும் இந்துக்களாக கூறும் ப.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தேர்மீது நடத்தப்பட்டதாக்கு தலை கோவில் விழாவில் ஏற்பட்ட தாக்குதலை பார்த்து இப்போது குதிக்கவில்லை.

மனுச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய வன்னியர்களின் வீரத்தை கண்டு பூரித்துள்ளனர். தாக்கப்பட்டுள்ள மக்களைக் கண்டு ஆறுதல் கூறக்கூட அமைப்புகளைத் தடுத்த காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களை ஒரு அகதி முகாமில் அகதிகளைப் போல் நடத்தி தனது ஜனநாயக விரோதத்தை வெளிப்படுத்துகிறது. சேசசமுத்திரம் தாக்குதல் என்பது உள்ளூர் அரசியல் போட்டி களாலும் பிறகு பா.ம.க. அரசியல் இலாப வெறிக்கும் நடத்தப்பட்டது என்றாலும் சுயநல அரசியல் வாதிகளிடம் சாதிய சக்திகளும், அரசும் இணைந்துகொண்டு ஒற்றுமையாக அமைதியாக வாழும் மக்களை சாதிவெறி ஊட்டி கலவரத்தைத் தூண்ட முடியும் என்பதற்கு சேச சமுத்திரம் மற்றுமோர் எடுத்துக்காட்டு.