டில்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் டில்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. குற்றச் செயலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை வரவேற்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்ப்பரிக்கிறது.

மாணவியை பாலியல் வல்லுறவும், படுகொலையும் செய்த அந்த நான்கு இளைஞர்களும் குற்றவாளிகள் என்பதிலோ, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்பாவி மாணவியை கொடூரமாகக் கொன்ற அந்த மிருகங்கள் அதற்கு உரிய விளைவைச் சுமந்தே தீர வேண்டும். ஆனால், அந்த இளைஞர்கள் மட்டும் தான் இங்கே குற்றவாளிகளா என்பதே நம் கேள்வி.

திரையரங்குக்குச் சென்றால் அங்கே விரியும் வெண்திரையில் நடிகைகள் கவர்ச்சியுடன் காட்சியளிக்கிறனர். வீட்டில் தொலைக்காட்சியைத் திறந்தால் விளம்பர மாடல்களாக அரைகுறை ஆடையுடன் இளம்பெண்கள் அணிவகுக்கின்றனர். கிரிக்கெட்டை ரசிக்க விளையாட்டுத் திடலுக்குப் போனால் அங்கேயும் பெண்கள் ஆபாசமாக ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

நட்சத்திர விடுதிகளில் நடனமாடுபவர்கள் பெண்கள், பார்களில் மது ஊற்றிக் கொடுப்பவர்கள் பெண்கள் என எங்கே சுற்றி எங்கே வந்தாலும் பெண்களை வெறும் போகப் பொருளாகவும், நுகர்வுப் பண்டமாகவும் மட்டுமே கையாளும் போக்கைப் பார்க்க முடிகிறது.

திரையரங்கு, விளையாட்டுத் திடல், நட்சத்திர விடுதிகள், மதுக் கூடங்கள் என இளைஞர்கள் மொய்க்கும் இடங்கள் அனைத்திலும் பெண்கள் சதைப் பிண்டமாக நிறுத்தப் படுகின்றனர். 'பெண்கள் என்றாலே அவர்கள் ஆண்களின் பாலுணர்வுக்கான இரைகள்' என்ற சிந்தனை இங்கு திட்டமிட்டே ஊட்டப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, டாஸ்மாக் கடைகளை அரசே திறந்து வைத்து இளைஞர்களின் மதியை மயக்குகிறது.

டில்லி மாணவியை சூறையாடிய நான்கு இளைஞர்களும் மது குடித்திருந்தனர் என்பதும், 'அந்த ஒரு கணத்தில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்களுக்கே தெரியவில்லை' என்று அந்த இளைஞர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆக, குற்றச் செயல்களை நோக்கி இளைஞர்களைத் தூண்டிவிடும் படியான சூழலை மாற்றியமைக்காமல், வெறுமனே குற்றவாளிகளை தூக்கில் தொங்க விடுவதால் மட்டுமே இங்கு எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.

குற்றம் புரிந்த இளைஞர்களுக்கு மரண தண்டனை என்றால், அவர்களை குற்றம் செய்யத் தூண்டிய ஊடகங்களுக்கும், அரசுகளுக்கும் என்ன தண்டனை?

- ஆளூர் ஷாநவாஸ்

Pin It