joseph stalinஅதுவரை கோழி ஒன்று அவ்வளவு ஆக்ரோஷமாக நம்மைத் தாக்க வருமா என யாரும் நினைத்திருக்க முடியாது.

தன் குஞ்சுகளுக்கு மனிதனால் ஏதாவது ஆபத்து என்ற உணர்வு கோழிக்கு ஏற்பட்டால் அது ஆக்ரோஷமாக கொத்துவதற்காக அந்த மனிதனை நோக்கிப் பாயும். மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு சுற்றுப்புறத்தை உற்று நோக்கும். இது பெரும்பான்மையான உயிர்களுக்கும் பொருந்தும்.

பாதுகாப்பிற்கான இந்த தாக்குதலை யாரும் வன்முறை என்று சொல்வதில்லை. இது தற்காப்பே!

இத்தகைய ஒரு சூழலில்தான் புதிதாக பிறந்த குழந்தையான ரஷ்ய சோசலிச அரசை வீழ்த்த அதனால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஆளும் வர்க்கத்தினரும், அந்த குழந்தை வளர்ந்து வருவது தமக்கு ஆபத்து என்று உணர்ந்து அந்த குழந்தையை கொலை செய்யத் துடித்த உலக ஏகாதிபத்திய அரசுகளிடமிருந்து இளம் சோசலிச அரசை தாயுள்ளத்தோடு காப்பது என்பது அசாதாரணமான ஒன்று.

இந்த அசாதாரணமான ஒரு கடமையை திறம்பட செய்து சோசலிசத்தைக் கட்டியெழுப்பி அதைக் காத்த 'தாய்' தான் நம் தோழர் ஸ்டாலின்.

எதிரிகள் எடுக்கும் ஆயுதமே நம் ஆயுதத்தைத் தீர்மானிக்கும்.

சோவியத் புரட்சிக்குப் பிறகு இழந்த அதிகாரத்தை மீட்க முன்னாள் ஆளும் வர்க்கம் நடத்திய உள்நாட்டுப் போரை எதிர்கொள்ள வேண்டிய நிலை சோவியத் அரசிற்கு. அந்த போரை தவிர்த்திருந்தால் சோவியத் அரசு சில வாரங்களிலியே கவிழ்க்கப்பட்டு இலட்சக்கணக்கான கம்யூனிசப் புரட்சியாளர்கள் கொல்லப்பட்டு, மீண்டும் ஏற்கனவே இருந்த பழைய ஜார் ஆட்சியின் கொடுமையை விட பல நூறு மடங்கு புதிய ஜார் ஆட்சியின் கொடுமைகளுக்கு புதிய ரஷ்ய உழைக்கும் மக்கள் ஆளாகி இருப்பார்கள்.

இன்று சோவியத் அரசு கொலை செய்து விட்டது என நீலிக்கண்ணீர் வடிக்கும் யாரும் இப்படி ஒரு படுகொலைகள் நடந்திருந்தால் தங்களது நவ துவாரங்களையும் Fevi Quick போட்டு ஒட்டியதைப் போல் மூடிக் கொண்டு அமைதியாக இருந்திருப்பார்கள்.

வருத்தத்திற்குரிய விசயம் என்னவெனில் சோவியத் ஒன்றியம் இப்படிப்பட்டவர்களின் அமைதியை சீர்குலைத்து விட்டது.

ஆம். மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களை ஒடுக்க நினைத்த எதிர்ப்புரட்சி கும்பல்களை நம் சோவியத் ரஷ்ய தோழர்கள் அடக்கி ஒடுக்கி சோவியத் அரசை மேலும் வளர்த்தெடுத்தது என்பது Fevi Quick போட்டு ஒட்டி மூடிக் கொண்டு இருக்க வேண்டியவர்களை "ஐயகோ கொலை, ஈவிரக்கமற்ற கம்யூனிஸ்ட்கள்" என அமைதியைக் குலைத்து கதற விட்டுவிட்டது. பாவம்.

1930-களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி காலனி வைத்து சுரண்டி வாழ்ந்த ஏகாதிபத்திய நாடுகளையே ஆட்டம் காண வைத்தது. உலகில் பல கோடி தொழிலாளர்கள் வேலையிழந்தனர். மக்கள் வாழவே முடியாத நிலைக்கு ஏகாதிபத்திய நாடுகளும், அதன் காலனி நாடுகளும் தள்ளப்பட்டன.

ஆனால் புதிதாகப் பிறந்த சோசலிச அரசோ உள்நாட்டு உற்பத்தியை வைத்து மட்டும் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி பெற்றது. உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்காத ஒரே நாடாகவும் இருந்தது; அமெரிக்க நாணயத்தின் மதிப்பை விட அதிக மதிப்பு கொண்டதாக சோவியத் நாணய மதிப்பு இருந்தது.

இதற்கெல்லாம் காரணம் மார்க்சிய திட்டமிடலும், மக்களின் கடுமையான உழைப்பும் மட்டுமே.

***

தினக்கூலிக்கு கட்டிட வேலைக்கு செல்லும் ஒரு தொழிலாளி யாருக்கோ வீடு கட்ட உழைக்கிறார். 8 மணி நேரம் தன் உழைப்பு சக்தியை வீடு கட்டுவதற்காக செலவிடுவதற்கு கூலி வாங்குகிறார். உழைப்பு சக்தியைக் கொடுத்து வீடு கட்டிக் கொடுப்பதால் வீடு கட்டி முடித்தவுடன் வீட்டில் அந்த தொழிலாளி பங்கு கேட்க முடியுமா? அப்படி கேட்டால் "உனக்கான கூலியை வாங்கிட்ட.. முதலு என்னோடது ஒழுங்கா மூடிட்டு போய்டு... அடிவாங்கிறாத" என்பது தான் பதிலாக வரும்.

காரணம் வீடு கட்டுவதற்கான பண முதலீடு, இட முதலீடு இரண்டும் வேறு ஒருவனுடையது. உழைப்புக்கான கூலியை தொழிலாளி வாங்கி விட்டதால் அத்துடன் அவருக்கான பங்கும் முடிந்து விட்டது. அவருக்கு அங்கு எந்த உரிமையும் இல்லை. இதனால் தொழிலாளிக்கு குறைந்த கூலியைக் கொடுத்து அதிக வேலையை வாங்கி, பணம் ஒருவனிடம் அதிகமாக சேர்வதைத் தடுக்க 8 மணி நேர வேலை ஊதிய பாதுகாப்பு கேட்டுப் போராடுகிறோம்.

இதுவே அதே தொழிலாளி தனக்கான வீட்டை தானே கட்டுகிறார். பண மூலதனம் அவருடையது, இடம் அவருடையது, உழைப்பு சக்தி அவருடையது. இப்போது அவரால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு உழைப்பை செலுத்துவார். தனக்கு முடியும் வரை உழைப்பார். ஓய்வு தேவை என்றால் ஓய்வெடுத்துக் கொள்வார். அவரது தேவைக்கான அடிப்படையில் விரைவாகவோ, மெதுவாகவோ வேலைகளைச் செய்வார்.

"முதலாளித்துவ சமூகத்தில் 8 மணி நேர வேலை கேட்டுப் போராடிய கம்யூனிஸ்டுகள் சோசலிச அரசில் கடுமையாக உழைப்பைக் கொட்டச் சொல்லி மக்களைத் துன்புறுத்தினர்" என்கின்றனர். யார் இவர்கள் என்று பார்த்தால், தனிபட்ட முதலாளிகளின் லாபத்திற்காக 12 மணி நேரத்திற்கு மேல் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் நவீன முதலாளித்துவ முறையை பேச்சுக்கு கூட கேள்வி எழுப்பாதவர்கள்தான்.

சோவியத் ரஷ்யாவின் உழைக்கும் மக்களே சோவியத் கட்டுமானங்களின் உடைமையாளர்கள். முதலாளித்துவ நாடுகளில் பெரும் பொருளாதார மந்தத்தால் வேலையிழந்து வாழ்க்கை இழந்து கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ வழியற்று இருந்தனர். நாடுகள் திவாலாகிக் கொண்டிருந்தன. இப்படிப்பட்ட நேரத்தில் தங்கள் நாடு பொருளாதார நெருக்கடி சுழலுக்குள் சிக்கக் கூடாது என்கிற சோசலிச சமூக உணர்வோடு தோழர் ஸ்டாலின் கொண்டு வந்த முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் சொந்த வர்க்க உணர்வோடு கடுமையாக உழைத்து, உலகில் முதன்மையான பொருளாதார நாடாக சோவியத் அரசை உயர்த்தினர். 'உழைக்கும் மக்களின்' (தங்களுடைய) உடைமையைப் பாதுகாத்து உடனடியாக உறுதியான அமைப்பாக மேலெழுப்ப வேண்டும் என்கிற தேவை அவர்களைக் கடுமையாக உழைக்க வைத்தது.

இதனைத் தாங்க முடியாத முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கே உரிய, ஆனால் தான் துளியளவு கூட நடைமுறைப்படுத்தாத 8 மணி நேர வேலையை கம்யூனிஸ்ட்கள் நடைமுறைப் படுத்தவில்லை என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

நில உச்சவரம்பு சட்டங்கள் இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்ட போதும், தலித் கூலி விவசாயிகளுக்கு நிலம் கொடுத்த போதும் அதை ஏற்க முடியாத நிலவுடைமையாளர்கள் நடத்திய வன்முறையில் பல கூலி விவசாயிகள் பலியானர்கள். இதற்கு மறைமுகமாக அரசும் ஆதரவாக நின்றது. இன்றும் கூட தலித் கூலி விவசாயி நிலம் வைத்துக் கொள்வதை நிலவுடைமையாள சாதிகள் ஏற்பதில்லை.

இதுபோன்ற சூழலில் நிலவுடைமையாள சாதிகள் வன்முறை நிகழ்த்திய நிலவுடைமையாளருக்கு ஆதரவாகவும், ஜனநாயக முற்போக்கு வாதிகள், நியாயஸ்தர்கள் கூலி விவசாயிகள் பக்கத்திலும் நிற்பார்கள்.

"சோவியத் ரஷ்யாவில் விவசாயிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கம் ஒரு அரசாங்கமா?" என்கின்றனர் நிலச் சீர்திருத்தத்தை எதிர்த்து கூலி விவசாயிகளைப் படுகொலை செய்தவர்களுக்கு ஆதரவாக நின்றவர்கள்.

சோவியத் ரஷ்யாவில் பல நூறு ஏக்கர்களிலிருந்து பல ஆயிரம் ஏக்கர்கள் வரை வைத்திருந்த பண்ணையார்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து கூலி விவசாயிகள், குத்தகை விவசாயிகள் என எல்லாருக்கும் நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்து பண்ணையார் உட்பட எல்லாரும் வயல்களில் இறங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

இதை ஆண்டாண்டு காலமாக பண்ணையார்களாக இருந்தவர்கள் ஏற்பார்களா?அரசுக்கெதிராக கலகம் செய்தார்கள், எதிர்ப் புரட்சி கும்பல்களோடு சேர்த்து விவசாயிகளின் பயிர்களை எரித்தனர். பல இடங்களில் கொலைகளும் அரங்கேறின.

நாடு முழுக்க இத்தகைய எதிர்ப்புகள், படுகொலைகள் பண்ணையார்களால் நிகழ்த்தப்பட்டன.

பண்ணையார்களின் அரசாங்கமாக இருந்திருந்தால் பண்ணையார்களோடு நின்று சாதாரண கூலி விவசாயிகளை கொன்றொழிப்பதற்கு துணை போயிருக்கும்.

தர்மசங்கடமாக சோவியத் அரசு பாட்டாளி வர்க்கத்திற்கான அரசாகி விட்டதால் பண்ணையார்களுக்கு எதிராக நிற்க வேண்டியதாகி விட்டது. அரசின் பொது விவசாய முறைக்கு எதிராக நின்று விவசாயப் பயிர்களை அழித்து, விவசாயிகளைக் கொலை செய்த பண்ணையார்கள் கைது செய்து முகாம்களில் அடைக்கப்பட்டனர். 

இப்போது இதை எதிர்ப்பவர்கள் யார்?ஆதரிப்பவர்கள் யார்? என்பது நன்கு விளங்கியிருக்கும்.

***

எல்லா சதியையும் முறியடித்து ஒருவன் ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி, ஊர் மக்கள் மதிக்கும் நபராக ஆகிவிட்டால், அவனால் மதிப்பு பறிபோன அவனது எதிரிகள் அவனைக் கொலை செய்யப் பார்ப்பார்கள். மக்களை மீறி அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால், மக்களிடமிருந்து அவனைப் பிரிக்க அவதூறுகளைப் பரப்புவார்கள், சில நிகழ்வுகளை ஜோடிப்பார்கள். எப்படியாவது கெட்ட பெயர் வாங்க வைத்து மதிப்பைக் குறைத்து மக்களிடமிருந்து பிரிக்க வேண்டும்.

சோவியத் ஒன்றியம் தனது பிரமாண்ட வளர்ச்சியாலும், தொழிலாளர் வர்க்கம் தனக்கான ஒரு ஆட்சியை உருவாக்கி வெற்றிகரமாக அதை நடத்தி வருவதையும் பார்த்த உலக நாடுகளின் தொழிலாளர்கள், ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்த காலனி நாடுகளின் மக்களும் அந்த நாடுகளையும், ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்து கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இதுநாள் வரை தாங்கள் கட்டிக் காப்பாற்றிய முதலாளித்துவக் கோட்டையை ஆட்டம் காணச் செய்யும் சோவியத் அரசை வளர விடக்கூடாது என நினைத்தனர்.

அதே நேரத்தில் கிளர்ச்சி, கொந்தளிப்பில் இருந்த தொழிலாளர்களை சமாதானப்படுத்த அதுவரை கடுமையாக ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தொழிலாளர் உரிமைகள் வழங்கப்பட்டன. பொருளாதாரம் மிக மோசமாக இருந்த ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கு வழங்கிய உரிமைகளை செயல்படுத்த நிதி உதவி அளித்தது அமெரிக்கா.

அதே நேரத்தில் வளர்ந்து தங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சோவியத் அரசை ஜெர்மன் தாக்கும்போது ரஷ்யா தோல்வியுறும், நாம் எளிதாக உலக சந்தையைக் கைப்பற்றி உலக நாட்டாமை ஆகலாம் எனத் திட்டம் தீட்டினர்.

அதே நேரத்தில் சோவியத் ஒன்றியத்தின் சாதனைகளை மறைக்க அமெரிக்காவின் பத்திரக்கை முதலாளி ஹெர்ஸ்ட்டும், ஹிட்லரின் அமைச்சர் கோயபல்சும் சேர்ந்து பல வன்ம அவதூறுகளை உருவாக்கி அதை தன் பத்திரிக்கையின் மூலம் பரப்பினர்.

கம்யூனிசத்தின் பின்னால் மக்கள் செல்வதைத் தடுப்பது எப்படி என ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்த ஆதிக்கவாதிகளுக்கெல்லாம் இந்த செய்திகள் ஆனந்தத்தை உண்டாக்கியது. உண்மையா? பொய்யா? என விசாரிக்காமலே எல்லா நாட்டின் ஆதிக்கவாத நாளேடுகளில் தலைப்புச் செய்திகளாக ஹெர்ஸ்ட்-கோயபல்சு கும்பலின் பொய் அவதூறுகள் வலம் வர ஆரம்பித்தன.

இதில் உருவான கதைகள்தான் உக்ரைன் செயற்கைப் பஞ்சத்தை ஸ்டாலின் உருவாக்கினார் என்றும், அதனால் இறந்தவர்கள் என்று தன் கைக்கு எத்தனை ஜீரோ போட முடியுமோ அதைப் போட்டு எண்ணிக்கையைச் சொன்னார்கள். சோவியத் ரஷ்யாவிற்குள் பல லட்சம் மக்களைக் கொன்றார் ஸ்டாலின், சொந்த கட்சிக்காரர்களைக் கொன்றார் ஸ்டாலின், அகதிகளைக் கொன்றார் ஸ்டாலின், ஏலியன்களைக் கொன்றார் ஸ்டாலின் என ஸ்டாலின் பற்றிய பேய்க் கதைகளை உருவாக்கினர்.

இதில் கொடுமை என்னவென்றால் சோவியத் பற்றி இதுபோன்ற கதைகளை எழுதித் தருபவர்கள் சோவியத் ரஷ்யாவிற்குள் சென்றதே கிடையாது. அவதூறு செய்ய வேண்டும் என முடிவெடுத்த பிறகு, கள நிலவரம் என்பது தேவையில்லாத ஆணிதான். இது போன்று எழுதித் தருபவர்களுக்கு பரிசு எல்லாம் கொடுக்கப்பட்டது. இதற்காக பலர் பல கதைகளை எழுதி ஹெர்ஸ்ட் பத்திரிக்கைக்குக் கொடுத்தனர்.

நாஜி ஆதரவு வலதுசாரி உக்ரேன் அகதிகளை வைத்து ஸ்டாலின் கொலையாளி என சொல்ல வைத்து கதை உருவாக்குவதும் நடந்தது. சங்கியை வைத்து இந்தியாவில் மோடியை விட சிறந்த பிரதமர் இல்லை என்று சொல்ல வைப்பதைப் போன்றது இது.

ஆனாலும் சோவியத் ரஷ்யா தனது பாதையில் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் ஹிட்லரை சோவியத் அரசின் மீது படையெடுக்கத் திட்டமிடுவதை அறிந்து போரைத் தடுக்க எவ்வளவோ முயன்றார் தோழர் ஸ்டாலின்.

ஆனாலும் ஏகாதிபத்தியங்கள் விடுவதாய் இல்லை. ஹிட்லரின் ஜெர்மனி போலந்தைத் தாக்கி சோவியத்தின் மீது அதிகாரப் பூர்வமாக போரை அறிவித்தது. சிறுகச் சிறுக உருவாக்கிய சோவியத் அரசைக் காக்க வேண்டிய பெரும்பொறுப்பு சோவியத் மக்களுக்கு இருந்தது. 

பெரிதாக போர் அனுபவம் இல்லாத, பெரிய அளவு இராணுவ வலிமை இல்லாத உலகின் அதிகம் வளங்கள் நிறைந்த சோவியத் ரஷ்யாவை எளிதில் வீழ்த்தி விடலாம் என ஹிட்லர் நினைத்தான். உண்மையில் சோவியத் ரஷ்யாவும் பெரும் போரை சந்திக்கும் அளவு வலிமையாக இல்லை. முடிந்த அளவு போரைத் தள்ளிப் போட ஸ்டாலின் முயன்றும் ஹிட்லர் சோவியத்தின் மீது போரை நடத்தினான். 

தாங்கள் போராடிக் கட்டிய சோசலிச அரசைக் காப்பதற்காக சோவியத் மக்கள் போரில் இறங்கினர். சோவியத் மக்கள் செஞ்சேனையாகப் புறப்பட்டுச் சென்று தோராயமாக 2 கோடி தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து ஜெர்மனியை வீழ்த்தி சோவியத் அரசை மட்டுமல்ல, ஹிட்லரின் அகண்ட ஆரிய ஜெர்மனி என்கிற பாசிசத் திட்டத்திலிருந்து உலகையே காத்தனர்.

உலகைக் காக்க இன்னுயிரை ஈந்த 2 கோடி செம்படைத் தோழர்களின் உயிரிழப்பும், தோழர் ஸ்டாலின் நடத்திய படுகொலை கணக்கில்தான் முதலாளித்துவ வர்க்கத்தால் சேர்க்கப்படுகிறது.

போரில் கொல்லப்பட்ட எதிரி நாட்டுப் படையினரும் தோழர் ஸ்டாலின் கணக்கில்தான் சேர்க்கப்படுகிறது.

ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது போரை நடத்த? ஜெர்மனி போரிட்டு வந்தால் சரணடைந்து, ஜெர்மனி இராணுவத்தால் கொல்லப்பட்டு செத்துப் போயிருந்தால் அனுதாபங்களைத் தெரிவித்திருப்போம்.

போரிட்டு தன் நாட்டு மக்களின் உயிரைக் கொடுத்து உலகத்தைக் காத்து முன்பை விட உலகத் தொழிலாளர் மத்தியில் உயர்ந்து நிற்கிறார். இதை எப்படி நாங்கள் ஏற்க முடியும்? இதையும் உடைக்க வேண்டுமே??

உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணத்திலிருந்து சோசலிச அரசையும், அதனைக் காத்து நிற்கும் தாயான தோழர் ஸ்டாலினின் பெயரையும் அழித்து ஒழிக்க எவ்வளவு அவதூறுகளை உருவாக்க முடியுமோ உருவாக்கிப் பரப்பினர்.

ஆனால் உலக நாட்டின் பல தலைவர்கள் சோவியத் ரஷ்யாவிற்கு சென்று வந்தனர். அங்கு மனித விரோத செயல்கள் நடப்பதற்கான எந்த சூழலும் தெரியவில்லை என்றனர். சோவியத் போன்ற ஒரு நாடுதான் மக்களுக்கு வேண்டும் என்றனர்.

இறுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில், லூயிஷ் பிஷர் போன்றோர் ஹெர்ஸ்ட்-கோயபல்சு கும்பலின் கட்டுகதைகள் அனைத்தும் பொய் என அம்பலப்படுத்தி உள்ளனர்.

இதுவெல்லாம் வெளிப்புறத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் போது, கட்சிக்குள் எதிர்புரட்சிக் கும்பலும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் ஊடுருவியதை மிகத் தாமதாகவே உணர்ந்தார் தோழர் ஸ்டாலின்.

இதனால் தோழர் ஸ்டாலினுக்குப் பிறகு தலைமைக்கு வந்தவர்கள் சோவியத் அரசை சிதைக்க ஆரம்பித்தனர். ஸ்டாலின் மீது தங்கள் பங்கிற்கும் அவதூறுகளைப் பரப்பினர். ஆனாலும் அவர்களால் அதை முற்றிலும் தகர்க்க 40 ஆண்டுகள் தேவைப்பட்டது.

அந்தளவு வலுவான சோசலிச அடித்தளத்தை சோவியத் மக்களோடு மக்களாக நின்று அமைத்தவர் தோழர் ஸ்டாலின்.

இதனால்தான் ஸ்டாலின் என்றாலே முதலாளித்துவம் ஈரக்குலை நடுங்க பதறுகிறது.

தோழர் ஸ்டாலின் சர்வாதிகாரிதான். எல்லா சர்வாதிகாரிகளையும் போல் முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கியவர் அல்ல. உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கும் சர்வாதிகாரிகளையும், முதலாளித்துவ வர்க்கத்தையும் தொழிலாளி வர்க்கத்திற்காக நின்று அடக்கி ஒடுக்கிய 'பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரி'.

- சேரா

Pin It