'வாலு போயி கத்தி வந்தது; டும் டும் டும்' என்று ஒரு குரங்கு கூறுவதாகக் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவார்கள். அது போல இந்திய அரசு பயனற்ற கதைகளை மக்களுக்குக் கூறிக் கொண்டு இருக்கிறது. கடந்த பா.ஜ.க. ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அனைவருக்கும் கல்வி எனும் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, இந்து மதப் பஜனைப் பாடல்களைப் பாடவும், பள்ளிக் கூடங்களை வழிபாட்டு இடங்களாகப் பயன்படுத்தவும் செலவழித்தார்கள்.

govt hospitalஅதன் பின் 2010ஆம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டம் என ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25%, கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும். ஆனால் தனியார் பள்ளிகள் எதுவும் இதை அமல் படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. சில பள்ளிகள் உண்மையான ஏழை மாணவர்களை இச்சட்டத்தின் கீழ் அனுமதிக்க மறுத்து, உயர்சாதிக் கும்பலினரை 'ஏழைகள்' என்று பெயரிட்டு, அவர்களை அனுமதித்து, இச்சட்டம் என்ன நோக்கத்திற்காகப் பயன்பட வேண்டுமோ, அதற்கு நேர் எதிராகச் செயல்படுத்தினார்கள்; செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

இவ்வாறு கல்வி உரிமைச் சட்டத்தை "வெற்றிகரமாக" நிலைநாட்டிய பிறகு, இப்பொழுது ஆரோக்கிய உரிமைக்காக வரிந்து கட்டிக் கொண்டு எழுந்து இருக்கிறார்கள். இந்திய அரசு 31.1,2015 அன்று இந்திய மக்கள் மருத்துவச் சிகிச்சை பெறுவதை அடிப்படை உரிமையாக ஆக்கும் சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அறிவித்து உள்ளது.

இந்தியாவில், மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு, இந்திய அரசு என்ன செய்கிறது என்று ஆராய்ந்த உலக வங்கி, ஏழை மக்கள் தங்கள் மருத்துவச் சிகிச்சைக்காக 70% செலவைத் தாங்களே ஏற்க வேண்டி இருக்கிறது என்று 21.12.2014 அன்று பது தில்லியில் கூறி உள்ளது. பணக்காரர்கள் / முதலாளிகள் செய்யும் மருத்துவச் செலவு, அவர்கள் ஈடுபட்டு உள்ள தொழில்களில் கணக்கு காட்டப்பட்டு, உற்பத்திச் செலவோடு இணைந்து விடுகிறது. அதாவது பணக்காரர்கள் / முதலாளிகள் மருத்துவச் செலவுகள் செய்தாலும், உண்மையில் அவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை கிடைக்கிறது. ஆனால் ஏழைகளுக்கு இலவசச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி விட்டு 70% செலவை அவர்கள் தலையிலேயே அரசு கட்டி விடுகிறது.

இக்கொடூரத்தை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை. ஆளும் கட்சி இதைக் கண்டு கொள்ளவில்லை என்றால், எதிர்க் கட்சிகளும் (ஆளும் கட்சியாக வர வேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டு) இக்கொடுமைகளை எதிர்க்க மறந்து / மறுத்து வருகின்றன. ஆனால் வேறு சிந்தனை இல்லாது இருந்தால், மக்கள் ஒரு வேளை இதைப் பற்றி சிந்தித்து எழுச்சி பெற்று விடுவார்களோ என்ற அதீத முன் எச்சரிக்கையாகவோ என்னவோ, ஆரோக்கியத்தை அடிப்படை உரிமையாக ஆக்கப் போவதாகவும், மருத்தவச் சிகிச்சை அளிக்க மறுப்பதைக் குற்றச் செயல் என அறிவித்து, அவர்கள் மீது வழக்கு தொடுத்து, தண்டனை அளிக்கப் போவதாகவும் இந்திய அரசு அறிவித்து உள்ளது.

ஆரோக்கியத்தை / மருத்துவச் சிகிச்சையை அடிப்படை உரிமையாக ஆக்க வேண்டும் என்றால், அதற்கு முதல் படியாக மருத்துவச் சிகிச்சை இலவசமாக இருக்க வேண்டும்; இலவசமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று இருந்தால் அல்லவா முடியும்?

கோடிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்து மருத்துவ மனைகளைக் கட்டி, அங்கு "தொழில்" செய்து கொண்டு இருப்பவர்களிடம், ஏழை மக்கள் எப்படி மருத்துவச் சிகிச்சையைப் பெற முடியும்? அவர்களால் சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்த முடியாதே? இலவச மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும் அரசு மருத்துவ மனைகளில் / அறக்கட்டளை மருத்துவ மனைகளில் இட வசதியும், மருந்துகளும், மருத்துவச் சிகிச்சைக் கருவிகளும் போதிய தரத்திலும், போதிய அளவிலும் இல்லையே? இந்நிலையில் தகுந்த மருத்துவச் சிகிச்சையைப் பண வசதி இல்லாத மக்கள் எப்படி அடைய முடியும்? பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே, மருத்துவ மனைகளைக் கட்டி வைத்து இருக்கும் தனியார் மருத்துவ மனைகளில், இலவச மருத்துவச் சிகிச்சையை அளித்தே தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியுமா? அது நிச்சயம் முடியாது. அப்படி என்றால் ஆரோக்கியத்தை அடிப்படை உரிமையாக்கும் சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக எப்படி, ஏன் கூறுகிறார்கள்?

உண்மையில், அப்படிப்பட்ட சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தாலும், இப்போது உள்ள நிலைமையில் மாற்றம் எதுவும் ஏற்படாது. மக்கள் மட்டும் ஆரோக்கியம் அடிப்படை உரிமையாகி விட்டது என்று மனதளவில் கற்பனையான சுகத்தை அனுபவிக்க வேண்டும். அவ்வளவு தான். அனைவருக்கும் கல்வி எனும் சட்டம் செயல்படாமல் இருப்பது போல், ஆரோக்கிய உரிமைச் சட்டமும் ஒரு கற்பனைப் பொருளாகவே இருக்கும்.

கல்வி உரிமைச் சட்டம் வந்தது; டும் டும் டும். ஆரோக்கிய உரிமைச் சட்டம் வருது; டும் டும் டும்.

கல்வியும் மருத்துவமும் இலவசமாக இருக்க வேண்டும்; இலவசமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற இலக்கைப் போராடி அடையாமல் விடிவு இல்லை டும் டும் டும் டும் டும் டும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 114.2..2015 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It