கீற்றில் தேட...

கடந்த செப்டம்பர் 11 (2011) அன்று தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளில் பரமக்குடியிலும் மதுரையிலும் ஒன்றுதிரண்ட மக்கள்  மீது துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டது. தியாகி இம்மானுவேலின் நினைவு நாள் அரசியல் எழுச்சி நாளாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வந்த ஒரு கால கட்டத்தில் தான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையே காரணம் காட்டி இனி வரும் ஆண்டுகளில் அந்த நாளை அரசியல் முதன்மைத்துவமற்றதாக மாற்றவும் ஒரு கலவர நாளாக ஆக்கவும் அரசு முயலும். இந்த ஆண்டு பலத்த காவல்துறை கெடுபிடி, செக்போஸ்ட்கள், இன்னும் அதிகமான துப்பாக்கிகள் என்று மக்களைப் பீதியூட்டுவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கலாம். இதற்கெல்லாம் முன்னோட்டம் போல 10 நாட்களுக்கு முன் மதுரையில் அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சேகரனின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

காலம் காலமாக அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் மக்களுக்கு அவ்வப்போது வரலாற்றில் கிடைக்கும் தலைவர்கள் அடிமை விலங்கொடிக்க வந்த விடுதலை மீட்பராக அமைகின்றார்கள். அவர்கள் அத்தலைவர்களைத் தலைமேல் வைத்து கொண்டாடுகின்றார்கள். வரலாறு தோறும் கைவிடப்பட்டவர்களாக உணரும் மக்களுக்கு தம்முடைய எழுச்சிக்கான அடையாளங்களும் குறியீடுகளும் இன்றியமையாததாகின்றது. இப்படித் தான் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக தென் தமிழகத்தில் மிகுதியாகவும் ஏனைய பிற பகுதிகளில் விரவியும் வாழும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எழுச்சிக்கான குறியீடாக உருவாகியுள்ளது. முதுகுளத்தூர் கலவரம் நடந்த நாட்களில் இம்மானுவேல் சேகரன் அந்த வட்டாரத்தில் மட்டும் அறியப்பட்டவராக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்படி அல்ல. தமிழகம் எங்கும் விரவி வாழும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு வரலாற்று நாயகனாக விளங்குகிறார். அவருடைய நினைவு நாளில் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் மக்கள் பரமக்குடி நோக்கிப் பயணிக்கின்றனர்.

அவர்களின் இந்த எழுச்சி தான் சாதிய சமூகத்தால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கின்றது. அடக்கப்பட்ட மக்களின் எழுச்சியானது அராஜகமாக, அத்துமீறலாக, சட்டத்துக்கு புறம்பானதாக சித்தரிக்கப்படுகின்றது. இந்தக் காழ்ப்புணர்ச்சிதான், வன்முறைகளாகவும் கலவரங்களாகவும் அரசே நடத்தும் தடியடி, துப்பாக்கிச் சூடுகளாகவும் வெளிப்படுகின்றது. அது மட்டுமின்றி, எழுச்சியின் முகமாக வரும் தலைவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதும் தொடர்கின்றது. இந்த ஆண்டில் தான் பசுபதி பாண்டியனும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார் என்பது இங்கே கவனிக்க வேண்டியது.

50 ஆண்டுகளுக்கு முன்பாகவே இம்மானுவேல் சேகரன் போல் ஒரு தலைவரைப் பிரசவித்துக் கொண்ட ஒரு சமூகம் இயல்பாகவே தன்னை அணி திரட்டிக் கொண்டு ஒரு பாய்ச்சலில் முன்னகர்ந்திருக்க வேண்டும்.  ஆனால், வரலாற்றின் கெடுவாய்ப்பாக அது முழுமை அடையவில்லை. இன்னொருபுறம், முரண்பட்ட சமூகங்களில் மற்றொன்றான முக்குலத்தோர் தரப்பு, தம்மை அரசியல் கோரிக்கைக்காக அணி திரட்டி கொள்ளாமல் சாதிப் பெருமைவாதமாக மட்டுமே அணி திரட்டிய நிகழ்ச்சிப் போக்கும், தென் தமிழகத்தில் போதிய தொழில் துறை வளர்ச்சி ஏற்படாததும் ஆதிக்க சாதியின் அடக்குமுறை என்பது இன்னும் பழைய பாணியிலேயே வன்முறையாக வெளிப்படுவதற்குக் காரணிகளாக அமைகின்றன.  இத்தகைய சூழலே தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ’ஆண்ட பரம்பரை’ அரசியல்  கருத்துருவாக்கத்திற்கான அரசியல் வெளியைக் கொடுத்திருக்கின்றது. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் நேரடி வன்முறை கட்டத்தைக் கடந்து நகரும் வட தமிழகத்து அரசியல் வளர்ச்சிப் பாதை இதை நமக்கு உணர்த்துகின்றது.

இந்தப் பின்னணியிலிருந்துதான் நாம் பரமக்குடி படுகொலைக்கான எதிர்வினையைத் திட்டமிட வேண்டும். சாதிய அடக்குமுறைக்கு எதிரான எழுச்சிக்கு பல தடைகளைப் போடுகின்றது இந்தச் சாதிய சமூகம். போதாக்குறைக்கு அதைப் பிரதிநித்துவப்படுத்தும் பார்ப்பனிய அரசு துப்பாக்கிக்களைத் திருப்புகின்றது. எப்போதும் போல, ஆதிக்க சாதி உளவியல்,  இம்மானுமேல் சேகரனை குறிப்பிட்ட ஒரு சாதியின் தலைவராக சுருக்குவதன் மூலம் சாதி ஒழிப்புக்கான போராட்டமாக அது வளர்த்தெடுக்கப்படுவதற்கு முட்டுக் கட்டை போடுகின்றது.

ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கான குறியீட்டு நாள்; சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் குருதி சிந்திய நாள்; இதனாலேயே சாதி ஒழிப்புக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் இருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு நாள்; சாதி ஒழிப்பைக் கருத்தியலாகக் கொண்ட அத்தனை ஜனநாயக ஆற்றல்களும் போற்றும் நாள் என்று செயல் பூர்வமாக நிறுவ வேண்டும். இதன் ஊடாக, சாதி அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டத்திற்கு புது வேகம் ஊட்ட வேண்டும்.

இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளில் பரமக்குடி நோக்கி மக்கள் அணி திரள்வது சாதி தமிழர்களுக்கு தாங்க முடியாததாக இருக்கின்றது. அப்படி எனில், பரமக்குடியையும் தாண்டி, இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை, பொதுக்கூட்டங்கள் வாயிலாக ஆதிக்க சாதித் திமிருக்கு எதிரான குறியீட்டு நாளாகப் போற்றுவோம். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதை அரசியல் நிகழ்வாக முன்னெடுக்கும் போது, ஆதிக்க சாதி மனநிலையைக் கேள்விக்குள்ளாக்க முடியும். மறைக்கப்பட்ட வரலாறு மக்களுக்குப் போய்ச் சேரும். எல்லாவற்றுக்கும் மேலாக, வரலாற்றை மாற்றி எழுதி மார் தட்டிக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்தும்.

வழக்கமாக ஒரு ஒடுக்குமுறை நிகழ்த்தப்படும் பொழுது சில நாள் கண்டனங்களோடு அதை மறந்து விடுகின்றோம். நாம் எதிர்வினை ஆற்றுவது கூட மிக மென்மையாகவே அமைகின்றது. இம்முறையாவது அரசியல் ரீதியிலான ஒரு தாக்குதலைத் தொடுப்போம். சுருக்கமாகக் கூறின், சாதி ஒழிப்பு அரசியலை இலக்காகக் கொண்ட தேசிய, புரட்சிகர, முற்போக்கு இயக்கங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையே இது. சாதி ஒடுக்குமுறையின் ஆறாத வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் தரும் அரசியல் பதிலடியாக இது அமையும். 

- சேவ் தமிழ்ஸ் இயக்கம்