இஸ்லாம் மதப்படி இறைவன் முன் அனைவரும் சமம். ஏழை, பணக்காரன், இருப்பவன், இல்லாதவன், நாடோடி, மன்னர் யாரானாலும் எந்தப் பதவியில் இருந்தாலும் அனைவரும் இறைவன் முன் சமம். இஸ்லாத்தில் தீண்டாமையும் இல்லை. ஆனால் மனிதர்கள் தீண்டாமை சுவரை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். சுடுகாடு, இடுகாடு என இந்துக்கள் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக சுடுகாடு வைத்துள்ளார்கள். ஒரு சாதியினரின் மயானத்தில் மற்ற சாதியினர் உடலை எரிக்கவோ, அடக்கவோ அனுமதி கிடையாது. இதே போல கிறிஸ்தவ மதத்திலும் ஆர்.சி., சி.எஸ்.ஐ.என பல பிரிவுகளும் அவர்களுக்குத் தனித்தனியாக கல்லறைகளும் உண்டு. ஆனால் இஸ்லாம் மதத்தில் எந்த மனிதன் இறந்தாலும் அதனை பள்ளிவாசலுக்குச் சொந்தமான மையவாடியில் (கபர்ஸ்தான், மையத்தாங்கொல்லை, கபூர்ஸ்தான்) அடக்கம் செய்வது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கம்.

சமீபகாலமாக திருமணத்தின்போதும், இறப்பின்போதும் அடக்குமுறைகள் பள்ளிவாசல் நிர்வாகிகளால் கையாளப்பட்டு வருகிறது. நபி வழித்திருமணம் என்றால் ஜமாஅத் திருமண பதிவேட்டை தரமறுப்பதும், வஹாபி, நஜாத் என பல பெயரிட்டு அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மையவாடியில் அடக்க இடம் கொடுப்பதும் தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. இதே போல ஜமாஅத் கட்டுப்பாட்டையோ அல்லது ஜமாஅத் அமைப்பிலிருந்து விலக்கி வைத்தவர்களையோ அல்லது விலகிக்கொண்டவர்களின் குடும்ப உறவுகள் இறந்தால் பொதுமையவாடியில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக இறந்த உடலை வைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் முதல் மாவட்ட கண்காணிப்பாளர் வரை பஞ்சாயத்து பேசி அதன் பின்னர் சமாதானம் செய்து அடக்கம் செய்யும் நடைமுறை இன்றளவும் ஆங்காங்கே உள்ளது.  இதற்கு நிரந்தர தீர்வு கொள்ள தமிழக அரசோ, முஸ்லிம் அமைப்புகளோ, இஸ்லாமிய கட்சிகளோ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவில் இரண்டு மையவாடிகள் உள்ளது. அதில் ஒரு மையவாடியில் தர்காவின் பரம்பரை என அழைக்கப்படும் சாஹிபு மார்கள் மட்டுமே அடக்கம் செய்யும் உரிமை உள்ளது. மற்றவர்கள் மரைக்காயர், லெப்பை, தக்கினி, ராவுத்தர்கள் போன்றவர்கள் அடக்கம் செய்ய அனுமதி கிடையாது. இதே போல மதுரை மாவட்டம், சோழவந்தான் தாலுகாவில் உள்ள கீழமாத்தூர் உள்பட பல கிராமங்களில் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் அந்த ஊரால் பணக்காரர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு மையவாடியும், பணம் இல்லாதவர்கள் அல்லது ஏழை என அடையாளப்படுத்தப்பட்டவர்களை அடக்கம் செய்ய‌ ஒரு மையவாடியும் வைத்துள்ளார்கள்.

சாதி அமைப்பில்லாத, சகோதரத்துவத்தைப் போதிக்கும் ஒரு மார்க்கத்தில் இறப்பின்போது, இறந்தவர்களின் உறவினர் துக்கதில் இருக்கும்போது, இறந்தவர்கள் உடலைப் புதைக்க அனுமதி மறுப்பது ஒரு வகை மனித உரிமை மீறலே. இத்தகைய மனித உரிமை மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

- வைகை அனிஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It