இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் - மேதகு வே.பிரபாகரன்
 
தோழர் தியாகுவின் சாகும் வரை உண்ணா நிலை போராட்டம், அதை ஒட்டி நடந்த நிகழ்வுகள் குறித்து மே 17 இயக்கத்தின் குமுறலாகப் பதிவு செய்யப்பட்ட கட்டுரை "ட்ரோஜான் குதிரையும், தமிழர்களும்".
 
அக்கட்டுரையின் சாராம்சம் இதுதான். "காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கை ஒரு ஏமாற்று கோரிக்கை. கோரிக்கைகள் சமரசம் செய்து கொள்ளப்பட்டு, தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டம் தி.மு.க, இந்தியா கூட்டணியிடம் கையளிக்கப்பட்டுவிட்டது. தி.மு.க-இந்தியா என்ற 'ட்ரோஜான்' குதிரையைத் தமிழீழ ஆதரவு போராட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி, தமிழகத்தில் நடக்கும் ஈழ ஆதரவு போராட்டங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டார்கள். இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் பங்குபெற்றிருக்கும் தோழர்கள் சார்ந்த அமைப்புகள்/கட்சிகள் தான் இதற்குப் பொறுப்பு. இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் இருக்கும் தோழர்கள் தோழர் தியாகுவை ஏமாற்றிவிட்டார்கள். இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு பெற்றிருக்கும் பிற தோழர்கள் குறித்து மே 17 இயக்கம் எச்சரித்து இருந்தும் தமிழ்த் தேசிய தலைவர்கள் முட்டாள்களாக இருந்து தமிழ்ச் சமூகத்தை அழிவுப் பாதையில் போக அனுமதித்து விட்டார்கள். தமிழகத்தில் நடக்கும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் சரியான திசை வழியைக் காட்டும், எதையும் சமரசம் செய்துகொள்ளாத ஒரே இயக்கம் மே 17 இயக்கம் மட்டுமே. அதனாலேயே, 'ட்ரோஜான்' குதிரை குறித்து எச்சரிக்கை செய்த "Laocoon- லகூன்" எப்படி பலியிடப்பட்டாரோ அதுபோல் மே 17 இயக்கம் புறக்கணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது."

இந்த குமுறல்களின் பின்னணி பற்றி சற்று பார்ப்போம்.
 
இனப்படுகொலை நடத்திய இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்பட்டு, அதற்கு இனக்கொலையாளி இராஜபக்சே தலைவராக முடிசூட்டப்பட்டால், அது அங்கு நடத்தப்பட்ட இனக்கொலைக்கு ஒரு வகையில் சர்வதேச அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகிவிடும். நடந்த இனப்படுகொலைக்காக இலங்கை அரசுமீது ஒரு தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், அதை சாத்தியப்படுத்துவதற்கு இலங்கையைச் சர்வதேச சமூகம் புறக்கணிக்க வேண்டும். அதன் ஒரு கூறாக, இலங்கையைக் காமன்வெல்திலிருந்து நீக்க வேண்டும், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது, ஒருவேளை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் அதில் இந்தியா பங்கு கொள்ள கூடாது ஆகிய கோரிக்கைகள் பெரும்பான்மையான ஈழ ஆதரவு இயக்கங்கள், கட்சிகளால் முன் வைக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், ”இலங்கையைக் காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது; இலங்கையில் நடைபெற்றால் அதில் இந்தியா பங்கு கொள்ள கூடாது” உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் திலீபனின் நினைவு நாளான செப்டம்பர் 26 ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற உண்ணா நிலை என்ற போராட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். மேலும், தனது உண்ணா நிலைப் போராட்டத்திற்கு உதவியாக இருக்க 'இலங்கையில் காமன் வெல்த் எதிர்ப்பியக்கம்' என்ற பெயரிலொரு போராட்டக் குழுவையும் உருவாக்கினார். பல்வேறு காரணங்களால் தோழரின் போராட்டம் அக்டோபர் 1 அன்று தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு கோரிக்கை அடிப்படையில் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோருவது என்பது தோழர் தியாகுவின் செயலுத்தி. பெரும்பான்மையான இயக்கங்கள்/கட்சிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவு என்ற அடிப்படையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. போராட்டம் அதன் போக்கில் மெல்ல விரிவடைந்து சென்றது. ஆனால், நாட்கள் கடந்து செல்லச் செல்ல‌, தோழரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து இயக்கங்கள்/கட்சிகள், உண்ணா நிலைப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தின.
 
தமிழக அளவில் போராட்டம் விரிவடைய வேண்டும் அல்லது இந்திய அரசிடம் இருந்து ஏதேனுமொரு பதில் வர வேண்டும் என்பதுதான் தனது உண்ணா நிலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர குறைந்த பட்ச தேவையாக தோழர் தியாகு முன்வைத்தவை. போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இந்திய அரசிடம் இருந்து பதிலும் வந்தது. உண்ணா நிலைப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. மேலும் மேதா பட்கரின் அமைப்பு இதை இந்தியாவெங்கும் எடுத்துச் செல்வதாகவும் தோழரிடம் வாக்களித்தார்கள். போராட்டம் முடிந்தபோது தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் தலைவர் தோழர் மணியரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், தி.மு.க.வைச் சேர்ந்த டி.கே.எஸ் இளங்கோவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் தோழர் ஜவஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் தோழர் தெஹலான் பாகவி உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். பிரதமரின் கடிதம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதப்பட்டிருந்ததும், முடிக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. தரப்பில் இருந்து ஒருவர் பங்கு பெற்றிருந்ததும் திறனாய்வுகளின் தொடக்கப்புள்ளியாக அமைந்துவிட்டன. எனினும் இலங்கையைத் தனிமைப்படுத்துவதுதான் இந்தப் போராட்டத்தின் நோக்கம். ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் இது ஒரு சிறுபகுதி தான். இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்க்கும் போராட்டமும் சரி, ஈழ விடுதலைக்கான தமிழகத்தின் போராட்டமும் சரி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தோடு முடிந்துவிடப் போவதில்லை.
 
தி.மு.க.-இந்தியா என்ற ட்ரோஜான் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தி ,தமிழ்த் தேசிய அரசியலைக் குழி தோண்டி புதைத்து விட்டார்கள் என்று இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றவர்களைப் பார்த்து அம்புகளை வீசி, அரசியல் ஆதாயம் தேட நினைப்பது ஈழப் போராட்டத்திற்கு எந்த வகையிலும் துணை செய்யாது. மேலும் இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையையும், இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையையும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாகக் கருதி, இதை ஒரு பரப்புரை பொருளாக கையிலெடுத்து, உணர்வாளர்களிடையே நிலவிக் கொண்டிருக்கும் தி.மு.க. எதிர்ப்புணர்வை ’இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில்’ பங்கேற்றிருக்கும் தோழர்கள் மீதும், தோழர் தியாகுவின் மீதும் திருப்பிவிடும் முயற்சியே ‘ட்ரோஜான் குதிரை’ கட்டுரை.
 
ஈழப்போரில் 1.5 லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்ய துணை நின்றது இந்தியா. அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. "இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன்" என்றார் மகிந்த இராஜபக்சே. இராஜபக்சேவுடன் கொழும்புவில் விருந்து, புத்தகயாவில் இரத்தின கம்பள வரவேற்ப்பு என இயல்பாக சிங்கள ஆளும் வர்க்கத்தோடு கூட்டணி சேர்ந்தது பாரதிய ஜனதா கட்சி.
 
"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று சொல்லி பின்பு "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று வாக்கு கேட்டு தேர்தலில் வெற்றி பெற்று, இப்போது ஈழத்திற்கு ஆதரவான சட்டமன்றத்தில் "வெற்றுத்" தீர்மானங்களை நிறைவேற்றி கொண்டிருப்பவர் தமிழக முதல் அமைச்சரும் அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா.
 
ஈழப்போரின் இறுதி நாட்களின் போது 3 மணி நேரம் மட்டும் உண்ணா விரதம் இருந்து போரை முடித்ததாக சொல்லி, "மழை விட்டாலும் தூவானம் விடவில்லை" என்றவர் இனப்படுகொலையின் கூட்டாளி தி.மு.க தலைவர், அன்றைய முதல் அமைச்சர் மு.கருணாநிதி. இதனாலேயே அதிகார நாற்காலியில் இருந்து மக்களால் தூக்கி எறியப்பட்டதால், இப்போது ஈழ ஆதரவு அரசியல் களத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் டெசோ வை நடத்தி வருகின்றார் அவர்.
 
இப்படி தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, மாநில கட்சிகளான தி.மு.க. அ.தி.மு.க ஆகிய அனைத்துமே ஆளும் வர்க்கத்தின் அங்கம்தான். இவர்களின் கூட்டணிகள் மாறலாம், கொள்கைகள் மாறாது. சில நேரங்களில் இவர்கள் எடுக்கும் ஈழ ஆதரவு நிலைப்பாடு கூட வாக்கு வங்கி அரசியல் நலன்களால் இயக்கப்படுவதே தவிர‌ கொள்கைகளால் அல்ல. இந்த உண்மைகளைத் தோழர் தியாகுவும் அறிவார். காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தில் பங்குபெற்றிருந்த பிற தோழர்களும் அறிவர்.
 
இந்த நான்காண்டுகளில், இனப்படுகொலையைத் தடுக்கமுடியாமல் போன கையறு நிலையில் இருந்து இன அழிப்புக்கான நீதிகேட்டு நடத்திய மக்கள் இயக்கங்களின் தொடர் போராட்டங்களாலும், மக்கள் எழுச்சியை ஏற்படுத்த தன்னுயிரை ஈந்த முத்துகுமார், செங்கொடி போன்ற ஈகியர்களாலும், இது வரை வெளிவந்துள்ள இனப்படுகொலை ஆதாரங்களாலும், அதன் விளைவாக எழுந்த மாணவர் எழுச்சியாலும் தமிழகத்தின் ஈழ ஆதரவுப் போராட்டம் வேறொரு தளத்திற்கு நகர்ந்துள்ளது.. இவை ஒருபுறம்.
 
2009 போரில் 1.5 லட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளான பின்னும்,தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இராணுவரீதியான பெருந்தோல்வி ஏற்பட்ட பின்னும் எந்த நம்பிக்கையில் நாம் தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களை நடத்துகிறோம்?
 
தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்காக, 1980களிலேயே தங்கள் உழைப்பையும், உடைமைகளையும் ஆயிரக்கணக்கான தோழர்கள் அர்ப்பணித்துள்ளார்கள். தோழர் கொளத்தூர் மணி, தோழர் கோவை இராமகிருஷ்ணன், தோழர் பொழிலன், ஐயா பழ.நெடுமாறன், போன்ற தலைவர்கள் பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர்; 2009 ஆம் ஆண்டு போர்க் காலத்தில் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்கள் தங்களைத் தீக்கிரையாக்கி தமிழ்ச் சமூகத்தை விழிப்படைய வைத்தனர்; பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராய் போராட்டக் களம் கண்டன. இப்படி நீதிக்கானப் போராட்டத்தில் எத்தகைய தியாகத்திற்கும் தயாராய் இருக்கும் சாதாரண மக்களின் பலத்தை நம்பித்தான் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
 
2008-09க்குப் பிறகு தோன்றிய நம் போன்ற இயக்கங்கள் எல்லாம் இந்த வரலாற்றின் தொடர்ச்சியே அன்றி ஏதோ வானத்தில் இருந்து குதித்த மாவீரர்கள் அல்ல. எந்தப் போராட்டமும் நம்மிலிருந்து தொடங்கவும் இல்லை; நம்மோடு முடிந்து போகப்போவதும் இல்லை என்ற பகத்சிங்கின் கூற்றை நாம் எப்பொழுதும் மனதில் கொள்ள‌ வேண்டும்.
 
இந்த வரலாற்றுத் தொடர்ச்சியை மறந்தோ அல்லது மறுத்தோ, தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை மீட்பராய் ஓர் இயக்கம் தன்னைக் காட்டிக் கொள்ளுமாயின் அது அரசியல் முதிர்ச்சியின்மையையே வெளிப்படுத்திக் கொள்கின்றது.

"ட்ரோஜான் குதிரையையும், அதில் இருந்து வெளிப்படும் நயவஞ்சக வீரர்களையும் எதிர்த்து களமாட அனைத்து ‘ட்ராய்’ நகர மக்களையும் அழைக்கிறோம்" .....மக்களை ஆட்டு மந்தைகளாக கருதுவதும், மக்களை முட்டாளாக சித்தரிப்பதுமான ’அதிமேதாவித்தன’ அரசியல் தான் இவ்வகையான அழைப்புகளுக்கான அடிப்படையாக இருக்கின்றன.
 
’மக்களைப் படியுங்கள்’ என்பதுதான் உலகப் புரட்சியாளர்கள் சொல்வது. ’ஈழத்து மக்கள் வடக்கு மாகாணத் தேர்தலில் என்ன முடிவெடுக்க வேண்டும்?’ என்று தமிழகத்திலிருந்து கொண்டு அரசியல் ஆணை பிறப்பிப்பது மக்களின் எஜமானர்களாக தம்மை கருதிக் கொள்வதன் வெளிப்பாடன்றி வேறென்ன? ஈழ மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நோக்கினார்கள் என்ற அறியாமையும், உலகின் புரட்சிகரப் போராட்டங்களில் ஏற்படும் பின்னடைவுகளிலிருந்து மக்கள் மீண்டெழும் பாதையில் இருக்கும் நெளிவு சுளிவுகளையும், ஏற்ற இறக்கங்களையும் அறிந்து கொள்ள முடியாத தத்துவார்த்த பின்புலமின்மையும் கூட இந்த அதிமேதாவித்தனத்திற்கு இட்டுச் செல்கின்றது.
 
நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட அமைப்புகள் இந்த அதிமேதாவித்தனத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் அதிக கவனம் தேவைப்படுகின்றது என்பதோடு மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வதிலும் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளும் போது தான், தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி, முதலாளித்துவ நகர்ப்புற வாழ்க்கைமுறை அதன் இயல்பில் போட்டி மனப்பான்மை, அவசர குடுக்கைத்தனம், பரபரப்பு ஓட்டம், எப்போதும் ஒருவித பதற்றம் உள்ளிட்டவற்றை அன்றாட வாழ்க்கையில் புகுத்துகின்றது. அரசியலில் இந்த அவசரக் குடுக்கைத்தனம் என்பது கடந்த காலத்தை மறுத்து, செறிவான வரலாற்றுப் படிப்பினைகளைப் புறந்தள்ளி, ‘திடீர்’ என்று எல்லாவற்றையும் கைப்பற்றிவிடலாம் என்று நினைக்க வைக்கும். அது இயலாமல் போகும் பொழுது தம்மைச் சுற்றியுள்ளவர்களை துரோகிகளாகவும், எதிரிகளாகவும் சித்தரித்து ஆறுதல் அடைவதற்கு இட்டுச் செல்கின்றது. மாறாக, கடந்த காலத்தைப் புரிந்து கொண்டு நிகழ்காலத்தில் ஊன்றி நின்று, எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் அரசியல் முதிர்ச்சி, பொறுப்புணர்வு, மக்கள் மீதான பற்று போன்றவற்றை உள்ளடக்கிய அணுகுமுறையே அரசியல் இயக்கங்களுக்குத் தேவை.
 
எந்த ஒரு இயக்கமும் தங்கள் இயக்கத்தின் பலத்திலிருந்து அல்லது மற்ற தோழமை சக்திகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு போராட்டங்களை அறிவிக்கின்றது. ஆனால், இந்த அதிமேதாவித்தன அரசியல், தங்களைத் தவிர யாரையும் ஆட்டு மந்தைகளாக நினைக்கும் போக்கு, தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை மீட்பராக தங்களை நினைத்துக்கொண்டு, தங்கள் அமைப்பு நடத்தும் போராட்டங்களுக்கு இயக்கங்களைக் கடந்து, கட்சிகளைக் கடந்து அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றது. மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி களைந்து சென்று விட வேண்டும், அவர்கள் எந்த விதத்திலும் அமைப்பாகி விடக்கூடாது என்பதை விரும்புகின்றது. இப்படியாக ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதில்தான் போய் முடிகின்றது.

அரசியல் கோரிக்கைகளில் குறைந்தபட்சம், அதிகபட்சம் எனத் தீர்மானிப்பது, அதற்கான போராட்ட வடிவங்களை முன்வைப்பது, அதில் முன்னேறுவது, தற்காலிகமாக பின்வாங்குவது என்பதெல்லாம் அரசியல் இயக்கத்தின் அனுபவம் வாய்ந்த ஒரு தொடர் நடவடிக்கை. அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வது தான் நாம் நேர்மையாக அரசியலைக் கற்றுக் கொள்ள உதவும்.
 
இறுதியாக, எதிரியைத் தனிமைப்படுத்தி நட்பு சக்திகளை அணி திரட்டிக் கொள்வதே அரசியல் நடைமுறை. ஆனால் இதற்கு நேரெதிராக நட்பு சக்திகளை துரோகிகளாகக் காட்டி எதிரியோடு அவர்களை அணி சேர்த்துக் காட்டி, அதன் மூலம் தன்னை தனியாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை முறை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை செய்யப் போகின்றதா? அல்லது எதிரிக்கு துணை செய்யப் போகின்றதா? என்று சிந்திக்கக் கோருகின்றோம். ஈழ ஆதரவு சக்திகளை பிளவுபடுத்தி அதில் குளிர்காய்வதற்கான நகர்வாக மே 17 இயக்கத்தின் ’ட்ரோஜான்’ கட்டுரை அமைந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. கோரிக்கை நலன், அரசியல் நலன், மக்களின் நலன் என்பதே நம்மை இயக்குவதாக இருக்க வேண்டுமே அன்றி குறுகிய நலன்கள், காழ்ப்புணர்ச்சி, அடையாளச் சிக்கல் முதலியவை அல்ல.
 
மக்கள் மட்டும் தான் வரலாற்றைப் படைப்பதில் உந்து சக்தியாக இருக்கின்றனர் - மாவோ
 
- பரிமளா, செயற்குழு உறுப்பினர், சேவ் தமிழ்ஸ் இயக்கம்

Pin It