கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

'காதல் நாடகத்தால் உடல் சுகத்தையும் பணத்தையும் அனுபவிக்கும் சாதிவெறி
உறவின் உரிமை கேட்டால் உயிரை பறிக்கிறது.
சாதி வெறிக்கும் காமவெறிக்கு காவல் காக்கும் காக்கி
பெண்கள் மீதான தோட்டாக்கள் தான் எத்தனை? எத்தனை?...
உண்ணாமுலை அண்ணாமலை அருள் பாலிக்கும்
தீப நகரில் சாதீ… வெறி கொடூரம்'

- என்ற சமூகவலைத்தள தகவல் அறிந்து நமது குழு களத்தில் நடத்திய விசாரணையில்…

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளி கணேசன், ராணி தம்பதிகளுக்கு 2 பெண் பிள்ளைகள் ஒரு ஆண்மகன், மழை வெயில் என்று பாராமல் கூலி வேலை செய்து தன் பிள்ளைகளை படிக்க வைத்த தம்பதிகளின் வலிகளை உணர்ந்தவர்களாய் வளர்ந்த பிள்ளைகள், இரண்டாவது மகள் வினோதா வயது 23.

vinodhaமிகவும் ஏழ்மையான தலித் பட்டியலின குடும்பத்தைச் சார்ந்த இவர் 2019-ம் ஆண்டில் TNPSC மூலமாக தேர்வெழுதி, அதே ஆண்டு மார்ச் 25ல் திருவண்ணாமலை (additional District Judge Court) நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராக பணியில் சேர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐஸ்வர்யா பெண்கள் விடுதியில் தங்கி பணி செய்து வந்துள்ளார்.

பின்பு மீண்டும் TNPSC குருப் 2A எழுதி, 2021 ல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் சென்னையில் பணியில் சேர்ந்துள்ளார்.

திருவண்ணாமலையில் பணிபுரிந்தபோது, தன்னுடன் பணியாற்றிய மதுரை சுண்ணாம்பு கார தெரு நேதாஜி ரோட்டில் வசிப்பதாக FIR ல் கூறப்படும் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் s/o முருகன் (வயது 37 என கூறப்படுகிறது) என்பவனும் மனம் விரும்பி காதலித்து வந்துள்ளனர்.

2019, 2020, 2021 என மூன்று வருடமாக திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளான். அதோடு ஒட்டுமொத்த சம்பளத்தையும் அவனே பெற்றுள்ளான். (இதில் காக்கி அதிகாரியின் வாக்குமூலம் காதலின் பெயரால் காமத்தையும் தீர்த்துக் கொண்டான் சுந்தரராஜன் என்பது)

இந்நிலையில் அவனுக்கு அவன் சாதியில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன.

இதையறிந்த சகோதரி தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 07.03. 2021 ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த வினோதா வேங்கிக்காலில் சுந்தரராஜன் குடியிருந்த இந்திராநகர் கிழக்கு தெரு வீட்டிற்கு வந்து நியாயம் கேட்டுள்ளார் இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது.

பாவி சுந்தரராஜன் என் மகளை அநியாயமாக கொலை செஞ்சி எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையே இருள் ஆகிட்டான் எப்படி நாங்க வாழ்வோம் என வினோதா பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆறா கண்ணீருடன் அழுது புலம்பினர்.

நாம் அவர்களை ஆறுதல் ஆசுவாசப்படுத்தி நடந்தவைகளை கேட்டறிந்ததில் புகார்தாரரான வினோதா வின் அண்ணன் பத்தாம் வகுப்பு படித்த கரும்பு வெட்டும் தொழிலாளியான வினோத் நம்மிடம் கூறியது,

07/03/2021 இரவு 10 மணி அளவில் எனது தங்கை வினோதாவின் செல் நம்பர் 99 43052054 என்ற எண்ணிலிருந்து எனது செல் எண் 8220496645 என்ற எண்ணுக்கு வந்த போன் கால், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸ் பேசுவதாக வந்த ஆண் குரல், உங்கள் தங்கை வினோதா இறந்துவிட்டார் நீங்கள் உடனடியாக புறப்பட்டு திருவண்ணாமலை GH க்கு வாங்கள் என்று கூறியது, நாங்கள் அலறியடித்துக் கொண்டு காரில் இரவே திருவண்ணாமலை GH க்கு சென்றோம்.

அவசர சிகிச்சைப் பிரிவில் கேட்டதற்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்நிலைய பூத்தில் கேளுங்கள் என்று அனுப்பி வைத்தனர். காவல் நிலைய பூத்தில் விசாரித்ததில் அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று தெரிவித்தனர். அதனால் அப்பொழுதே நாங்கள் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்து விசாரித்தோம்.

அங்கிருந்த காவலர்கள் எஸ்ஐ பார்த்தசாரதி வரணும் அவர்தான் உங்க கேசை பார்க்கிறார் வெயிட் பண்ணுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் காவல் நிலையத்தில் காத்திருந்தோம் அந்த வேளையில் அங்கிருந்த காவலர்கள் மூலமாக எனது தங்கை வினோதா நெத்தியில் பெரிய வெட்டு காயத்துடன், மற்றும் தலையில் வெட்டுக் காயத்துடன், சுடிதார் டாப் மட்டும் போட்ட நிலையில் பேண்ட் இல்லாமல், மற்றும் பாத்ரூமில் கிடப்பது போன்றும் முகம் முழுவதும் ரத்த கசிவு படர்ந்த நிலையில் என் தங்கை இறந்த நிலையில் சடலமாகக் கிடப்பது போன்ற போட்டோக்களை எனது செல்போனுக்கும் என் மைத்துனர் செல்போனுக்கும் அங்கிருந்த காவலர்கள் செல்போன் மூலம் படங்களை பரிமாறினர்.

படங்களைப் பார்த்த நாங்கள் ரத்தம் உறைந்து திகில் உறைந்த நிலையில் ஆனோம். ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகு இரவு மணி 12 அளவில், எஸ்ஐ பார்த்தசாரதி வந்தார். எங்களைப் பார்த்து வாங்கய்யா உன் தங்கச்சி சுந்தரராஜனுக்கு மூணு நாலு முறை அபாசன் பண்ணியிருக்கா, இன்னைக்கு மட்டும் மூணு முறை செக்ஸில் இருந்திருக்கா, தூக்குல தொங்கிட்டாயா என்றார்.

எங்கள் நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது அவமானத்தால் கூனிக்குறுகி மூச்சுமுட்டி அழுதோம். எங்கள் பிள்ளை அப்படிப்பட்டவர் கிடையாது என்று கூறிய எங்களிடம், எஸ் ஐயும், ரைட்ட்டரும், சரியா நாங்க சொல்ற மாதிரி எழுதி கையெழுத்து போட்டு குடுங்க உட்காருங்க என எங்களை உட்கார வைத்து அவர்கள் நாங்கள் என்ன எழுத வேண்டும் எனக் கூறினார்.

எனது மூத்த சகோதரியின் கணவர் ராஜசேகர் அவர்கள் கூறியவற்றை அவர்கள் கொடுத்த வெள்ளைத்தாளில் எழுதினார். பின்பு எஸ் ஐ, யும் ரைட்டரும் என்னிடம் பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே படுத்துக் கிடந்தோம்.

08/03/2021 காலை 10 மணி அளவில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் காவலர்கள் என்னிடமும் எங்களோடு வந்த எங்களின் உறவினர்கள் 8 பேரிடமும் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். பின்பு எங்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் GH க்கு வந்து விடுங்கள் என்று கூறிவிட்டு ரைட்டர் ஐயா சில பேப்பர்களை எடுத்துக் கொண்டு GH க்கு செல்வதாகக் கூறிச் சென்றார்.

உடன் நாங்களும் GH க்குச் சென்றோம். அங்கு எஸ்ஐ பார்த்தசாரதி மற்றும் சில காவலர்கள் தொடர்ந்து எங்களையும் எனது சகோதரியும் தரக்குறைவாக பேசி வந்தனர். இச்சூழலில் எங்களுக்கு ஆறுதல் கூற வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன், அவர்களுக்கும் எஸ் ஐ பார்த்தசாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது,

அப்போது மணி 11 அது வரையிலும் கூட எனது தங்கையை வினோதா உடலை எங்களிடத்தில் காவல்துறையினர் காட்டாமல் மறைத்து வைத்தனர். 11.10 மணி அளவில், போஸ்ட் மாடம் செய்யப் போகிறார்கள் 2 பேர் போய் பாடிய தூக்கி கொடுங்கள் என்று கூறிய பொழுது, வினோதாவின் தாய்மாமன் 50 வயதுள்ள மூர்த்தி, மற்றும் 55 வயது உள்ள அவரின் சித்தப்பா இருவரும் வினோதாவின் உடலை பிரேத பரிசோதனை இடத்திற்கு எடுத்துக்கொடுக்க சென்றதில், பாலகன் அலறியடித்து ஓடி வந்தார்.

parents of vinodhaஅய்யோ கொலை பண்ணிட்டாங்க முகம் முழுவதும் ரத்தம் தலையெல்லாம் ரத்தம் அவர் தூக்கு மாட்டிக்கள, அய்யோ சாமி என கத்தியபடி எங்களை நோக்கி ஓடிவந்தார். அப்போது அம்பேத்கர்வளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தையினர் எங்களை விசாரித்தனர்.

எங்களிடம் இருந்த காவலர்கள் கொடுத்த போட்டோக்களையும் பார்த்தனர், அவர்கள் அதிர்ச்சியாகி வினோதா தூக்கு மாட்டிக் கொண்டால் என்றால் எப்படி முகத்திலும் தலையிலும் வெட்டுக் காயமும் இப்படி ரத்தமும் சகதியுமாக உள்ளார். இது தற்கொலை அல்ல கொலை இதில் உரிய சட்ட நடவடிக்கை வேண்டும் என்று கூறி அங்கு விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தினர்.

அங்கிருந்த எஸ்ஐ பார்த்தசாரதி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகிய இருவரும் எங்களை மிரட்டிப் பணிய வைத்து வினோத உடலை எங்களை எடுத்துப் போகச் சொல்லி மிரட்டினர். எங்களை விரட்டுவதுலேயே குறியாக இருந்தனர். அன்று இரவு வீடு திரும்பி விட்டோம்,

09/03/2021 நாங்கள் எங்கள் கிராமத்தில் உள்ள உறவினர்கள் குறிப்பாக எங்கள் உறவினரும் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை இன் மாநில தலைவருமான ச.பாவண்ணன், மற்றும் எங்களோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன் உள்ளிட்டோர் துணையோடு திருவண்ணாமலை மருத்துவமனை வளாகத்திற்கு வந்து போராட்டம் நடத்தினோம்.

இச்சூழலில் அங்கு கூடிய ஐபிஎஸ் பெண் அதிகாரி "ஏஎஸ்பி" உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, வினோதா வழக்கை ஐபிசி, 306 மற்றும் எஸ்சி/எஸ்டி வழக்காக பதிவு செய்வதாக உறுதி அளித்து மாலை 4:30 மணியளவில் முன்னதாக பதிந்த FIR நகல், இறப்பு அறிக்கை நகல், மற்றும் வினோதா உடலை ஒப்படைத்தனர். உடலைப் பெற்று வந்த நாங்கள், எங்கள் வாழ்வின் எதிர்காலம் ஆக இருந்த வினோதாவை எங்கள் வீட்டில் வைத்து அழுது தீர்த்து 10/03/2021 அதிகாலை எங்கள் ஊரின் தென்பெண்ணை நதிக்கரையில் நல்லடக்கம் செய்தோம் என குமுறி குமுறி அழுகிறார்.

நாம் கனத்த இதயத்தோடு இருந்த நிலையில் வினோதாவின் அக்கா விஜயலட்சுமியின் கணவர் ராஜசேகர் நம்மிடம் கூறியது,

‘ஐயா இறப்பு அறிக்கையில் வினோதா இறப்பு நடந்த நேரம் இரவு 7:03 என உள்ளது, எங்களுக்கு காவல்துறை என்ற பெயரில் வினோதா செல்போனிலிருந்து வினோதா இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது இரவு 10 மணிக்கு, நாங்கள் அடுத்த ஒன்னறை மணிக்கெல்லாம் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு வந்து விட்டோம், கொலைகார சுந்தரராஜனும், எஸ்ஐ பார்த்தசாரதியும் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியும் இவர்களோடு சேர்ந்த சில கும்பலும் வினோதா மரணம் குறித்து கூறுவது அறிவுக்கு புறம்பாக உள்ளது. வினோதா தூக்கு மாட்டிக் கொண்டவுடன் சுந்தரராஜன் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறுகின்றனர் அப்படி எனில் எங்களுக்கு தகவல் சொல்ல ஏன் இரண்டரை மணி நேரம் அவகாசம் போலீசுக்கு தேவைப்பட்டது. வினோதா சுந்தரராஜன் வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறுகின்றனர்.

அதேசமயம் சுந்தரராஜன் தூக்கு மாட்டிக்கொண்டு துப்பட்டாவை அறுத்து வினோதா உடலை கீழிறக்கியதாக கூறுகின்றனர். சுந்தரராஜன் நீதிமன்றத்தில் வேலை செய்யக்கூடிய சட்டம் தெரிந்தவர். அப்படி இருக்கும் பொழுது ஒரு குற்றம் நடந்து விட்டது என்றால் காவல்துறையை வரவைத்து அவர்கள் மூலமாக அணுகுவதுதான் சட்டமுறை என்பது அவரும் அறிந்த ஒன்று அப்படி இருக்கும் பொழுது இவர் துப்பட்டாவை அறுத்து வினோத உடலைக் கீழ் இறக்கியதாக கூறுவது, மற்றும் வினோதாவின் நெத்தியில் உள்ள வெட்டுக் காயமும் தலையிலுள்ள வெட்டுக் காயமும் முகம் முழுவதும் பரவி காய்ந்து உள்ள ரத்தமும் வினோதா அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவே அறியமுடிகிறது. இதைப் பார்க்கும் சாமானிய மக்களுக்கும் இந்த உணர்வு ஏற்படும். மேலும் காவல்துறையினர் நாங்கள் வருவதற்கு முன்பு எங்களிடம் வினோதா உடலை காட்டாமலேயே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று இருக்கும் பொழுது, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய எஸ்ஐ பார்த்தசாரதி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, மற்றும் சுந்தரராஜ், உள்ளிட்ட கும்பல், தற்கொலை என்று கூறுவதும், வினோதா காதலைக் கொச்சைப்படுத்துவது இவைகளைப் பார்க்கும் பொழுது ஒரு கும்பலே கொலையை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதை அறியமுடிகிறது’ என்கிறார்.

வினோதினியின் மரணத்திற்கு நியாயம் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்த எவிடன்ஸ் அமைப்பின் பிரதிநிதி சட்டக்கல்லூரி மாணவர் "வில்பிரைட்" நம்மிடம் இச்சம்பவம் குறித்து கூறியதாவது.

திருவண்ணாமலை கிழக்கு நகர காவல் உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி மிகவும் பகிரங்கமான முறையில் கொலைகார சுந்தரராஜனுக்கு பிரச்சாரம் செய்வதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தையும் மிரட்டி வருகிறார். வினோதினி தற்கொலைதான் செய்து கொண்டார் என்றால், தற்கொலை செய்து கொள்பவர்கள் உடல் எடையைப் பொறுத்து விழிபிதுங்கி நாக்கு வெளிவந்து நகமும் உடலும் நிறம் மாறி இருக்கும்.

இவை எதுவும் வினோதினி உடலில் இல்லை, மேலும் வினோதினியின் தலையில் வெட்டுக் காயமும் ரத்த பரவலும் இருக்கிறது. மேலும் துப்பட்டாவை அறுக்கப்பட்ட நிலையில் பார்க்க முடியவில்லை. வினோதா அரை ஆடையுடன் கிடப்பது கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பாளோ என்ற சந்தேக எழும்புகிறது.

துவக்கத்திலிருந்தே வழக்கில் முன்னுக்குப்பின் முரணாக செயல்படும் திருவண்ணாமலை காவல் நிர்வாகம் தவிர்த்து, இவ் வழக்கில் சிறப்பு விசாரணை தான் குற்றவாளிகளை வெளிக்கொண்டு வரும் வினோதினி மரணத்திற்கு நியாயம் பெற்றுத் தரும் என்கிறார்.

இப் போராட்டத்தில் பங்கெடுத்த காஞ்சி மக்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் திருவாளர்கள் எம்எம், ஜெஸ்ஸி, மற்றும் மகேஷ் நம்மிடம் கூறியது, பிண அறையில் வினோதா உடலைப் பார்த்து அதிர்ந்து போனோம். நிச்சயமாக அவள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவள் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு சாட்சியாக, ரத்தக் காயங்களும் அவளின் அரை ஆடை நிலையும் உணர்த்துகிறது.

மனசாட்சி இல்லாத காவல் அதிகாரிகள் கூறுவது போல அவள் உடல் அளவிலும் மனதளவிலும் மகிழ்ச்சியாக இருந்தால் என்றால் ஏன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள். வயது கூடிய நிலையில் இருந்த சுந்தரராஜனுக்கு யாரும் பெண் தராத நிலையில், வினோதாவிடம் உடல் பசியும், பணப் பசியும் தீர்த்துக்கொள்ள தேவைப்பட்டு இருக்கிறாள்.

வினோதா உழைப்பின் உரிமைக் கொண்டாடிய நிலையில், சாதி தடுத்திருக்கிறது. ஆகவே சுந்தர்ராஜன் வினோதாவை ஆணவக்கொலை செய்திருக்கிறான் என்றுதான் உணர முடிகிறது என்கிறார்.

இவ்வழக்கு குறித்து பிகா, அம்பேத்வளவன், அவர்கள் கூறுவதாவது ‘கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி நீதிமன்ற ஊழியர் என்பதால் வழக்கறிஞர்கள் புடைசூழ காவல்நிலையத்தில் ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டு இருக்கிறார். சுந்தர்ராஜன் வாக்குமூலத்தில் நான்கு வக்கீல்கள் சம்பவம் நடந்த பொழுது வீட்டில் உதவியதாக கூறுகிறார்.

மேலும் வினோதா உடன் உடலளவில் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்ததாக இவருக்கு சாட்சியாக எஸ்ஐ பார்த்தசாரதி பிரச்சாரம் செய்கிறார். எங்கள் கேள்வி என்னவென்றால் இவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றால் ஏன் வினோதா தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அடுத்து வினோதா கீழ் ஆடை இல்லாமல் இருப்பது சுந்தரராஜன் உடன் நாலு பேர் இருந்ததாக அவர் கூறுவது, கூட்டு பாலியல் பலாத்கார நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே இவ்வழக்கு குறித்து சிறப்பு நீதி விசாரணை தேவை’ என்கிறார்,

இவ்வழக்கு குறித்து அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் மாநில நிர்வாகி அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டது, இறந்த வினோதாவின் மரணம் கொடூரமானது அநியாயமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது இதை வன்மையாக கண்டிக்கிறோம். போராடி இன்றைக்கு ஐபிசி 306 போடப்பட்டுள்ளது. ஆனால் இது 302 வழக்காகும், மேலும் வினோத அரசு ஊழியர் அவள் கொலையில், அரசு ஊழியர் சங்கம் அரசு பணியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் அமைதி காப்பது அவர்களின் நேர்மையைச் சாதிய சமூகத்தோடு உரசுகிறது என்று மனம் திறந்து பேசுகிறார்.

திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு அரிகிருஷ்ணன் அவர்களை நாம் தொடர்பு கொண்டதில், அவர் கூறியது ஐயோ பாவம் அந்த பெண்ணும் அந்த குடும்பத்தாரும், அவங்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்கிறார். சட்ட செயல்பாடு குறித்து நமது கேள்விக்கு அவர் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது,

வினோத வழக்கின் விசாரணை அதிகாரியும் திருவண்ணாமலை மாவட்ட ஏஎஸ்பி யான இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி அவர்களை நாம் தொடர்பு கொண்டோம். பேசுவதாக மட்டும் தெரிவித்துள்ளார். தொடர் முயற்சியில் அவரின் செல்லிடப்பேசி மெசேஜ் சில நொடிகளில் பேசுவதாக மட்டுமே பதிலாக உள்ளது.

வினோதா மரணம் குறித்த வழக்கில் எங்கள் குழுவின் கேள்விகள், அரசு காணவேண்டிய தீர்வுகள்

1. சுந்தரராஜன் வாக்குமூலத்தின் படி இவரும் வினோதாவும் சம்பவ தேதியில் கூட, உடலாலும் மனதாலும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள் என்றால் ஏன் வினோதா தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள்?

2. வினோதா தற்கொலைதான் செய்து கொண்டால் என்றால் அவள் தலையிலும் நெற்றியிலும் பலத்த வெட்டுக்காயம் தையலும் வந்தது எப்படி முகம் முழுவதும் ரத்தம் படர்ந்து இருப்பதற்கு பொருள் என்ன?

3. வினோதா உடலைப் பார்க்கும் பொழுது தற்கொலை செய்து கொண்டவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆன விழிபிதுங்கும் நாக்கு வெளி வருதலும் நகம் உள்ளிட்ட நிறம் மாறுதலும் இல்லாமல் போனது ஏன்?

4. தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிலையிலும் வினோதா இடுப்பின் கீழ் உள்ள பேண்ட் இல்லாமல் இருப்பது, மேலும் சுந்தர்ராஜன் வாக்குமூலத்தின்படி நாலு வக்கீல்கள் அவனுக்கும் உதவியதாக கூறுவது, ஏன் வினோதா கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள் என்ற முடிவுக்கு வரக்கூடாது.

பிணமானதும் தூக்கில் மாட்டிவிட்டு நாடகமாடியுள்ளான் கொலையாளி சுந்தரராஜன்.

கழிவறையின் வெண்டிலேட்டரில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியதாக கொலையாளி கூறிய உண்மைக்கு மாறான தகவலை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்கிறது காவல்துறை.

ஆனால் நெற்றியிலும், தலையின் பின்புறத்திலும் பலமான வெட்டுக்காயம் உள்ளது. துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபோது, துப்பட்டாவை கத்தியால் அறுத்தபோது கீழே விழுந்து காயமேற்பட்டதாக கூறியுள்ளான் கொலைசெய்த சுந்தரராஜன்.

நமது கேள்வி? நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர் சுந்தரராஜனுக்கு தெரியாத ஒன்றல்ல சட்ட நடைமுறைகள், முதலில் காவல்துறைக்கு தகவல் சொல்லாமல் இவர் ஏன் துப்பட்டாவை அறுத்தார்? காவல்துறை வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு முடிவுக்கு வருவதற்கு முன்பு சம்பவ இடத்தை மாற்ற முயற்சித்துள்ளதாக தான் அறிய முடிகிறது. இவன் விடாக்கண்டன் என்றாள், விரைந்து வந்து வெட்டுக் காயங்களை கண்ட பிறகும் கூட மர்ம மரணம் ஆக பதிவு செய்திட்ட காவல்துறை அதிகாரி கொடாக்கண்டன் தான்,,,

உடலைக் கைப்பற்றிய காவல்துறை குற்றவாளியை காப்பாற்றும் நோக்கோடு செயல்பட்டுள்ளனர் என்பதை அவர்களின் செயல்பாடுகளில் இருந்து அறிய முடிகிறது.

கொலையுண்ட சகோதரியின் உறவினர்களிடம் அவரச அவசரமாக கையொப்பம் பெற்று உடற்கூறாய்வு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யபட்ட குற்றவாளி நீதிமன்ற ஊழியர் என்பதால் வழக்கறிஞர்கள் புடை சூழ காவல் நிலையத்தில் ராஜ மரியாதையோடு நடத்தப்பட்டிருகிறான்.

நீதிமன்றத்தின் நீதியரசரே குற்றவாளிக்கு ஆதரவாகவே இருந்ததாக சொல்லப்படுகிறது. கைது செய்ய கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக மரண வழக்கானது

விடுதலை சிறுத்தைகள் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம், எவிடன்ஸ் அமைப்பு தோழர்கள் தலையீட்டால் IPC 306 மற்றும் SC / ST வன்கொடுமை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

நடந்துள்ள சம்பவங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறபோது அப்பட்டமான படுகொலை என்பது நிரூபனமாகிறது.

எனவே திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை உடனடியாக கொலை வழக்காக பதிவு செய்திட வேண்டும். கொலை குற்றவாளியை கைது செய்திட வேண்டும்

மகளை இழந்து பரிதவிக்கும் குடும்பத்திற்கு உரிய தீருதவி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின்கீழ் வழங்கிட வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்திடவேண்டும் என்பதோடு உயிர் பறிக்கப்பட்டு கிடக்கும் வினோதா வெற்றியிலும் தலையிலும் வெட்டு காயத்தோடு கிடக்கிறாள். காவல் அதிகாரி ஐபிசி174 இல் வழக்குப்பதிகிறார். இத்தளத்தில் உள்ள காவல் அதிகாரி அங்கு உள்ளவர்கள் இடத்தில் கூறுவது வினோதாவை சுந்தரராஜன் காமப் பசிக்கு இரையாக்கி கொண்டான் என்றும், இப்படி இருக்கையில் நமக்கு கேள்வி என்னவென்றால் இந்த நிலையிலும் காவல் அதிகாரி ஐபிசி 174 தான் போடுவார்.

போராடினால் 306 ஆக மாற்றுகிறார்கள், அப்பவும் கொலை வழக்காக மாற்றாமல், கொள்கையாக சாதியை காப்பாற்றுவார்கள் என்றால், இந்த காவல் அதிகாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய என்ன செய்யப்போகிறது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை. தமிழக காவல்துறையின் நேர்மை வெளிப்படுமா? தாமதப்படும் நீதி மறுக்கப்படும் நீதி…

சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி சாத்திரம் சொல்லிடு மாயின் சதி என்று கண்டோம் என்றான் பாரதி.

சட்டம் சாதி காக்கும் கருவி ஆனால் சனநாயகம் சந்தி மட்டுமா சிரிக்கும்? என்பதை நினைவு படுத்துகிறோம். நீதி கிடைக்கும் வரை விடமாட்டோம்… என்கின்றனர் வினோத மரணத்தில் நீதி கேட்டு போராடுவோர்.

இவன்

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் 
இந்திய தேசிய மாதர் சம்மேளனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி