"என்ன காலங்களிவை
மரங்களைப் பற்றிப் பேசுவதென்பது
ஏறத்தாழ குற்றம்
என்றாகிவிடுவது
காரணம் அது உணர்த்துகிறது
அவ்வளவு நீதியின்மைகள்
பற்றிய மௌனத்தை..”

- ப்ரக்ட்

மூன்றாம் உலக நாடுகளின் தாய் நிலங்களை மலடாக்கி, மற்றொரு காலணியத்தை ‘விதைக்க’ முயன்ற வல்லரசுகளின் ‘பசுமைப் புரட்சிக்கு‘ எதிராக நம்மாழ்வார் ஏந்திய சூலாயிதம் தான் பாரம்பரியத்தை அல்லது மரபுமுறையிலான உழவறிவியல் கொண்டு மண்ணையும், உழவையும், உழவனையும் மீட்பதாகும். சற்றேறக் குறைய மெல்ல அருகிவிட்ட ஒரு இலட்சம் பாரம்பரிய இந்திய மண்ணின் நெல் ரகங்களில் பலவற்றை மீண்டும் மண்ணில் இட்டு முளைக்க வைத்து புத்துயிர்ப்பு கொடுத்து அவற்றை பாதுகாத்த களத்து மேட்டு காவல்தெய்வம் தான் நமது ஆழ்வார், நம்மாழ்வார்!

வணிக உழவை நடுவப்படுத்தி, வணிக உளவாளிகள், தரகு வணிகர்கள் செய்த பிராசாரங்களை எதிர்கொண்டு, ஏறக்குறைய அழியும் தருவாயிலிருந்த மரபு சார் உழவை அது பற்றிய மூட நம்பிக்கைகளை தகர்த்து ஊர் தோறும், வயல் தோறும் நாடி, நடையாய் நடந்து உழவன் மொழியிலேயே உறவாடி ஒரு புதிய துளிர்ப்பிற்கு நீர் பாய்ச்சிய நம்மாழ்வார் வெண்தாடியில் மட்டுமல்ல புரட்சியிலும் பெரியார் என்று சொல்லலாம்தான், ஆம் பச்சைத் துண்டு பெரியார்.. ‘பசுமைப் பெரியார்.!’

அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து மண்ணையும், உழவனையும், சூழலையும் மீட்க புதிய விடுதலைப் போரை நிகழ்த்திய மற்றுமொரு காந்தியார் நம்மாழ்வார். மாபெரும் கூட்டு மனித உழைப்பில் இயங்கும் உழவிற்கு என இயந்திரங்களும், டிராக்டர் போன்ற இயந்திர உழவும் மண்ணை கீறத் தொடங்கியபோது இந்திய நிலத்தை புண்ணாக்கும் செயல் என கண்டித்தார் காந்தியார். அவரது சீடரும் காந்திய பொருளாதார மேதையுமான குமரப்பா ”இயந்திரங்கள் சாணம் போடது!” என்றார். உழவனும், இயற்கையும் கூட்டுப்பங்களிகள் அவர்கள் ஒரு போதும் அதனுடன் முரண்பட்டு, சுரண்டி இயங்க முடியாது என்று புதிய இயங்கிலை வகுத்தளித்த காரல் மார்க்ஸ்!

 தாம் பிறந்த தஞ்சை காவிரிப் படுகையான திருக்காட்டுப்பள்ளியைப் போன்றே செயற்கை பசுமைக்கு படிப்படியாக பலியானதை நேரில் கண்டும், வேளாண் ஆய்வு நடுவங்கள், நிறுவனங்கள் செய்யும் ‘பணப் பயிர்‘ ஆய்வு வணிகத்தையும் பார்த்து ஞானம் வரப்பெற்ற புத்தராய் அவரது நடை தொடங்கிற்று. தனியொரு மனிதராய் இயக்கமாய் விரிந்த அவரது பசுமைக்கு ஆதரவானப் போரில் தனது வாழ் நாள் முழுவதையும் ஒப்படைத்துக் கொண்டார். இயற்கை வாழ்வு சிதைக்கப்பட்ட உழவரசியல் குறித்த வரலாற்றை பார்த்தோமானல் நம்மாழ்வாரின் வாழ்வு எத்தகைய தொலை நோக்கிற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்வதாக இருந்தது என்பதை அறியலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தேங்கிக் கிடந்த வெடி குண்டுகள் தயாரிக்கப் பயன்படும் அமோனியம், நைட்ரேட் போன்ற மருந்துகளை பூச்சிக் கொல்லிகளாக, உரங்களாக மாற்றிப் பயன்படுத்தலாம் என்ற பன்னாட்டு நிறுவனங்களின் அற நீக்கம் பெற்ற தீரா பண வேட்கைக்கு, வேட்டைக்கு இந்தியாவைப் போன்ற தேசங்கள் தாமே முன்வந்து தம்மை பலி கொடுத்துக் கொண்டன. மரபார்ந்த உழவு அறிவும் அறிவியலும் செழித்தோங்கிய மண்ணில், நுண்நுயிரி முதல், மண்புழு ஈராக, எருதுகள் வரை நண்பன் என்று இயற்கையைத் தோழமையாகத் துணையாகக் கொண்ட உழவுப் பணியானது அவற்றைப் புறக்கணித்த அல்லது அதற்கு முற்றிலும் முரணான திசையில் பயணிக்கத் தொடங்கிற்று. பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து நாடுகள் அவர்கள் தரும் உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்த உழவர்கள் வலியு்றுத்தப்பட்டனர். பசுமைப் புரட்சி, பூச்சிக் கொல்லி, வீரிய ஒட்டு என்ற நல்ல பெயர்களின் முகமூடி அணிந்து, உயிவளர்த்த மண்ணில் உரமாகவும், கொல்லிகளாகவும் நாள் தோறும் தீமை பயக்கும் நச்சுகள் கொட்டப்பட்டன. இயற்கை கழிவுகளை உரமாகப் பயன்படுத்தி பல்லுயிர் மண்டலங்களைக் கொண்டு பசுமையும் சத்துக்களும் சிதைவுறாமல் செய்யப்பட்ட உயிர்ச் சுழல் வேளாண்மை, அசிங்கமானது, நவீனமற்றது என எள்ளலாக பார்க்கும் உளவியல் நமது உழவர் மனங்களில் திட்டமிட்டு தெளிக்கப்பட்டன. கோட் சூட் போட்ட வேளாண் அறிவியல் படித்த நகரவாசிகளின் அறிவுறுத்தலுக்கு ஏற்ற உழவு விவசாயிகளிடம் எழுதா சட்டமாக்கப்பட்டது. சில காலங்களுக்கு முன்னர் அவ்வாறான சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டு பின்னர் விலக்கி் கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம். ஏட்டுச் சுரைக்காய் விவசாயம் உழவனை கடனாளியாக்கியதோடு, தற்கொலைக்கும் தள்ளியதுதான் ‘பசுமைப் புரட்சியின்’ மாபெரும் சாதனையாகும்.

மூன்றாம் உலக நாடுகளில் திணிக்கப்பட்ட ‘பசுமைப்புரட்சியானது’ திட்டமிட்ட அரசியல் நோக்கத்தையும், இலக்கையும் கொண்டதாகும் அதாவது ஆசிய-அரசியல் பொருளாதாரத்தில் அமெரிக்காவை சார்ந்திருக்கச் செய்தல் என்பதே ஆகும். முக்கியமாக இந்தியா போன்ற உழவைத் தலையாகக் கொண்ட நாடுகளின் முதுகெலும்பை கொஞ்சம் கொஞ்சமா வளைத்து ஒடிப்பதுதான் இவ்வுணவரசியலின் பகுதி திட்டமான பசுமைப் புரட்சியாகும். 1967-78 வரையிலான காலப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக வளர்த் தெடுத்து தாய்நிலங்களைக் மெல்லக் கொல்லும் நஞ்சூட்டுவதாக இருந்ததுதான் பசுமைப் புரட்சியாகும்.

நெல் பற்றிய பாரம்பரிய அறிவோ, விவசாய உற்பத்தியில் பெரிதான அனுபவமோ அற்ற அமெரிக்கா பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் துவங்கிய வீரிய நெல் ஒட்டு ரக ஆய்வும், கூடமும் ஐ.ஆர்.ஆர்.ஐ வகை நெல் ரகங்களை உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையுடன் நமது உழவரிடையே திணித்ததோடு, பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன வங்கிகளில்தான் மோசடிசெய்வார்கள் ஆனால் ஒரு வங்கியே மோசடி செய்யம் என்றால் அது உலக வங்கிதான். அந்த வங்கிகளின் உதவியால்தான் மற்ற பணப் பயிருக்கான அத்தனை முக்கியத்துவமும் இவற்றுக்கு அளிக்கப்பட்டன. கூடுதல் மகசூல், சூழலைத் தாங்கி வளரும் என்றும் இயல்பாகவே பூச்சிகள் தாக்காது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு குட்டை ரகங்களான அவை நீரை அதிகம் குடித்து வளர்வதாக இருந்தன. வளர் நிலையிலிருந்து பால் பிடிப்பு வரை அப்பயிரை தாக்காத பூச்சிகளே நாட்டில் இல்லை என்றாயிற்று. வெள்ளக் காலங்களில் அடிக்காடி நீரில் மூழ்கி கடும் நட்டத்தை ஏற்படுத்துவாதாக இருந்தன. நமது மரபு பயிர்கள் பல நெட்டை ரகங்களாகவும் பருவ காலத்தை தாக்குப் பிடிப்பனவாகவும் வெள்ள நீர் மட்டங்களுக்கு மேல் வளர்ந்து விளைச்சலை தருவனவாகவும் இருந்தன. ஆகையால் நமது உழவர்கள் இவற்றை எதிர்பார்த்தார்கள் இல்லை. ஆயினும், நாட்டின் மூலைக்கு மூலை இருந்த அறிவிப்பு பலகைகளும், வீட்டின் வரவேற்றையிலிருந்த வானொலிகள் வரை பலவிதமான உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும், மேலை ஒட்டு வீரிய நெல் விதைகளைப் பற்றியும் அன்றாடம் ஒரு ஜெபம் போல பரிந்துரைத்தப்படியிருந்தன.

அமெரிக்கா, மற்றும் அதனுடைய பன்னாட்டு முதலாளிகளின் பண வேட்டையாடும் நுகர்வு கலாசாரத்தை முன்னிறுத்தும் பணப்பயிர் விவசாயம் நகரங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் கிடங்காக கிராமப்புற உழவு முறை மாற்றப்பட்டன. மேலும் தன்னிடமிருக்கும் விளைச்சலின் ஒருபகுதியை நகர சந்தைக்கு உழவனே கொண்டுவந்து சேர்க்கும் விதமாக இடுபொருட்கள் கடனாக வழங்கப்பட்டன. கடனை அடைக்கும் பொருட்டு மிகுதி விளைச்சலை அவன் நகரச்சந்தையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. அதுமாட்டுமல்ல, பசுமைப் புரட்சியின் வழியாக நிலத்தில் கொட்டப்பட்ட நச்சுக்கள் எதிர்பார்த்தது போலவே அவற்றை மலடாக்கும் வேலையை திறம்படச் செய்திருந்தன. அது துரித விளைச்சலையும், நிறைய நட்டத்தையும் உழவருக்கு ஏற்படுத்தத் தவறவில்லை.

சூழலைத் தாங்கியும், பூச்சிகளை எதிர்த்தும் வளரும் 22,000 உள்நாட்டு நெல் ரகங்களைக் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஆய்வுகள் முடக்கப்பட்டு, பிலிப்பைன் மோசடி நெல் ரகங்களை நமது காட்டிக் கொடுக்கும் அரசியலார் நம்முடைய உழவர் தலையில் கட்டி, உயிரையும் பறித்ததோடு அதுவரையிலான உழவுத் தொழில்லை கடன்காரத் தொழிலாக மாற்றிவிட்டனர்.

இந்நிலையில்தான் 90-களில் பன்னாட்டு நிறுவனங்கள் திறந்த பொருளாதாரம் மற்றும் உலக மயமாக்களின் பகுதியாக விதை அரசியலை ஒரு மறைமுகப் போராகத் தொடுத்தன. விதைகளை உழவர்கள் அதுவரையிலாகத் தமக்குள் பரிமாறி கொண்டு செய்துவந்த பாரம்பரிய முறை, அது வழியாக பாதுகாக்கப்படடு வந்த மரபார்ந்த விதைகள், பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை பாதிப்பதாகவும், கண்களையும் உறுத்துவதாக இருந்தன எனவே விதைகளுக்கான காப்புரிமை என்கிற பெயரிலும், விதைகளை கட்டுப்படுத்தி, மலட்டு விதைகளை வழங்குவதன் வழி உழவனின் தன்னிச்சையான செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதோடு தமது பணப்பையையும் நிரப்பிக் கொள்வது என்ற முடிவோடு இயங்கின. ஏற்றகனவே தனது சுயமரியாதையை இழந்து கையேந்தும் நிலைக்குச் சென்ற உழவனை உலகமயம் கோவணத்தையும் உருவி தற்கொலைக்கும் தூண்டியது. ஒரு நீண்ட வேலைத்திட்டத்தின் இறுதியில் அவனை மலட்டு நிலத்திலிருந்து ஏதிலியாக விரட்டியடிப்பது அடுத்து தொடங்குவதாக இருந்தது.

நிலத்திலிருந்து உழவனின் வேரைத் துண்டித்தல், அவனை நகரங்களை நோக்கி விரட்டுதல் என்ற பன்னாட்டு மற்றும் இந்திய அதிகார வர்க்கத்தின் கனவு நிறைவேறும் தருவாயில்தான் உழவன் விழித்தெழலானான். ஒயாமல் அரற்றிவந்த நம்மாழ்வாரின் குரலுக்கு அன்றைக்குத்தான் கொஞ்சம் செவிசாய்க்கத் தொடங்கினான். ஏறக்குறைய பூச்சிக் கொல்லிகளாலும், இரசாயன உரங்களாலும் மலடாகிவிட்ட நிலத்தை மீட்க ஒரு இரட்சகரைப் போன்று தமது நிலத்தையும் அவரது காலடிப்பட்டு உயிர்தெழச் செய்யமாட்டாரா என்று நம்மாழ்வாரின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கினான். அவர் அவனிடம் தனது வழக்கமான உழவு மொழியை கனிவுடன் மொழிந்தார். நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு என்ற மண்சார் அனுபவ மொழியே உழவனின் பாரம்பரிய சொத்து அதை மறந்ததாலேயே இவ்வளவு கேடுகளும் சூழக் காரணம் என்பதை எடுத்துரைப்பார். நம்மாழ்வார் தமிழர் ஆதி இலங்கியங்கள் தொடங்கி, சமூக விஞ்ஞானமான மார்க்சியம் முதல் பெரியாரியம் வரை பஞ்சகவ்யத்தோடு கலந்து உழவனிடம் கொண்டு சேர்த்தார். நடப்பு அரசியல் அறியா உழவனுக்கு பன்னாட்டு உழவரசியல் பற்றிய வகுப்புகள் நடக்கும் இடமாக களத்து மேடுகளை மாற்றினார். உழவு குறித்த நமது இலக்கியங்கள் பேசும் அனுபங்களை வளரும் தலைமுறைக்கும் ஒரு விதையைப் போன்று நினைவுச் சுரையில் போட்டு வைத்து விதைத்தார். நம்மாழ்வாரின் குரலை ஒலிக்க மறுத்த வானொலிகள் அவரைத் தேடி வந்தன.

நமது இலங்கியங்கள் உழவே தலையாயப் பணி என்கின்றன. உழவன் பின்னே உலகம் செல்வதாக எழுதின வேளாண்மை என்பதை பேராண்மை என்றும் தொண்டெனவும் கண்டன. உழவுப்பணி என்பது உலகின் பசிப் பிணிப் போக்கும் பணி என்று சிலாகித்தன. அதுசார்ந்து எழுந்த நாகரீகம் இலக்கியம் என்பன தமிழை தமிழனை சிறப்பாக உலகிற்கு எடுத்துச் சொல்வதாக இருந்தன. ‘எல்லா வளமும் செல்வமும் எம்மிடையே இருந்தாலும், உண்ண ஒருகவளம் உணவும், உடுத்த ஒரு முழம் உடையும் போதும் என்று சங்கப்புலவன் நக்கீரனை நிறைவடையவைத்தது அதன் நீட்சிதான் காந்தியார் போல இடை ஆடையும் துண்டுடனும் நம்மாழ்வாரை வலம் வரச் செய்தது. வரப்புயர நீருயரும், நீருயர நிலம் உயரும், நிலம் உயர கோலுயரும் என்றது ஔவையின் மரபுவழி உழவானுபவம். சீரைத் தேடின் ஏரைத் தேடு என்பது அவரது வாய்மொழி. மண்ணிலிருந்து பிறந்த இலக்கியத்தை மீண்டும் மண்ணுக்கு கொண்டு சேர்த்தார் நம்மாழ்வார்.

நைல் நதி நாகரீகம் போன்று, சிந்து வெளி போன்று ஒரு ஆற்றங்கரை உழவு நாகரீகம் நம்முடையது என்பதில் வரலாற்று பெருமிதமும், போற்றுதலும் மட்டுமே போதாது அதை காப்பாற்றி வைப்பதுமே பொறுப்புமிக்க வாழ்நாள் பணி என்பதை உணர்ந்தார். நம்மாழ்வார் அதனாலேயே பாரம்பரிய நெல் விதைகள் 22,000 ரகங்களை அந்நிய நிறுவனங்களுக்கு இந்தியா மானமற்று தூக்கிக் கொடுத்தபோது துவண்டழுதார். வேளாண் அறிவியளாலர் ரிச்சாரியா இந்திய பாரம்பரிய நெல் ரகங்களை காப்பாற்ற அன்றைக்கு அரசையும் அயலக நிறுவனங்களையும் எதிர்த்துப் போராடி, உயிர் துறந்தார் என்பதை அறிந்தே மலட்டு விதை மாண்சாட்டோ வை இந்தியாவிற்குள் நுழைவதை எதிர்த்து முணை முகத்து நின்றார். உழவை முன்வைத்த இயக்கங்களை, சூழல் இயக்கங்களை ஒன்றினைத்தும் உழவையும், உழவனையும் கருவிலேயே அழிக்கும் மரபணு மாற்றுப்(பி.டி) பயிர்களை களை எடுக்க அரசிடம் பேசி தமிழகத்தில் தடைவிதிக்கச் செய்தது அந்த களத்து மேட்டு காவல் தெய்வம்!

நிலத்தின் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்ட இரசாயன பூச்சிக் கொல்லி மற்றும் உரங்கள் ஆகியவற்றின் நச்சு எரிகணைகளால் நிலத்திலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட உழவனின் நிலத்தில், பன்னாநாட்டு நிறுவனங்களை நிறுவியதோடு, அவனை அந் நிறுவனங்களிலேயே தினக் கூலியாக மாற்றிவிடுதல் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் பண்ணைகளை நிறுவி பயிரிட்டு வரும் நெல் மற்றும் இதர தானியங்களை பெரும் விலை கொடுத்து வாங்குது, என்ற அடிப்படையில்தான் நமது பிரதமர், உழவு ஒரு இலாபகரமில்லா தொழில் என்றும், இடுபொருள் விளையேற்றம், மழையின்மை பெருந்தொகையில் ஆட்களின் முதலீடு ஆகியவற்றால் உழவை முன்னேற்றமான பாதையாக கருதக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். பன்னாட்டு நிறுவனங்களின், ஒற்றை வல்லரசின் எண்ணங்களுக்கு ஏதுவாக கோடிக்கணக்கான உழவர்களின் அரசியல் பிரதிநிதி இப்படி திருவாய் மலர்ந்தாலும் உழவனின் முன்னத்தி ஏரான நம்மாழ்வார் உயிர்ப்பித்த நிலங்களை நோக்கி உழவனை அழைத்தார். தனது வானகம், குடும்பம், மற்றும் பல்வேறு இயற்கை உழவமைப்புகளை ஒன்றினைத்ததன் வழி உழவனுக்கும் இயற்கை உரமூட்டினார்.

ஒட்டு மொத்த நாட்டையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுத்துவிடும் அரசியலில் இன்றைக்கு கடல் சார் பழங்குடிகள் மற்றும், காடுசார் குடிகள், சமவெளி உழுக்குடிகள் என்பன அவ்வம் இடங்களிலிருந்து ஈவு இரக்கமின்றி விரட்டியடிக்கும் போக்கு உள்ளூர் அரச மற்றும் கூலிப்படையினரைக் கொண்டு நேரடியாகவும், பிற அழுத்தங்களின் வழியாகவும் இடம் பெயர்க்கப்படுகின்றனர். இடிந்தகரை போராட்டம் என்பது அந்த ஒருபகுதி நிலத்திற்கானது என்றால் நம்மாழ்வாரின் போராட்டமோ ஒட்டு மொத்த தமிழக நிலத்திற்கானதாகும். அந்த வகையில் நம்மாழ்வாரின் பணி, நிலத்தை நேசித்தலும், இயற்கை சூழலை பாதுகாத்தலும் என்பது ஒரு சர்வதே சுரண்டலையும், சூறையாடலையும் நிலத்தில் நின்று காலூன்றி வலுவாக எதிர்கொள்ளும் மென் போக்கிலான காந்தியப் போராகும். நம்மாழ்வார் அவற்றை பாதியிலேயே விட்டுச் சென்று விடவில்லை ஆழ விதைத்துச் சென்றுள்ளார் என்பதே முக்கியமானதாகும். எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் நடை, நடப்பது பற்றி பேசும்போது, அது நிலத்தோடு மனிதனை கால்களால் பிணைப்பது என்பார், அம்மாதிரியான நபர்கள் புத்தர், காந்தி, ஜே.கே. என பட்டியலிட்டிருப்பார். அந்த வரிசையில் உறுதியான இடம் நம்மாழ்வாருக்கு நிச்சயம் உண்டு.!

- இரா.மோகன்ராஜன் (கைப்பேசி 8012622824, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It