நாலடியாரின் சில அதிகாரங்கள் நெய்தல் நில வணிகம் தொடர்பானவை . ஏலவே சொன்ன அறிவுடைமையைத் தொடர்ந்து அறிவின்மை என்ற அதிகாரமும்கூட நெய்தல் வணிகர் தொடர்பானவையே.

1. பூவிற்கிழத்தியும் நாவிற்கிழத்தியும்

நுண்ணறிவு இல்லாதவரிடம் உள்ள செல்வம் பேடி அணிந்த நகை போன்றது என்கிறது முதல் பாடல். (பேடியும் பூணாளோ கண்ணவாத் தக்க கலம். 251).

அறிவுடையவர்க்குப் பெருமை அழிந்து துன்பம் வருவதைக் கண்டீரானால் அதற்குக் காரணம் மனைவி சேராமல் வெறுக்கும் பரத்தையர் ஒழுக்கம் என்கிறது

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து / அல்லல் உழப்பது அறிதிரேல் – தொல்சிறப்பின் / நாவின் கிழத்தி உறைதலால் சேராளே / பூவின் கிழத்தி புலந்து என்னும் 252 ஆம் பாடல்.

இதுவரையிலும் தொல்சிறப்பின் நாவின் கிழத்தி உறைதலால் சேராளே பூவின் கிழத்தி புலந்து என்னும் வரிகளுக்குக் கருத்துமுதல்வாத நோக்கில் சொல்லப்பட்ட உரைகள் பொருத்தமாக இல்லை.

நான்கடிகளில் பின் இரண்டடியாக இருக்கும் இவ்வரிகளுக்கு, நாவின் கிழத்தியான 'சரஸ்வதி' இருப்பதால் பூவின் கிழத்தியான 'திருமகள்' ஊடிக்கொண்டு அகன்றாள் என்று பொருள் கூறப்படுகிறது. இவ்வுரை முதலிரண்டடிக்குப் பொருத்தமாக இல்லை. அறிவில்லாதவர்களுக்கு செல்வம் கிடைப்பது நகைப்பை உண்டாக்கும் என்னும் முதல் பாடலைத்தொடர்ந்து அதற்கு எதிரான அறிவுடையவர்கள் பெருமை அழிந்து வறுமையில் உழல்வதைக் கூறுகிறது பாடல். பாடழிந்து என்பதற்கு தன் பெருமை யழிந்து என்று பலரும் கூறுவர். நாமகள் இருக்குமிடத்தில் செல்வம் இல்லாமல் போகலாம் எனக் கொண்டால் கூட பெருமை அழியாது அல்லவா? சேர்ந்திருப்பது புலமையும் வறுமையும் என்னும் கருத்தைத் தழுவியே இவ்வாறு பொருள் கொண்டுள்ளனர் உரையாசிரியர்கள். அறிவுடையவன் பொருளின்றி இருப்பது என்பது சரி தன் பெருமையழிந்து போவது ஏன் என்னுமிடத்தில்தான் இப்பாடலின் பின்னிரு அடிகளின் பொருள் விளங்கத் தொடங்குகிறது.

அறிவுடையவர்கள் பெருமையழிந்து துயரில் உழலக் காரணம் அவர்களின் தீய ஒழுக்கமே. பெருமை யழியவும் செல்வம் குறையவும் காரணம் தொல்சிறப்பினால் வழிவழியாக இனிய பாடலகள் கற்று நாச்சுவை உடைய விலைமகளிரின் தொடர்பான தீயொழுக்கம் எனக் கொள்வதே பொருத்தமுடையது. ஆக. பூவின் கிழத்தி - பூவினை விடவும் மென்மையான தலைவி. தொல்சிறப்பின் நாவின் கிழத்தி – இனிமையான பாடல் முதலானவற்றை குலத்தொழில் முறையில் கற்ற பரத்தை.

ஒருவனுடன் அவன் மனைவியும் கூட சேர்ந்திருக்க விரும்பாத தீயொழுக்கம் விலைமகளிரை நாடுதல்தான். அத் தீயநடத்தையே அறிவுடையோர் பெருமையழிந்து துயரில் வாடக்காரணம்.

இக்கருத்தை நடைமுறையோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போதும் பொருள் சிறப்பாக அமைவதைக் காணலாம். பரத்தையர் ஒழுக்கத்தால் கெட்டொழிந்த அறிவுடையவர்க்கு துன்பமும் பழியும் வருதல் ஏற்புடையதுதான். இப்போது முதற் பாக்குரிய எதிர்ப்பொருள் இரண்டாம் பாடலில் சரியாக வந்து பொருள் சிறப்பதையும் எவ்வித நெருடலுமின்றி எல்லாரும் ஏற்கும்படி அமைவதையும் காணலாம்.

2. வணிக வழக்கு

கற்கச்சொல்லி தந்தை சொல்லும்போது அதைக் கருத்தில்கொள்ளாமல் இருந்தவன் பலர் இருக்கும் அவையில் இருக்கும்போது ஒரு ஓலையைக் கொடுத்து படிக்கச் சொன்னால் படிக்க முடியாமல் வெட்கி ஓலை கொடுத்தவரை அடிக்கச் செல்ல நேரும் என்று 253 ஆம் பாடலுக்குப் பொருள் கூறப்படுகிறது.

மேற்கண்ட பொருள் சற்றுக் குழப்பத்தையே தருகிறது. ஒருவன் ஏன் பலர் இருக்கும் அவைக்குச் செல்ல வேண்டும் என்கிற சாதாரண கேள்வியைக் கேட்டாலே போதும். துப்பு துலங்கிவிடும். வணிகம் செய்பவர்கள் ஓலைகளில் எழுதி ஒப்பந்தம் போட நேரும். ஓலையில் எழுதுவதற்கே ஓலைக்கணக்கர் என்பவர் இருந்திருப்பதாக 397 ஆவது பாடலிலும் குறிப்பிருக்கிறது. வணிகர்கள் கணக்கு எழுதுவது இயல்பான ஒன்றே. வணிகம் தொடர்பான வழக்குகள் வந்தால் வழக்குமன்றத்தில் அறிவிற் சிறந்த பெரியவர்கள் முன்னிலையில் ஓலைகளைப் படித்துச் சொல்லி வெல்வதற்கு கல்வி தேவை. இல்லாவிட்டால் பழிசுமத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக நேரிடும். வழுக்கோல் என்னும் சொல் செங்கோல் தவறி தவறான நீதி வழங்கப்பட்டுவிடும் என்பதை எச்சரிப்பதாக அமைந்துள்ளது.

3. கல்லாது நீண்ட ஒருவன்

‘கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறிவாளர் இடைப்புக்கு மெல்ல இருப்பினும் நாயிருந்தற்றே’ (254) என்ற பாடலுக்கு உரை எழுதும் போது ‘கல்லாது நீண்ட ஒருவன்’ என்பதற்கு கல்வி கற்காமல் வளர்ந்தவன் என்று பொருள் உரைக்கின்றனர். ஆனால் நீண்ட’ தொலைதூரங்களுக்கு சென்ற என்று பொருள் கொள்வதே சிறப்பு. (எ.கா. நீண்ட வழி) அதற்குக் காரணம் உண்டு. அடுத்ததாக வரும் உலகத்து’ என்னும் சொல் பலப்பல தூரதேசங்களையும் குறிப்பிடுவதையும் வெவ்வேறு இடத்தில் உள்ள நல்லறிவாளர்களின் மத்தியில் புகுந்து மெல்ல இருப்பது என்கிற குறிப்பும் இது வணிகர் தொடர்பானது என்பதற்கு வலுவூட்டுகின்றன.

‘உலகத்து நீண்ட கல்லாத ஒருவன் நல்லறிவாளர் இடைப் புக்கு மெல்ல இருப்பது’ என்று சொற்களை இடம் மாற்றிக் காணும்போது மிகத் தெளிவாகப் பொருள் விளங்கும். அதோடு இடைப் புக்கு’ என்பதிலிருந்து இடையில் அவர்களிடம் செல்வதையும் மெல்ல இருப்பது’ என்பதிலிருந்து பழக்கமில்லாதவர்கள் என்பதால் அஞ்சிக் கொண்டிருப்பது குறிப்பால் உணர்த்தப்படுவதையும் காணலாம்.

கல்லாதவர் உலகின் பல்வேறு இடங்களுக்கு சென்றால் அங்கிருக்கும் நல்லறிவாளர் நிறைந்த அவையில் நாய் இருப்பதைப் போன்று இழிவாக இருக்க நேரிடும் . உரைப்பினும் நாய் குரைத்தற்று - அவர்கள் பேசினாலும் அது நாய் குரைப்பதைப் போன்று மற்றவர்களால் பொருளற்றதாகக் கொள்ளப்படும் . ஆகவே கடல் கடக்கும் வணிகருக்கு கல்வி முதன்மையானது என்று இதன் பொருள் கொள்வது நெய்தல் வணிகச் சிந்தனைக்குப் பொருத்தமாக அமைகிறது. .

வேறுபட்ட கொள்கையுடைய புலவர்களின் இடையில் சென்றிருக்கும்போது இழிவானவற்றைச் சிறப்பாகக் கல்லாதவன் சொன்னாலும் அது தவறாக இருக்கும்போதும் கூட அதுகுறித்து கருத்து கேட்கும்போது அறிவாளியான வணிகன் செல்வத்தை இழக்க நேருமோ எனவஞ்சி மாறுபட்ட கருத்துரைக்க மாட்டார் என்ற வணிகப் பொருளும் புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக் / கல்லாத சொல்லும் கடையெலாம் கற்ற / கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருள்மேல் / படாஅ விடுபாக் கறிந்து. என்னும் 255 ஆவது பாடலுக்கு இருக்கிறது.

256 ஆம் பாடல் பனையின் மேல் வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் பச்சோலைக்கு இல்லை ஒலி’ என்று பனைமரத்திலிருந்து ஒரு உவமை கூறப்பட்டிருக்கிறது. பனை மரங்கள் நெய்தல் நிலத்திலும் நிறைந்திருப்பதை எங்கும் காணலாம்.

நாநயம் மிக்க வணிகர் எந்த இடத்திலும் இழப்பு நேராமல் இருப்பதற்காக பனைமரத்தின் பச்சோலை போல அமைதியாக இருப்பர். நாநயம் இல்லாதவர் வற்றிய ஓலை ஒலி எழுப்புதல் போல கருத்துரைப்பர். இனிக்க இனிக்கப் பேசினால் வியாபாரம் செழிப்பாக இருக்கும். எரிந்து எரிந்து விழுந்தால் தொழில் படுத்துப் போய்விடும் என்கிற செய்தி வணிகச் சிந்தனையாக இதில் இருக்கிறது. இதில் பசுமை என்பது செல்வச் செழிப்பையும் பட்டுப்போதல் என்பது சரிவையும் குறிப்பாலுணர்த்துவன எனலாம்.

4. பன்றி வளர்ப்பு

‘பன்றிக்கூழ் பத்தரில் தேமா வடித்தற்றால் … குன்றின் மேல் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகும் செவிக்கு’ (257) என்ற பாடல் சில செய்திகளைச் சொல்கிறது.

பன்றிக்குக் கூழ் வார்க்கும் பாத்திரத்தில் மாங்கனிச் சாற்றினை ஊற்றுவதுபோல் பயனற்றது நன்றறியாதவனுக்கு அறம் உரைப்பது. அப்படி உரைத்தால் பாறை நிலத்தில் முளைக்குச்சி அடிக்கும்போது அதன் தலைப்பகுதி உடைந்து போவதைப் போல் சொற்கள் வீணாகும். இது பொருள். இந்தப் பாடலுக்கும் நெய்தல் நிலத்திற்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது?

இந்தப் பாடலில் காணப்படுகின்ற பன்றி- பத்தல்- தேமா-வடித்தல்- தறி – கொட்டுதல் – தலை தகர்தல் ஆகிய சொற்கள் மிக அழகான வணிகச் செய்தி ஒன்றினை பொதிந்து வைத்திருக்கின்றன.

பன்றிக்கு ஏன் கூழ் வார்க்க வேண்டும்? அது வளர்ப்புப் பன்றி. அதற்கென்று ஒரு பாத்திரம் இருக்கிறது. அதில் கூழ் ஊற்றுகின்றனர். அதைக் கட்டி வைக்க முளைக்குச்சி அடிக்கின்றனர் என்பதும் தெரிய வருகிறது.

பன்றிக்கு மாம்பழச் சாறு கொடுக்கலாமா கூழ் கொடுக்கலாமா என்பது அறியாமல் செய்திருப்பது இதில் தொனிக்கிறது. உரையாசிரியர்களின் விளக்கங்களில் இருந்தும் இது புலனாகிறது. மலையில் பன்றிகள் இயல்பாகக் கிழங்ககன்று வாழக் கூடியவை பன்றியின் இயல்பறிந்த மலைவாழ் மக்கள் இதைச் செய்திருக்க வாய்ப்பேயில்லை.

மலை வாழ் மக்கள் பழங்களைக் கடித்து உண்ணும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்துபவர்கள். மாம்பழத்தைச் சாறு எடுக்கும் அளவிற்கான வளர்ச்சி நகரத்தில் காணப்படுவது இயல்பான ஒன்றே. நகரங்களில் கரும்புச்சாறு பிழியும் ஆலைகள் காணப்பட்டன என்னும் குறிப்புகள் நாலடியாரில் சில பாடல்களில் இருக்கின்றன.

இன்றைக்கும் வீடுகளில் கோழி விற்பனை செய்யும்போது இயல்பாகத் திரிந்து கொண்டிருக்கும் கோழிகளை முதல் நாள் இரவுக்கே கால் கட்டி வைப்பது வழக்கத்தில் இருக்கிறது. ஆக, மலையில் பன்றி வளர்த்து அதைப் பிற பகுதிகளுக்கு விற்றிருக்கின்றனர் என்பது இதில் அறியக் கிடைக்கும் செய்தி.

வணிகர்களாகிய நெய்தல் நில மக்களில் பன்றியைப் பிற நகரங்களுக்கு விற்பனை செய்பவர்களாக இருந்தால்தான் மலைப் பகுதியிலிருந்து பன்றியை வாங்கிவந்து கூழ் வார்த்து வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் உணவிற்காகப் பன்றியை வளர்த்துவந்திருக்கவேண்டும். பன்றி ஏற்றுமதி நடைபெற்றிருக்கலாம் எனவும் தோன்றுகிறது.

கன்னங்கரிய கரித்துண்டைப் பாலால் கழுவிக் கழுவி காய வைத்தாலும் அது வெண்மையாக மாறாதது போல் பெற முயலும் தன்மை இல்லாதவரை அடித்து அறிவு புகட்டினாலும் அறிவாளியாக மாட்டார். இது 258 ஆம் பாட்டின் சரியான பொருள்.

அதாவது ‘நோலா உடம்பு’ என்பதற்கு புண்ணியம் செய்யாதவர்க்கு என்றும் முன் தவம் செய்யாதவர்க்கு என்றெல்லாம் கருத்துமுதல்வாத நோக்கில் கூறுவதை விட முயற்சி செய்யாதவர்க்கு அறிவு கிட்டாது என்பது சிறந்த கல்வியியல் சிந்தனையாக மிளிர்வதைக் காண்க.

5. இழிந்தவை எவை?

‘பொழிந்து இனிது நாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தவை காமுறூஉம் ஈப்போல்’ என்னும் 259 ஆம் பாடல் வரிகளில் நெய்தல் நிலக் குறிப்பு காணக் கிடைக்கிறது. புன்னை முதலான பூக்கள் பூத்துக்கிடந்தபோதும் நறுமணம் வீசும் மலர்கள் இருந்தபோதும் அவற்றை நாடாமல் மீன் கருவாடு போன்றவற்றை விரும்பிச் செல்லும் ஈயைக் காட்டுவது நெய்தல் நிலமாகவும் இருக்கலாம்தானே?

கற்றவர்கள் கூறுவதைக் கேளாமல் தன்போல் உள்ள ஒருவனுடன் சேர்ந்து கொண்டு இழிவானவர்களுடன் இருப்பது கீழ்மை என்கிறது இப்பாடல்;.

குற்றமில்லாமல் நல்ல வழிகளைக் கூறும் அறிவார்ந்த பெரியோர்களின் பேச்சைப் புறந்தள்ளினால் அவர்கள் இழிந்த குணமுடையவர்களின் குழுவைச் சேர்வர். அது தீராத் துயரைத் தரும் என்பது 260 ஆவது பாடல்.

செல்வம், கல்வி, வணிகத்திறன், நல்லவர்களின் தொடர்பு, தீயவர்களின் தொடர்பு, பெருமை, வளர்ச்சி , வீழ்ச்சி, துயரம் இவையே இப்பாடல்களில் சுழன்று சுழன்று வருகின்றன என்பது கூர்ந்து கவனிக்கக் கூடியதாகும். ஆக பொருள் தேடும் வணிகர்கள் அறிவுடையவர்களைப் போற்றியும் அறிவுக் கூர்மையுடன் நடந்து கொண்டும் வாழ வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது அறிவின்மை என்று இயம்புகின்றன இப்பாடல்கள்.

நெய்தல் வணிகம் சிறப்பாக நடக்க உதவுவது அறிவுடைமை. வணிகம் வீழ்ச்சியடைய காரணம் அறிவின்மை.. இவற்றைக் குறிப்பால் உணர்த்தும் இப் பாடல்களும் நெய்தல் வணிகப் பாடல்களே. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

- பொ.முத்துவேல்

Pin It