கீற்றில் தேட...

ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி ஒரே வரி என்ற முழக்கங்களை முன்வைத்த பாஜக மோடி அரசு, தற்போது ஒரே கல்வி என்ற திட்டத்தை இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018 என்ற பெயரில் திணிக்க முற்பட்டுள்ளது. அவசர அவசரமாக இந்த சட்ட வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம் இச்சட்டத்திருத்தத்தின் வடிவமைப்பிலேயே காணப்படுகிறது. முதன்முதலில் வரைவுச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு பிறகுதான் சட்டவடிவைப் பெற முடியும். ஆனால் இணையத்தில் ஆங்கிலத்தில் இந்த வரைவினை (Higher Education Commission of India (Repeal of University Grants Commission Act, 1956) சட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது தில்லிப் பேராதிக்க அரசின் ஆணவமா? அறியாமையா?

இச்சட்டம் பல்கலைக்கழக மானியக் குழுவைப் (University Grants Commission (UGC)) புதைக் குழிக்கு அனுப்புகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.லட்சுமணசாமி முதலியார், டாக்டர் ஜாகிர் உசேன், டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் போன்ற புகழ்மிக்க கல்வியாளர்கள் அளித்த பரிந்து ரையின்படித்தான் பல்கலைக்கழக மானியக்குழுச் சட்டம் 1956இல் நிறைவேற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழக மானியக் குழு சிறந்த பரிந்துரைகளை வழங்கி இந்தியாவின் பல மாநிலங்களில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் உயர்கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது. உயர்கல்வித் தொடர்பாகத் தொடர்ந்து பல வல்லுநர் குழுக்கள் அவ்வப்போது அமைக்கப்பட்டு உயர்கல்வி ஆய்வு மையங்களின் கருத்துரிமை, சுயாட்சி உரிமை, ஜனநாயக உரிமை, ஆசிரியர்-மாணவர் உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல தலைசிறந்த கல்வியாளர்கள் இக்குழுவின் தலைவர் களாகவும் மற்ற கல்வி வல்லுநர்கள் உறுப்பினர் களாகவும் இருந்து உயர்கல்விக்கு, பல அரிய ஆலோ சனைகளை வழங்கியுள்ளனர். பல்கலைக் கழகங் களுக்கும் கல்லூரிகளுக்கும் பாடத்திட்டங்களை அளிக்கும் கல்வி மேம்பாட்டு அறிக்கைகளையும்(Curriculum Development Reports) இம்மானியக்குழு பல வல்லுநர் குழுக்களின் வழியாக வழங்கியுள்ளது. மாணவர்களின் உயர் ஆய்வு வளர்ச்சிக்காக மானியக்குழு உதவித் தொகையும் (UGC Junior Research Fellow (UGC-JRF)) வழங்கி வருகிறது.

இக்கட்டுரையாசிரியர் 1971இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்த போது பல் கலைக்கழக மானியக்குழுவின் உதவித் தொகையை நான்காண்டுகள் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த கல்வி நெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு இந்த மானியத் தொகை உதவிகளை ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குப் பெருமளவில் அளித்து உதவி செய்தார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. உதவித் தொகை அளிக்கும் அதிகாரத்தையும் தில்லி ஏகாதிபத்திய அரசு பல்கலைக் கழகங்களிடமிருந்தும் துணைவேந்தர் களிடமிருந்தும் பறித்துவிட்டது.

தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் இடம் பெறுவதற்கு எப்படி நீட் நுழைவுத் தேர்வு உருவாக் கப்பட்டதோ அதே போன்று, 20 ஆண்டுகளுக்கு முன்பு நெட்(NET) என்ற தேர்வு உருவாக்கப்பட்டது. இந்த நெட் தேர்வின் மோசமான எதிர்விளைவுகளை இக்கட்டுரை யாசிரியர் நெட் தேர்வுக்குழுவின் உறுப்பினராகச் சில ஆண்டுகள் செயல்பட்டதால் தெரிந்து கொள்ள முடிந்தது.

பொதுவாகத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களின் சாதனைப்படி தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று நம்பித்தான் இத்தேர்வுக்கு கடினமாக உழைத்து எழுதுவார்கள். ஆனால் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் 10 அல்லது 14 விழுக்காடு என்ற உச்ச வரம்பை ஒன்றிய அரசின் இணைச் செயலர் முடிவு செய்வார். குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாண வர்கள்கூட இந்த உச்சவரம்பால் நெட்தேர்வில் தேர்ந் தெடுக்கப்படமாட்டார்கள். தகுதி திறமை என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்த வரும் மாணவர்கள் பெருமளவில் இம்முறையால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு படிப்படியாகப் பல்கலைக்கழக மானியக் குழுவின் தன்னாட்சி உரிமையையும், அதன் வழியாகப், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையையும் ஒன்றிய அரசு காலப்போக்கில் எடுத்துக்கொண்டது. இப்படிப்பட்ட நிலையை உரிய முறையில் ஆய்ந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் சூழலும் இதுவரை ஏற்பட்டதில்லை. சமூக நீதித் தகுதித் தேர்வு என்ற பெயரில் குலைக்கப்படுகிறது என்பதற்கு இந்த நெட் தேர்வும் ஒரு சான்றாகும். பல்கலைக்கழக மானியக்குழுவால் உயர்கல்வித் துறை பெற்ற சில முதன்மையான ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் காணலாம்.

  1. கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் புத்தாக்கப் பயிற்சி (UGC Sponsored Refresher Courses for College Teachers) ஆண்டு முழுவதும் கலை அறிவியல் உட்பட பாடப்பிரிவுகளில் பல்கலைக்கழகங்களால் மானியக் குழுவின் முழு அளவிலான நிதியுதவியோடு நடத்தப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இக்கட்டுரையாசிரியர் பொருளியல் துறைத் தலைவராக இருந்த போது 4 புத்தாக்கப் பயிற்சி வகுப்புகளை (21 நாள்கள்) நடத்தியுள்ளார். இப்பயிற்சியைப் பெற இந்திய முழுவதிலிருந்தும் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர் கள் வருவார்கள். அதே போன்று 40க்கு மேற்பட்ட சிறந்த கல்வியாளர்களும் பல்துறை வல்லுநர்களும் பயிற்சியளிப்பார்கள். மேலும் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் புதிதாக நியமிக்கப் பட்டவர்களுக்கு அறிமுகத் திறன் பயிற்சி (Orientation Programme) மானியக்குழு உதவியுடன் அளிக்கப்படுகிறது.
  2. கல்லூரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பிறகு, பல ஆண்டுகள் கழித்துத் தங்கள் ஆய்வுத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக முனைவர் (Ph.D) போன்ற ஆய்வுப் பட்டங்களைப் பெறுவதற்கு மூன் றாண்டுகள் கல்லூரியில் இருந்து விடுவிக்கப்பட்டு முழு நேர ஆய்வாளர்களாகப் பல்கலைக் கழகங்களில் இணைவார்கள் (Faculty Improvement Programme (FIP)). இவர்களது மூன்றாண்டு ஊதியத்தை மானிக்குழு முழுமையாக ஆசிரியர்களை அனுப்பும் கல்லூரிகளுக்கு அளித்து, அங்கு தற்காலிக ஆசிரியர் களை நியமனம் செய்ய இம்முறை உதவியது. இரண்டு வழிகளில் ஆசிரியர்கள் பயனடையவதற்கு இத்திட்டம் உதவியது.
  3. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, முரளி மனோகர் ஜோஷி ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பொறுப்பில் இருந்தார். அப்போதிலிருந்து சமசுகிருதத்தைத் திணிப்பதும் சோதிடங்களை பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளில் பாடமாகக் கற்பிப்பதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டன. பல பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் மேற்கூறிய அறிவியலுக்குப் புறம்பான பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது. காவிமயக்கொள்கையைப் பல்கலைக் கழக மானியக்குழுவில் திணிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் ஆதரவாளர்களை தலைவர் களாகவும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படும் போக்கு தொடங்கப்பட்டு தற்போது பல பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக சங் பரிவாரங் களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சான்றாக தமிழ்நாட்டின் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தகுதிவாய்ந்த பல தமிழர்கள் இருந்தும், தமிழரல்லாத ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய ஒருவரை ஆளுநர் நியமனம் செய்தார். மோடி அரசு அமைந்த காலத்தில் இருந்து பல்கலைக்கழக மானியக் குழுவின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயல்கள் முழுமையாக நடைபெற்று வருகின்றன.

பல்கலைக்கழக மானியக் குழு ஆசிரியர் ஊதிய உயர்வு தொடர்பாக பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வல்லுநர்குழு அறிக்கைகளைப் பெற்று, கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை அளித்ததனால் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் கல்லூரிப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சிறப்பான, கல்வியை வழங்கவும் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்ளவும் முடிந்தது. பல்கலைக் கழக மானியக்குழு பரிந்துரையின்படி அளிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வு இனிமேல் தொடராது. மேலும். இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பல்கலைக் கழகங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

மோடி அரசு அமைந்த பிறகு கடந்த நான்காண்டுகளில் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு 2015-16 கல்வி யாண்டில் ஒன்றிய அரசு அளித்த ரூ.9315 கோடியில் இருந்து, 2016-17 நிதியாண்டில் ரூ.4887 கோடியாகக் குறைக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழு அமைக்கப்பட்டு 62 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 55 விழுக்காடு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தது பெரும் அவலமாகும். உயர்கல்விக்குச் செய்யப்பட்ட அநீதியாகும். இந்த நிதிக்குறைப்பால் மேற்குறிப்பிட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள் எல்லாம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியக்குழுவை மாற்றியமைக்கும் புதிய வரைவுச் சட்டம் மிக மோசமான விளைவுகளை உருவாக்கும். பல்வேறு மொழிகள், பண்பாட்டுக் கூறுகள், மதங்கள்ப் பல இனங்களின் ஒட்டுமொத்த பெரும் கூட்டமைப்பாக உள்ள இந்தியாவில், ஒரே விதமான கல்வி முறையைத் திணிப்பது பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வரைவுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் பிரிவு:

  1. Less Government and More Governance: இந்தச் சட்டத்தின் முதல் இலக்கே முரண்பாடாக உள்ளது. ஏற்கெனவே வணிக மயமாக்கப்பட்ட கல்வித்துறை யில் அரசினுடைய பங்கு குறையுமானால், மாணவர்களிடமிருந்து சுயநிதிக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் அதிக அளவில் கட்டணங்களை உயர்த்தி சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உரிமைகளைப் பறித்துவிடும்.
  2. Separation of Grant Function: மாநிலங்களில் இயங்கி வரும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மானியம் அளிப்பதைக் குறைக்கும் முயற்சியே இதுவாகும். அதிகார வர்க்கம் தில்லியில் நிலவுகிற அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பத் தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்கும் மாநில அரசுகளுக்கும் தங்கள் கட்சி ஆளும் மாநில அரசுகளுக்கும் அதிக நிதியை ஒதுக்கி, கல்வியில் ஒரு சமனற்ற நிலையை உருவாக்கிவிடும். சான்றாக தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை நிதிப் பற்றாக்குறையால் பெரும் சரிவைச் சந்திக்கும் சூழல் உருவாகும். தற்போது தமிழ்நாட்டில் 69 விழுக் காட்டு இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றுவதால் 128 அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் 162 அரசின் உதவிப் பெறுகிற கல்லூரிகளிலும் பிற்படுத் தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி யைப் பெற்று வருகிறார்கள். மேலும் 1200க்கும் மேற் பட்ட தனியார் சுயநிதிக் கலை-அறிவியல் கல்லூரி களும் இயங்கி வருகின்றன. உயர் ஆய்வு மேற் கொள்ளப்படும் 22 பல்கலைக்கழகங்களும் 29 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இயங்கி வருகின்றன. அதிக எண்ணிக்கையில் உயர் கல்வி யில் மாணவர்கள் பட்டங்கள் பெற்று வருவதால், தமிழ்நாடு இந்திய மாநிலங்களிலேயே உயர்கல்வி யில் முதலிடத்தில் உள்ளது.
  3. End of Inspection Raj: கண்காணிக்கும் முறை முடிவுக்கு வருகிறது என்ற தலைப்பின் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைக்கும் தலைப்பிற்கும் எதிர்மறையான தொடர்பே உள்ளது. கல்வித் தகுதி, வெளிப்படையான நிர்வாகம் உயர் கல்வியில் தொடர வேண்டுமானால் ஒன்றிய, மாநில அரசுகளின் கட்டுப்பாடும் ஒழுங்குப் படுத்தும் சட்ட உரிமைகளும் இருக்க வேண்டும். இதை முடிவுக்குக் கொண்டு வந்தால் உயர் கல்வியில் ஊழலும் வணிகமயமும் அதிகரிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
  4. Focus on Academic Quality : கல்வித் தரம் உயர்த்தும் நோக்கம் உயர் கல்வி ஆணையம் கல்வி யின் தரத்தை உயர்த்துவதற்கும் கற்றல் முறையை ஒழுங்குபடுத்துவதற்கும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, கல்வித் தொழில்நுட்பத்தை அதிகரிப்பது என்பன முக்கிய நோக்கங்களாகக் கூறப்பட்டுள்ளன. இவைகளைத் தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு நல்ல முறையில் கல்வியாளர்களின் துணையோடு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. துணைவேந்தர்கள் பேராசிரியர்கள் கல்வி வல்லுநர்கள் ஆகியோர் கொண்ட குழுக்களை ஐந்தாண்டுகளுக்கு, மூன்றாண்டு களுக்கு ஒரு முறை அனுப்பி கல்வித் தரத்தையும் கல்விச் சூழலையும் கல்வி நடவடிக்கைகளையும் கல்விக் கட்டமைப்பையும் ஆய்ந்து சிறந்த பரிந்து ரைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு ஒன்றிய அரசிற்கு அனுப்பி நிதியுதவியும் அளித்து வருகிறது. இது அரசுத் துறையின் கீழ் இயங்குமானால் கல்வியாளர்கள் வல்லுநர்களின் பங்கு நீக்கப்படும் சூழல் ஏற்படலாம். ஒன்றிய அரசில் அமையும் கட்சி யின் கொள்கைக்கு ஏற்பக் கல்விக் கொள்கையில் தலையீடு இருக்க வாய்ப்பு பெருகுகிறது. இதன் காரணமாக கல்வியின் சுதந்தரமும் தன்னாட்சி உரிமையும் சிதைக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
  5. Powers to Enforce: நடைமுறைப்படுத்தும் அதிகாரம்: - தரத்தில் குறைந்த நிறுவனங்களையும் போலியான கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்குரிய அதிகாரம் இப்பிரிவில் சுட்டப்படுகிறது. ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவில் பல தரமற்ற கல்வி நிறுவனங்களையும் போலி நிறுவனங்களையும் ஆய்வு செய்து மூடுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது பல்கலைக் கழக மானியக் குழு அறிவிக்கைகளை நாளேடு களிலும் இணையத்திலும் வெளியிடுகிறது. இந்த உயர் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தும் அதிகாரம் கல்வியாளர்களிடமும் கல்வி வல்லுநர் களிடம் இருந்தால்தான் உயர் கல்வித் துறையில் ஆய்வுகள் பெருகும். ஆனால் அரசின் கட்டுப்பாட் டிற்குள் அந்த அதிகாரம் வந்துவிட்டால் ஏற்கெனவே ஊழலில் ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் அதிகரித்து உயர் கல்வி பாழாய்ப் போய்விடும்.

உயர்கல்விக்கான நிதியைக் குறைத்துக் கொண்டு மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் இந்தச் சட்ட வரைவு, இந்திய ஒருமைப்பாட்டிற்கே உலை வைத்து விடும் என்று பல கல்வி வல்லுநர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர். திருவனந்தபுரத்தில் பல கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி இந்த வரைவுச் சட்டத்திற்கு கண்டனத் தைத் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்கு குறை வாகதான் கல்விக்காகச் செலவிடுகிறது. 2013-14ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 0.63 விழுக்காடே செலவிட்டது. மோடி அரசு அமைந்த பிறகு மெல்ல மெல்ல ஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது 2017-18ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 0.47 விழுக்காடே கல்விக்காக செலவிடப்படு கிறது. இந்த குறைவான தொகையில் 90 விழுக்காடு ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிற ஒன்றிய அரசின் பல்கலைக்கழங்களே நிதியைப் பெற்றுக் கொள்கின்றன. 10 விழுக்காடு நிதியைக்கூட 29 மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் பெறுவதில்லை.

உயர்கல்வி வளர்ச்சிக்காக வருமான வரி நிறுவன வரி, ஆகிய வரிகளின் மீது கூடுதல் 2 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. இதன் தொகை 2017-18இல் ஒரு லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிதியையும் மாநிலங்களில் இயங்கி வரும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்காமல் ஒன்றிய அரசே எடுத்துக்கொண்டு மாநிலங்களின் கல்வி உரிமையை பறிப்பது நாட்டுவிரோதச் செயலே என்றே குறிப்பிடலாம். இத்தகையச் சூழலில் இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள், ஒன்றிய அரசின் வேண்டு கோளுக்கிணங்க 29 மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் சிறப்பு நிதி ஒதுக்கீட்டிற்காகத் தங்களின் சிறந்த கல்வி சாதனைகளைக்காட்டி 1000 கோடி நிதி அளிக்குமாறு ஒன்றிய அரசின் கல்வித் துறைக்கு ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒரு கோடி ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி மனுக்களை அளித்தன. ஆனால் கட்டடம் ஆசிரியர் நியமனம், கட்ட மைப்பு வசதிகள் போன்ற எவ்வித அடிப்படை வசதி களையும் அளிக்காத உருவாக்கப்படாத அம்பானியின் ஜியோ உயர்கல்வி அமைப்பிற்கு 1000 கோடி ஒன்றிய அரசின் நிதியைப் பெறும் தகுதி பெற்றுள்ளது என்று கூறுவது மோடி அரசின் நான்காண்டு சாதனையா? அல்லது மோசடியா?

எனவே இந்த உயர்கல்வி வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறுவதுதான் இந்தியாவின் ஒற்றுமைக்கும் பன்முகத்தன்மைக்கும் வலிமையைச் சேர்க்கும். ஒன்றிய அரசு இந்தியாவின் வலிமையை உறுதி செய்யப்போகிறதா? அல்லது உருக்குலைக்கப் போகிறதா? என்பது எல்லாக் கல்வியாளர்களின் முன்னும் உள்ள வினாவாக தற்போது உள்ளது.