ஆங்கிலத்தில் 'Brain Drain' என்பார்கள். உள்ளூர் பணத்தில் கற்ற கல்வியை வெளி நாட்டிற்கு கடத்துவது. இதன் பின்னனி குறித்து ஏகத்தும் கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவைகளுள் பெரும்பான்மை, குமாஸ்தா கல்வி முறை குறித்தும், கல்விக்கென அரசின் ஒதுக்கீடு குறித்தும், கல்விக்கடன் குறித்தும், பொருளாதார முதலாளித்துவத்திடம் அவை சென்றடைவது குறித்தும் விளக்கமாகப் பேசுகின்றன.

பலரால், மேற்சொன்னவைகள் குறித்து ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதால், Brain Drain ஏன் நிகழ்கிறது என்பது குறித்து வேறொரு கோணத்தில் எனது வாதங்களை இக்கட்டுரையில் முன்வைக்க விரும்புகிறேன்.

1990 களின் பிற்பகுதியில் மெட்ரோ சானல் அறிமுகம். அப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் இரவு 8 முதல் 10 மணி வரை கொண்டாட்டம் தான். அதற்கெனவே நாள் முழுவதும் காத்திருப்பது அப்போது வாடிக்கையானது. இப்போதெல்லாம் எந்த சானலை திருப்பினாலும், ஆடை அவிழ்ப்புகள், உடலுறவுக் காட்சிகள். இவைகள் இல்லாத சினிமா இன்றைக்கு எடுக்கப்படுவதே இல்லை. இவைகள் இல்லாத சினிமாக்களை உருவாக்க ஒரு இயக்கத்தை உருவாக்கி போராட வேண்டியிருக்கிறது .

போதாதகுறைக்கு சில நாடகங்கள் பள்ளி சிறார்களையே குறி வைத்து எடுக்கப்படுகின்றன. இந்த நாடகங்கள் பால்ய பருவத்தில் கல்வி கற்க முனையும் மாணவனின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை. மாறாக, காதலைப் பற்றி பேசுகின்றன. வெகுஜன வார மாத இதழ்கள் இதை விட மோசம். நடிகைகள் படங்களை பிரசுரிக்காத இதழ்களே இல்லை. இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டி இருக்கிறது. நடிகைகள் படங்கள் இல்லாத வார மாத இதழ்கள் விற்பதே இல்லை. எல்லாமே மக்களின் மனப்போக்கில், சிந்தனைப் போக்கில் இருக்கிறது..

கலை இலக்கிய இதழ்களை இதற்கு உதாரணம் கூறலாம். உயிர்மை, காலச்சுவடு, கணையாழி, காவ்யா.. இப்படி.. இவற்றுக்கு மாதாந்திர சந்தாதாரர்கள் எத்தனை என்று நினைக்கிறீர்கள். பத்தாயிரம் கூட இருக்காது. ஆனால் வாங்கி வாசிக்கும் வெகு ஜன இதழ்களின் சர்குலேஷன் லட்சங்களைத் தாண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இத்தகைய கலை இலக்கிய இதழ்களில் எழுதுபவர்களில் கணிசமானவர்கள், கார்ப்பொரெட் இந்தியாவின் மேல் தட்டு இளைஞர்/இளைஞிகள் தாம். இத்தகையவர்கள் தாங்கள் பெற்ற கல்வியால், அறிவால் மென்மேலும் பணம் பண்ணக்கூடிய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு 'இந்த சமூகத்து மக்களுக்கு பயன்பட வேண்டும்' என்ற நோக்கில் எழுதும் எத்தனை புத்தகங்கள் விற்காமல் கிடக்கின்றன என்று கணக்கெடுத்தால் உண்மை நிலவரம் புரியும்.

ஏற்கனவே குழுமி இருக்கும் கும்பலில் இவர்களை அடையாளம் தெரியவில்லை என எதிர்வாதம் செய்யலாம். தகுதி இருந்தும் உள்ளூரில் அடையாளம் தரப்படவில்லை என்றால், அறிவானது, தனக்கான அடையாளம் தேடி போகவே செய்யும். இயற்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் நாம்.

தன் தின்மைக்கேற்றவாறு வெற்றிடம் நோக்கித்தான் பாய்கிறது காற்று.

ஒரு மாணவன் த‌ன் பதின்ம வயது இளமையில், தன்னைச் சுற்றி இறைந்து கிடக்கும் மலினமான சங்கதிகளையும் புறக்கணித்து பாடத்தில் கவனம் செலுத்தி படித்து மேலே வந்தால், ஊடகங்களில் அவர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்? ஒரு படத்தில் ஹீரோ, சண்டியர். அவர் வசிக்கும் தெருவில் நான்கு பொறியியல் மாணவர்கள். ஹீரோ உத்தமபுத்திரன் எனவும், பொறியியல் மாணவர்கள் பெண் பித்தர்கள் எனவும் திரைப்படம் சித்தரிக்கிறது.

சண்டியர் என தோற்றம் தரும் ஒருவனின் 'உத்தமபுத்திர'த் தன்மையை குறித்து எடுக்கப்படும் திரைப்படத்தில் படித்தவனின் பக்க நியாயம் ஏன் எப்போதும் விட்டுப்போய் விடுகிறது? பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள். நல்லவனை கெட்டவன் என்று நம்பி கடந்துபோய்விடுவது, கெட்டவனை நல்லவன் என்று நம்பி ஊக்குவிப்பது, இப்படி கூட கல்வியாளன் அவமதிக்கப்படுகிறான் இந்த சமூகத்தில். காதலில் விழுந்து ஏமாந்த பிறகுதான் சில பெண்களுக்கு கார்ப்பரேட் இந்தியன் கண்ணில் படுகிறான், அதுவும் திருமண தளத்தில். (இதை எனது 'ஒப்பனைகள் கலைவதற்கே' தொகுதியில் முடிச்சு நாவலில் கூட பதிவு செய்திருக்கிறேன்).

ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

'ஒரு சமூகத்தில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுதான் உங்களுக்குத் திருப்பிக் கிடைக்கும்' இதை மறவாதீர்கள். பெரும்பாலான டிவி சானல்களில் யாரேனும் ஒரு சமூக சிந்தனையாளர் அத்தனை காலம் தான் வாசித்த, ஆய்ந்து அறிந்த, விவாதித்து தெரிந்த அத்தனை தகவல்களையும் பைசா பெறாமல் பேசிக்கொண்டிருப்பார். முக நூலில் போய் பார்க்கின் அப்படிப் பேசிக்கொண்டிருப்பவரை, குறித்து மிக மிகக் கீழ்த்தரமாக வசை விழும்

'தொலைக்காட்சிகளில் பேசுவதின் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தின் பின்னால் உள்ள பொருளாதார அரசியல்' என்ற ஒரு மறுப்பு வாதத்தை கேடயமாக்கும் மனிதர்களுக்கு ஒன்று சொல்ல விழைகிறேன்.

உண்மை என்பது ஒன்றே ஒன்று தான். அது எது என்பதை எவரும் ஆய்ந்து அறியத்தான் வேண்டும். ஒரு சமூகத்தின் எல்லா நிலைகளிலும் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இந்த நிர்பந்தம் பொருந்தும். புத்தகம் எனில் வாசகன். காட்சி ஊடகம் எனில் பார்வையாளன்.

வாசகனோ, பார்வையாளனோ தனக்கு என்ன வேண்டுமென்பதில் தெளிவாக இருக்க வேண்டும். குழம்பிய வாசகனைத்தான் எழுத்தாளன் அல்லது கல்வியாளன் தவறாக பயன்படுத்த முடியும். குழம்பிய பார்வையாளனைத்தான் ஊடகம் தவறாக வழி நடத்த முடியும்.

இக்காலத்தில் குழம்பிய வாசகனை ஊடகங்களும், குழம்பிய பார்வையாளனை எழுத்தும் தவறாகப் பயன்படுத்துவதும் நடக்கிறது தான். 'எதற்கு வீண் குழப்பம்? எதற்கு எவனையோ நம்ப வேண்டும்? நமக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்வோம்' என்பதான நடத்தை சமூகத்தில் புறையோடிப் போயிருக்கிறது. இப்படியான சமூகத்தில் கல்வியாளனுக்குரிய இடம் கிடைப்பதில்லை தான்.

ஒரு கல்வியாளனை அவமதித்தால், அவன் வேறு எங்கு போவான்? சரித்திரத்தில் சாணக்யன் குறித்து கேள்விப்பட்டதில்லையா? 'கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு' என்று கேள்விப்பட்டதில்லையா?

தனக்கு மரியாதை இல்லாத இடத்தில் அறிவுக்கு வேலை இல்லை. ஏனெனில், இயற்கையின் விதி அதுதான்.

தன் தின்மைக்கேற்றவாறு வெற்றிடம் நோக்கித்தான் பாய்கிறது காற்று.

தனக்கான அடையாளத்தைத் தேடி பயணிக்கும் தன்மை அறிவிடமும் உண்டு. அது உள்ளூரில் தங்க வேண்டுமெனில் அதற்கான அடையாளமும், மரியாதையும் உள்ளூரில் இருக்க வேண்டும்.

- ராம்ப்ரசாத் சென்னை(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

http://ramprasathkavithaigal.blogspot.in/

Pin It