“தன் பிள்ளையின் தலைதான் காலில் இடறுகிறது என்றாலும், நின்று பார்க்க அவகாசமற்றவர்கள் பதறியோடினார்கள்….எறிகணை ஏவப்படும் சத்தம் கேட்டதும் எல்லோரும் தரையோடுதான் விழுந்தார்கள். விழுந்து கிடப்பதும் மட்டுமே ஓரளவு பாதுகாப்பானது. நின்றால் சன்னம் துளைக்கும். நடந்தால் உயிர்பறக்கும் என்ற நிலை……மனிதர்கள் பைத்தியக்காரர்களைப்போல நடந்து கொண்டார்கள். எந்தப் பிணத்தையும் எவரும் உரிமை கோரவில்லை. நெருப்பும் புகையும் வானத்தை தொடுமளவுக்குக் கிளம்பின. சனம் ஓட்டமும் நடையுமாக வட்டுவாகலை நோக்கிச் சென்றனர்.”

இப்படி "ஈழப் போரின் இறுதிநாட்கள்” என்ற தன் புத்தகத்தில் களத்தில் கடைசிவரை நின்ற பெண் போராளி வெற்றிச்செல்வி எழுதியுள்ளார்.

எல்லா விதமான மானுட நெறிமுறைகளையும் மீறி தனது சொந்த நாட்டு மக்கள் மீது இலங்கை பேரினவாத சிங்கள அரசானது போர் விமானங்களை பயன்படுத்தியும், விசவாயு, பாஸ்பரஸ் போன்ற இரசாயன குண்டுகளையும், கொடூரமான கொத்து குண்டுகளையும் வீசியும் 2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களையும், விடுதலைப் புலிகளையும் கொன்று குவித்தனர். அந்த இனப்படுகொலையின் மரண ஒலங்கள் இன்றும் காற்றில் கரையாமல் கேட்டு கொண்டே இருக்கிறது.

"இப்படியான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு, இடித்து முடிக்கப்பட்ட மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் மாற்று உருவில் வடிவமைக்கப்பட்டதே தஞ்சையில் அமைந்துள்ள "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்"

இதோ அதற்கான அழைப்பிதழ்...

வாருங்கள் தோழமைகளே! இனவிடுதலைக்கான ஒன்றுகூடலில் சங்கமிப்போம்!!”

என்ற அழைப்பு ஈழ விடுதலையை நேசிக்கும் எவருக்கும் உளப்பூர்வமான நெகிழ்ச்சியை ஏற்படுத்தவே செய்யும்! ஆனால் இதிலுள்ள அரசியல் உள்குத்துக்கள் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன‌.

ஈழ விடுதலைக்கு ஆதரவாக, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிராக தமிழ் நாட்டில் கடந்த காலங்களில் களமாடியவர்களின் சங்கமாக இந்த விழா அழைப்பிதழ் இருப்பதை நாம் காண முடிகிறது. ஒரு சிலரும், சில அமைப்புகளும் விடுப்பட்டுள்ளனர். (‘ஒட்டு மொத்த தமிழ் இனம் அழைக்கப்பட்டுள்ளது’ என்பதில் நெடுமாறன் அவர்களால் விடுவிக்க‌ப்பட்டவர்கள் பற்றி அங்கனூர் தமிழன் வேலு தனது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு - நெடுமாறன் வீட்டு காதணி விழாவா?' என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட இணைப்பில் விவாதிக்கிறார். http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25279:2013-10-24-10-38-40&catid=1:articles&Itemid=264 )

இந்த விழா நிகழ்ச்சி நிரலில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நவ – 8 அன்று முத்துக்குமார் திடலில் பாலச்சந்திரன் அரங்கில் நடக்கும் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுபவர் பட்டியலில் இருக்கிறார்; இந்து முன்னணியின் அர்ஜுன் சம்பத், நவ – 10 மூன்றாம் நாள் நிகழ்ச்சியின் பொது அரங்கில் பங்கேற்கிறார் என்பது யாருக்கும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கக் கூடியதாகும்!! எப்பொழுது இந்துத்துவா – அகண்ட பாரத ஆசாமிகள் உலகத் தமிழ் தலைவர்கள், ஈழ ஆதரவு இயக்கத் தலைவர்களாக மாறினார்கள்?

1983 சூலை வெளிக்கடை படுகொலை ஈழ விடுதலைப் போராட்டத்தில் திருப்புமுனையாகும். புதிய பண்பு மாற்றத்தினை அது ஏற்படுத்தியது. தமிழகத்திலும் அது எதிரொலித்து. தமிழக அரசியல் களத்தில் ஈழ விடுதலை ஆதரவு அரசியல் பிரிக்க முடியாத அங்கமானது. கடந்த 30 ஆண்டுகள் வரலாற்றைப் பரிசீலனை செய்யும் எவருக்கும் இந்துத்துவா சக்திகளின் அரசியல் நிலைப்பாடு தேசிய இன விடுதலைக்கு கூட அல்ல; அதன் இருப்பிற்கே எதிரான பாசிச அரசியல் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். ஈழ விடுதலைக்கு ஆதரவாக சிறு அசைவுகளைக் கூட தடை செய்ய வேண்டும் என்று பத்திரிக்கைகள் மூலம் மிரட்டியும், புலி எதிர்ப்பு பூச்சாண்டி காட்டி, தமிழக காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்தும், இந்திய ஒற்றுமைக்கு சீர்குலைக்கும் தேச விரோதிகள் என்று அரசியல் கட்சிகளுக்கு பயம் காட்டியும் கடந்த 30 ஆண்டுகளாக ஈழ விடுதலை ஆதரவாளர்கள் மீது அடக்கு முறைக்கும், கைதுகளுக்கும் முதன்மை காரணமானவர்கள் இராமகோபாலன், அர்சுன் சம்பத், பொன்.இராதாகிருஷ்ணன், சோ ராமசாமி, சுப்பிரமணியசாமி .. இன்னும் பிற காவி ஆசாமிகளும், இந்துத்துவாதிகளும்தான் என்பதை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?

நெடுமாறன், வை.கோ, பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய, புரட்சிகர இயக்கங்களின் ஈழ ஆதரவுத் தலைவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா, பொடா என்று பல்வேறு அடக்குமுறை சட்டங்களில் சிறை செல்ல இந்த இந்துத்துவ‌வாதிகளின் வெறுப்பு உமிழும் பேச்சுகளும், நச்சைக் கக்கும் எழுத்துகளும்தான் காரணம்! விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அறைக்கூட்டங்களையும் கூட தடை செய்ய வேண்டும் என்று சனநாயக, கருத்துரிமைகளை பறிக்க தேசபக்தி பூச்சாண்டி காட்டி, வெறிக்கூச்சல் போட்ட இந்த இந்துத்துவ‌வாதிகள் எப்பொழுது தமிழினப் போராளிகளாக‌ மாறினார்கள்?

பாஜக‌, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா.. என்று பல பெயர்களில் உலாவரும் இவர்கள்,

1. தனி ஈழத்தை என்றைக்காவது ஆதரித்து இருக்கிறார்களா அல்லது ஈழம் என்பது ஒரு தனி தேசிய இனம் என்பதையாவது ஏற்றுக் கொண்டு இருக்கிறார்களா?

2. முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை விசாரிக்க சர்வதேச பொதுவிசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறர்களா?

3.தனி ஈழ கோரிக்கைக்கான அய்.நா பொது வாக்கெடுப்பை ஈழத்தில் நடத்த இவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா?

ஈழ விடுதலைக்கான அரசியல் நியாயத்தினை ஆதரிக்கும், முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தை ஆறாத இரணங்களாய் சுமப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கேள்விகள் எழுவது இயல்பானதாகும். இதற்கு அய்யா நெடுமாறன அவர்களும், “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்" விழாக் குழுவினரும் என்ன பதில் கூறுவார்கள்?

"முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விழா என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு, ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் சங்கமம்” என்ற அலங்கார வார்த்தைகளைக் கூறி இவர்கள் பூசிமொழுகி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றார்கள்.

உண்மையில் உலகின் எந்த விடுதலை இயக்கத்திற்கும், புரட்சிகர அமைப்புகளுக்கும் அதன் கொள்கை, அரசியல் அடிப்படையில் நட்பு சக்திகள், பகை சக்திகள் என்ற இரு வேறுபட்ட முகாம்கள் இருக்கும்.

ஈழ விடுதலையின் நட்பு சக்திகள்:

*விடுதலைப் புலிகள்

*விடுதலைப் புலிகளை எந்த விமர்சனமுமின்றி முழுமையாக ஆதரிக்கும் சக்திகள், பல்வகைப்பட்ட தமிழ்த் தேசிய இயக்கங்கள், குழுக்கள், தனிநபர்கள்.

*குறைந்த அளவிற்கு புலிகளை விமர்சனம் செய்யும் சக்திகள், இயக்கங்கள், குழுக்கள், தனிநபர்கள்

*கடுமையான விமர்சனத்துடன் புலிகளை, ஈழவிடுதலையை ஆதரிக்கும் சக்திகள், குழுக்கள், தனிநபர்கள்

*புலிகளைப் புறந்தள்ளி விட்டு, ஈழவிடுதலையை ஆதரிக்கும், முன்னெடுக்கும் சக்திகள், குழுக்கள்

*மனித உரிமைகள், குடியுரிமை ஆர்வலர்கள், இயக்கங்கள்

இந்த சக்திகளின் பின்னுள்ள பரந்துபட்ட, பல்வகையான, பின்புலங்களை, அணிச்சேர்கைகளைக் கொண்ட மக்கள் திரள்கள்.

ஆக, தமிழக, இந்திய, இலங்கை, உலக அளவில் உள்ள இப்படியானதொரு அணிச் சேர்க்கைதான் ஈழ விடுதலைக்கான நட்பு முகாம்!

*பாசிச சிங்கள அரசு, சிங்கள இனவெறிக் குழுக்கள்.

*இதன் பிரதான பங்காளியான இந்திய விரிவாதிக்க அரசும், ஆளும் கட்சிகளும்.

*சீன, பாக்கிஸ்தான், அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல்வேறு வல்லரசுகளும், அதன் அடிவருடியான அரசுகளும்.

*இவைகள் பின்னுள்ள ஆளும் கட்சிகள், அதிகார வர்க்கம், அதன் பின்னுள்ள மக்கள் கூட்டம்

*ஈழ விடுதலைக்கு நட்பாய் இருப்பதாக நடித்துக்கொண்டு உண்மையில் துரோகம் செய்யும் அரசியல் கட்சிகள், சக்திகள்.

*தனிநபர் வன்முறையை ஊதிப்பெருக்கி அரசு பயங்கரவாதத்தை அதன் கீழாக தணிந்த குரலில் பேசும் மனித உரிமை ஆர்வலர்கள்.

தமிழக, இந்திய, உலக அளவில் உள்ள இவைகளின் அணிசேர்க்கைத்தான் ஈழவிடுதலைக்கான பகை முகாம் ஆகும்.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட சர்வதேசிய அரசியல்- பொருளியல் சூழலில் பல்வகை வர்க்கங்களாக, குழுக்களாக மேலும் மேலும் பகுக்கப்பட்டு சமூகத்தில் நிலவும் மக்கள் திரள்களின் பிளவுகளை உள்வாங்கி புரிந்து கொண்டால்தான், இந்த இரு முகாம்களின் இருத்தலுக்கான நியாயங்களைப் புரிந்து கொள்ள முடியும். ஈழவிடுதலையின் நட்பு, பகை முகாம்களின் புறவயப்பட்ட இருத்தல்களைப் புரிந்து கொண்டால்தான் நாம் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குப் பின் இருக்கும் பல்வகைப்பட்ட ‘அரசியல்’ நகர்வுகளை ஆழமாக அறிந்து கொள்ள இயலும்.

எனவே, ஈழ விடுதலைக்குப் பகையாக இலங்கை பாசிச அரசும் அதன் ஆளும் கட்சிகளு எப்படி உள்ளனவோ, அதே அளவிற்கு இந்திய விரிவாதிக்க அரசும் அதன் ஆளும் கட்சிகளும் இருக்கின்றன. இந்தியாவின் பிரதான ஆளும் கட்சிகள் காங்கிரசும், பாஜகவும் ஆகும். இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதார-அரசியல்-சமூக விரிவாதிக்க நலன்களில் இருந்தே இந்த இரு கட்சிகளும் ஈழ அரசியலை அணுகுகின்றன. தெற்கு ஆசியாவின் எந்த விடுதலை, புரட்சிகர இயக்கத்திக்கும் இந்த விரிவாதிக்க அரசியல் முக்கிய எதிரியாகும். காங்கிரசுக்குப் பதிலாக பாஜக‌ கட்சி ஆட்சிக்கு வந்தால் ஈழம் மலரும் என்பது கண்ணைத் திறந்து கொண்டே பாழும் கிணற்றில் விழுகின்ற தற்கொலை அரசியலாகும். 30 ஆண்டுகள் ஈழப் போராட்டத்தின் வெற்றி-தோல்விகள் இதைத் தெளிவாக நிரூபித்து உள்ளன.

உதாரணமாக வாஜ்பாய் தலைமையிலான பாஜக‌ டில்லி ஆட்சிக் கட்டில் இருந்த பொழுது மூன்றாம் கட்ட ஓயாத அலைகள் போரில் விடுதலைப் புலிகள் வன்னியை யாழ்ப்பான தீபகற்பத்திலிருந்து 17 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்த ஆனையிறவு கணவாயைக் கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தில் இருந்த 40,000 சிங்கள இராணுவத் துருப்புகள் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்படும் ஆபத்தான சூழலில் இருந்தனர். சரணடைவது அல்லது அழித்தொழிக்கப்படுவது தவிர வேறு வழிகள் சிங்கள இராணுவத்திற்கு இல்லை! அப்படி நடந்திருந்தால் ஈழம் அப்பொழுதே மலர்ந்திருக்கும்! ஆனால் அப்பொழுதைய இலங்கை அதிபர் சந்திரிகா கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தியா மற்றும் அமெரிக்கா அரசுகளின் தலையீட்டினால் மட்டுமே இது தவிர்க்கப்பட்டது. வாஜ்பாய் அரசாங்கமானது “முன்னேறுவதை நிறுத்துங்கள் அல்லது ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என வெளிப்படையாக அச்சுறுத்தியது. சிங்கள இராணுவத்தினரைக் காப்பாற்ற இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களை கொச்சி கப்பற்படை தளத்தில் இருந்து இலங்கையை நோக்கி வாஜ்பாய் அரசாங்கம் அனுப்பியது. இந்த அமெரிக்கா, இந்திய அரசாங்கங்களின் அச்சுறுத்தல்களை மீறி அந்தச் சூழலில் விடுதலைப் புலிகளால் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. இப்படியாக சிங்கள இராணுவத்தினை அன்று காப்பாற்றி ஈழம் அமையாமல் தடுத்தது பாஜக அரசு.

தற்பொழுதும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு இன்றைய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாசுவராஜ் அவர்கள் இலங்கைக்குச் சென்று விருந்துண்டு வந்த பின்பு, கொலைகாரன் இராஜபக்சேவுக்கு ஆதரவாக தந்த அறிக்கைகள், நேர்காணல்களை மறக்க முடியுமா? ஐநாவின் மனித உரிமை ஆணையத்தில் ஈழம் தொடர்பான இந்திய நிலைப்பாட்டினை விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பா.ஜ.க., இலங்கை அரசின் இறையாண்மையில் இந்தியா தலையிட முடியாது என்று சிங்கள பாசிச இனவாத அரசைக் காப்பாற்றியது. அத்துடன் 23 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு வருவதற்கு காங்கிரசும், பாஜகவும் அதன் ஆதரவுக் கட்சிகளான அதிமுக, திமுகவும் காரணமாகும்.

ஆனால் இன்று பொன்.இராதாகிருஷ்ணன் போன்ற பாஜக தலைவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா மேடையை அலங்கரிக்க அழைக்கப்படுகின்றனர். இது எப்படி சரி என்பதை அய்யா நெடுமாறன் அவர்கள் ஒட்டு மொத்த தமிழின மக்களுக்கு விளக்க வேண்டும்.

காங்கிரசின் இந்திய விரிவாதிக்கக் கொள்கையை விட பாஜகவின் இந்துத்துவா அகண்ட பாரதக் கொள்கை ஒரு படி மேலே ஈழ விடுதலைக்கும், தமிழனத்திற்கும் எதிரானதும், தீமையானதும் ஆகும். அகண்ட பாரதக் கொள்கை பலவகைப்பட்ட தேசிய இனப் பண்பாடுகளை மறுப்ப‌து மட்டுமல்ல, பாகிஸ்தான், நேபாளம், வங்காளம், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளின் இறையாண்மையைம் இருப்பையுமே மறுப்பதாகும். தெற்காசியாவின் பல்வகைப்பட்ட பண்பாட்டு மரபுகளை, விழுமியங்களை, அரசியல்களை மறுத்து ஒற்றையான இந்துத்துவ பாசிச பண்பாட்டை, வரலாற்றைத் திணிக்கின்றதாகும்.

ஊருக்கே தெரிந்த இந்த அரசியல் இரகசியம் பல ஆண்டுகளாக ஈழ ஆதரவு அரசியல் களத்தில் இருக்கும் நெடுமாறன் அய்யாவிற்கு தெரியாமல் ஏன் போனது?

அதற்கு அடிப்படைக் காரணம் எந்த விதமான சுயபரிசீலனையும் இல்லாமல் 30 ஆண்டுகளாக ஈழ ஆதரவு அரசியலை அவர் நடத்துவது தான்! 80களின் ஆரம்பத்தில் நெடுமாறன் உட்பட பல ஈழ ஆதரவு தமிழக அரசியல் தலைவர்கள் 'ஈழத்திற்கு ஆதரவாக இந்தியாவே தலையிடு' என்ற கோரிக்கையை வைத்தனர். இந்தியா தலையிட்டு ஈழத்தின் தலையில் மட்டுமல்ல அடிமடியிலும் கொள்ளி வைத்தது. இந்திய அமைதிப் படை என்ற பெயரில் நுழைந்து ஆக்கிரமிப்புப் படையாய் ஈழத்தில் அது நிகழ்த்திய படுகொலைகள், வன்முறை வெறியாட்டங்கள், மனித உரிமை மீறல்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்கள்!! பிறகு உடனே, “இந்திய இராணுவமே திரும்பிப் போ” என்பது ஒட்டு மொத்த ஈழத்தின், தமிழகத்தின் கோரிக்கையாக மாறியது. தொடர்ந்த இந்த ஆக்கிரமிப்புப் படையின் வன்முறை அட்டூழியங்களே பின்பு இராஜீவ் கொலைக்கு மூல காரணமாக, எதிர்வினையாக அமைந்தது.

அதைத் தொடர்ந்த பத்து ஆண்டுகளில் அதிமுக-காங்கிரஸ்-இந்துத்துவா சக்திகள் கூட்டாக இணைந்து தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு சக்திகளை, தமிழின ஆர்வலர்களை புலி ஆதரவு பூச்சாண்டி காட்டி ஒடுக்கின. தமிழக மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் இந்த அடக்குமுறை முறியடிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் தங்களின் உறுதியான போராட்டங்களின் மூலம் முன்னேறி விடுதலை பெற்ற தளப்பிரதேசங்களை உருவாக்கினர். இந்திய விரிவாதிக்க அரசைப் பற்றிய அவர்களின் தவறான கணிப்பு, அதற்கு தவறான வழிகாட்டிய தமிழக தலைவர்களின் அரசியல் சூழ்ச்சிகள், இன்னும் பல காரணங்களால் இறுதியில் 'இலங்கை அரசுக்காக இந்திய அரசு ஈழத்தின் மீது போர் நடத்தியது'. காங்-பிஜேபி கூட்டாக அதிமுக-திமுக கட்சிகளின் துணையுடன் தான் இந்த போர் நடந்தேறியது. மிகக் கொடூரமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வல்லரசு நாடுகளின் துணையுடன் இலங்கை நடத்தி வெற்றி பெற்றது. இவை அனைத்தும் நெடுமாறன் உள்ளிட்ட அனைத்து ஈழ ஆதரவு தலைவர்களுக்கும் தெரிந்த ‘அரசியல்’ வரலாறு தான்.

ஆனாலும்… கொக்கு தலையில் வெண்ணைய் வைத்து அது தானாக உருகி வழிந்து கொக்கு கண்ணை மறைக்கும் பொழுது மீனை எளிதாகப் பிடிக்கலாம் என்று இதுவரை நினைத்தனர். தற்பொழுது நாரை தலையில் வெண்ணைய் வைத்து மீனைப் பிடிக்க நினைக்கின்றனர். அதற்கான ஒத்திகையாகவே பாஜக‌ தலைவர்களை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விழாவில் மேடையில் ஏற்றுகின்றனர். கொலைகாரர்களை அழைத்து அவர்களால் கொலையுண்டவர்களின் நினைவு முற்றத்தினை திறக்க வைக்கும் வரலாற்றுப் பெருமை இந்தத் ‘தமிழினத் தலைவரையே’ சேரும்!

திடீர் சாம்பார், திடீர் ரசம் போல் இந்துத்துவ‌வாதிகளுக்கு திடீர் ஈழப்பாசம் வந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் நிறைய புதிய இளைஞர்கள், மக்கள் அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். இந்தியாவின் விரிவாதிக்க அரசியல் வரலாற்றைப் புரிந்து கொண்டுள்ள அவர்கள் சுயசார்புடைய ஈழத் தேசிய, தமிழ்த் தேசிய அரசியலை, அமைப்புகள், மக்கள்திரளைச் சார்ந்து கட்டி அமைப்பார்கள் என்ற‌ யதார்த்தமான சமூக சூழல் இங்கு நிலவுகிறது. 80-களின் ஆரம்பத்தில் இந்திரா காந்தியும் காங்கிரசும் எப்படி சுயசார்புடன் வளர்த்துக் கொண்டிருந்த ஈழப் போராட்டத்தினை கருவிலேயே அரசியல் சூழ்ச்சிகளால் சிதைத்தார். பிரித்தாளுதல், துரோகிகளை உருவாக்குதல், போட்டி மனப்பான்மையுடன் குழுக்களை உருவாக்குதல் அதில் அடங்கும். அதே வரலாறு இன்று மீண்டும் திரும்புகிறது. உளவுத் துறையை வைத்து காங்கிரஸ் செய்தது என்றால் இந்துத்துவ‌வாதிகள் நேரிடையாக அவர்களாக களத்தில் செய்கிறார்கள். அஸ்ஸாம், போடா தேசிய இனப்போராட்டங்களை பாஜக‌ கட்சி ஆதரிப்பதாக பம்மாத்து செய்து முஸ்லீம் மக்களுக்கு எதிரானதாக மாற்றி தேசிய இன ஒர்மையை கருவிலேயே சிதைக்கும் வேலைகளை வெற்றிகரமாக செய்து வருகின்றது.

தேசிய இனங்களின் சமத்துவத்திற்கு மாறாக அகண்ட பாரத‌த்தின் அடியாட்களாக தேசிய இனப் போராட்டங்களை இந்துத்துவ‌வாதிகள் சிதைக்கின்றனர். இதன் ஒரு அங்கமாகவே, ஈழப்போராட்டத்தினுள் இந்துத்துவ‌வாதிகளின் பம்மாத்து ஆதரவைப் பார்க்க முடிகின்றது. இந்து மத நம்பிக்கையுடைய தமிழ்மக்கள் மட்டுமல்ல கிருத்துவ, முஸ்லீம் மதங்களில் நம்பிக்கை கொண்ட மக்களும் தமிழீழத் தேசியத்திலும். தமிழ்நாட்டுத் தேசியத்திலும் பிரிக்க முடியாத அங்கங்களாகும். மேலும், தேசிய சிறுபான்மையினர்களும், மதச்சிறுபான்மையினர்களும், மொழிச்சிறுபான்மையினர்களும் ஒரு தேசிய இனத்தினுடைய பிரிக்க முடியாத அங்கங்களாகும். இதில் பிளவை உருவாக்குவது, பிரிவினை உருவாக்குவது அந்தந்த தேசிய இனத்தின் எதிரிகளின் அரசியலுக்கே எளிதில் பயன்படும். முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவில் இந்துத்துவ‌வாதிகள் கலந்து கொள்வது தேசிய இனப் போராட்டங்களை கருவிலேயே சிதைப்பதற்கும் அகண்ட பாரதத்தின் அடியாட்கள் படையாக ஈழ விடுதலையை மாற்றவும், தேசிய இனமக்களுக்குள் பிரிவினை விதைக்கும் பிரித்தாளும் ஆளும்வர்க்க அரசியல் சூழ்ச்சிக்கே பயன்படும். இதற்குத்தான் அய்யா நெடுமாறன் ஆசைப்படுகிறாரா?

உலகெங்கினும் விடுதலை இயக்கங்கள் தங்கள் போராட்டங்களில் வீரச்சாவு அடைந்த தியாகிகளின் நினைவைப் போற்றுவதும், அதற்கான நினைவு முற்றங்கள் அமைப்பதும் முக்கியமானதொரு போராட்ட நிகழ்வாகும். தங்கள் இலட்சிய‌த்தினை அடைவதற்கான உறுதியை, நீண்டதொரு போராட்டக் களத்திற்கான ஆன்ம பலத்தை போராளிகளுக்கும், மக்களுக்கும் தரும் உற்சாக நிகழ்வாகும்.

ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா அரண்மனை அரசியல் சூழ்ச்சிகளால் பணம், பதவி, அதிகாரம், புகழை குறுக்கு வழியில் அடைந்த ம.நடராசனுக்கு(சசிகலா நடராசன்) மகுடம் சூட்டும் விழாவே என்று சந்தேகம் ஏற்படுகின்றது. மன்னார்குடி மாபியா கும்பல் தமிழ்நாட்டு அரசியலில் விளைத்த கேடுகள் விரிவாக அலசப்பட வேண்டிய ஒன்று.

ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக்கப்பட வேண்டும். விடுதலை இலட்சியத்தினை அடைவதற்கு ராஜபாட்டைகள் ஏதும் இருந்ததாக வரலாறு உலகில் இல்லை. 50 ஆண்டுகளுக்கு மேலான ஈழ விடுதலைப் போராட்டமும் அதையே நமக்கு சுட்டுகிறது முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு எதிராக தன்னுயிரை தற்கொடையாக தந்த முத்துகுமாரின் மரண சாசனத்தினை மீண்டும் ஒருமுறை தயவுசெய்து படித்துப் பாருங்கள்! ஈழ விடுதலைக்கு ஆதரவாய், இனப்படுகொலைக்கு எதிராக‌ தமிழகத்தின் மாணவர், தொழிலாளர், அறிவுத் துறையினர்.. என்று பல்வேறு மக்கள் திரளினரை அணிதிரட்டி போராடும் அவசியத்தினை வலியுறுத்தும் அந்த அறிக்கையை இங்கு நினைவு கூர்வதும், நினைவில் ஏந்துவதும் தமிழின ஆதரவாளர்களின் கடமை ஆகும்.

முத்துகுமாரின் உயிர்க்கொடைக்குப் பிறகு அன்றைக்கு தமிழக ஆட்சியில் இருந்த திமுக, முத்துகுமாரின் தந்தைக்கு ஈமச்சடங்கு பணம் தந்து, அதன‌ துரோக அரசியலை மறைக்க முயன்றது. அதை மறுத்து பிணத்தை வைத்து ஓட்டு பொறுக்கும் அரசியல் சூழ்ச்சியை முறியடித்தார் முத்துகுமாரின் தந்தை. அந்த எளிய மனிதர் தனது மகனின் இலட்சியத்திற்கு யாரும் விலை பேச முடியாது என்று சுயநல அரசியல்வியாதிகள் முகத்தில் அறைந்தார். அந்த முத்துகுமாரின் தந்தை பற்றி பேஸ்புக்கில் சில நாட்களுக்கு முன் பேசப்பட்டது. ஈழ அரசியல் வியாபாரிகள் கோடிகளில், மாட மாளிகைகளில் புரள்கின்றன‌ர். ஆனால் ஈழத்திற்காக தனது மகனை உயிர்க் கொடையாக தந்த அந்தப் பெரியவர் பழைய பேப்பர் வியாபாரம் செய்து தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் “ஏழ்மையை போக்கும் விதமாக நன்கொடை திரட்டுவது” பற்றி உண்மையான அக்கறையுடன் சில ஆலோசனைகள் பேஸ்புக்கில் முன் வைக்கப்பட்டது. தியாகி முத்துகுமாரின் தந்தையான அந்த வயதான பெரியவர் அதை மறுத்ததுடன், தனது தொழிலில் தான் நிறைவுடன் இருப்பதாகவும், உயிர்க்கொடை தந்த தனது மகனின் இலட்சியத்தினை நிறைவேற்றுங்கள், அதுவே தனக்கு செய்யும் உதவி என்று கூறியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. முத்துகுமாரின் தந்தையான அந்தப் பெரியவரிடம் இருக்கும் உண்மை, நேர்மை, எளிமை, அர்ப்பணிப்பு, உழைப்பு, இலட்சியத்தில் ஊறி நிற்கும் அரசியல் அறம் தான் இன்றைக்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் கேள்விக்குறியாக உள்ளது.

இதைத்தான் மேதகு வே.பிராபாகரன் அவர்கள் வேறுவார்த்தைகளில் “மாவீரர் நாள் என்பதும், மாவீரர் துயிலும் இல்லம் என்பதும் ஒரு சடங்கு நிகழ்வு அல்ல... மாறாக மாவீரர்களின் துயிலும் இல்லம் நமது நீண்ட இனவிடுதலைக்கான ஆன்மபலம் பெறும் இடம். மாவீரர்களின் நினைவு என்பது நமது மனம் சுமந்த இனவிடுதலைக்கான உற்சாக உரம்” என்றார்.

முள்ளிவாய்க்கால் தியாகிகளின் நினைவைப் போற்றும் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைவரும் இந்த அரசியல் அறம் பற்றி நேர்மையாக சுய பரிசீலனை செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும். இல்லையெனில் இந்துத்துவா தலைவர்களும், சாதி வெறியர்களும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் ஆவேசமாய் உரையாற்றுகையில் தங்கள் கல்லறைகளில் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கும் ஈழ விடுதலைக்காக முதல் களப் பலியாக உயிர்க் கொடை தந்த ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அப்துல் ரவூப், தனது கால் சதங்கைகளால் தமிழக மக்களிடம் கனலை மூட்டிய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செங்கொடி ஆகியோரின் ஆன்மாக்கள் மனப்புழுக்கத்தில் புரண்டு எழுந்து கேள்விகளைக் கேட்கும் என்பது உறுதி!

அந்த தியாகிகளின் கேள்விகளுக்கு அய்யா நெடுமாறன் அவர்கள் மட்டுமல்ல, இந்த விழா மேடையைப் பகிர்ந்து கொள்ளும் அனைவரும் பதிலளிக்க கடமைப்பட்டவர்கள்!.நடராசன்.

- கி.நடராசன் தொடர்புக்கு: பேஸ்புக்கில் Natarajan Krishnan

Pin It