மத்தியில் பி.ஜே.பி அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்ததிலிருந்தே  மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித், முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமாக  உள்ளன, குஜராத்தின் உனா மாவட்டத்தில் தோலுக்காக பசுவை கொன்றதாக கூறி தலித் இளைஞர்களை பசுக்களின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ‘கவ் ரக்‌ஷக்’ எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காரில் கட்டிவைத்துக் கடுமையாகத் தாக்கிய சம்பவமும், மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசோரில் பசு இறைச்சி வைத்திருந்ததாக இரு இஸ்லாமிய பெண்களைத் தாக்கிய சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

attack on dalitஆனால் அவர்கள் கொண்டு சென்றது  எருமை இறைச்சி  தான்  என்றும், எருமை இறைச்சியை வாங்கியதற்கான ரசீதை அவர்கள் காண்பித்த பிறகும், அது பசுவின் இறைச்சி தான் என கூறி போலீஸார் முன்னிலையிலேயே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கான தடயவியல் அறிக்கையும், அவர்கள் கொண்டு சென்றது எருமையின் இறைச்சி என்று நிரூபித்துள்ளது. இதன் பின், பெண்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை தாக்குதலுக்குள்ளான பெண்கள் மீதே, மத்திய பிரதேச அரசு கால்நடை பாதுகாப்பு சட்டம் மற்றும் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது மத்திய பாசிச ஆட்சியின் அராஜக போக்கைத்தான் காட்டுகின்றது.சில நாட்கள் முன்பு மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று  குர்கான் கவ் ரக்ஷ தல் ”குர்கான் பசு பாதுகாப்பு இயக்கம் " என்ற வெறிக்கொண்ட  கும்பல்  ரிஸ்வான், முக்தியார் என்ற இரு இளைஞர்கள் வாயில் சாணி திணித்து அவர்களை  தாக்கினார்கள்.மாட்டுக்கறி தொடர்பாக இவ்வாண்டில் இது போன்று 74 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.

எங்கிருந்து வந்தது பசுவின் புனிதம்

இன்றைய சூழ்நிலையில் நம்முடன் வாழ்ந்து சுக துக்கங்களில் பங்கு பெரும் ஒரு சக மனிதனின் உயிரைக் கொன்று காக்கப்பட வேண்டிய அளவுக்கு எந்த விதத்தில் பசு புனிதமானது, அதன் பின்னிருக்கும் அரசியல் தான் என்ன?  மாட்டை வைத்து அரசியல் செய்வதும், பசுவின் மீது புனிதம் கற்பித்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த நினைப்பதும் பாஜக விற்கும் ஆர். எஸ். எஸ் கும்பலுக்கும் ஒன்றும் புதிய விஷயமல்ல,  எப்போதும் ஒரு பொது எதிரியைக் கட்டமைத்து அதன் மூலம் தங்களுடைய பலத்தைப் பெருக்குவதே பாசிசவாதிகளின் திட்டமாக இருந்துள்ளது. இந்தியாவில் வளர்ந்திருக்கும் காவிப் பாசிசமும் அதே வழியைப் பின்பற்றி இங்கிருக்கும் இசுலாமிய சிறுபான்மை மக்களை எதிரியாக சித்தரித்து வருகிறது. இசுலாமிய மக்களை எதிரியாக கட்டமைக்கும் காவிக் கும்பல், சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு வரலாற்று புரட்டுகளை நாடெங்கிலும் பரப்பி வருகிறது.அவ்வாறான வரலாற்று புரட்டுகளில் ஒன்றுதான், பசுவின் மீது கட்டமைக்கப்படும் புனிதமும்.

வரலாற்று புரட்டுகளான  இவர்களிடம் என்னுடைய ஒரு கேள்வி, குறிப்பாக, இன்ன கடவுளுக்கு இன்ன மாமிசம் பிடிக்கும், படைக்க வேண்டும் என்று வேத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. வேத காலக் கடவுள்களிலேயே மிகப்பெரிய கடவுளாக முன்னிறுத்தப்பட்ட இந்திரன் ” அவர்கள் எனக்காக பதினைந்து, இருபது எருதுகளைச் சமைத்தார்கள்” என்று கூறுவதாக ரிக் வேதத்தில் வருவதை தன்னுடைய “பசுவின் புனிதம்” நூலில் குறிப்பிட்டுள்ளார் டி.என்.ஜா. அது மட்டுமின்றி, விலங்குகளை பலியிடுதல் வேதகாலத்தைத் தொடர்ந்து புராண காலங்களிலும் இருந்து வந்துள்ளது. மகாபாரத்தில், ” காயல், சம்பாரா, எருமை உட்பட விலங்குகளில் இறைச்சியினை யுதிஷ்டிரர் தருவார் என திரௌபதி சொல்வதையும்”, வால்மீகி ராமாயணத்தில் ” உண்ணத் தகுந்தவை என தர்ம சாஸ்திரங்களால் சொல்லப்பட்ட விலங்குகளை பலியிடும் யாகம் இருந்த்ததகவும் டி.என்.ஜா குறிப்பிடுகிறார். இப்படி இருக்கையில் எங்கிருந்தது வந்ததது இந்த புனிதம் ?

மாட்டுக்கறி ஏற்றுமதியில் எங்கே போனது புனிதம்? 

சரி மாட்டுக்கறி ஏற்றுமதி வியாபார விடயத்தை பற்றி ஆரம்பிப்போம், உலகில் மாட்டுக்கறி ஏற்றுமதியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் முன்னணி மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்கள் பல  முதலாளிகள் இந்துக்கள் என்பது எத்தனை பெருக்குத்தெரியும், அவற்றில் மும்பையை தலைமையிடமாக கொண்ட இரண்டு நிறுவனங்கள், அல் கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட் என்று இசுலாமியப் பெயர்களைச் சூட்டிக் கொண்டிருப்பதை முஸ்லிம் மிர்ரர் என்ற இணையதளம் பல முறை அம்பலப்படுத்தியிருக்கிறது, இதன் மூலம் முந்தைய காங்கிரசு ஆட்சியைவிட, மோடியின் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி இன்னும் அதிகரித்திருக்கிற என்பது தெளிவாக விளங்குகின்றது,  காங்கிரசு ஆட்சியில் பசு மாட்டிறைச்சிதான் ஏற்றுமதி செயப்படுவதாகக்  குற்றஞ்சுமத்திய மோடி, தனது ஆட்சியில் எருமை மாட்டிறைச்சி மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி, தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறார், செத்த மாட்டின் தோலுரித்த தலித் இளைஞர்களை தாக்குவதும் அவர்கள் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்  இவர்கள் , மாட்டுக்கறி ஏற்றுமதியில் கொடி கட்டி பறக்கும் பணக்கார முதலைகளான அல் கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட் போன்றவர்களை இவர்களால் என்ன செய்ய முடிந்தது.

இந்தியாவில் சகிப்பின்மை அதிகரிப்பு, அமெரிக்கா கவலை

இவ் விவகாரத்தில், இந்தியாவில் சகிப்பின்மை, வன்முறை அதிகரித்துள்ளதாக  அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அந்நாட்டின் அரசு செய்தித் தொடர்பாளர் ஜான் கிரிபி இது பற்றி கூறும்போது,இந்தியாவில் சமீப காலங்களில் நிகழ்ந்து வரும் சகிப்பின்மை வன்முறைகள் குறித்து நாங்கள் உண்மையில் கவலையடைந்துள்ளோம். மற்ற நாடுகளில் இத்தகைய நிலவரங்கள் குறித்து எங்கள்  நிலைப்பாடு என்னவோ அதேதான் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் எங்கள் நிலைப்பாடு. எனவே, மக்களைக் காக்க அரசு தன்னிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்த அனைத்தையும் செய்யுமாறு வலியுறுத்துகிறோம். வன்முறையைத் தூண்டுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்.

தேவை மத்திய  அரசின்  தக்க நடவடிக்கை

இந்த ஜனநாயக நாட்டில் பசுக்களைக் காக்கிறோம் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக மத்திய  அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது தனது தலையாய கடமையாகும். பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படும் கும்பல்  உனாவில் இறந்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக தலித் சமூகத்தினரை அடித்து உதைத்ததும், மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சாவ்ரில் உள்ள ரயில் நிலையத்தில் எருமை இறைச்சி வைத்திருந்த இரண்டு முஸ்லிம் பெண்களை பசு இறைச்சி வைத்திருந்ததான சந்தேகத்தின் பேரில் போலீஸ் முன்னிலையிலேயே ஒரு கும்பல் அடித்து உதைத்ததும் தான் இன்றைக்கு தலித் அமைப்பினரின் போராட்டங்களுக்குக் காரணமானது என்பதை மத்திய அரசு உணர்ந்து, நாட்டில் உள்ள  அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,  மேலும், மக்களவையில் தலித், முஸ்லிம்கள் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் உரத்த குரலில் வலியுறுத்தியதும் மிகவும் வரவேற்கத்தக்கது.

- அப்சர் சையத்