தற்போது நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் இல்லாத சூழலில் கூட, 1947ஆம் ஆண்டு தொடங்கி இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் உறுப்பினராக சேர்வதற்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த தடையை பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நீக்கியுள்ளது. பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் ஏற்கனவே இந்த திசையில் நகர்ந்திருந்தாலும், இது சம்பந்தமாக ஜூலை தொடக்கத்தில் மோடி ஆட்சியில் வெளிப்படையாக, எடுக்கப்பட்ட முடிவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உறுதியுடன் ஆமோதித்துள்ளது. நீதித்துறையில் ஆர்எஸ்எஸ் கரங்கள் வலுவாக ஊடுருவியதன் வெளிப்பாடாக, இந்திய நீதிமன்றங்கள் மகாபாரதம், கீதை, ராமாயணம் போன்ற மூடத்தனமான மத நூல்களை மேற்கோள் காட்டுவது மற்றும் இந்துத்துவத்தின் சித்தாந்த அடிப்படையான மனுஸ்மிருதி உட்பட பல வேத சொல்லாடல்களை அவர்களின் தீர்ப்புகள், கருத்தாடல்களில் மேற்கோள்கள் காட்டும் வழக்கம் இப்போதெல்லாம் வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும், இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் ஒவ்வொரு அங்குலத்திலும் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பச்சை கொடி காட்டியதுடன், அதன் கும்பாபிஷேகத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் நாட்டின் பிரதமர் இணைந்து நிகழ்த்தியதும், அந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் பதின்மூன்று.பேர் கலந்து கொண்டதும் திட்டமிட்ட காவி-பாசிச இந்துராஷ்டிராவை நோக்கி நகரும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்..
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த 58 ஆண்டுகால தடையை மோடி ஆட்சி நீக்கியதற்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் ஜூலை 25 அன்று ஒப்புதல் அளித்தது, நிச்சயமாக இது இந்துத்துவா திட்டத்தின் மற்றொரு மூலோபாய நடவடிக்கையாக கருதப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலர் பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக இருந்ததை இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி நாக்பூரைச் சேர்ந்த ஷரத் பாப்டே தனது கருத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இடம்பெற செய்தது ”தவறுதலான இடமாற்றம்” என்பதுடன் "சர்வதேச அளவில் புகழ்பெற்ற" ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர்ந்து கொள்ள தடை என்பது மிகவும் வருந்தத்தக்கது என்கிற மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் கோபத்தை, இந்தப் பின்னணியில் இணைத்து பார்க்க வேண்டும். அரசின் கடந்த காலத் தவறை எண்ணி புலம்பிய நீதிமன்றம், தடையை நீக்கியதை "அதிகபட்சமானது" என்று விளக்கியதுடன்: "நாட்டிற்கு பல வழிகளில் சேவை செய்ய வேண்டும் என்ற பல மத்திய அரசு ஊழியர்களின் ஆசை, இந்த தடையின் காரணமாக இந்த 50 ஆண்டுகளில் குறைந்துவிட்டது” என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது தான் தடை நீக்கப்பட்டதாக கூறி மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பெருமை பேசி உள்ளது.
இப்போது, உண்மை என்ன? 1966 ஆம் ஆண்டு இந்திய அரசு அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்-ஸில் சேருவதைத் தடை செய்தது, அரசு மதச்சார்பற்ற நிலைப்பாட்டை முன்னெடுக்கும் சூழலில் மேற்கண்ட முடிவுக்கு வந்தது, இருப்பினும் 'மதச்சார்பின்மை' - அரசாங்கத்தை மதத்திலிருந்து பிரித்தல் – என்பது முறையாக 1976இல் 42வது திருத்தத்தின் மூலம் தான் அரசியலமைப்பில் நுழைந்தது. அதன்படி, சிவில், இராணுவம், நீதித்துறை உட்பட அரசின் முழு ஜனநாயகம், நிர்வாகம் ஆகியவை மத-நடுநிலையாக (மதச்சார்பற்று) இருக்க வேண்டும். இது RSSஆல் ஆதரிக்கப்படும் இந்துத்துவம் அல்லது அரசியல் இந்துத்துவம் அல்லது ஆக்கிரமிப்பு இந்து தேசியவாதம் மற்றும் அதன் இறுதி நோக்கமான பெரும்பான்மையான இறையாட்சி இந்துராஷ்டிராவை ஸ்தாபிப்பதன் சாராம்சமாக இருக்கும் "கலாச்சார தேசிய வாதத்திற்கு" முற்றிலும் எதிரானது ஆகும். ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள் போன்ற கருத்துக்கள், பல்வேறு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் இந்தியாவை 'பல்தேசிய', பன்மொழி, பன்முக கலாச்சாரம், பல மதங்கள், பல இனங்கள் வாழும் நாடு என்ற புரிதலுக்கு முற்றிலும் மாறுபட்டவை.
எண்ணற்ற வெளிநாடுகளில் விரிவாக்கங்களுடன் உலகின் மிகப்பெரிய-நீண்ட காலமாக இயங்கும் பாசிச அமைப்பாக ஆர்எஸ்எஸ் தோற்றம் மற்றும் மாற்றத்தின் வரலாற்று/அரசியல் சூழலுக்குள் செல்வது இந்தக் குறிப்பின் நோக்கமல்ல. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், RSS இன் "கலாச்சார தேசியவாதம்" முஸ்லிம்களை முதல் எதிரியாக அடையாளப்படுத்தியது, அதன் காலனித்துவ அடிமைத்தனத்திற்கு ஒரு மறைப்பாக இருந்தது. அமெரிக்கா தலைமையிலான போருக்குப் பிந்தைய நவ காலனித்துவத்தின் கீழ், ஆர்எஸ்எஸ் அமைப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உறுதியாகப் பின்பற்றுகிறது. மேலும், இன்று பிஜேபி நவ-பாசிச உலகளாவிய சூழலில், RSS தீவிர வலதுசாரி, நவதாராளவாத பொருளாதார தத்துவம், கார்ப்பரேட் - கோடீஸ்வர - பெரு முதலாளிகளுடன் கூட்டணி வைத்து, அதன் அரசியல் கருவி மூலம் ஆர்.எஸ்.எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேருவதற்கான தடையை நீக்குவதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அரசு-அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமின்றி, அதன் வசம் உள்ள பல வெளிப்படையான - ரகசிய அமைப்புகளுடன் துணையுடன் வெகுஜன-சக்தியையும் வெகுவாக கட்டுப்படுத்துகிறது.
தலித்துகளையும் பெண்களையும் கீழான மனிதர்களாகக் கருதும் மனுஸ்மிருதி, முஸ்லிம்களை குறிவைத்து இழிவுபடுத்தும் இஸ்லாமிய வெறுப்பு என இரண்டு சித்தாந்த அடிப்படைகளில் உறுதியாக வேரூன்றியிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாடாளுமன்ற ஆட்சியில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனது இறுதி இலக்கை நோக்கி வெறித்தனமான வேகத்தில் செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட நிலையை இப்போது நீதிமன்றத்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் இணைய தடை இல்லை என அங்கீகரிக்கப்பட்ட பரந்த சூழலில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இதனால் அதிகாரத்துவத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள், ‘மதச்சார்பின்மைக்கு’ எதிரான பெரும்பான்மை இந்துத்துவாவுக்கு தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாக அறிவிக்க முடியும் என்பதால், இது முழு நிர்வாகத்தையும் ஒட்டுமொத்தமாக காவி மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய நடவடிக்கையாகும். இந்திய அரசியலமைப்பின் சார்பில் வலியுறுத்தப்படும் தேசம் - தேசத்தவர்கள் என்கிற கருத்தாக்கங்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.சிற்கு உள்ள அடிப்படை கருத்து வேறுபாடுகளின் காரணமாக, அதில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்களின் அரசாங்க சேவைகளில் முரண்பாடு மற்றும் திசைதிருப்பல் சாத்தியம் வெகுவாக நடைபெற சாத்தியம் உள்ளது. எனவே, இந்திய அரசின் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பொருட்படுத்தாமல், அதன் குடிமக்களை சமமாக நடத்த வேண்டும் என்ற கூற்று அர்த்தமற்றதாகவும் சாத்தியமற்றதாகவும் மாறி விடும்.. இது இந்தியாவை ஒரு நடைமுறை இந்துராஷ்டிராவாக மாற்றுவதற்கு ஒப்பானது.
சரியாகச் சொல்வதானால், 18-வது லோக்சபா தேர்தலில் பிஜேபியின் தேர்தல் பின்னடைவு, இன்று இந்தியா எதிர்கொண்டிருக்கும் பாசிச அச்சுறுத்தலை எந்த வகையிலும் பலவீனப்படுத்த வில்லை. எனவே, தேர்தலுக்குப் பிந்தைய வளர்ச்சிகளின் உறுதியான மதிப்பீட்டின் அடிப்படையில், மதச்சார்பின்மை - ஜனநாயகத்திற்கான நீடித்த போராட்டம் இன்று ஆர்எஸ்எஸ் புதிய வகை பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பில் இருந்து பிரிக்க முடியாதது என்ற உண்மையை முழுமையாக புரிந்துகொண்டு இந்திய மக்கள் நவபாசிசதிற்கு எதிரான போராட்டத்தில் முன்னேற வேண்டும்.
(இகக மாலெ (ரெட் ஸ்டார்) கட்சியின் ஆங்கில இதழ் "ரெட் ஸ்டார்" தலையங்கம்)
மொழியாக்கம்: சுடர்