'கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இல்லையே' என மோகன் பக்வத் வேண்டுமானாலும் சத்தியமிட்டுக் கூறலாம். ஆனால் காந்தியாரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் பட்டியலில் ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் சாவர்க்கரும் 7 வது குற்றவாளியாக இருந்ததை மறக்க முடியுமா?
கோட்சேவின் தம்பியும், காந்தி கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவனுமான கோபால் கோட்சே கூறுகிறார், "அத்வானி ஏன் நாங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இல்லை என்று கூறுகிறார் எனத் தெரியவில்லை! நானும் கோட்சேவும் வளர்ந்ததே ஆர்எஸ்எஸ்-ல் தானே!" என "Frontline" பத்திரிகைக்கு 1992ல் பேட்டி கொடுத்திருந்தார்.
விநாயக் தாமோதர் கோட்சே கோர்ட்டில் கொடுத்த தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் தான் ஏன் காந்தியைக் கொன்றேன் என்பதைப் பல காரணங்களைக் கொண்டு அடுக்குகிறார். ஆனால் காந்தியார் கொலையாக அவர் இருந்த உண்ணாவிரதமே முக்கிய காரணம்!
பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்க வேண்டிய தொகையினை உடனே வழங்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இதன் காரணமாகவே சாவர்க்கரின் தூண்டுதலின் பெயரில் கோட்சே கொலையாளியாக உருமாற்றப்பட்டான்.
1948 ஜனவரி 30 அன்று காந்தியை கோட்சே சுட்டுக் கொல்வதற்கு முன் கோட்சேயும், மற்றொரு குற்றவாளியான ஆப்தேயும் 1948 ஜனவரி 14, 17 தேதிகளில் சாவர்க்கரைச் சந்தித்து ஆலோசனைகளையும், ஆசிகளையும் பெற்றனர்.
ஆசியினை வழங்கும் முன் கோட்சேவை நோக்கி சாவர்க்கர் “யஷாஸ்வி ஹௌன் யா” (“வெற்றியோடு திரும்பி வாருங்கள்”) என, கொலையை வெற்றிகரமாக முடித்து வர வாழ்த்தியிருக்கிறார். அப்போது சாவர்க்கரின் மெய்க்காவலர் ராமச்சந்திர கசார் மற்றும் சாவர்க்கரின் செயலர் கஜானன் விஷ்ணு தாம்லே என்கிற இருவரும் அருகில் இருந்தனர்.
இந்த இரு முக்கிய சாட்சிகளும் அப்போது விசாரிக்கப்படவில்லை. அந்த மறைக்கப்பட்ட சாட்சிகளை மட்டும் நீதிமன்றத்தில் நிறுத்தி ஒருவேளை விசாரித்திருந்தால் சாவர்க்கர் குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையினை கோபால் கோட்சே, மதன்லால் பாவா, விஷ்ணு கர்காரே ஆகியோருடன் பெற்றிருப்பது உறுதி!
அன்றைய நேரத்தில் சாவர்க்கரின் நெருக்கமான நபராக, அவரது மனைவியாக (ஓரின சேர்க்கையின் மூலம்) இருந்தவர் கோட்சே - "காந்தியார் கொலை வழக்கு நூல்"
காந்தியாரின் கொலைக்குப் பின் ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யபடுகின்றது. அதன் ஸ்தாபகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் சாட்சாத் சாவர்க்கர் தான்.
ஏன் சாவர்க்கர் இந்துத்துவா மனநிலையோடு செயல்பட வேண்டும்?
பிறப்பால் "சித்பவன பார்ப்பனராக", காலங்காலமாக ஆண்டான் என்ற மமதையோடு இருந்த தாங்கள் இசுலாமியர்களினாலும், பின்பு கிறித்தவர்களினாலும் பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போல உருவாகிற்றோமே என்ற வேதனையின் வெளிப்பாடாக இவ்விரு மதத்தினரையும் எதிர்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை தன்னைப் போல இணைந்தவர்களோடு பரப்பி, பார்ப்பனிய அடிப்படையிலான கட்டமைப்பினை உருவாக்குகிறார். அதுவே பின்னாளில் "இந்துமகா சபை"ஆனது.
1910ம் ஆண்டு ஓர் ஆங்கிலேய அதிகாரியைக் கொன்ற வழக்கில் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் 10 ஆண்டுகள் அடைக்கப்படுகிறார்.
அந்த நேரத்தில் துருக்கிக்கும், இங்கிலாந்திற்கு ஏற்பட்ட அரசியல் ரீதியான பிரச்சனைகளை தனக்கு சாதகமாக்கி 1920 ஆகஸ்ட் 30 அன்று ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதுகிறார். அதில்....
"நான் ஆங்கிலப் பேரரசுக்கு எதிராக இல்லை. ஒரு தந்தை தறிகெட்ட தன் பிள்ளையினை எப்படி மன்னிப்பானோ, அதுபோல என்னை மன்னித்து விடுதலை செய்யுங்கள்".
"என்னால் பிரிட்டிஷ் அரசுக்கு எந்த ஆபத்தும் வராது. குரோபோட்ஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரைப்போல எனக்கு அமைதி வழி அனார்கிசமும் பிடிக்காது.... எனக்கு விடுதலை தந்தால் அது எனக்கு ஒரு புதிய பிறப்பாக இருக்கும், அது என் இதயத்தைத் தொடும். தனிப்பட்ட முறையில் உங்களோடு நெருக்கமாகவும், political ஆக உங்கள் அரசோடும் நிற்பேன்" -
என்று எழுதியவர். அதன் காரணமாக 1924 ஜனவரி 4 அன்று விடுதலை அடைந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பை தன் இதர 4 சகாக்களுடன் இணைந்து உருவாக்கி "இந்துக்கள் ஆங்கிலேயனை எதிர்த்து தங்களது சக்தியினை வீணடித்துக் கொள்ள வேண்டாம்" எனப் பிரச்சாரம் செய்தார்.
அந்தமான் சிறையில் சாவர்க்கர் உடன் இருந்தவரும், 'இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசுப் படை'யின் உறுப்பினர்களில் ஒருவருமான விஸ்வநாத் மாதூர் அவர்கள் டெல்லியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் காந்தி கொலையில் சூத்திரதாரியான சாவர்க்கர் படத்தைத் திறக்கும் கொடுமையைக் கண்டித்ததுடன், அந்தமான் விமான நிலையத்திற்கு சாவர்க்கர் பெயரைச் சூட்டியது குறித்து
“தேசத்தின் ஒரு வெட்கக்கேட்டை இந்த அரசு நியாயப்படுத்த முனைகிறது. சாவர்க்கர் பிரிட்டீஷ் ஆட்சியிடம் கருணைப் பிச்சை கேட்டதும், காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டதும் மட்டுமல்ல, அவர் இந்து தேசம் - முஸ்லிம் தேசம் என்ற இரு தேசக் கொள்கையைக் கொண்டிருந்தவர்" எனக் கூறி தன் வேதனையினை வெளிப்படுத்தினார்.
இப்படிப்பட்ட மதவாதியான நபருக்கு மதச்சார்பற்ற இந்தியா தன்னுடைய "பாரத ரத்னா" விருதை வழங்க வேண்டும என மராட்டியத் தேர்தலில் தன் வாக்குறுதியாக பாஜக குறிப்பிட்டிருப்பது மதச்சார்பற்ற தன்மையினை ஒடுக்கும் செயல்!
- நவாஸ்