கிராமப்புறத்திலே இருவர் தனியே பேசிக்கொண்டால் “என்ன இரகசியம் பேசுறீங்களா?” என்று கேட்பதுண்டு. இனிமேலும் அப்படியே பேசிக்கொள்ளலாம். ஆனால் அது இரகசியமான பேச்சாக இருக்காது. இருவர் பேசிக்கொண்டால் மட்டுமல்ல, ஒருவர் முனகிக் கொண்டாலும் கூட.

 உலகின் எந்த மூலையில் நின்று கொண்டு என்ன இரகசியம் பேசிக்கொண்டாலும் அதனை உளவுபார்க்க வலைவிரித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன ஸ்டிராட்ஃபோர், சி.ஐ.ஏ, என்.எஸ்.ஏ போன்ற அமெரிக்க உளவு நிறுவனங்கள். அவர்களின் இந்த நுண்ணிய உளவுக் கண்காணிப்புக்கு அதி நவீன தொழில்நுட்ப (பிரிஸ்சம்) சாதனங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன.

 இந்தியர்களின் மீதான அமெரிக்க உளவு “ஆதார்” அடையாள அட்டையின் மூலம் தொடங்குகிறது. அது குறித்து இக்கட்டுரையில் பின்பகுதியில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

 அமெரிக்க உளவு நிறுவனங்கள் பூமிப்பந்து முழுக்கப் பரவி வாழ்கின்ற மனிதர்களை எவ்வாறெல்லாம் உளவுபார்த்தன என்ற தகவலை வெளி உலகுக்குக் கொண்டுவந்து அமெரிக்காவை அம்பலப்படுத்தியிருக்கிறார் மனச்சான்று மிக்க மானுடப் போராளி எட்வர்டு ஸ்நோடன்.

 எட்வர்டு ஸ்நோடன் ஒரு கணினிப் பொறியாளர். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ-வில் பணியாற்றினார். அப்பொழுதுதான் சொந்த நாட்டு மக்;களின் தொலைப்பேசி உரையாடல்களையும், மின்னஞ்சல் உள்ளிட்ட இதரத் தகவல் பரிமாற்றங்களையும் உளவு பார்க்கச் சொன்னது அமெரிக்க அரசு. அப்பணி ஸ்நோடனுக்கு பெரும் நெருடலை உண்டாக்கிற்று. எனவே தான் அமெரிக்காவின் இச்செயலை உலகுக்கு அம்பலப்படுத்திவிட்டு அதற்காக எதையும் சந்திக்கும் மனவுறுதியுடன் இருந்தார்.

 வல்லாதிக்க அமெரிக்க அரசும் ஸ்நோடன் மீது அரசு சொத்துக்களைத் திருடியது, தேசியப் பாதுகாப்புத் தகவல்களையும், இரகசிய உளவுத் தகவல்களையும் வெளியிட்டது முதலான குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரின் உயிர் குடிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது! இதனையே வெனிசுலா சனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

 அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சி ஹாங்காங், இரசியா, கியூபா, போலந்து, பின்லாந்து, ஸ்பெயின், நார்வே, இத்தாலி, நெதர்லாந்து, சீனா, பிரேசில், இந்தியா, அயர்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கலம் கோரியுள்ளார் ஸ்நோடன். ஸ்நோடனுக்குத் தஞ்சம் அளிக்கும் நாடுகள் மீது பொருளாதாரத்தடை விதிப்போம் என அரற்றுகிறது அமெரிக்கா.

 ஹாங்காங்கிலிருந்து இரசியா சென்ற ஸ்நோடனை சில வார காலம் விமான நிலையத்திலேயே காக்க வைத்து அதன் பின்னர் தஞ்சமளித்திருக்கிறது இரசிய அரசு.

 பொலிவியா, நிகரகுவா போன்ற பல நாடுகள் ஸ்நோடனுக்கு தஞ்சமளிக்க முன்வந்துள்ள நிலையில், வேண்டுகிற போதெல்லாம் பன்னாட்டு பெருநிறுவனங்களைத் தன்நாட்டில் சுரண்டத் தாராளமாகக் கதவு திறந்து விடும் இந்தியா, “அடைக்கலம் கோருகிறவர்கள் அனைவரும் இந்தியா வர இது ஒன்றும் திறந்த வீடல்ல” என்று ஸ்நோடனின் தஞ்சக் கோரிக்கையைப் பகடி செய்து நிராகரித்து, தனது அமெரிக்க விசுவாசத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது!

 தனது நாட்டின் இரகசியங்களை வெளியிட்ட ஸ்நோடனை தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாகக் கருதுகிறது அமெரிக்கா.

 ஒரு நாட்டின் இரகசியத்தை வெளியிட்ட ஸ்நோடன் குற்றவாளி என்றால் உலகில் உள்ள 38 க்கும் மேற்பட்ட நாடுகளின் இரகசியத்தை எட்டிப்பார்த்த அமெரிக்கா எத்தகையது?

 ஸ்நோடன் ‘தி கார்பியன்’ நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் ,உலகில் 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்த விவரத்தை வெளியிட்டுள்ளார். இதில் இந்தியத் தூதரகமும் அடங்கும். மேலும் பிரான்ஸ், இத்தாலி, பெல்சியம் உள்பட ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த தூதரகங்களை உளவு பார்த்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 மேலே குறிப்பிட்டபடி 38 நாடுகளின் தூதரகங்களை இணையதள கம்பிவடத்தில் (Internet Cable) இரகசியமான முறையில் நவீன அலைவாங்கிகளைச் (Antena) செருகி அதன் மூலம் முக்கியத் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனங்கள் களவாடியது அம்பலமாகியுள்ளது. யாகூ, கூகுள், டுவிட்டர், ஸ்கைப், பேஸ்புக் முதலான சமூக வலைதளங்கள் உளவுக்கண்காணிப்புக்கு உறுதுணை செய்கின்றன.

 அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் (NSA) திட்டத்தின் மூலம் கடந்த 2013 மார்ச்சில் மட்டும் உலகெங்கிலுமிருந்து சுமார் 9700 கோடி உளவுத்தகவல்கள் திரட்டியுள்ளது.

 அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய எக்ஸ்கீஸ் கோர் இணையதள உளவுத்திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் 150 இடங்களில் 700 இரகசிய சர்வர்களை நிறுவியுள்ள தகவல் தற்போது உலக நாடுகளுக்குத் தெரிய வந்திருக்கிறது. அந்த சர்வர்களில் ஒன்று இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நிறுவப்பட்டு இருக்கிறது என ஸ்நோடன் வெளியிட்ட கோப்புத் தகவல் கூறுகிறது. இந்தியாவின் எந்தவொரு தகவலையும் மிக எளிதில் எடுத்துக்கொள்ள எக்ஸ்கீஸ் கோர் வலை பின்னல் உதவும் . (நன்றி: தீக்கதிர் - 03.08.13)

 இந்தியாவின் கணினி இணைப்புகளிலிருந்து 650 கோடித் தகவல்கள் அமெரிக்க உளவு நிறுவனத்தால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக இலண்டனிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கையான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

 அமெரிக்காவால் அதிகம் கண்காணிக்கப்படும் நாடுகளில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஈராக் உள்ளது. சீனா இப்பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 நெருங்கிய உறவினராக இருந்தாலும் அவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு வீட்டிற்கு வெளியில் இருக்கும் அழைப்பு மணியை அழைத்து உரிய வீட்டாரின் அனுமதி பெற்ற பின்னரே வீட்டிற்குள் நுழையும் நாகரீகம் வளர்ந்த இந்நாட்களில் அனுமதியின்றி அடுத்தவர்களின் படுக்கை அறை வரை நுழைந்து அடாவடித்தனம் செய்கிறது அமெரிக்கா.

 அமெரிக்காவின் இச்செயலுக்கு செர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலகநாடுகளை உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக அர்சென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே, வெனிசுலா, பொலிவியா ஆகிய லத்தின் அமெரிக்க ;நாடுகள் ஐ.நா அவையில் முறையீடு செய்துள்ளன. ஆனால் எதிர்க்கத் திராணியற்ற இந்தியாவோ, “இது மற்றவர்களின் விசயங்களில் உரிமையின்றித் தலையிடும் பிரச்சனை அல்ல. இது கணினி ஆய்வு மற்றும் அழைப்புகளை ஆய்வு செய்யும் விதம்” என்று நித்தியானந்தா பாணியில் ரெம்ப ‘டெக்னிக்கலான’ விசயமாகப் பார்க்கிறது.

 அமெரிக்காவின் இந்தச் செயலைக் கண்டிக்காது. திரைப்படத்தில் எதிரிகள் அடிக்கும் முன்னர், தானே முதுகை வளைத்துக்கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும் நடிகர் வடிவேலுவைப் போல தானே முன்னின்று சொந்த நாட்டு மக்கள் குறித்தான தகவலை ,விற்கும் விபச்சாரத் தரகராகவே மாறிவிட்டது ‘நம்’ இந்தியத் “திருநாடு”.

 அமெரிக்கா சொந்த நாட்டு மக்களை உளவு பார்க்கிறது. இந்தியா சொந்த நாட்டு மக்களைக் காட்டிக் கொடுக்கும் படுபாதகச் செயலைச் செய்து கொண்டிருக்கிறது.

 அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின் இத்தகைய உளவுக் கண்காணிப்புக்கு உதவ “ஆதார்” அடையாள அட்டைத் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது இந்தியா.

 “ஆதார்” அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுக்க மக்கள் ஓடோடிச் சென்று வரிசையில் நின்று புகைப்படம் எடுத்து முடித்த பெருமிதத்தில் நடையைக் கட்டுகிறார்கள்.

 நன்றாகப் படித்தவர்கள் - மக்கள் நலனில் அக்கறையுள்ள சிந்தனையாளர்கள் கூட “ஆதார்” அடையாள அட்;டை தொடர்பாக ஏன் (?) எதற்கு (?) என்று கேள்வி கேட்கத் தயாராக இல்லை . புகைப்படம் “எடுத்தார்கள் - எடுத்தோம்” என்று ’கடமையை’ முடிக்கிறார்கள்.

 ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், வருமான வரி அட்டை என இருபதுக்கும் மேற்பட்ட அடையாள ஆவணங்கள் இருக்கும் போது இதற்கு மேலும் எதற்கு அடையாள அட்டை என்று கேட்டால், இது “தேசிய அடையாள அட்டை” என பதிலுரைக்கிறார்கள் புகைப்படம் எடுக்க வரும் ஊழியர்கள்.

 ஆனால் திட்டக்குழுவின் துணைத்தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவோ, ஆதார் என்பது அடையாள அட்டை அல்ல; அது வெறும் குறியீட்டு எண் மட்டுமே என்கிறார்.

 “ஆதார்” அட்டையின் மூலம் பொது விநியோகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் களையப்படும், கிராமப்புற வேலை உறுதியளிப்புத்திட்ட நிதி மக்களைச் சென்றடையும், அனைவருக்கும் கல்வி கிட்டும், ஊழல் முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும் என காதில் பூச்சுற்றுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.

 மேலும் தலையெடுத்து வரும் பயங்கரவாதத்தை ஒடுக்கவும், பயங்கரவாதிகளைக் காண்காணிக்கவும் “ஆதார்” எண் பயன்படுகிறது என்கிறது அரசு. ஆனால் “ஆதார்” அடையாள அட்டை குறித்து வெளிவரும் அடுத்தடுத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

 “ஆதார்” அடையாள அட்டையின் திட்டம் குறித்து மக்களைக் குழப்பி ஏமாற்றுவதற்காகவே அரசும் ஆட்சியாளர்களும் ஆளாளுக்கு மாற்றி மாற்றிச் சொல்லி பிதற்றிக்கொண்டு திரிகிறார்கள்.

 தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை உருவாக்கியதில் பெரும்பங்காற்றிய ஜீன்டிரீஸ் என்பவர் “ஆதார்” அடையாள எண் திட்டம் மக்களை வேவு பார்ப்பதற்கு சிறந்த கருவியாகப் பயன்படும் என்கிறார்.

 ஆதார் அட்டை குறித்த அரசு மற்றும் ஆட்சியாளர்களின் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள், மக்களுக்கு “ஆதார்” அடையாள அட்டையின் மீது ஐயத்தை ஏற்படுத்தி வருகிறது.

 ஆதார் அடையாள அட்டை திட்டமென்பது, அடிப்படையில் தனிமனித சுதந்திரத்தைப் பறித்து மக்களை அடிமையாக்கி அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளிடம் அடகு வைக்கும் திட்டமாகும்.

 2006-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் “ஆதார்” போன்றதொரு அடையாள அட்டை வழங்க அரசு முற்பட்ட போது, “தனிமனித இரகசிய உரிமைகளில் அரசு தலையிடுவதா?” எனக் கூறி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் அடையாள அட்டைச் சட்டத்தை இரத்து செய்தார்.

 அதே போன்று செர்மனி, ஹங்கேரி போன்ற பல நாடுகளில் மக்கள் போராட்டத்தினாலும், பல்வேறு காரணங்களாலும் இத்திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்ட வரலாறுகள் நடந்தேறியிருக்கின்றன.

 மேலை நாடுகளைப் பார்த்தே தனது நாட்டின் திட்டங்களை வகுத்துப் பழக்கப்பட்ட இந்திய அரசும் 2008 ஆம் ஆண்டு “ஆதார்” எனப்படும் அடையாள அட்டைத் திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் டெல்லி, இராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் “ஆதார்” அடையாள அட்டைத் திட்டம் வந்த வேகத்திலேயே மண்ணைக் கவ்வியது.

 நமது அண்டை மாநிலங்களான கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட 4 நகரங்களில் “ஆதார்” பற்றிய உண்மை நிலையை அறிந்த மக்கள் போராடியதன் விளைவாகத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

 “ஆதார்” அடையாள அட்டைக்கு, ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடமிருந்தும், பத்து விரல்கள் ரேகைகள், கண்ணின் விழித்திரைப் பதிவு, புகைப்படம், பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விபரம், தொழில் குறித்த விபரங்கள் போன்ற 14 பயோமெட்ரிக் அடையாளத் தகவல்கள் சேமிக்கப்படுகிறது.

 பின்னர் குடிமகனின் புகைப்படம், 12 இலக்க எண், தகவல்கள் அடங்கிய மின்னணுப் பதிவு போன்றவை அடங்கிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

 ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் பெறப்பட்ட தகவல்கள் வங்கி, ஓட்டுநர் உரிமம், காவல் நிலையம், விமான நிலையம், கடவுச்சீட்டு, வருமான வரித்துறை உள்ளிட்ட ஏனைய வெளித்தகவலுடன் ஒன்றிணைக்கப்பட்டு கணினி சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்படுகிறது.

 இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் அனைவரும் இந்த அடையாள அட்டையைக் கண்டிப்பாக உடன் வைத்திருந்தே ஆக வேண்டும். “ஆதார்” பிரிவு காவல்துறை என்றொரு புதிய் காவல் பிரிவை உண்டாக்கி வீதிக்கு இரண்டு காவலர்களை வைத்து ஆதார் அட்டை வைத்திருக்கிறார்களா? என்பதை உடனுக்குடன் கண்காணிக்கவும்கூட வாய்ப்பிருக்கிறது.(தற்போது வாகன ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா? என்பதைக் கண்காணிக்கும் போக்குவரத்துக் காவல்துறையைப் போல) .

 இன்ஃபோசிஸ் நந்தன் நீல்கேணியை “ஆதார்” சேர்மனாக பிரதமரே நேரிடையாக நியமித்தார். இன்ஃபோசிஸ் என்பது ஒரு தனியார் நிறுவனம்.

 “ஆதார்” அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணியின் போது தனியார் நிறுவனத்தால் திரட்டப்படும் தகவல்கள் பெங்களூரில் உள்ள நடுவண் அரசின் நிறுவனமான தனித்த இந்திய அடையாள எண் ஆணையத்துக்கு (Unique Identification Authority Of India – UIDAI) அனுப்பிவைக்கப்படுகிறது.

 இத்தனைக் கோடி மக்களின் தனிப்பட்ட விவரங்களைத் திரட்டும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது கேடானது: பெரும் ஆபத்தை உண்டாக்கக் கூடியது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 தனியார் நிறுவனத்தால் திரட்டப்படும் இத்தகவல்கள் வேறு தனியாருக்கோ, வேறு நாட்டினருக்கோ அல்லது அரசிடமிருந்து தனியாருக்கோ கைமாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

 “ஆதார்” விவகாரம் குறித்து ஆராய்ந்த உலகப்புகழ் பெற்ற செய்தி நிறுவனமான வீக்கீலீக்ஸ் இணையம், “ஆதார் அட்டையினால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று அடித்துக் கூறுகிறது. மேற்கண்ட தகவலை வீக்கீலீக்ஸ் இணையத்தின் செய்தித் தொடர்பாளர், சமூக ஆர்வலர், கணினி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜேக்கப் அப்பெல்பாம் கள ஆய்வின் அடிப்படையில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

 “ஆதார்” எண் வாங்க மக்கள் சுணக்கம் காட்டும் நிலையில் “ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 'ஆதார்' எண் வாங்காவிட்டால் சமையல் எரிவாயு கிடைக்காது” என்று தனது அதிகாரத்தைக் காட்டி அப்பாவி மக்களை மிரட்டிய அரசு பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடும் எதிரப்பால் சமையல் காஸ் உள்ளபட மத்திய அரசு வழங்கும் எந்த மானியத்தை பெருவதர்கும் ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்று போலியான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது.

 “ஆதார்” அடையாள அட்டை தனிநபர் விருப்பப்பட்டால் மட்டுமே பெற வேண்டும், கட்டாயம் பெற வேண்டும் என்ற சட்டமில்லை என்றபோதும்; நடைமுறையில் ஆதார் அட்டையை வலுக்கட்டாயமாக்குகிறது அரசு.

 இந்தியாவில் இதுவரை 45 கோடிப் பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு 37 கோடிப் பேருக்கு “ஆதார்” எண் வழங்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தைப் பொருத்தவரை 3.59 கோடிப் பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு 2.20 கோடிப் பேருக்கு “ஆதார்” எண் வழங்கப்பட்டுள்ளது. (நன்றி :குமுதம் - 23.7.13.).

 “ஆதார்” மூலம் சேகரிக்கப்படும் இந்தியக் குடிமகனின் தகவல்கள் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளிடம் வழங்கப்பட்டு உளவு பார்க்கப்படுகின்றன என்ற சமூக ஆர்வலர்களின் கருத்துக்கு அரசிடமிருந்து இதுவரை எந்த மறுப்புமில்லை.

 மேலும் நம்மிடமிருந்து பெறப்படும் தகவல்கள் அமெரிக்காவின் இரகசிய சர்வர்களின் மூலம் இணைக்கப்பட்டு நம்முடைய ஒவ்வொரு செய்கைகளையும், பேச்சுக்களையும், (அந்தரங்கள் உள்பட அனைத்தையும்); நேரலையில் உளவு பார்க்க வாய்ப்பிருக்கிறது. “ஆதார்” அட்டையில் இணைக்கப்படும் மைக்ரோசிப் மூலம் அது சாத்தியமாகிறது என்ற கணினி வல்லுநர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்துக்கு அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த மறுப்புமில்லை. இதெல்லாம் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அரசு சொல்லவில்லை.

 அடிப்படையில் இந்தியக் குடிமக்களுக்கு எதிராக ஓர் உளவியல் யுத்தத்தை நடத்தத் தயாராகி வருகிறது அமெரிக்கா. மக்கள் விரோத இந்திய அரசும் அதற்கு உற்றதுணையாக இருந்து வருகிறது.

 இந்தியக் குடிமக்களிடமிருந்து “ஆதார்” தகவலைத் திரட்ட மக்களின் வரிப்பணம் ரூ 15000 கோடியைச் செலவழிக்கிறது இந்தியா. இதை விட அதிகம் செலவாகும் என்கிறது ஒரு தகவல்.

 மக்களின் வரிப்பணம் இத்தனை கோடியை செலவு செய்து திரட்டப்படும் “ஆதார்” தகவல், வல்லாதிக்க நாடுகளுக்கு “நல்ல விலைக்கு” விற்பதன் மூலம் அரசு மற்றும் ஆட்சியாளர்களின் கொழுத்த ஆசையை அடையக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்தியத் துணைக் கண்டத்தில் எழும் ஒவ்வொரு மக்கள் போராட்டமும், அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத்தான் இருக்கும் பெட்டிக்கடை முதல் பெருநிறுவனங்கள் வரை இனி அமெரிக்க நிறுவனங்களே இந்தியாவில் ஆக்கிரமிக்க இருக்கின்றன. இப்போதுகூட ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இனிவரும் நாட்களுக்குள் அமெரிக்காவின் ஆளுகை இந்தியாவின் குக்கிராமங்கள் வரைகூடப் பாயும். அத்தகைய காலங்களில் நம் நிறுவனங்களை எதிர்ப்பது யார்? மக்கள் போராட்டத்தைக் கட்டமைப்பது யார்? யார் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்பதை அமெரிக்காவில் இருந்து கொண்டே கணினி மூலம் நேரலையில் கண்காணித்துக் கொண்டே அதனடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்பைக் கட்டமைப்பதற்காகவே “ஆதார்” அடையாள அட்டையை உருவாக்கியிருக்கிறது ஆட்சி அதிகார வர்க்கக் கும்பல்.

 இந்தியாவில் மேலெழுந்து வரும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும் தேசிய இனவிடுதலை உணர்வாளர்கள் மீது வழக்குப் புனைந்து அவர்களின் போராட்டத்தை கட்டுக்குள் வைக்கவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் “ஆதார்” எண் அவசியம் என இந்தியா கருதுகிறது.

 பணவெறி பிடித்து அலையும் அமெரிக்க வல்லாதிக்கத்தையும், அமெரிக்காவின் எடுபிடியாய் குற்றவேல் புரிந்து கொண்டிருக்கும் இந்தியத்தையும், இந்தியத்தைப் பாதுகாக்கும், இந்துத்;துவத்தையும், சாதியத்தையும் அறுத்தெறியப் போராடுவதன் மூலமே “ஆதார்” போன்ற நச்சுக்கிருமிகளை நம் தேசத்திலிருந்து அகற்ற முடியும்.

 மக்கள் போராட்டங்கள் “ஆதாரை” அடித்து நொறுக்கும்! வல்லாதிக்கங்களின் உளவு எவ்வகையில் இருந்தாலும் மக்களின் விடுதலை உணர்வு அதனை முறியடிக்கும்!!

- தங்க.செங்கதிர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It