புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்று ஒரு நாவல் எழுதினார். கூடங்குளம் பிரச்சினையின் இன்றைய தன்மையை இலக்கிய நடையில் குறிப்பிடுவது என்றால் இப்படித்தான் சொல்ல முடியும்: “ஒரு நாடு நாடகம் பார்க்கிறது.”
 
2011 டிசம்பர் மற்றும் 2012 மார்ச் என இருமுறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் விளக்கம் சொல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், 2013 அக்டோபரில் ரஷ்யாவுக்குப் போயிருந்தபோது, கூடங்குளம் வெற்றிச் செய்தியை புடினுக்கு அளித்து, 3&4 உலைகளுக்கான ஒப்பந்தத்தையும் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். “கூடங்குளத்தில் மின் உற்பத்தி” எனும் நாடகம் அரங்கேறத் துவங்கியது.
 
மன்மோகன் சிங் ரஷ்யாவுக்குச் சென்ற அக்டோபர் 20-ம் நாள் நள்ளிரவு 12:16 மணிக்கு மின் உற்பத்தி செய்ய முயற்சி செய்து தோற்றுப் போன விபரம் ‘தென் பிராந்திய மின் விநியோக மைய’ (Southern Regional Load Despatch Centre) இணையதளத்தில் பதிவாகியிருக்கிறது. கூடங்குளத்தில் வாழ்வா, சாவா எனப் போராடிக்கொண்டிருக்கும் இந்திய அணுசக்தித் துறை, இந்திய அணுமின் கழகம், பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, காங்கிரசு கட்சி என அனைவரும் ஒன்றாக சேர்ந்து, பிரதமர் ரஷ்யாவை விட்டு வெளியேறும் நேரத்தில் அக்டோபர் 22-ம் நாள் அதிகாலை 2:45 மணிக்கு கூடங்குளம் மின்சாரத்தை மின்தொகுப்போடு இணைத்துவிட்டோம் என்று அறிவித்தனர். “இரண்டாம் நிலைக் கோளாறுகளால்” அந்த முயற்சியும் காலை 4:34 மணிக்கு தோல்வியில் முடிந்தது.
 
நாட்டு மக்களின், ஊடகங்களின், சர்வதேச சக்திகளின் எதிர்பார்ப்பு ஏறிக் கொண்டிருந்த நிலையில், கூடங்குளம் நிர்வாகத்தினர் அக்டோபர் 25, 2013 அன்று இரவு 9:43 மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கிவிட்டதாக அறிவித்தார்கள். ஆனால் உற்பத்தியான மின் அளவை ஒவ்வொரு ஊடகமும் 125 (தினமலர்), 160 (தினமணி), 180 (இந்து), 300 (இந்தியன் எக்ஸ்பிரஸ்) ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்கள்.
 
இந்த குத்துமதிப்பு மின் விஞ்ஞானம் வியப்பூட்டுவதாக இருக்கிறது. இதைவிடப் பெரிய விடயம் இனி வருவதுதான். தமிழ்நாடு மின்கடத்தல் நிறுவனத்தின் (Tamil Nadu Transmission Corporation Ltd.) இணையதளத்தில் அக்டோபர் 26, 2013 காலை 7:50 மணிக்கு கூடங்குளம் மின்சாரம் குறிப்பிடப்படவேயில்லை. மத்திய உற்பத்தி நிலையங்கள் (Central Generating Stations) வரிசையில் கல்பாக்கம், காக்ரப்பார் அணுமின் நிலையங்களிலிருந்து வரும் தமிழகத்தின் பங்கான 331, 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமேக் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியானால் கூடங்குளம் மின்சாரம் எங்கேப் போயிற்று?
 
இப்படி ஓர் அரசு தன் மக்களை ஏமாற்றுமா என்று பலரும் கேட்கிறார்கள். இந்த அரசின் பிரதமர் “ஓரிரு வாரங்களில் மின்சாரம் வரும்” என்று இரண்டு வருடங்களுக்கு முன்பே சொல்லவில்லையா? இவரின் அமைச்சர்தானே 89 முறை “இன்னும் 15 நாளில் மின்சாரம் வரும்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த அரசுதானே 275 முக்கியமான நிலக்கரி கோப்புக்களை காணவில்லை என்று சொல்கிறது. இந்த அரசுதானே 2ஜி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் போன்ற பிரச்சினைகள் பற்றி மக்களிடம் பொய்யும், புரட்டும் பேசிக் கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், இந்திய அணுசக்தித் துறை எந்த நேரத்திலும், யாரிடமும் எந்த உண்மையையும் சொன்னதாக வரலாறேக் கிடையாதே?
 
தென் கொரியா நாட்டின் 23 அணுமின் நிலையங்கள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 128 முறை நிறுத்தப்பட்டிருக்கின்றன; பல நூற்றுக்கணக்கான உபகரணங்களின் தரச் சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த மிகப் பெரிய ஊழல் பற்றி தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதே போல ஜப்பான் நாடு கடந்த பத்தாண்டுகளில் 20 நாடுகளுக்கு அணுஉலை கொதிகலன் உள்ளிட்ட முக்கியமான உபகரணங்களை, உதிரிப்பாகங்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. அவற்றில் 40 சதவீத பொருட்கள் மீது பாதுகாப்புப் பரிசோதனைகளை செய்யத் தவறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த நாடும் விசாரித்து வருகிறது. கூடங்குளத்தில் இவை போன்ற விசாரணைகள் நடத்தப்பட்டால், ஆயிரக்கணக்கான பூதங்கள் கிளம்பும்.
 
ஆக மொத்தத்தில், கூடங்குளத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது பரிசோதனைகள்தானே தவிர, முழு அளவிலான வணிக உற்பத்தி (commercial production) அல்ல. அது நடக்குமா, எப்போது நடக்கும் என்பவையெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். எனவேதான் அக்டோபர் 25, 2013 அன்று தமிழகத்தின் மின்சார நிலைமை பற்றி சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் கூடங்குளம் மின்சாரத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்த பிழையோ, விடுபடலோ அல்ல. முதல்வருக்கு நன்றாகத் தெரியும் கூடங்குளத்தில் நடப்பது ஒரு நாடகமென்று. இந்த நிலையிலாவது தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
 
- அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், இடிந்தகரை 627 104

Pin It