கல்வியே ஒரு நாட்டின் மூல வளம்; பகைவர்களாலும் அழிக்க முடியாத நிறைசொத்து. கல்வி சிறந்த நாட்டில் வறுமை இருக்காது; பசி பட்டனி இருக்காது; பெரும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படா. அங்கு ஜனநாயகம்  செழித்தோங்கும்; அமைதி நிலவும்; நாடு மேலும் மேலும் முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்கும். ஐநா கல்வி பண்பாட்டுக் குழு (யுனெஸ்கோ) இப்படித்தான் சொல்கிறது.

ஐநா பொதுப்பேரவை செப்டம்பர் 25, 2015ஆம் நாள் நிறைவேற்றிய தீர்மானத்தில் உலக நாடுகளுக்கான கல்விக் குறிக்கோள்களை அது அறிவித்துள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சமமான,  தரமான, கட்டணமில்லாக் கல்வியையும்  வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டும் என அது வற்புறுத்துகிறது. குறிப்பாக ஐநா குழு, குழந்தை முன்பருவக் கல்வியையும் பால் வேறுபாடற்ற கல்வியையும் பழங்குடிகள் உள்ளிட்ட நலிந்தோர்க்கான கல்வியையும் வலியுறுத்துகிறது; மாற்றுத்திறனாளிக்கான கல்வி பற்றியும் பேசுகிறது; கல்வியில் ஏற்றத்தாழ்வே கூடாது என்கிறது; கற்பவர்கள் நிலைத்த வாழ்க்கை. நீடித்த முன்னேற்றம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான திறன்களைக் கல்வி வழங்க வேண்டும் எனக் கோருகிறது; கற்பதற்கான மகிழ்ச்சியான அமைதிச் சூழலை வேண்டுகிறது. தகுதிபடைத்த ஆசிரியர்களின் தேவையையும் அது சுட்டிக்காட்டத் தவறவில்லை.இவ்வெல்லாவற்றிலும் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை விளக்க வேண்டியதில்லை. 

விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் கடந்த பின்பும் அனைவர்க்கும் கல்வி வழங்க இந்தியாவால் இயலவில்லை.  2002 இல்  உச்சநீதிமன்றத் தலையீட்டின் பின்பு தான் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பற்றி அரசு அறிவிக்கிறது. 2009-இல் அதற்கான சட்டம் இயற்றப்படுகிறது; 2010-இல் அது நடைமுறைக்கு வருகிறது. மக்களுக்கு அடிப்படைக்கல்வி வழங்குவதில் அரசுக்குள்ள அக்கறையின்மையையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அச்சட்டமும் ஆறு-பதினான்கு அகவைக்குட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவது பற்றி மட்டுமே பேசுகிறது; பள்ளி முன்பருவக் கல்வியைப் புறக்கணிக்கிறது; தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடுக் குழந்தைகளுக்கே இலவயக் கல்வி அளிக்கக் கோருகிறது; எல்லாக் குழந்தைகளுக்கும்  கல்வி அளிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசை விடுவிக்கிறது. கோத்தாரிக் கல்விக்குழு வலியுறுத்தும் பொதுப்பள்ளி - அருகமைப் பள்ளி குறித்து அமைதி காக்கிறது. கட்டணமில்லாக் கல்வி,  தரம் நிறைந்த கல்வி, சமநெறிக் கல்வி ஆகியவற்றைக் கல்வி உரிமைச் சட்டம் உறுதி செய்யவில்லை. கல்விக்கென்று தனி வரி வசூலிக்கும் மய்ய அரசு, தன் நாட்டின் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க வேண்டிய அரசமைப்புக் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது.

தமிழ்நாட்டின் கல்வி நிலைமையும் சொல்லத்தக்கதாய் இல்லை. பாரதி பாடிப்புகழ்ந்த “கல்வி சிறந்த தமிழ்நாடு” இன்று கல்வியில் தடுமாறும் தமிழ்நாடாக இழிந்து நிற்கிறது. காமராசர் காலத்தில் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று பரவியது கல்வி. அவரால் தொடங்கப்பட்ட அரசுப்பள்ளிகளில் சாதி வர்க்க வேறுபாடற்று அனைவரும் கல்வி கற்றனர். கல்வியில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டது. இன்று கல்வி மீண்டும் உயர்சாதி, உயர் வர்க்கத்துக்குரிய நகரஞ் சார்ந்த கல்வியாக மாறிவிட்டது. தனியார் கல்வியும் ஆங்கிலவழிக் கல்வியும் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கின்றன.

“விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி?” என்ற பாரதிதாசன் கேள்வி பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போக தமிழ்நாட்டில் இன்று கல்வி கூவிக் கூவி விற்கப்படுகிறது; கல்விக்கென்று கடவுளை உருவாக்கி உள்ள நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்களில் கருப்புப்பணம் புரளுகிறது; தாய்மொழிக் கல்வியே படைப்பூக்கக் கல்வியாய்த் திகழும் என்ற அறிவியல் உண்மை புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலக் கல்வியில் தமிழ்நாடு பாழ்பட்டுக் கிடக்கிறது; சமச்சீர் கல்விக் கொள்கை அறிக்கையும் தமிழக ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வான கல்வியே தொடர்கிறது. சமூக ஏற்றத்தாழ்வு கல்வியிலும் எதிரொளிக்கிறது. ஏற்றத்தாழ்வற்ற சிந்தனையை வளர்க்க வேண்டிய கல்வியே ஏற்றத்தாழ்வுச் சிந்தனையை வளர்க்கும் களமாய் இருப்பது பெரும் அவலம்.

ஆண் பெண் அனைவர்க்கும் இடைநிலைக் கல்வி என்பதே இன்னும் எட்டப்பட முடியாத கனவாய்த் தொடர்கிறது. இந்நிலையில் விரும்பும் அனைவர்க்கும் உயர்கல்வி என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. அரசுப் பள்ளி மாணவர்கள், சிற்றூர்ப்புற மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் ஆகியோருக்கான உயர்கல்வி வாய்ப்பு மிகவும் சுருங்கிவிட்டது. நீட் தேர்வு நுழைவுக்குப் பின் தமிழ்நாட்டின் எல்லாப்பிரிவு மாணவர்களுக்கும் மருத்துவர் கனவு இனிக் கனவாகவே போய்விடும். பொறியியல் உட்பட அனைத்து உயர்கல்விப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை வந்தால் தமிழ்ச்சமூகம் மீண்டும் மனுதர்மக் காலத்திற்குப் பின்னோக்கிச் சென்று விடும்.

உண்மையில் தமிழ்நாட்டுக் கல்வி இருள் சூழ்ந்ததாய்த்தான் உள்ளது. இருளைப் போக்க ஆட்சியாளர்கள் உள்ளார்ந்த விருப்பத்துடனும் அரசியல் உறுதியுடனும் செயலாற்ற வேண்டும். முதலில் தமிழ்நாட்டரசுக்கான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்; கொள்கையை நிறைவேற்றக் கல்விக் குறிக்கோள்கள் காலக்கெடுவுடன் வரையறுக்கப்பட வேண்டும். இதற்கு அரசும் கல்விச் சமூகமும் இணைந்து புரிதலுடன் செயல்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்ற முதலில் தமிழ்நாட்டிற்குக் கல்வி தொடர்பான சட்டம் இயற்றும் முழுஅதிகாரம் வேண்டும். நெருக்கடிக் காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லபட்ட கல்விச்சட்ட அதிகாரம் மெல்ல மெல்ல மய்யப்பட்டியலை நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டுள்ளது. நீட்தேர்வு திணிப்பு அதற்கான முன்னோட்டம். புதிய கல்விக் கொள்கையில் அதற்கான முன்முனைப்புகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வி தொடங்கி எல்லா வகுப்புகளுக்கும் அறிவியல் கணிதம் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது விவாதப் பொருளாக உள்ளது. இந்த மய்யப்படுத்தல் என்பது கல்வியைக் காவிமயப்படுத்தலுக்கான பாதை என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. சந்தைமயப்படுத்தலுக்கான கதவுகளும் அகலமாகத் திறக்கப்படுகின்றன. தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் நல்லரசியலாளர்களும் இக்கேடுகளை முன்கை எடுத்து முறியடிக்க வேண்டும். அதற்கான உறுதி மேற்கொள்ளவே இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

கருத்தரங்கில் உரையாற்றுவோர்;

முனைவர் பேரா. பிரபாகல்விமணி,

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்

தமிழ்த்திரு. பு.பா.பிரின்ஸ்கஜேந்திரபாபு,

பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை

முனைவர் பேரா.ப.சிவக்குமார்,

மேனாள் முதல்வர், அரசு கலைக் கல்லூரி, குடியாத்தம்

                   தமிழ்த்திரு. ஆழி செந்தில்நாதன்

செயலாளர், மொழி நிகர்மை உரிமைப் பரப்பியக்கம்

முனைவர் பேரா.த.வீரமணி

மாநிலத் து.தலைவர் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம்.

தமிழ்த்திரு. பாரதிதம்பி

 (ஊடகவியலாளர்)

தமிழ்த்திரு தி.கோவிந்தன்

பொதுச்செயலாளர், தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி 

பட்டதாரி ஆசிரியர்  கழகம்

முனைவர் பீ.பேட்ரிக்ரெய்மாண்ட்

பொதுச்செயளாலர்,  தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

புலவர் செந்தலை ந.கவுதமன்

நிறுவனர், சூலூர் பாவேந்தர் பேரவை,

முனைவர். விஜய் அசோகன்

முதுநிலை அறிவியல் ஆராய்ச்சியாளர்,

ஜேஜியாங் பல்கலைக்கழகம், சீனா.

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.

கருந்தரங்கு நிறைவுரை:

முனைவர்.வே.வசந்திதேவி

    மேனாள் துணைவேந்தர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்களைக் கழகம்

அனைவருக்கும் தரம் மிகுந்த  கட்டணமில்லாக்  கல்வி!

அனைத்துக் கல்வியும் அன்னைத் தமிழில்!

தமிழ்நாட்டிற்கே அனைத்துக் கல்விச்சட்ட அதிகாரங்களும்!

என்று அறுதியிட்டு உறுதிபட முழங்குவோம் வாருங்கள்....                               என அனைவரையும் அழைக்கிறோம்.

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

தமிழ்நாடு.

9965128135, 9003914475, 9360015972

Pin It