உலகம் கடும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் உட்பட பெரும்பான்மை மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதே நேரத்தில் சுரண்டும் ஆளும்வர்க்கங்கள் அளவற்ற செல்வங்களையும், எல்லையில்லா இன்பங்களையும் அனுபவிக்கின்றனர். இவர்களின் அடியாள் படையினர்களான அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் ஊழல் பெருச்சாளிகளாக ஊதிப் பெருக்குகின்றனர்.

இவற்றையெல்லாம் தீர்த்து முடிவு கட்டுவதற்கான கம்யூனிசம் எனும் மக்களின் ஆயுதம் நாதியற்று கிடக்கிறது. ஊழல் ஒழிப்பு, மக்கள் நலன் என கூச்சல் போடுகிற அறிவு ஜீவிகளும், குட்டிமுதலாளிய வர்க்கத்தினரும் மாற்றுப்பாதை ஏதுமின்றி சுரண்டும் வர்க்கங்களிடமே சரணாகதி அடைகின்றனர்; மக்களை ஏமாற்றுகின்றனர்.

இந்த நடுத்தர வர்க்கங்கள் சுரண்டும் வர்க்கங்களைக் கண்டு நடுங்குவதைப் போலவே கம்யூனிசத்தைக் கண்டும் நடுங்குகின்றன. கம்யூனிசம் என்றாலே கொடுங்கோலர்களின் சித்தாந்தம் என கூப்பாடு போடுகின்றன. இதற்க்கு அவர்கள் காட்டும் உதாரணம் இரசியாவும்,தோழர்-ஸ்டாலினுமாகும்.

இரசியாவை இரும்புத் திரை நாடாக்கி தோழர்-ஸ்டாலின் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல என்பதுதான் இவர்களின் வாதம். இதற்கான ஆதாரமாக இவர்கள் காட்டுவது தோழர்-ஸ்டாலினுக்குப் பின்னால் அதிகாரத்தைக் கைப்பற்றிய துரோகி நிகிதா குருச்சேவின் அபாண்டமான குற்றச்சாட்டுக்களேயாகும்.

ஏகாதிபத்திய அடியாள்,முதலாளித்துவச் சுரண்டலை மீண்டெழச் செய்த அரக்கன் குருச்சேவின் அபாண்டப் பொய்களையும், சதிகளையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி,அவன் முகத்திரையை கிழிக்கிறார் கிரோவர் ஃபர் எனும் மார்க்சிய எழுத்தாளர். இரசிய அரசு ஆவண‌ங்களையும், கட்சி ஆவண‌ங்களையும் நேர்மையாக ஆய்வுச் செய்து கிரோவர் ஃபர் கொண்டு வந்துள்ள உண்மையின் சாட்சிதான் "குருச்சேவின் பொய்கள் -khruschev lied" எனும் நூல்.

பிப்ரவரி 1956 ஆம் ஆண்டு நடந்த சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது காங்கிரசில் நிகிதா குருச்சேவ், ஸ்டாலின் மீது கடுமையான குற்றங்களை சுமத்தி பேசிய “ரகசிய பேச்சு”, உலகம் முழுவதுமுள்ள கம்யூனிச இயக்கத்திற்கு, இன்றளவிலும் மீழ முடியாத மரண அடியை கொடுத்தது. வரலாற்றின் போக்கையே மாற்றியது.

கிரோவர் ஃபர் (Grover Furr), சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு பதிப்பிக்கப்பட்ட, முன்னாள் ரகசிய சோவியத் ஆவணங்களை பத்தாண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்துள்ளார். குருச்சேவின் ரகசியப் பேச்சை விரிவாய் ஆய்வு செய்துள்ள இவர், குருச்சேவ் “இரும்புத்திரை விலக்கல்கள்” ஒன்று கூட உண்மை இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

குருச்சேவின் பொய்கள் (Khrushchev Lied ) என்ற அவரது நூலில் இருந்து சில வரிகள்...

தலைமை வழிபாட்டை எதிர்த்த ஸ்டாலின்

பல ஆண்டுகளாகவே, ஸ்டாலின் தன் மீது செய்யப்பட்ட பாராட்டுகளையும் புகழ்ச்சிக்ளையும் திரும்பத் திரும்ப எதிர்த்து வந்துள்ளார். தலைமை வழிபாடு குறித்து லெனினது முடிவுகளை ஸ்டாலின் அப்படியே ஏற்றுக்கொண்டதோடு, ஏறத்தாழ லெனின் கொண்டிருந்த அதே கருத்துக்களையே அவரும் கொண்டிருந்தார். தன்மீதான “வழிபாட்டிற்கு” எதிராய் ஸ்டாலினின் மேற்கோள்கள் அடங்கிய பெரிய பட்டியலை ஆதாரமாக பின்னிணைப்பில் கொடுத்துள்ளோம்.

ஸ்டாலினோடு நேரடி தொடர்பு கொண்ட பலர் எழுதிய நினைவுக்குறிப்புகள் ஏறத்தாழ அனைத்திலும், ஸ்டாலின் எவ்வாறு தன்னைப்பற்றிய இச்சக புகழ்ச்சிகளை எதிர்த்தது மட்டுமல்ல, அதன்மேல் அருவருப்பும் அடைந்தார் என்பதற்கான துணுக்குகள் பல காணக் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து பலவற்றையும் கூட இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

உதாரண‌மாக, ஜியார்ஜியா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான அகாகை மெகிலாட்சி (Akakii Mgeladze) எழுதி சமீபத்தில் பதிப்பிக்கப்பட்ட “நான் அறிந்த ஸ்டாலின், 2003” என்ற ஸ்டாலினைப் பற்றிய மரணத்திற்கு பிந்திய நினைவுக்குறிப்பை சொல்லலாம். பின்னாளில் குருச்சேவால் ஓரங்கட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட இந்த நூலாசிரியர், ஸ்டாலின் தன்மீதான “வழிபாட்டை” எப்படி வெறுத்தார் என பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

1980 இல் மறைந்த மெகிலாட்சி, ஸ்டாலின் 1949 ஆம் ஆண்டு தனது 70 ஆவது பிறந்த நாள் தனிச்சிறப்பாக கொண்டாடப்படுவதை எவ்வாறு முறியடிக்க விரும்பினார் என்பதை நினைவு கூர்கிறார். உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களை ஒருங்கிணைத்து, கம்யூனிச இயக்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த இந்த பிறந்த நாள் நிகழ்வு எப்படி பங்காற்றும் என கட்சியின் மற்ற தலைவர்கள் வாக்குவாதம் செய்த பிறகே, தயக்கத்துடன் அதற்கு இணங்குகிறார்.

1937 இல் மாஸ்கோவை, ஸ்டாலினோடர் (=ஸ்டாலினின் பரிசு) என்று பெயர்மாற்றம் செய்யும் பொலிட்பீரோவின் முடிவை தடுத்து நிறுத்தியதில் ஸ்டாலின் வெற்றிகண்டார். ஆனால், சோவியத் ஒன்றிய நாயகன் (Hero of Soviet Union) என்ற விருதை மறுப்பதற்கு ஸ்டாலின் செய்த முயற்சி அவருக்கு ஏமாற்றமாகவே இருந்திருக்கும். ஆம், அவர் கடைசிவரை பெற மறுத்த அந்த விருது, அவர் இறந்த பிறகு, அவரது சவப்பெட்டியில் இருந்த தலையணை மீது பதிக்கப்பட்டு இருந்தது.

இன்னும் இதுபோல தோழர்-ஸ்டாலின் மீதான பொய்யானக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரத்துடன் முறியடிக்கும் இந்நூல் பொன்னுலகம் பதிப்பகத்தால் தமிழில் கொண்டு வரப்படுகிறது.

தோழர்-ஸ்டாலின் பிறந்தநாளான டிசம்பர்-18- இல் ஒரு எழுச்சிமிகு நிகழ்ச்சியோடு இந்நூலை கொண்டுவர முயற்சிக்கும் பதிப்பகத்தாருக்கு ஆலோசனையும், உதவியும் வழங்க நினைப்பவர்கள் அணுக - திருப்பூர் குணா 94866 41586 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It