மக்களின் வாழ்க்கை வழக்காறுகளில் இருந்து வெளிப்படுவதே பண்பாடு ஆகும். இவை ஒரு சமூகத்தின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாகும். மக்களின் செறிவான வாழ்க்கை முறையைப் பண்பாடு என்பர். அது அச்சமுதாய மக்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது.

   பண்டைய தமிழர் வாழ்வினை அகம் புறம் எனப் பிரித்தனர். சங்க இலக்கியங்கள் இந்த வாழ்வினை சிறப்பாக எடுத்துரைக்கின்றன. வாழ்வில் நன்மையும், தீமையும் கலந்தே அமையும். உயர்வும் தாழ்வும் அமைவது இயல்பு. இதனை உணர்ந்து கலித்தொகை சில அறநெறிகளைக் கூறுகின்றது.

   ‘ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்
   போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
   பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
   அன்பெனப்படுவது பேதையர் சொல்நோன்றல்;
   செறிவெனப்படுவது மறைபிறர் அறியாமை
   முறையெனப்படுவது கண்ணோடாது உயிர்வவ்வல்
   பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” (கலி-133-6-10)

   இதனை துன்புற்றோர்களுக்கு உதவுதலை ‘ஆற்றுதல்” என்றும் தன்னை நம்பி இருப்பவர்களை விட்டுப்பிரியாமல் இருப்பதைப் ‘போற்றுதல்” என்றனர். ‘பண்பு” எனப்படுவது உலக நடப்பினை அறிந்து ஒழுகுதலாகும். ‘அன்பு” என்று கூறுவது தன் சுற்றத்தாருடன் சினமும் பகையும் கொள்ளாது இருத்தல். ‘அறிவு” என்பது தன்னைவிட அறிவில் குறைந்தவர் சொல்லையும் பொறுத்துக் கொள்வதாகும். ‘செறிவு” என்பது சொன்னதை மறவாது மறக்காமல் செய்வதாகும். ‘நிறை’ என்பது இரகசியங்களைப் பாதுகாத்தலாகும். ‘முறை” என்பது வேண்டியவர் வேண்டாதவர் என்ற நிலையில் கண்ணோடாது செயல்படுதலாகும். ‘பொறை” என்பது பகைவர் கூறிய சொல்லையும் செயலையும் பொறுத்தலாகும். இவ்வாறு உயர்ந்த பண்பாட்டுக்கூறினை உலகிற்கு கலித்தொகை எடுத்துரைக்கின்றது.

  சங்ககாலத் தமிழர் தங்களது வாழ்வினை அகம், புறம் என இருநிலையில் இணைந்த வாழ்க்கையையே விரும்பினர்.

   அகமானது காதல் வாழ்க்கையையும், புறமானது சமுதாய வாழ்வியலையும், வீரச்சிறப்பையும் எடுத்துக் கூறுகின்றது.

   மாந்தர்களின் உள்ளத்தில் எழும் காதல் உணர்வு அவர்களின் உள்ளத்தில் எழுந்த அகஉணர்வுகளே ஆகும். இதன் காரணமாக அகப்பாடல்கள் எல்லாம் ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார்” என்ற உயர்ந்த பண்பாட்டினைக் கொண்டு உலகிற்குப் பொதுவாக்கிப் பாடப்பட்டன.

   பொருளால் வறுமை ஆயினும் அன்பினால் இணைந்து வாழும் வாழ்க்கையே வாழ்க்கையெனக் கொள்ளப்பட்டது. உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றிணைந்த வாழ்வின் அருமையினைக் கலித்தொகைப் பாடல்வழியே பெருங்கடுங்கோ வெளிப்படுத்துகிறார். இதனை
 
   ‘ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
   ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (கலி.18.10-11)

 இப்பாடல் வரி உணர்த்துகிறது. அதாவது அன்பினால் உள்ளம் இணைதலும், விருப்பத்தினால் இணைந்து வாழ்தலும் சிறப்பென சங்க காலத்தில் கருதப்பட்டது. அன்பும் ஆர்வமும் சிறந்த தலைவி மிகவும் போற்றப்பட்டாள். இதனை

   ‘அன்பு கலந்து
   ஆர்வம் சிறந்த சாயல்
   இரும்பல் கூந்தல் இருந்திழை” (அகம் -94) என்ற அகப்பாடல் மூலம் அறியலாம்.

 அன்பு உள்ள நிகழ்வாகும். ‘ஆர்வம் சிறந்த சாயல்” என்பது அன்பின் வெளிப்பாடான குணத்தினைக் குறிப்பதாகும்.

   இல்லறப் பெருமையின் அடிப்படையாகப் பெண்ணின் அன்பும், கற்பும் கொள்ளப்பட்டன. மேலும் சேர்ந்து வாழும் நாள், பிறநாள் எல்லாம் வீண் நாள் என்னும் தவிப்பின் குரலானது உடலும், உயிருமாய் ஒன்றிக் கலந்து வாழும் வாழ்க்கையின் இனிமையையும் அருமையையும் காட்டுவதாகும்.

   ‘ஒருநாள் புணரப்புணரின்
   அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே” (குறு-280)

 காதலும், காமமும் உயிரினும் மேலானதாக நிலத்திலும் வானையும் கடவுளையும் விடப் பெரிதாகக் கருதப்பட்டது. இதனை

   ‘பெரிதே காமமென் உயிர்தவச் சிறிதே” - (கலி:137)

   ‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று”- (குறுற்-03)
 
எனும் கலித்தொகை குறுந்தொகைப்பாடல்கள் மூலம் அறியலாம்.

   அகமரபில் பிரிவு என்பது தலைவிக்குத் துன்பம் தருவதாய் அமைகின்றது. தலைவன் பொருளீட்டுதல் காரணமாகப் பிரிகின்றான் பிரிவுத்துன்பத்தை தடுக்க முற்படுகிறாள் தோழி தனது சொல்லாடலின் வழியே தலைவனிடம் ‘நீ தேடமுடியாத செல்வம் தலைவியே” என்று கூறி அவனது பயணத்தைத் தடுக்கிறாள். இதனை

   ‘இல் என, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு” என
   கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
   தொல் இயல் வழா அமைத்துணை எனப்புணர்ந்தவள்
   புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை” (கலி-2.15-18) என்ற அடிகளின் வழியே அறியலாம்.

   மேலும் பொருள் தேட நீ தலைவியைப் பிரிந்தால், பிரிவினால் இவள் இறப்பாள் என்று கூறுகிறாள்.

   ‘பொய்ந் நல்கள் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
   எந்நாளோ நெடுந்தகாய்! நீ செல்வது
   அந்நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே. (கலி 5-16-18) என்று எடுத்துரைக்கிறாள்.
 
தலைவனுக்கு நேறும் துன்பம் தனக்கும் நேரட்டும் என்று தானும் வருவதாய் தலைவி கூறுகின்றாள். தலைவனின் துன்பத்தில் பங்கெடுக்கும் தலைவியின் உயர்ந்த பண்பினை இங்கு அறியலாம்.

   ‘ஆற்றிடை நும்மொடு
   துன்பம் துணையாக நாடின, அது அல்லது
   இன்பமும் உண்டோ எமக்கு” (கலி 6-8-10)

தலைவனுடன் தலைவி உடன் போகின்றாள் போய்விட்டாள். தலைவியைச் தேடிச்செல்கிறாள் செவிலித்தாய். எதிரே வரும் வழிப்போக்கரைக்கண்டு ‘இதுபோல் இருவரைப் பார்த்தீர்களா” என்று கேட்கிறாள் ‘பார்த்தோம் அவர்களிடம் குற்றமில்லை மணமானவர்கள் என்றே நினைத்து வந்தோம். எனவே அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று அவர்கள் செவிலித்தாயிடம் எடுத்துக்கூறி மனமாற்றி அனுப்பிய உயர்ந்த பண்பாட்டு நெறியைக் காணலாம். இதனை

   ‘காணேம் அல்லேம் : கண்டனம், கடத்திடை
    ஆண் எழில் அண்ணலோடு அருந்சுரம் முன்னிய
     மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் (கலி9. 9-11)
     இறந்த கற்பினாட்டு எவ்வம் படரன்மின்
     சிறந்தானை வழிபட்இச் சென்றளை
     அறம் தலைபிரியா ஆறும் மற்றும் அதுவே
(கலி 9-22-25) பாடல் மூலம் அறியலாம்.

   தலைவியைப் பிரிந்த தலைவன் பொருளீட்டுதலால் தலைவியினை என்னி வருந்துகிறான். காட்டில் சில காட்சிகளைக் காணுகின்றான். அன்பு மிகுதியால் விரைந்து தலைவியை அடைகின்றான். அஃறிணைன உயிர்களின் வழியே பெருங்கடுங்கோ தலைவன் தலைவியின் அன்பினை வெளிப்படுத்துகின்றார்.

          ‘துடி அடிக்கயந்தலை கலக்கிய சின்னீரைப்
 பிடி ஊட்டி, பின் உண்ணும்ம் களிறு எனவும் உரைத்தனரே”
(கலி-11-9-10)

            இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
 தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே
 (கலி-11-16-17)

    அன்பு கொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
 மென்சிறகறால் ஆற்றும், புறவு எனவும் உரைத்தனரே
(கலி-9-12-13)

இப்பாடலின் வழியே ஒன்றாகக் கூடி இன்புற்று வாழும் வாழ்க்கையே சிறந்தது என்ற பண்பாட்டினை எடுத்துக்காட்டுவதாய் அமைவதைக் காணலாம்.

சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் வாழ்வை சிறப்பாக தெளிவுபடுத்துகின்றன. வளந்து வரும் மக்கள் பண்பிற்கு ஏற்ப தன்னையும் நிலைபெறச் செய்வதே நல்ல இலக்கியம் ஆகும். சங்க இலக்கியத்தில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது கலித்தொகை ஆகும். பண்டைய மக்களின் நல்வாழ்விற்கான வாழ்வியல் நெறிகளையும் பண்பாடுகளையும் கலித்தொகையானது எடுத்துக்காட்டுகின்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.

- த .மணிகண்டன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It