கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள கோண்டியா மாவட்டத்தில் 28.10.2008 அன்று காலை பள்ளிக்கூடத்திற்குச் சென்ற சப்னா தன்ராஜ் ரகாத்தே என்ற தலித் பெண்ணை, அந்த கிராமத்தில் உள்ள சாதி இந்து ஒருவன் அவமானப்படுத்த முயன்றான். தீரமுடன் அவனை எதிர்த்த சப்னாவை, பள்ளிக்கு சைக்கிளில் செல்லும்போது பின்னாலேயே டிராக்டரை கொண்டு வந்து மோதியதில், அப்பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இக்குற்றவாளி கைது செய்யப்பட்டும், அமர்வு நீதிமன்றம் குற்றவாளியை பிணையில் விடுவித்திருக்கிறது. விரிவான செய்திக்கு பார்க்க : - (atrocitynews.wordpress.com)

வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதில் காவல் துறைக்குச் சற்றும் குறையாத அளவில் நீதித்துறையும் பங்களித்து வருகிறது. ஆனால், நீதித்துறையின் இக்குறைபாடு ஒரு சில சமயங்களில் மட்டுமே சரி செய்யப்படுகிறது. காரணம், நீதித்துறைக்கே உரிய சட்ட நுணுக்க வரையறைகள்தாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை, அதன் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாட்டிலிருக்கும் விசாரணை நீதிமன்றம் - காவல் துறையின் கைப்பாவையாகச் செயல்பட்ட ஒரு வழக்கையும், அவ்வழக்கு தொடர்பான மனுவின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பையும் பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திலுள்ள கீரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயத் தொழில் புரியும் தலித் சமூகத்தைச் சேர்ந்த அழகர்சாமி, தலித்துகளின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு களில் ஈடுபாடு கொண்டவர். ஒரு முறை, அரசு நிலத்தில் உள்ள மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டி எடுத்துச் சென்ற நபர்கள் மீது அழகர்சாமி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

10.11.1997 அன்று மாலை 4.30 மணியளவில் லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான அனுமந்தக்குடியிலுள்ள அரிசி ஆலை முன்பு அழகர்சாமி நின்று கொண்டிருக்கும்போது, ஆலங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும் ஆலங்குடி மற்றும் லக்கமாரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலரும் அழகர்சாமியை சூழ்ந்து கொண்டனர்.

சுப்பிரமணியன் தன் செருப்பைக் கழற்றி, “நொக்கால் பள்ளப் பயலுகளுக்கெல்லாம் என்னடா சூத்துக் கொழுப்பேறிப் போச்சா' என்று கத்திக் கொண்டே அழகர்சாமியின் தலையிலும் கன்னத்திலும் அடித்தார். “அடிக்காதிய, அடிக்காதிய'' என்று கத்திக் கொண்டு அழகர்சாமி தன் மீது விழுந்த அடியை கைகளால் தடுக்கும்போது, சுப்பிரமணியனுடனிருந்த நான்கு நபர்கள் அழகர்சாமியை கைகளால் அடித்தனர். சத்தத்தை கேட்டு தைன்சும், துரைராஜு என்பவரும் ஓடி வந்து தலையிட்டு அழகர்சாமி மேலும் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றினர்.

அன்றைய தினமே இரவு 8 மணியளவில் அழகர்சாமி தேவகோட்டை வட்டக் காவல் நிலையத்திற்குச் சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தார். அப்போது பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் அருள் சந்தோஷமுத்து, அழகர்சாமியின் புகாரைப் பெற்று அதனடிப்படையில் (குற்ற எண்.229/1997) வழக்கை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147 (கலகம் விளைவித்தல்), 341 (வழி மறித்தல்), 355 (இழிவுபடுத்தும் நோக்கத்துடன் குற்றமுறு தாக்குதல் செய்தல்) மற்றும் 323 (சொற்ப காயம் விளைவித்தல்) உடனிணைந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(x)இன் கீழ் (பொதுப் பார்வையில் பட்டியல் சாதியினரையோ, பழங்குடியினரையோ அவமானப்படுத்துதல் என்ற அடிப்படையில் அச்சுறுத்துதல் மற்றும் இழிவுபடுத்துதல்) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.

முதல் தகவல் அறிக்கையின் அசல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்திற்கும் (முதன்மை அமர்வு நீதிமன்றம்) அதனுடைய நகல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டக் குற்றங்களின் புலன் விசாரணை அதிகாரியான சிவகங்கை துணைக் காவல் கண்காணிப்பாளருக்கும் (நாகராஜன்) அனுப்பி வைக்கப்பட்டது. இரவு 8.45 மணிக்கு அழகர்சாமியைப் பரிசோதித்த மருத்துவர், அழகர்சாமியின் கன்னத்திலும் தலையிலும் காயங்கள் இருந்ததைப் பதிவு செய்தார். மருத்துவர் அளித்த காயச் சான்றிதழில் அழகர்சாமி தனக்குத் தெரிந்த நபர்களால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது குறித்து குறிப்பிடப்பட்டது.

வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான துணைக்காவல் கண்காணிப்பாளர், 12.11.1997 அன்று நண்பகல் 1 மணியளவில் முதல் தகவல் அறிக்கை கிடைக்கப் பெற்று புலன் விசாரணையைத் தொடங்கினார். மதியம் 3 மணிக்கு சம்பவ இடமான அனுமந்தக்குடிக்குச் சென்று அழகர்சாமி, லட்சுமணன், செல்லையா, மாணிக்கம், ராமநாதன் மற்றும் செல்லான் ஆகியோரை விசாரித்தார். புலன் விசாரணையின்போது, அழகர்சாமி தன் புகாரில் கூறியிருந்தவாறே சம்பவத்தை விவரித்தார். லட்சுமணன் மற்றும் செல்லையா ஆகியோர் சம்பவம் நடைபெற்றதாகக் கூறினாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழகர் சாமியை சாதிப் பெயரைச் சொல்லி பழித்துரைக்கவில்லை என்று கூறினர்.

அதனடிப்படையில் துணைக் காவல் கண்காணிப்பாளர், அழகர்சாமி கொடுத்த புகார் மிகைப்படுத்தப்பட்டதெனவும், சம்பவம் நடைபெற்றதுதான் என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாக புகாரில் பொய்யாகத் தெரிவித்துள்ளார் என்றும் முடிவு செய்தார். எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(ஙீ)அய் வழக்கிலிருந்து நீக்கம் செய்ததுடன், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 147, 341, 355 மற்றும் 323 ஆகிவற்றிற்காக மேல் நடவடிக்கை எடுக்கச் வழக்குக் கோப்பினை தேவகோட்டை வட்டக் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளருக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் - வழக்கைப் புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அன்றே (12.11.1997) திருப்பி அனுப்பி வைத்தார்.

அதன்படி மேல் விசாரணையை 20.11.1997 அன்று மேற்கொண்ட காவல் ஆய்வாளர், அன்றே சம்பவ இடம் சென்று 8 சாட்சிகளை விசாரித்து, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 341 (வழிமறித்தல்), 355 மற்றும் 323 (சொற்ப காயம் விளைவித்தல்) ஆகியவற்றிற்கு மட்டுமே சாட்சியம் உள்ளதாகக் கருதி, அன்றே (20.11.1997) சுப்பிரமணியனைக் கைது செய்தார். முதல் தகவல் அறிக்கை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், கைது செய்யப்பட்ட சுப்பிரமணியனை நீதிமன்றக் காவலுக்குட்படுத்த முதல் தகவல் அறிக்கையை தேவ கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு காவல் ஆய்வாளர் வேண்டுகோள் அனுப்பினார். ஆனால், அமர்வு நீதிபதி அன்றைய தினம் விடுப்பில் இருந்தமையால் காவல் ஆய்வாளரே, "28.11.1997 அன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்ற' நிபந்தனையுடன் சுப்பிரமணியனை பிணையில் விடுவித்தார்.

பின்னர், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 341 மற்றும் 323 ஆகியவற்றின் கீழ் மட்டுமே குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக சுப்பிரமணியன் மீது மட்டும் காவல் ஆய்வாளர் மறுநாளே (21.11.1997) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். மேலும், காவல் ஆய்வாளர் அனுப்பிய வேண்டுகோளை ஏற்று சிறப்பு நீதிமன்றம் 25.11.1997 அன்று முதல் தகவல் அறிக்கையை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது.

28.11.1997 அன்று குற்றவியல் நடுவர் வழக்கை கோப்பிற்கு எடுத்துக் கொண்டதுடன், அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான சுப்பிரமணியத்தின் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 341 மற்றும் 323 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவரது பதிலுரையைக் கேட்க, குற்றத்தை ஒப்புக் கொண்டதாக சுப்பிரமணியன் கூறினார். அதனடிப்படையில் அவருக்கு இந்திய தண்டனை சட்டப் பிரிவு 341இன் கீழான குற்றத்திற்கு 100 ரூபாய் அபாரதமும், கட்டத்தவறினால் 1 வார சாதாரண சிறைத்தண்டனையும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 323இன் கீழான குற்றத்திற்கு 150 ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் 3 வார சாதாரண சிறைத் தண்டனையும் விதித்தார் குற்றவியல் நடுவர். அன்றே அபாரதத் தொகை செலுத்தப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.

இவ்வாறாக, வன்கொடுமைக்கு ஆளான புகார்தாரருக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படாமலேயே, அவருடைய பங்கேற்பு இல்லாமலேயே வழக்கு முடித்துக் கொள்ளப்பட்டது. புலன் விசாரணை சட்டமுரணா கவும் பாரபட்சமாகவும் காவல் துறையால் நடத்தப்பட்டது குறித்தும், நீதிமன்றங்கள் (சிறப்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்) இவ்வழக்கை சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக கையாண்ட முறை தவறு என்றும், தக்க தீர்வழிகளைக் கோரியும் அழகர்சாமி தரப்பில் வழக்குரைஞர் பொ. ரத்தினமும் இக்கட்டுரையாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.

கடும் சட்ட விதிமீறல்களை உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் கண்டபோதிலும், இவ்வழக்கை சட்ட விதிகளின்படி ஏற்கக் கூடாதென அரசுத் தரப்பிலும், துணைக் காவல் கண்காணிப்பாளர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இவ்வழக்கின் குற்ற நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விட்டார். அத்துடன் வழக்கு முடிவடைந்து விட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட தண்டனை மேல்முறையீடு வழியாகவோ, சீராய்வு மூலமாகவோதான் சரியா, தவறா என்பதை சீர்தூக்கிப் பார்க்க முடியும். உயர் நீதிமன்றத்தின் உள்ளுறை அதிகாரத்தின் கீழ் (Inherent power) இவ்வழக்கை விசாரித்து, மறு புலனாய்வுக்கு உத்தரவிடக் கோர முடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த எதிர்வாதத்தை உயர் நீதிமன்றம், இவ்வழக்கை தொடக்க முதலே எவ்வகையிலெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அவை சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டி ஏற்க மறுத்தது. மேல்முறையீடு அல்லது சீராய்வு ஆகிய தீர்வழிகள் சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உள்ளுறை அதிகாரம் சட்டவழியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், மற்ற வகையில் நீதியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் இந்த எதிர்வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

வழக்கின் அடிப்படையைப் பொருத்தும் ஓர் எதிர்வாதம் வைக்கப்பட்டது. சம்பவத்தின்போது அழகர்சாமியை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசவில்லை என்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 3(1)(ஙீ) அய் நீக்கியது சரியே என்று வாதிடப்பட்டது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர், முதல் தகவல் அறிக்கை புகாரிலேயே சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளாகக் குறிப்பிட்டிருந்தவர்களை - புலன்விசாரணை செய்த துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்யாமலே விட்டுவிட்டது ஒரு புறமிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள், பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு நபரை செருப்பால் அடித்தார்கள் என்பதே வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(x)இல் குறிப்பிட்டுள்ளவாறு - பட்டியல் சாதியினரை “வேண்டுமென்றே இழிவு படுத்தும்'' செயலாகக் கருதப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் விளக்கமளித்தது.

இதன் மூலம் (சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தினால் மட்டுமே), வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(ஙீ)இன்படி குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும் என்ற சமூகப் பார்வையை சட்டத்திற்குள் புகுத்தியுள்ளது உயர் நீதிமன்றம். அந்த வகையில், இத்தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

தொடர்புடைய சட்டப்பிரிவுகளை யும் முன்தீர்ப்புகளையும் விரிவாக விவாதித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம். கற்பக விநாயகம், 23.9.1999 அன்று வழங்கிய தீர்ப்பில் (க. அடூச்ஞ்ச்ணூண்ச்ட்தூ ஙண் குtச்tஞு ணிஞூ கூச்ட்டிடூ Nச்ஞீத 1999 (ஐஐஐ) இதணூணூஞுணt கூச்ட்டிடூ Nச்ஞீத இச்ண்ஞுண் 464) தேவக்கோட்டை குற்றவியல் நடுவர் வழங்கிய தீர்ப்பை நீக்கறவு செய்தும், வழக்கை வேறு ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர் மூலம் மறுபுலனாய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். வன்கொடுமை வழக்கை நீர்த்துப் போகச் செய்த புலன்விசாரணை அதிகாரிகளான துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் மீது துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க அழகர்சாமியின் மனுவில் கோரப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பாக உத்தரவு ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும், அவ்விருவரின் செயல்பாடுகள் குறித்த தனது கடும் அதிருப்தியை உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இத்தீர்ப்பின் நகலை தமிழக உள்துறை செயலருக்கு அனுப்பவும், அவர் அதை நகலெடுத்து மாநிலத்தின் அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் கையாளப்பட வேண்டிய சட்ட நடைமுறை குறித்து இத்தீர்ப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்ததால், (இத்தீர்ப்பின் நகலை) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவு பெற்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

உயர் நீதிமன்றத்தால் கவனத்தில் கொள்ளப்பட்ட சட்ட முரண்களும் விதி மீறல்களும்

1. புலன் விசாரணை அதிகாரியாக முதலில் செயல்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், சம்பவம் நடந்தபோது இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்ட தைன்ஸ் மற்றும் துரைராஜு ஆகியோரை விசாரிக்கவே இல்லை.

2. துணைக் காவல் கண்காணிப்பாளரால் விசாரிக்கப்பட்ட சாட்சிகள், சம்பவம் நடைபெற்றதாகவும், ஆனால் சாதிப் பெயரைச் சொல்லி அழகர்சாமியைத் தாக்கியது குறித்து எதுவும் குறிப்பிடாத சூழ்நிலையில், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சாட்சிகளை விசாரிக்காமல் விட்டது, புலன்விசாரணை அதிகாரி புலன் விசாரணையை நேர்மையான வகையிலும் பாரபட்சமற்ற வகையிலும் செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது.

3. முதல் தகவல் அறிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் போதே, துணைக் காவல் கண்காணிப்பாளர் வழக்கைப் புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அன்றே - வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 3(1)(ஙீ)அய் வழக்கிலிருந்து நீக்கம் செய்து, தன்னிச்சையாக காவல் ஆய்வாளரை மேல் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல.

4. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதி 7(1) இன்படி வன்கொடுமை தொடர்பான வழக்குகளை நேர்மையாகவும், பாராபட்சமற்ற வகையிலும், சரியான முறையிலும் புலன் விசாரணை செய்ய துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அதிகாரி புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றம் வைத்துள்ள நம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் விதத்தில் இவ்வழக்கின் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

5. அதே போல், புலன் விசாரணையைத் தொடர்ந்த காவல் ஆய்வாளரும் புலன் விசாரணையை நேர்மையான வகையில் மேற்கொள்ளவில்லை. துணைக்காவல் கண்காணிப்பாளர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(ஙீ) அய் மட்டுமே வழக்கிலிருந்து நீக்கம் செய்துள்ளபோது, காவல் ஆய்வாளர் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 147 மற்றும் 355 ஆகியவற்றையும் வழக்கிலிருந்து நீக்கம் செய்து, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 341 மற்றும் 323 ஆகிய குற்றங்களுக்கு மட்டுமே சுப்பிரமணியனுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது விநோதமானது. குறிப்பாக, வன்கொடுமை நிகழ்வு 5 நபர்களால் நிகழ்த்தப்பட்டதாக சாட்சியங்கள் உள்ளபோது, ஒருவர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது விந்தையானது.

6. முதலில் துணைக் காவல் கண்காணிப்பாளரும், பின்னர் காவல் ஆய்வாளரும் முக்கிய சட்டப் பிரிவுகளை வழக்கிலிருந்து அவசர அவசரமாக சட்ட விதிமுறைகளை மீறி நீக்கம் செய்துள்ளனர்.

7. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய சிறப்பு நீதிமன்றமும் வழக்கின் விவரங் களை அலசி ஆராய்ந்து நீதிமனப்படி முடிவெடுக்காமல், காவல் ஆய்வாளரின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு ஏற்று வழக்குக் கோப்பினை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது தவறு.

8. முக்கிய சட்டப் பிரிவுகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வரும் வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கில் முதல் தகவல் அளித்த நபருக்கு வாய்ப்பேதும் வழங்காமல், குற்றப்பத்திரிகையை கோப்பிற்கு எடுத்துக் கொண்ட அன்றே குற்றம் சாட்டப்பட்டவரின் பதிலுரையை ஏற்று, சொற்பத் தொகையை அபராதம் விதித்து வழக்கை குற்றவியல் நடுவர் அவசர அவசரமாக முடித்தது, சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது.