30 ஆண்டு கால போரின் விளைவாகவும், இனப்படுகொலையின் விளைவாகவும் உலகெங்கும் அகதிகளாகச் சென்று தம் இருப்பை உறுதி செய்து கொள்ள கிடைக்கும் சிறு, சிறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் ஈழத்தமிழர்கள். அமெரிக்காவின் ஆங்கிலம் தெரிந்த தொழிலாளர்களின் வாழ்வைக் குறித்து கிஞ்சித்தும் அக்கறையின்றி தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களில் அவர்களின் கூலி அடிமைகளாக தமிழர்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களை சார்ந்தவர்களும் வேலை பார்க்கின்றார்கள். ஒபாமா வேலை தட்டுப்பாட்டை குறைக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கும் BPO பணிகளை குறைக்கும் முடிவை எட்டுகின்றார். வாழ்க்கை தேடி போகும் ஈழ அகதிகளை ஆஸ்திரேலியாவிலோ அல்லது வேறு நாடுகளிலோ அடித்தால் நம் மனம் ஒத்துக் கொள்ளுமா? வெளியாரை வெளியேற்ற வேண்டுமென்று நம்மவர்கள் யாராவது முழங்கினால், நம் உள்ளம் ஏதோ ஒரு வகையில் ஒத்துப் போகின்றதே, ஏன்? நாம் பண்பட வேண்டுமோ?

அகதி அந்தஸ்து தேடி உலகெங்கும் திரியும் தமிழர்களை விரட்டியடியுங்கள் என்று அந்தந்த தேசங்களை நாம் கோருவோமா? இந்திய துணைக்கண்டமெங்கும் பரவியிருக்கும் தாயகத் தமிழர்களை விரட்டியடிக்கச் சொல்லி நாம் கோருவோமா? ஒருவேளை அப்படியான ஒடுக்குதல் நடந்தால் நாம் ஏற்றுக் கொள்வோமா? மும்பையில், மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட பொழுது, அவர்கள் வெளியாரை வெளியேற்றுகிறார்கள் என்று நாம் மராத்தியர்களுக்கோ, மலாய்களுக்கோ ஆதரவாக நின்றோமா? ஏன் இந்த முரண். இந்த முரண்களின் அடித்தளம் என்ன? மனிதர்கள் தம் வாழ்விடங்களை விட்டு, வேர்களை கைகளில் பிடித்துக் கொண்டு அங்கங்கே ஊன்றி இளைப்பாறி, மீண்டும் வேர்களை பிடுங்கி வேறோர் இடத்திற்கு வாழ்வாதாரம் தேடி அலையும் அவல நிலைக்குத் தள்ளியது யார்? எது?

சமீபத்திய ரகுராம் ராஜன் குழு அறிக்கை, மிகவும் பின்தங்கிய மாநிலமாக ஒரிஸ்ஸாவையும், பீகாரையும், மத்தியப் பிரதேசத்தையும், சத்திஸ்கரையும், ஜார்க்கண்டையும் குறிப்பிடுகின்றது. முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் கோவா, கேரளத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முன்றாம் இடத்திலும், மகாராஷ்டிரா நான்காம் இடத்திலும் உள்ளன. தமிழகத்திற்குள் நுழையும் முன்னர், கொஞ்சம் மும்பை பக்கம் போய் வருவோம்.

மகாராஷ்டிர மாநிலத்தையும் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் அரசின் அறிக்கை சேர்க்கின்றது. ஆனால், விதர்பா போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாடெங்கும் இருக்கும் முறையற்ற வளர்ச்சியில் மகாராஷ்டிரா ஒன்றும் விதிவிலக்கல்ல. ஆனாலும், மகாராஷ்டிரா வளர்ச்சியுற்ற மாநிலமாக கருதப்படுவதற்கு காரணம் மும்பை போன்ற பெருநகரமும் கூட. தமிழகத்தின் நிலைமையும் ஏறக்குறையை இதேதான். முன்னேறிய மாநிலமென்று கணக்கு காட்டப்பட்டாலும், இங்கும் தஞ்சையில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தரவுகள் பெருகித்தான் வருகின்றன.

வடமாநிலத்திலிருந்து தொழிலாளர்கள் மும்பைக்கும் செல்கின்றார்கள், சென்னைக்கும் வருகின்றார்கள். சில பத்தாண்டுகளுக்கு முன்பு மும்பையைப் பொருத்தமட்டில், தமிழர்கள் மராட்டியர்களின் வாழ்வைக் கெடுக்கிறார்கள், அவர்களின் வேலையைப் பறித்து கொள்கிறார்கள் என்ற பிரச்சாரத்தோடு தமிழர்களுக்கெதிராக மராத்தியர்களைத் தூண்டிவிட்டது, சிவசேனை. இன்று அதன் கவனம் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது திரும்பியிருக்கின்றது. தற்கால சூழலில், தமிழர்கள் சிவசேனையின் சில பதவிகளை அலங்கரிக்கின்றனர். என்ன காரணம்? வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் இன்று மராத்தியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதை நிறுத்தி விட்டார்களா? சிவசேனை மற்றும் சிவசேனையிலிருந்து பிரிந்து சென்று நவ்நிர்மான் சேனையின் கவனம் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது திரும்பியிருப்பது ஏன்? இந்தக் கேள்விகளின் முடிச்சுகளையும், தமிழக சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சிக்கலை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

முதற்கட்டமாக, தமிழர்கள் ஏன் தங்கள் வாழ்விடங்களை விட்டு தமிழ்நாட்டிற்குள்ளும், வெளியேயும் இடம்பெயர்கின்றார்கள்? யாரெல்லாம் இடம்பெயர்கின்றார்கள்?

இந்தியா முழுக்க நிலவுவதைப் போன்று, தமிழகத்தின் கிராமங்கள் நிலவுடமை கட்டமைப்போடுதான் இன்றும் இருக்கின்றன‌. இங்கே கூலிகளாக பணிபுரிந்து வந்த ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பொதுவான நலன்கள் இருந்தாலும், இவர்களை பிரித்தாளும் சாதி என்னும் கருத்து, அவர்களை இணைந்து தன்னை சுரண்டுபவனுக்கு எதிராக போராட அனுமதிக்கவில்லை. தம் மீதான சுரண்டலை எதிர்க்க முடியாமல் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து, இன்று தமிழகம் 50% நகரமயமாகியிருக்கின்றது. ஆக, விவசாய கூலிகளுக்கான பற்றாக்குறை இயல்பாகவே ஏற்பட்டு விட்டது.

நகரத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள் போக, மீதமுள்ளவர்களுக்கும் விவசாயத்தில் வேலையிருந்ததா என்றால், அங்கும் வேலையில்லை. (கிராமப்புறங்களில் ஏற்படும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் எதுவும் உருவாகிவிடக் கூடாதென்று நூறு நாள் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது அரசு) மீதமுள்ளவர்களும் நகரத்திற்கு இடம்பெயர வேண்டிய கட்டாயமான சூழலில், இதே வேலையில்லாத் திண்டாட்டத்தால், வாழ்வாதாரத்திற்கான பிடி தேடி தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர் வடமாநிலத் தொழிலாளர்கள்.

தமிழகத்தில் தங்கள் கடையை விரித்திருக்கும் தனியார் நிறுவனங்களும் லாப நோக்கில் மட்டுமே செயல்படுவதால் (தனியார் துறையின் செயல்பாடு அப்படித்தான் இருக்கும்) தங்களுடைய உற்பத்தி செலவை குறைக்கும் திட்டத்தோடு தமிழ் மண்ணின் உழைக்கும் மக்களைப் புறக்கணித்துவிட்டு, வடமாநிலத் தொழிலாளர்களை, கங்காணிகளைக் கொண்டு குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர். வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு பற்றிக் கொள்ள ஏதாகிலும் கிடைக்குமா என்ற நிலையிலிருப்பவர்கள், குறைந்த கூலிக்கு தம் உழைப்பை விற்கத் துணிகின்றார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று நாம் நீண்ட காலமாக பேசி வந்தாலும், நம்மை நம்பி வந்த ஈழ அகதிகள் முகாம் எந்த நிலையிலிருக்கின்றது என்பது நாமறிந்ததுதான். அதே போன்றதொரு வாழ்நிலைதான் நம் தமிழர்நிலத்தை நம்பி வந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் வாய்க்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு கரிசனம், வடமாநிலத்தவர்கள் மீது வெறுப்பு என்பது நம் இயல்பில் கலந்ததல்ல. ஆனால், நம் வறிய நிலைக்கான காரணிகளை கண்டு இந்த அரசை வீழ்த்தும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மாறாக, திரிபு பரப்புரைகளின் வழி, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக போராட கூவி அழைக்கின்றனர். (இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக போராட அழைப்பதைப் போல).

வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தைத் தேடி வருவதை நாம் குறை சொல்லவில்லை. ஆனால், தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளால் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்தது போதாதென்று, வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்து ஓர் தேசிய இனத்திற்கு எதிர்நிலையில் இன்னொரு தேசிய இனத்தை நிறுத்தி இனப்பகைமையை ஏற்படுத்துவதைத் தவிர இங்கிருக்கின்ற அதிகார வர்க்கம் வேறெதையும் செய்வதில்லை. தங்களுடைய மெய்யான பகைவனை அடையாளம் காணுவதற்கு மாறாக, சக தேசிய இனத் தொழிலாளர்களோடு மோதிக் கொள்வதில் தங்கள் ஆற்றலை தொழிலாளர்கள் வீணடிக்க வேண்டுமென்பதைத் தவிர வேறேதும் நோக்கமில்லை.

தேசிய இனங்கள் கடந்து தனது சுரண்டும் கரத்தை முதலாளித்துவம் பரப்பியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு, தமிழர் நலன் நாடும் அமைப்புகளும் சிவசேனை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல், ஒரு தேசிய இனம், இன்னொரு தேசிய இனத்திற்கு எதிரியல்ல என்ற புரிதலோடு, உழைக்கும் மக்களைப் பிரித்தாளும் முதலாளித்துவத்துக்கு எதிராக களப்பணியாற்ற வேண்டும்.

- தமிழ்பாலன்

Pin It