தோழர் பெ.ம-வின் “முதலாளிய சனநாயகமும் கம்யூனிஸ்ட்களின் சர்வாதிகாரமும்” என்ற கட்டுரை கம்யூனிசத்தின் மீது எதிர்ப்புணர்வை கட்டியமைக்கும் நோக்கில் உள்ளது. தலைப்பு மட்டுமல்ல, கட்டுரையின் உள்ளேயும் கூட தோழர்-லெனின் தேசிய சிக்கலை சரியாக கையாண்டார் என்பதும்; தோழர்கள்- ஸ்டாலின், மாவோ ஆகியோர் தேசிய உரிமைகளுக்கு எதிராக இருந்தார்கள் என்பதும் கம்யூனிசத்தை இழிவுப்படுத்தும் நோக்கிலானதாகும்.
 
  தேசிய இனச் சிக்கலுக்கு கம்யூனிசம் தீர்வா? முதலாளித்துவம் தீர்வா? என்பதாகவோ தோழர் - பெ.ம. விவாதித்திருத்தால் நேர்மையாக இருக்கும். மாறாக கம்யூனிஸ்டுகளான லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய மூவரில் லெனின் சரியாக இருந்தார், மற்றவர்கள் தவறாக இருந்தனர்; இப்படி இருக்கும் போது கம்யூனிஸ்டு என கூறுகிறவர்களை எல்லாம் நம்பி விட முடியுமா? எனப் பேசுவது தந்திரமானதும் வாசகர்களை குழப்புவதேயாகும். ஒரு இயக்கத்துக்கு தலைமை தாங்கி வழி நடத்தும் தோழர்-பெ.ம. இப்படி குழப்புகிற அணுகுமுறையை கையாண்டிருக்க வேண்டாம்.

கம்யூனிசத்தின் மீது அவதூறு பரப்பும் அவசரத்தில் மனித குலத்தின் பரமவிரோதிகளும் பெரும் கொடுமைக்காரர்களும் சொல்லோண்ணா துயரங்களை தமிழினம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் வழங்கியவர்களுமான முதலாளித்துவவாதிகளை ஜனநாயகவாதிகள் என்று வேறு வேடிக்கையான உதாரணங்கள் கூறி சான்றிதழ் அளிக்கிறார். முதலாளித்துவவாதிகள் எப்படி தேசிய இனங்கள் மீது அன்பு மழை பொழிந்தார்கள் என்று பார்க்கலாம்.

தோழர்- பெ.ம-வின் மனதை குளிர வைக்கும் முதலாளித்துவ கனடாவும், பிரிட்டனும்

 “... வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளான கனடாவும், பிரிட்டனும் தேசிய இன விடுதலைக் கோரிக்கைக்கு சனநாயக வழியில் தீர்வு காண வாய்ப்பளித்துள்ளன. கனடாவில் கியுபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மக்கள் வாழ்கிறார்கள். எஞ்சிய கனடாவின் பெரும்பரப்பில் ஆங்கிலேயர்கள் வாழ்கிறார்கள். கியுபெக் மக்கள் விடுதலை கோரிப் போராடினார்கள். பத்தாண்டுகளுக்கு முன் கனடா அரசு கியுபெக் மக்களிடம் தனிநாடு குறித்த கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. ஒரு விழுக்காடு வாக்குகள் குறைவாகப் பெற்று கியுபெக் விடுதலை கோரிக்கை தோற்றுப் போனது” என தோழர்- பெ.ம சிலாகிக்கிறார்.
 
எழுந்து நிற்கும் கனடா முதலாளித்துவத்தின் கால்களின் கீழ் குவிந்து கிடக்கும் பிணங்கள் யாருடையவை?

 கனடாவின் இரண்டாவது பெரிய மாநிலம் கியுபெக். 80 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. பெரும்பாண்மையோர் இன்றைக்கு பிரெஞ்சு மொழிபேசும் மக்களே ஆவர். ஆனால் இங்கு சிறுபான்மையோராக, அபினகி, அல்கோன்குயின், அட்டிகாமக், க்ரீ, கிழக்கு க்ரீ, ஹீரோன், இனுயுட், மலிசீட், மிக்மேர், மஹாக், மாண்டேக்னயாஸ், நசாபீ, ஹோஜீக்வே என பல செவ்விந்தய பழங்குடி இனங்கள் உள்ளனவே. யார் இவர்கள்? இவர்கள்தான் இம் மண்ணின் பூர்வகுடி மக்கள். மண்ணின் மைந்தர்கள்.

 இன்று கனடா என்றும், அமெரிக்கா என்றும் அறியப்படுகிற அந்த பரந்த நிலப்பரப்பு பல நூறு செவ்விந்தியப் பழங்குடி இனங்களுக்கு சொந்தமானது. அந்த பழங்குடி இனங்களை வேட்டையாடி ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்தது யார் தெரியுமா? தோழர் பெ.ம. பெருமையோடு கொண்டாடுகிற இதே முதலாளித்துவம்தான். கி.பி.1500களில் ஸ்பானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என வெறி பிடித்த முதலாளித்துவத்தின் நாடு பிடிக்கும் வேட்டையில்தான் இம்மண்ணின் பூர்வகுடிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இப்பழங்குடி இனங்களின் கணக்கில்லா பிணங்களின் மேல்தான் அமெரிக்கா, கனடா எனும் முதலாளித்துவம் எழுந்து நிற்கிறது. கியுபெக்கும் அப்படித்தான்.

 இன்றைக்கு கியுபெக்கில் பிரெஞ்சுக்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது அங்கு ஆங்கிலேயரின் ஆதிக்கம் நிலவுவதை நாம் சரியென்று சொல்லவில்லை. அவ்வாதிக்கத்திற்கு எதிராக ப்ரெஞ்சு மக்கள் விடுதலை கோருவதை தவறெனப் பேசவில்லை.

 ஆனால் இப்போதும் அங்கு பழங்குடி இனங்கள் இருக்கின்றன. மொத்த மக்கள் தொகை 80 லட்சத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான க்ரீ பழங்குடி இனத்தவர் உள்ளனர். வேறு பபழங்குடி இனங்களும் உள்ளன. இவர்களின் சுயநிர்ணய உரிமை என்ன? இது குறித்து கியுபெக் ப்ரெஞ்சுக்காரர்களின் கொள்கை என்ன? பிரஞ்சுக்கும் ஆங்கிலத்துக்கும் சமமான உரிமை இந்த மண்ணின் மைந்தர்களுக்கு அளிக்கப்படுள்ளதா? தோழர் பெ.ம-வின் கொள்கை என்ன?

 செவ்விந்தியப் பழங்குடி இனங்களின் மீதான இன அழிப்புப் போர் இன்னமும் முடியவில்லை. அவர்கள் தங்களது வாழ்வாதாரப் பகுதிகளில் இருந்து விரட்டி அடிக்கப்படுவது தொடர்கிறது. செவ்விந்தியர்கள் மட்டுமே வாழ்வதற்கான ரிசர்வ் பகுதிகள் இருப்பது உண்மைதான். ஆனால் இங்கு வெள்ளையர்கள் மற்றும் ப்ரெஞ்சுக்காரர்களின் ரிசார்ட்டுகளும், உல்லாச விடுதிகளும் இடைவிடாது முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. நமது ஊரில் இதன் பெயர் பினாமி. செவ்விந்தியர்கள் பிழைப்பு தேடி பெருநகரங்களில் குவிவது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. குழந்தைகள் இறப்பு வீதமும் பாலியல் தொழிலும் வெள்ளைக்காரர்களைவிட பலமடங்கு அதிகம்.

 செவ்விந்திய குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பலவந்தமாக பிரித்துக் கொண்டு போய் ஐரோப்பிய மயமாக்கும் கல்விமுறையை - ஆஸ்திரேலியா போலவே - கனடா அரசாங்கம் செய்தது. இப்போது பழங்குடி இனங்கள் மீளவே வாய்ப்பில்லா வகையில் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்பு அரசு கண்துடைப்பாக ஒரு மன்னிப்பு கேட்டுள்ளது. இன்னும் பழங்குடி மொழிகளுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை; அவை அழிந்து வருகின்றன. மக்கள் தங்கள் பண்பாட்டு வேர்களை இழந்து வருகின்றனர். இது ஓர் இன அழிப்பு என்று கூறப்படுகிறது.
.
 கனடாவில் செவ்விந்தியப் பழங்குடி இனக் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகம்; தற்கொலைகள் மற்றவர்களை விட 7 மடங்கு அதிகம்; பெண்கள் விபச்சாரத்துக்கு தள்ளப்படுவது பெருகி வருகிறது; இரண்டு படுக்கை கொண்ட வீட்டில் 16 பேர் வசிக்கிறார்கள்; மற்றவர்களை விட அரசு அடக்குமுறை என்பது செவ்விந்தியர்கள் மீது 9% அதிகமாக உள்ளது. செவ்விந்தியர்களாக வாழ்வது கொடுமையானது என மனித உரிமை ஆர்வலர்கள் பதிவு செய்கின்றனர்.

 இதே நிலைமைதான் அமெரிக்காவிலும். இங்கு வர்ஜீனியா மாநிலத்தில் 1924 முதல் 1967 வரை ஒரு சட்டமிருந்தது. வெள்ளையர்கள் யாரும் மற்றவர்களைத் திருமணம் செய்யக் கூடாதென்பதுதான் அச்சட்டம். இதனால் உருவான இனத் தூய்மை ஒடுக்குமுறையில் அங்கிருந்த செவ்விந்தியப் பழங்குடி இனங்கள் அச்சத்தோடு வெளியேறினர். பாட்டாளி மக்கள் கட்சி வெள்ளை நிற வெறியர்களிடம் பிச்சை கேட்க வேண்டும்.!

 அமெரிக்கா செவ்விந்திய மக்களை வேட்டையாடியது குறித்து தோழர் இரா.முருகவேள் “கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும்” என்ற குறு நூலில் பின்வருமாறு கூறுகிறார். “சமூகத்தின் பொதுச் சொத்தாக கருதப்பட்ட காடுகளை தனியுடைமையாக அல்லது அரசுடைமையாக மாற்றியமைக்கும் முயற்சிகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அய்ரோப்பாவில் தோன்றினாலும் மனிதர்களற்ற காடு என்ற கோட்பாடு முழு வடிவம் பெற்றது அமெரிக்க அய்க்கிய நாடுகளில்தான். 1851 ஆம் ஆண்டு மார்ச் 27-ல் அமெரிக்க அய்க்கிய நாடுகளைச் சேர்ந்த மேஜர்.ஜேம்ஸ் சேவேஜ் என்பவர் தனது படையினருடன் அவானீசே என்ற செவ்விந்தியப் பழங்குடி இனத்தின் தலைவரான டெனயாவையும் அவரது இனத்தையும் அழிக்க இப்போது யோசெமைட் பள்ளத்தாக்கு எனப்படும் பகுதியின் மீது படையெடுத்தார். இது செவ்விந்தியர்களை ஒழித்துக் கட்டுவதற்காக கலிபோர்னியா மாநிலம் தொடுத்த போரின் ஒரு பகுதியாகும். பல ஆதிகுடிகள் கொல்லப்பட்டன. மற்றவர்கள் சரணடைந்தனர். அவர்கள் காட்டின் ஒரு புறம் வாழ அனுமதிக்கப்பட்டாலும் அவர்களது உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டன. வெள்ளை விஞ்ஞானிகள் யோசெமைட் பள்ளத்தாக்கு மனித சஞ்சரமற்றது என்றும், பழங்குடிகள் அங்கு நிலையாக வாழவில்லை என்றும், அதன் வழியே வந்து போய்க் கொண்டிருந்தனர் அவ்வளவுதான் என்றும் எழுதினர்.

 ஏராளமான பழங்குடிகள் அங்கே வாழ்ந்த வனத்தை இந்தக் காடு கன்னி நிலம், மனிதன் காலடி படவே இல்லை என்று வெள்ளையர்களின் புகைப்பட நிபுணர்களும், கைத்தடிகளும் கூசாமல் புளுகினர். ஓட்டல் உரிமையாளர்களும், சாலை அமைப்பவர்களும், உயிரியல் தொடர்பான வணிகர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து குவிந்தனர். யோசெமைட் அவானீசே ஹோட்டல் அதன் அடையாளமாயிற்று. அற்பமான பழங்குடிகளின் குடிசைகள் இருந்த இடத்தில் நான்கு மாடி ஓட்டல்கள் பிரமாண்டமாக எழுந்தது சுற்றுச் சூழலைக் காக்க.

 செவ்விந்தயர்கள் காட்டின் நிசப்தத்தைக் குலைக்கின்றனர். அசிங்கமாகவும், அழுக்காகவும் உள்ள அவர்களைப் பார்க்க அருவருப்பாக உள்ளதென ஆங்கிலேயர் கூறினர். காட்டைப் பாதுகாக்க அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அடுத்த 80 ஆண்டுகளில் காட்டிலிருந்த பழங்குடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டனர். 1969-ல் அவர்களது இறுதி குடியிருப்பும் தீ அணைப்புப் பயிற்சியின் பேரில் தீ வைத்து கொளுத்தப்பட்டு காடு தூய்மைப்படுத்தப்பட்டது”.

 தோழர் பெ.ம. மெச்சும் முதலாளித்துவத்தின் சனநாயக வழியிலான தீர்வு இதுதான் போலும். அல்லது பழங்குடியினங்கள் மணியரசனின் அகராதியில் தேசிய இனங்கள் பட்டியலில் வரவில்லை போலும்.

 அமெரிக்காவில் செரோகி என்ற செவ்விந்தியப் பழங்குடியினம் மிகப் பெரியதாகும். அதன் பெரும்பான்மை மக்கள் தங்களது மொழியை இழந்து விட்டார்கள். அவர்கள் தங்களை ஆங்கிலம் விழுங்கி விட்டதாக கருதுகிறார்கள்.

 இப்படி மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியப் பழங்குடி இனங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த அமெரிக்கா மற்றும் கனடா முதலாளித்துவம்தான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை சனநாயக வழியில் தீர்க்கிறது! அமெரிக்காவின் 37 லட்சம் பேர் வாழும் ப்யூட்டோரிகோவில் 99% பேர் ஸ்பானியர்கள். அங்கு ஸ்பானிஷ் ஆட்சி மொழி. ஆனால் 30% ஸ்பானியர்கள் வாழும் கலிபோர்னியாவில் அவர்களது உரிமை பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு 1849-ல் நீதி, நிர்வாகம் அனைத்திலும் ஆங்கிலத்தோடு ஸ்பானிஷ் இருக்க வேண்டும் என சட்டமிருந்தது. 1870-ல் ஆங்கிலம் மட்டுமே என திருத்தப்பட்டுவிட்டது. ஸ்பானிஷூக்கு இந்த நிலை. ஆப்பிரிக்க மக்களின் பூர்வ மொழிகளை அழிக்க அரசு எப்படி சட்டப்பூர்வமாகவே இயங்கியது, அமெரிக்க பழங்குடிகள் எப்படி தங்கள் மொழிகளோடு சேர்ந்து நாசமாக்கப்பட்டனர் என்பது குறித்து உள்ளத்தை உருக்கும் இலக்கியங்கள் ஏராளம் உள்ளன. அலெஸ் ஹேலியின் ரூட்ஸ், குய்ன் போன்றவை முக்கியமானவை. தோழர்-பெ.ம. இதற்கான முதலாளித்துவ காரணத்தை கண்டறிய வேண்டும்.

மணியரசன் கூறும் கியுபெக்கையே எடுத்துக் கொள்ளலாம். இதே போல கியுபெக்கில் நடத்தும் பொது வாக்கெடுப்பு மோசடி பரவலாகப் பேசப்பட்டது. கியுபெக் தனிநாடாக வேண்டுமா என்பதை பிரெஞ்சுக்காரர்கள் மட்டும் தீர்மானித்திருந்தால் எப்போதோ கியுபெக் விடுதலை அடைந்திருக்கும். ஆனால் அதை அங்கு வாழும் ஆங்கிலேயரும் தீர்மானிப்பதாக உள்ளது. 5லிருந்து 10 ஆண்டுகளுக்குள் குடியேறிய பெரும்பான்மை வெள்ளையர்கள் ப்ரெஞ்ச் கியுபெக் வேண்டுமா? வேண்டாமா? என்ற பொதுவாக்கெடுப்பில் வாக்களித்தனர். வெறும் ஒரு சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் சுயநிர்ணயக் கோரிக்கை தோல்வியடைந்தது. பொது வாக்கெடுப்பின் பேரில் நடைபெற்ற இம்மோசடிக்கு எதிராக பிரஞ்சு மக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதில் 497 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 62 பேர் தவிர அனைவரும் ஆதாரமில்லை என விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்த ஒரு சதவீத வாக்குகளால் சுயநிர்ணய உரிமை குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடந்ததா இல்லையா என்பதா பிரச்சினை? மக்கள் தன்னாட்சி அடைந்தார்களா இல்லையா என்பதுதானே பிரச்சினை? தாங்கள் இந்தியர்கள் என்ற உணர்வு கடுகளவும் இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுக் கொண்டுதான் உள்ளது. இந்தத் தேர்தல்களை பெ.ம ஒப்புக் கொள்கிறாரா? வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் தேர்தல்களில் அயோக்கியத்தனம் நடைபெறாது என்று பெ.ம. அபாண்டமாகக் கூறுவாரானால் ஜார்ஜ் புஷ் வெற்றிபெற்ற கதையை இணையத்தில் தேடட்டும்.

 இதுதான் முதலாளித்துவ சனநாயகம். இந்த அளவு சனநாயகம் கூட சும்மா கிடைக்கவில்லை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு இணையாக ப்ரெஞ்சும் ஒரு ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கிடையே மேற்கொள்ளும் சமரச நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. ஆதலால் கனடா ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கியுபெக்கில் ப்ரெஞ்சை அனுசரிக்கிறது. ஆனால் ஆங்கிலேய கனடாவும், ப்ரென்ஞ்சு கியுபெக்கும் ஒரு போதும் செவ்விந்தயர்களை அனுசரிப்பதுமில்லை; அவர்களை வாழ அனுமதிப்பதுமில்லை. இந்த உரிமைகளை ஆசியர்களோ ஆப்பிரிக்கர்களோ கேட்டிருக்கட்டும், தெரியும் கதை.

திபெத் குறித்த தவறான வரலாற்றை முன்வைக்கும் தோழர் பெ.ம.

 “... 1949-ல் சீனப் புரட்சி வெற்றி பெற்றதும், 1950-ல் முதல் வேலையாக சீனப் புரட்சிப்படை சிறுபான்மை தேசிய நாடான திபெத்தை ஆக்கிரமித்து கைப்பற்றியது. தொடர்ந்து திபெத்திய மக்கள் தங்கள் விடுதலையைக் கோரி வந்தனர். அதனால் அவர்களின் மத ஆட்சித் தலைவரான தலாய்லாமாவை சிறை பிடிக்க சீனக் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பாடு செய்தது. இதை அறிந்த தலாய்லாமா 1959 மார்ச் 30ஆம் நாள் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்” என தோழர் பெ.ம. வருந்துகிறார்.

 ஒரு சுதந்திரமான சுய அதிகார திபெத்தில் தலாய்லாமா நல்லாட்சி செய்ததாகவும், அங்கு திபெத்தியர்கள் மகிழ்வோடு வாழ்ந்ததாகவும், அதை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கெடுத்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது தோழர் பெ.ம. வின் வரிகள். ஆனால் உண்மையான திபெத் எதுவென்றால், எப்போதுமே திபெத் சுயாட்சி பகுதியாக இருக்கவில்லை.

Dalai_mao_430

 திபெத்துக்கும் சீனாவுக்குமான சிக்கல் புரட்சிக்கு முன்பே இருந்தது. இதனை பிரிட்டன் தீர்ப்பதாகக் கூறி சிம்லா பேச்சுவார்த்தையை நடத்தியது. 1913 முதல் 1914 வரை நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் திபெத்தை உள்பகுதி, வெளிப்பகுதி என இரண்டாகப் பிரிக்கவும்; வெளிப்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் சுயாட்சி பகுதியாக இருக்க வேண்டும் என்றும்; உள்பகுதி தலாய்லாமாவின் பெயரளவிலான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்றும் நாட்டாமை செய்யப்பட்டது. இதில் உட்பகுதி, வெளிப்பகுதி எல்லைகள் வகுப்பதில் தகராறு வந்தது. பிரிட்டன் குரங்கு அப்பம் பகிர்ந்த கதையாக தான் அத்துமீறி தலையிட்டு 9000 ச.கி.மீ நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்தது. அதன் ஒருபகுதிதான் இன்றைய இந்தியாவில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம். இதைச் செய்தது முதலாளித்துவ ஜனநாயகத்தின் தொட்டில்.

 திபெத்தை உட்பகுதி, வெளிப்பகுதி எனப் பங்கிட்டபோதும்; அங்கு பஞ்சாயத்து செய்வதன் பேரில் பிரிட்டன் 9000 ச.கி.மீ பரப்பளவை கொள்ளையிட்ட போதும் தலாய்லாமா எதுவும் செய்யவில்லை. காரணம் தோழர் பெ.ம. கொண்டாடுகிற திபெத் அப்படி இருந்தது.

 1950-ல் புரட்சிப் படை திபெத்தில் நுழையும் வரை அங்கு அடிமைமுறை சட்டப்பூர்வமாக இருந்தது. மக்கள் நிலங்களோடு சேர்த்து விற்கவும், வாங்கவும் பட்டனர். கொத்தடிமை முறை இயல்பானதாக இருந்தது. சுண்டிப் பள்ளத்தாக்கில் அங்கீகரிக்கப்பட்ட அடிமை வணிகம் இருந்தது குறித்து சார்லஸ் பெல் போன்ற பிரிட்டிஷ் பயணிகள் பதிவு செய்துள்ளனர். 80 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கொத்தடிமைகளாகவே இருந்தனர். பிறந்த குழந்தை முதற்கொண்டு அடிமையாகவே பிறந்தது. இந்தியாவில் 1830ல் அடிமை முறை சட்டப் பூர்வமாக ஒழிக்கப்பட்டது என்பதை நினைவு கூறுங்கள்.

 அடிமைகள் அல்லது குஜீம்ஸ் எனப்படும் மக்களை மதபீடங்களும், பிரபு வம்சத்தினரும், நிலவுடைமையாளர்களும் கூட்டம் கூட்டமாக வைத்திருந்தனர். அவர்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விடுவிக்கவும் படலாம்; இல்லாமலும் போகலாம்.

 ட்ரால்ஃபா எனப்படும் கிராம அடிமைகள், மிபோக் எனப்படும் குத்தகை அடிமைகள் போன்ற சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல அடிமை முறைகள் இருந்தன. சிறு குழந்தைகள் உள்ளிட்ட மக்கள், இந்த நிலப்பிரபுக்கள் மற்றும் புத்த பிட்சுக்கள் கரங்களில் கொடும் துன்பங்களை அனுபவித்தனர்; வாட்டி வதைக்கப்பட்டனர். அவ்ர்கள் மனிதர்களாகவே நடத்தப்படவில்லை. 90 சதவீததிற்கு மேற்பட்ட மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதற்கு அவர்களுக்கு வழியுமில்லை. பெ.ம.வுக்கு மிகவும் பிடித்த மொழி, பண்பாடு போன்றவையெல்லாம் இந்த நிலையில்தான் இருந்தன.

 இந்த நிலைமைகள்தான் சீனப் புரட்சிப் படையை திபெத்துக்குள் வரவேற்றன. புரட்சிப்படை 1951-லேயே திபெத்துக்குள் வந்துவிட்டது. ஆனால் அரசுத் தலைவராக தலாய்லாமாவே தொடர்ந்தார். அவரைக் கைது செய்ய முயற்சிக்கவில்லை. காரணம் அவரை திபெத்தின் பிரதிநிதியாக அங்கீகரித்தது. அப்படி அங்கீகரித்ததால்தான் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் திபெத் மக்களின் கோரிக்கையான நிலச் சீர்திருத்தத்தையே மக்கள் சீனம் வலியுறுத்தியது. புத்தமத நிறுவனங்கள், நிலப்பிரபுக்களின் கரங்களில் இருக்கும் நிலங்கள் உழைக்கும் மக்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

 ஆனால் எந்த சீர்திருத்தமானாலும் பிரபுவம்சம் ஒப்புக் கொள்வதைத்தான் பேச முடியும் என தலாய்லாமா தனது வர்க்க நலனை வெளிப்படையாக அறிவித்தார். 1957-ல் இவ்வாறு அறிவித்த தலாய்லாமா நிரப்பிரபுக்களை தூண்டி விட்டு மக்களுக்கு எதிராகக் கலவரம் செய்தார். அடிமை முறை என்பது காலம் காலமாக தொடரும் பரம்பரை கடன்கள் என்று மாற்றுப் பெயர் சூட்டினார். கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க அரசு உதவும் என்றார். கடனே வாங்காத மக்களின் இல்லாத கடனை அடைக்க - விடுதலை பெற அரசு உதவுமாம். அதற்கான திட்டங்கள் தீட்டப்படும் என தலாய்லாமா அறிவித்தார். ஆனால் எந்த திட்டமும் தீட்டப்படவில்லை.

 மக்களின் கோபம் அதிகரித்து தனக்கு எதிராக திரும்புவதை உணர்ந்தே தலாய்லாமா திபெத்தில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறுவதை சீனா மற்றும் திபெத் மக்களின் புரட்சிப்படை அனுமதித்தது. உடனடியாக மதப்பீடங்களுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் சொந்தமான 90% நிலங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அடிமைகள் தங்களது அடிமைப் பத்திரங்களை தீயிட்டுக் கொளுத்தி தெருக்களில் ஆனந்த கூத்தாடினார்கள் என்பதை விக்கிபீடியாவே பதிவு செய்துள்ளது. 1959 ஜூலை 17-ஆன இந்த நாளைத்தான் அன்னாலூயிஸ்ட்ராங் அடிமை முறை ஒழிப்பு நாளென பெருமிதப் படுத்துகிறார்.

 மக்கள் சீனம் திபெத்தை தன்னாட்சிப் பகுதியாகவே அறிவித்தது. திபெத்தின் ஆரம்ப கல்வி நிலையங்களில் திபெத் மட்டுமே பயிற்சி மொழியாக இருந்தது. திபெத்தில் ஆட்சி மொழியாக திபெத் மொழியே இருந்தது. சீனா முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கான கல்லூரிகளில் திபெத்திய வாழ்க்கை முறை குறித்த ஆய்வுப் படிப்புகள் ஊக்குவிக்கப்பட்டன.

 திபெத்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், ஊக்குவிக்கவும் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும்; திபெத் பீட பூமி முழுவதும் திபெத்திய கலாச்சாரங்கள் வளர்த்தெடுக்கப்பட்டதையும் திபெத் துறை அறிஞரான எலியட்பெர்லின் உறுதிப்படுத்துகிறார்.

 ஆனால் சீனாவுக்கு வெளியிலுள்ள திபெத் பகுதிகளின் நிலை என்ன? பாகிஸ்தானில் பால்டிஸ்தான் என்ற பிரதேசத்தில் திபெத்தின் பகுதிகள் உள்ளன. இங்கு பஞ்சாபி மொழியின் ஆதிக்கத்தில் திபெத் இனம் நசுங்கி வருவதாக போராட்டங்கள் நடக்கின்றன. இந்தியாவில் லடாக் பகுதியில் பேசப்பட்டு வந்த மேற்கு திபெத் மொழியை ஆங்கிலமும், இந்தியும் காவு வாங்கி விட்டதாக திபெத்தியர்கள் வெடிக்கிறார்கள். லடாக்கின் தலைநகரான லே நகரில் திபெத் நாகரீகம், வாழ்க்கை முழுவதும் இந்தியாலும், ஆங்கிலத்தாலும் சூறையாடப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள். திபெத்தியர்களின் மண்ணான தெற்கு திபெத் தனது பெயரைக்கூட இழந்து அருணாச்சலப் பிரதேசமாக மாறிவிட்டது. இது சமஸ்கிருத மொழிப்பெயராகும். இங்கும் திபெத்தியர்களின் மொத்த வாழ்வும் இந்திய மயமாக்கலால் அழிகிறது. இந்தியாவின் ஆட்சி மொழிகளில் திபெத்திய மொழி இல்லை.

 இவை குறித்தெல்லாம் தலாய்லாமா பேசாமலிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தோழர் பெ.ம. பேசாததோடு மாவோ காலத்து சீனாவையும், திபெத்தையும் தவறாகப் பேசுவதுதான் புரியவில்லை. போகட்டும், நாம் இன்னொரு உண்மையையும் உரக்கச் சொல்வோம். தோழர் மாவோவால் திபெத்தில் ஒழிக்கப்பட்டது சாதாரண அடிமை முறையல்ல, அது மோசமான மூடநம்பிக்கைகளையும், அச்சுறுத்தல்களையும், தண்டனைகளையும் நடைமுறைப்படுத்திய கொடூரமான புத்த மத அடிப்படைவாத அடிமை முறையாகும். ஆதலால்தான் அதன் சட்ட திட்டங்களுக்கு திபெத் மக்கள் அஞ்சி நடுங்கியிருந்தனர். அவற்றை எதிர்ப்பதும், மீறுவதும் அழிவைத் தரும் என நம்ப வைக்கப்பட்டிருந்தனர்.

 உண்மையிலேயே தலாய்லாமா வெளியேறிய பிறகும் கூட, அவர்களது அடிமைப் பத்திரம் எரிக்கப்பட்ட பிறகும் கூட புத்தப் பிக்குகளை கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினர். ஆகையால்தான் மக்களின் பயத்தைப் போக்கி துணிவை ஏற்படுத்த செம்படை ஆதரவாளர்கள் பண்பாட்டுத் தளத்திலும் பணிபுரிந்தனர். கொடூரமான புத்தப் பிக்குகள் பொது இடத்தில் மக்கள் நீதிமன்றங்களில் வைத்து தண்டிக்கப்பட்டனர். சாதாரண மனிதனுக்கு அப்பாற்பட்ட எந்த சக்தியும் புத்த பிக்குகள் எவருக்கும் கிடையாதென நிரூபிக்க இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருந்தது.

 திபெத்தின் புத்த மதத்தின் கொடுமைகள் குறித்து தோழர் பெ.ம.-வுக்கு தெரியாமலா போயிற்று?

 நாம் இப்போது தோழர் மாவோ காலத்து சீனாவாக இன்றைய சீனா இருக்கிறது என்றோ, இப்போது திபெத்தில் தேசிய ஒடுக்குமுறை இல்லை என்றோ கூறவில்லை. தோழர் மாவோவின் மக்கள் சீனத்தின் மீதான அவதூறை ஆதாரத்தோடு மறுக்கிறோம்.

தனது பங்குக்கு தோழர் ஸ்டாலினை பழிக்கும் தோழர் பெ.ம-வும் தோழர் ஸ்டாலினின் முக்கியத்துவமும்

 சோவியத் இரசியா மீது அமெரிக்கா முதலாளித்துவ நாடுகள் அனைத்தின் துணையோடு பனிப்போர் நடத்தியது உலகுக்குத் தெரியும். தோழர் ஸ்டாலினை கொடுங்கோலராகவும், சோவியத் யூனியனை இரும்புத் திரையிட்ட கொலைக் களமாகவும் அமெரிக்கா சித்தரித்தது. அதனை உலகு தழுவிய அளவில் கம்யூனிஸ்டுகள் போதிய ஆதாரங்களுடன் முறியடித்துள்ளனர்.

 தோழர் பெ.ம-வின் கட்டுரையைப் பார்த்தால் அமெரிக்காவின் பணி இன்னும் முடியவில்லை போலிருக்கிறது.

 புரட்சிக்கு முந்தைய ஜார் ரசியா ஒரு சமூக ஏகாதிபத்தியமாகத்தான் இருந்தது. அது தனது ஆதிக்கத்தின் பிடியில் வைத்திருந்த எல்லா தேசிய இனங்களையும் நசுக்கி இரசிய மயமாக்கும் பணியை செய்தது. தத்தாரியர்கள் என்பது ஒரு இனம். அவர்கள் தங்களுக்கான தாய்மொழி கல்விக்கு ‘ஜாதிக்’ எனும் பள்ளிகளை நிறுவினர். இதை ஜார் மன்னன் தடை செய்தான். இவ்வகையில் ஜார் இரசியாவில் பிற தேசிய இனங்களுக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. தெற்கின் இசுலாமியச் சமூகங்களையும், ஆர்டிக் பகுதிகளின் பழங்குடி இனங்களையும் இரசிய மயமாக்கும் வேலையை ஜார் இரசியா செய்தது.

 ஜார் மட்டுமல்ல வளர்ச்சியடைந்த எல்லா முதலாளித்துவமும் பின்தங்கிய நிலையில் இருந்த பிற தேசிய இனங்களை நசுக்கி அழித்து வந்ததென்பதுதான் வரலாறு. உலகில் முதன்முதலாக முதலாளித்துவமாக வளர்ச்சியடைந்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகள் உலகெங்கும் முகிழ்த்துக் கொண்டிருந்த தேசிய இனங்களை வளர விடாமல் நசுக்கின. இயல்பான தேசிய வளர்ச்சிக்கு மாறாக பல்தேசிய அரசு சமூகங்களை உருவாக்கின. எந்த வகையிலும் சுயமான தேசிய இனங்கள் வளர்ந்து விடக் கூடாதென தேசிய இனங்களுக்குள் மதம், நிறம், சாதி வேறுபாடுகளைத் தூண்டி வளர்த்தன. இன்று வரை இது நீடிக்கிறது.

 stalin_400இந்தியத் துணைக் கண்ட அரசு சமூக உருவாக்கத்துக்கும், தமிழ்நாடு உட்பட அனைத்து தேசிய - பழங்குடி இனங்களின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டு நசுக்கப்படுதற்கும் கூட பிரிட்டன் முதலாளித்துவமே முதற்காரணம்.

 ஆக முதலாளித்துவ வளர்ச்சியானது உலகம் முழுவதும் வளர வேண்டிய தேசிய இனங்களின் வாழ்வுக்கு குழி பறிப்பதையும் சேர்த்து எதிர் கொண்டுதான் இரசியப் புரட்சி முன்னேற வேண்டியிருந்தது. ஆகவேதான் தேசிய இனச் சிக்கல் குறித்து கம்யூனிஸ்டுகள் அறிவியல் ரீதியாக என்ன வழிமுறையை மேற்கொள்வது என்ற பணி இரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன் வந்தது. முதலாளித்துவத்தின் அழிவுப் பாதைக்கு மாறாக ஆக்கப்பூர்வமான அறிவியல் பாதையை தேசிய இனங்களுக்கு வகுத்தளித்த பெருமை தோழர் ஸ்டாலினையே சாரும்.

 முதலாளித்துவம் சந்தைக்கான எல்லையை தேசிய வரையறையாகக் கொண்டது. அது சொந்த சந்தையை உறுதிப்படுத்திய பின் அகண்ட சந்தைக்காக அகண்ட தேசியத்தை (பல் தேசியத்தை) இலக்காகக் கொண்டது. ஆனால் கம்யூனிசம் தேசம் என்பது மக்களுக்குமானது என்பதை நிறுவியது. இதைத்தான் தோழர் ஸ்டாலின் ‘‘தேசம் என்பது 1.பொதுவான மொழி, 2.அந்தப் பொதுமொழி பேசும் மக்களின் சொந்த நிலப்பரப்பு, 3.அச்சொந்த நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த பொருளாதார வாழ்க்கை, 4.இவற்றின் மூலம் ஒரே மக்கள் சமூகம் என்ற பொதுவான மன இயல்பு ஆகியவற்றைக் கொண்ட வரலாற்று ரீதியான மக்கள் சமூகம் என்பதாகும்” என வரையறுத்தார்.

 தோழர் ஸ்டாலின் வரையறுத்த கம்யூனிச நிலைப்பாடுதான் தமிழ்நாடு, தமிழீழம் உட்பட உலகின் அனைத்து தேசியச் சிக்கலுக்கும் தீர்வாக உள்ளதே ஒழிய முதலாளித்துவ நிலைப்பாடல்ல. ஒரே மொழி பேசுவதாக இருந்தாலும் ஒருங்கிணைந்ததாக இல்லாமல் ஏற்றத்தாழ்வான பொருளாதார வாழ்க்கை அமைந்தால் தேசிய மன இயல்பை அடைய முடியாது என்பதை தெலுங்கானா வரைக்கும் நிறுவிக் கொண்டிருக்கிறது.

 இந்த உயர்ந்த கொள்கையின் அடிப்படையில்தான் சோவியத் இரசியா நடைபோட்டது. தோழர்கள் லெனின், ஸ்டாலின் காலத்தில் இரசிய விதிகள் இவ்வாறுதான் இருந்தன.

*  அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை

*   ரஷ்ய மொழி நீதி, நிர்வாகத்தில் தனியுரிமை இல்லை.

*  சோவியத் யூனியன் என்கிற பெயரில் இருந்து இரசியா என்ற பெயர் அடையாளம் நீக்கம்

*  மக்கள் மொழிகள் அனைத்துக்கும் எழுத்துருவாக்கம். இதனடிப்படையில் 120க்கும் மேற்பட்ட பழங்குடி மொழிகள் வளர்ச்சியடைந்தன. இவை ஜாரின் காலத்தில் அழியும் நிலையிலிருந்தன. மொழிகளாகவே கருதப்படவில்லை.

*  அனைவருக்கும் தாய்மொழிக் கல்வி. இதனடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் இரசியர்களுக்கு இணையாக மற்றவர்களும் ஆர்டிக் பிரதேச பழங்குடி மக்களும் மத்திய ஆசிய அஸ்லாமிய குடியரசுகளும் பெண்கள் உட்பட தங்கள் சொந்த மொழிகளில் கல்வி அறிவில் வளர்ச்சியடைந்தனர்.

*  தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் என சிறிய இனங்களுக்கு மட்டுமல்லாது ஆர்ட்டிக் பெருங்கடல் பழங்குடி இனங்களின் மொழிகளின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்பட்டது. இவற்றின் சொந்த இலக்கியங்கள் உருவாக்கப்பட்டதோடு அவை அனைத்தும் உலக மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது. உஸ்பெக், தஜிக், ஆர்மீனியன், அசார் போன்ற மொழிகளில் எழுதப்பட்ட குல்சார், ஜமீலா, மண்கட்டியை காற்று அடித்துப் போகாது என்பவை போன்ற இலக்கியங்களை சோவியத் அரசுதான் உலகமெங்கும் கொண்டு சென்று சேர்த்தது. இந்தத் தேசிய இனங்களின் சில பகுதிகள் ஈரான், துருக்கி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கின்றன. அங்கிருந்து இது போன்ற ஏதாவது இலக்கியங்கள் வந்ததை பெ.ம. கண்டதுண்டா?

*  எந்த தேசிய இனத்தையும் வலுக்கட்டாயமாக சோவியத் ஒன்றியத்தில் இணைத்ததில்லை.

*  புரட்சிக்குப் பின்பு பின்லாந்துடன் எஸ்டோனியா, லாட்வியா, வித்துவேனியா ஆகிய நாடுகள் கூட தனியாக செல்லும் போது தடுக்கப்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்நாடுகள் தங்களது மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தால் சோவியத் யூனியனில் இணைந்தன.

*  மங்கோலியா நாடு எப்போதும் சோவியத் யூனியனுடன் இணக்கமாக இருந்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் போரைத் தூண்டும்போது எப்போதும் மங்கோலியா சோவியத் யூனியனுடனே இணைந்து போரிட்டுள்ளது. இந்த நாட்டை என்றைக்குமே சோவியத் யூனியன் இணைத்துக் கொள்ள முயற்சித்ததே இல்லை.

*  இரண்டாம் உலகப் போரில் தோழர் ஸ்டாலினின் தலைமையிலான செம்படை பல நாடுகளை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவித்தது. ஹங்கேரி, ஆஸ்திரியா, யுக்கோஸ்லோவ்கியா, ருமேனியா, செக்கோஸ்லோவியா என பல நாடுகள் செம்படையால் விடுதலை அடைந்தன. அவை ஒரு போதும் சோவியத் யூனியனில் இணைய வலியுறுத்தப்படவில்லை.

 இதுதான் சோவியத் இரசியாவின் நிலைமை. தோழர் ஸ்டாலின் ஒரு போதும் மற்ற தேசிய இனங்களை இரசிய மயமாக்கும் வேலையைச் செய்யவில்லை. தோழர் ஸ்டாலின் காலமானது உலகின் சமாதான காலமாக இருக்கவில்லை; கடும் நெருக்கடி காலமாகவே இருந்தது. முதலாம் உலகப் போர் எனும் பேரழிவில் இருந்துதான் இரசியா புரட்சியின் மூலம் எழுச்சி பெற்றது. அது தனது பழைய காயங்களை ஆற்றும் முன்னே இரண்டாம் உலகப் போர் மூண்டெழுந்தது. இரசியா இதில் எப்போதும் ஆபத்தான நிலையிலேயே இருந்தது. உலகு தழுவிய முதலாளித்துவப் பயங்கரவாதிகளை எதிர் கொண்டு சோவியத் இரசியாவையும், புரட்சியையும், பல பின்தங்கிய நாடுகளின் எதிர் காலத்தையும் காக்கிற கடமை தோழர் ஸ்டாலினின் அரசுக்கு இருந்தது. இந்த நிலையில் இருந்துதான் சோவியத் யூனியனுக்குள் அனைத்துச் சிக்கல்களும் எதிர் கொள்ளப்பட்டன. தேசிய சிக்கலும் அவ்வகையில்தான் எதிர் கொள்ளப்பட்டது. தோழர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல கம்யூனிஸ்டுகள் அனைவருக்குமே உலக நலனுக்கு உட்படாத எந்த நலனும் இல்லை.

 இதில் தோழர் பெ.ம. மட்டுமல்ல சோவியத் யூனியனையும், தோழர் ஸ்டாலினையும் பழித்துரைத்தப் பலரும் இப்போது ஒரு விடயத்தை பரிசீலிப்பதே இல்லை. சோவியத் யூனியனில் இருந்து விடுதலை அடைந்த எந்த நாடுகளாவது இப்போது மக்களின் நல்வாழ்வோடு இணைந்த வளர்ச்சியை அடைத்துள்ளனவா என்பதுதான் அது.

கம்யூனிசமா? முதலாளித்துவமா?

 எல்லாச் சிக்கல்களையும் போலவே தேசிய சிக்கல்களும் தனக்கான தீர்வுக்காக இரண்டு பாதைகளுக்கிடையே போராடுகிறது. தமிழக அரசியலிலும் கம்யூனிசமா? முதலாளித்துவமா? என்ற போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தோழர் பெ.ம. முதலாளித்துவப் பாதையை முன்னிறுத்த முயற்சிக்கிறார்.

 முதலாளித்துவப் பாதையை முன்னிறுத்த முயற்சிக்கிற அனைவரும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாளித்துவத்துக்கு முன்னால் கூட இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று ஏகாதிபத்தியங்களுக்கு கட்டுப்பட்டு அதன் இளைய பங்காளியாக ஆகிற வாய்ப்பு. இன்னொன்று பாட்டாளி வர்க்கத்தின் பரந்துபட்ட நலன்களுக்கு உட்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட வகையில் தேசிய முதலாளியாக இருப்பதற்கான வாய்ப்பு. இரண்டுமே முதலாளிவர்க்கத்துக்கு வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளையே வழங்குகிறதே தவிர முதலாளித்துவம் தற்போதைய நிலையில் தனக்கென சொந்தப் பாதையை கொண்டிருக்கவே முடியாது.

 ஆகவேதான் தமிழ்நாட்டில் இருக்கிற முதலாளித்துவ கட்சிகளான தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. என எதுவானாலும் மக்களின் பிரச்சனைக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. ஏனெனில் மக்களுக்கு பிரச்சினையே இத்தகைய கட்சிகளின் முதலாளித்துவத்தினால்தான் உருவாகுகிறது.

 இது போக ஈழம், நதிநீர், அணு உலை எதிர்ப்பு என ஒரு சில போராட்டங்கள் முனைப்போடு நடக்கிறதென்றால் அது உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளான பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியோரின் பங்கேற்பு இருப்பதால்தான். ஆக இன்றைக்கும் கூட குறைந்த அளவேயானாலும் தமிழக மக்களின் அரசியல் பாதையாக உழைக்கும் மக்களின் படைத் தலைவனான கம்யூனிசமே செல்வாக்குடன் இருக்கிறது.

 தோழர் பெ.ம. போன்றோர் இதை எதிர்கொள்ள முடியாமல்தான் திணறுகின்றனர் போலும். அவரது கட்சியின் பெயரைப் பார்த்தால் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. ஆனால் அவரால் பொதுவுடைமைக் கொள்கையான கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் தாங்கள் முதலாளித்துவவாதிகள்தான் என முடிவெடுக்கவும் முடியவில்லை. ஒரு கட்சியை வைத்துக் கொண்டு தாங்கள் சேவை செய்ய வேண்டியது உழைக்கும் மக்களுக்கா, முதலாளிகளுக்கா என தவிப்பது மிகப்பெரிய வேதனைதான்.

- திருப்பூர் குணா

Pin It