உரிமை பறிப்பையே உரிமையாக முன்மொழியும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மக்களுக்கெதிரான மோசடிச் சட்டம் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்ல முடியும்?

ஏற்கனவே, 2007-ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டிலும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது இச்சட்டம். இப்போது புதிய திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா “நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறு குடியேற்றத்தில் வெளிப்படைத்தன்மை மசோதா, 2012” என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்றும் இன்றும்

இருக்கின்ற நிலத்தைப் பங்கீடு செய்து நிலமற்ற ஏழை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்து வாழவைக்கின்ற திட்டங்களெல்லாம் மலையேறிப் போய் விட்டது. இன்று ஏழை மக்களிடம் இருக்கின்ற சிறு, குறு நிலத்தையும் கையகப்படுத்தி பண முதலைகளாக காத்திருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியை அரசே முன்னின்று செய்வதை நியாயப்படுத்துவதற்கான சட்டமாகவே இது அமைந்துள்ளது.

29.8.13 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது இதை ஒரு மாபெரும் சாதனையாக சுட்டிக்காட்டினார்கள். உண்மையில் இது சாதனையல்ல. மாறாக, வேதனைதான்.

பழைய சட்டம் 1894-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது. அந்தச் சட்டத்திற்கு மாற்றாக ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, பொதுநலனும் இருந்தது. பரந்துபட்ட நிலம், பெரும் பண்ணைகளிடம் குவிந்து கிடந்த நிலத்தைக் கையகப்படுத்தி பல பொது நலத்திட்டங்களை அறிமுகம் செய்ய பயன்படுத்தப்பட்ட சட்டம். மேலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக அல்லாமல் வேறு எதற்கும் நிலம் கையகப்படுத்தப்படாத நிலை இருந்தது. ஆனால் இன்று இச்சட்டத்தின் நோக்கமே சாதாரண ஏழை எளிய மக்களுக்கெதிரானதாக இருக்கிறது.

முன்னதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 31(2)-ன்படி அரசு தனியார் நிலத்தை கையகப்படுத்த முனைந்தால், அதற்கு தனியே சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கையகப்படுத்துவது பொது நோக்கத்திற்காக இருத்தல் அவசியம் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டது.

அதன்பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது திருத்தம் 1971-ல் இழப்பீடு என்ற சொல்லாடலை நீக்கி “ஒரு தொகை” வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத்தது. மேலும் அப்படி வழங்கப்படும் தொகை குறைவாக இருந்தாலும், அதை எந்த நீதிமன்றத்திலும் முறையிட முடியாததாக திருத்தம் செய்யப்பட்டது.

அதன்பின், 1978-ல் செய்யப்பட்ட 44-வது திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 31(2) மற்றும் 19 (1) (க) போன்றவற்றை நீக்கிவிட்டு, அரசு பொது நலனுக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு நில உரிமையாளருக்கு இழப்பீடு தர வேண்டிய அவசியம் இல்லை என்று திருத்தப்பட்டது.

புதிய சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

இச்சட்டம் தனியார் நிலம் அரசுக்கோ, தனியார் நிறுவனத்துக்கோ தேவைப்படும்பட்சத்தில், அதைக் கையகப்படுத்துவதை சட்டபூர்வமாக்கி நியாயப்படுத்துகிறது. அவ்வாறு நிலத்தைக் கையகப்படுத்துவதை இச்சட்டம் 2 வகைகளாகப் பிரிக்கிறது. பொது நோக்குக்காக என்றும் தனியார் தொழில் தொடங்குவதற்காக என்றும் வகைப்படுத்துகிறது. அதேபோல ஒட்டுமொத்த நிலங்களையும், ஊரகப் பகுதியில் உள்ள நிலம் என்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலம் என்றும் வகைப்படுத்துகிறது.

கையகப்படுத்துதலும், இழப்பீடும்:

மிக முக்கியமான அடிப்படை உரிமையாகிய வாழ்வாதார உரிமையைப் பறித்துவிட்டு, மக்களை நாடோடிகளாக, நிலமற்ற கூலிகளாக மாற்றிவிட்டு நியாயமான இழப்பீடு பெறுதல் என்பதை இந்த மசோதா ஒரு உரிமையாக அறிவிக்கிறது. உண்மையில் இந்தச்சட்டம் நாட்டு மக்களின் மிக அடிப்படையான உரிமையை பறிக்கின்ற சட்டமே அன்றி இது உரிமை வழங்கும் சட்டம் அல்ல.

நில உரிமையாளரிடமிருந்து பொது நோக்குக்காக நிலம் கையகப்படுத்தப்படும்;போது, அந்த நிலம் ஊரகப் பகுதியிலுள்ள நிலமாக இருந்தால், அங்கு நிலவும் சந்தை மதிப்பில் 4 மடங்குத் தொகை இழப்பீடாகவும், நகர்ப்புறத்திலுள்ள நிலமாக இருந்தால் சந்தை மதிப்பில் 2 மடங்கு தொகை இழப்பீடாகவும் வழங்கப்படும் என்று நிர்ணயம் செய்கிறது இச்சட்டம்.

ஒரு நபரின் விவசாய நிலத்திற்கு எத்தனை மடங்கு தொகை இழப்பீடாக கொடுத்தாலும் அது நில உரிமைக்கு சமமாக ஒருபோதும் அமையாது. மாறாக அந்தப்பணம் சிறிது காலத்தில் முற்றிலும் கரைந்துவிடும். இதுதான் நிலத்தை இழந்த பெரும்பான்மை மக்களின் அனுபவமாக இருக்கின்றது.

இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘இழப்பீடு’ என்பது ஒரு மோசடித் திட்டம் என்று பல சமூக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், ‘இழப்பீடு’ என்ற கருத்தாக்கம் உலக வங்கியிடமிருந்து ஊற்றெடுத்துள்ளது. சொந்த நாட்டு மக்களை அவர்கள் தாம் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயரச் செய்வது என்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அது மக்களுக்கெதிராக இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். மேலும், இந்த ‘கையகப்படுத்துதல்’ என்பது உயிர்வாழும் உரிமை (சுiபாவ வழ டகைந) என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் சட்டப்புறம்பான செயலாகும். எனவே அரசியலமைப்புச் சட்டத்திற்கே முற்றிலும் எதிரான செயல்பாடு ஆகும்.

இந்தியாவில் பெருமளவிலான நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டி கையகப்படுத்தப்படுகிறது. மேலும், அந்நிறுவனங்களின் தொழில் வளமைக்காக அரசே ‘பொது நோக்கத்திற்கு வேண்டி’ என்ற அடிப்படையில் பெருமளவு நிலங்களை கையகப்படுத்தி பெரும்பான்மை மக்களை நாடோடிகளாக மாற்றுகிறது. அப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களில்தான் நாற்கர சாலைகள், பெரும்பாலங்கள், மாபெரும் அணைகள், அனல்மின் நிலைங்கள், அணுசக்தி நிலையங்கள், புலிகள் காப்பகம் அமைத்தல், சுரங்கத்தொழில் ஆரம்பித்தல், விமானநிலைய விரிவாக்கம் போன்றவை நடைபெறுகின்றன. இவையனைத்தும் உண்மையில் தனியார் நிறுவனங்களின் தொழில் பெருக்கத்திற்கும், இலாப வேட்டைக்குமே மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, உண்மையில் பொது நோக்குக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல் என்பது தனியார் நலன்களுக்கான செயல்திட்டமாகவே உள்ளது.

ஆக மொத்தத்தில், நிலம் கையகப்படுத்துதல் என்பதும், அதற்காக இழப்பீடு தருதல் என்பதும் மக்களைப் பொறுத்தவரையில் மிகக் கொடூரமான முறையில் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து உயிர் வாழும் உரிமையையே பறிக்கின்ற செயல்பாடாகும். இழப்பீடு என்பது குடும்ப உறவுகளைப் பெரிதும் பாதிக்கின்றது. மேலும், பெண்களின் நிலை மிகக் கொடியதாக மாற்றப்படுகின்றது.

அரசும், தனியார் நிறுவனங்களும், உலக வங்கி, கார்ப்பரேட் நிதி நிறுவனம் போன்றவை நிலம் கையகப்படுத்துதலையும், நியாயமான இழப்பீடு என்பதையும் நியாயப்படுத்த பல வசனங்களையும், வாதங்களையும் முன்வைக்கின்றன. அதில் முக்கியமானது நாட்டு வளர்ச்சி, பொது நலன், பொது நோக்கு, போன்றவை. இவற்றிற்காக சிலர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். என்றெல்லாம் முன்மொழியப்படுகின்றது. உண்மையில் சிலர் செய்யும் தியாகமும் அல்ல. பலன் பெறுவது பெரும்பான்மை மக்களும் அல்ல. மாறாக, பெரும்பான்மை மக்கள் வாழ்விழந்து செய்யும் தியாகத்தில் ஒரு சிலர் இலாப வேட்டை நடத்துகின்றனர்.

மேலும் இந்த மசோதா நிலத்திற்கான இழப்பீடு பெற சரியான ஆவணங்களை வைத்திருக்க வலியுறுத்துகிறது. சரியான ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் நிலத்திற்கான இழப்பீட்டை நில உரிமையாளர்கள் கோரமுடியாது. சாதாரணமாக, நமது நாட்டில் கொஞ்சம் நிலம் வைத்திருப்போர் பல நேரங்களில் ஆவணங்களை சரியான முறையில் பராமரிப்பது இல்லை. ஏராளமானவர்கள் வெறுமனே அனுபவ அடிப்படையில்தான் நிலங்களை உரிமையாக்கியுள்ளனர். முறைப்படியான ஆவணங்களை பெற்று வைப்பதில் கவனம் செலுத்துவதில்லை. இத்தகையோருக்கு இழப்பீடு பெறுவதும் குதிரைக்கொம்பாகி விடும்.

நில உரிமையாளரின் சம்மதம் குறித்த சட்டத்தின் விளக்கம்:

நமது நாட்டில் பெரும்பாலான விவசாயிகளுக்கும், ஏனைய சிறுதொழில் முனைவோருக்கும் தாங்கள் உடைமையாகவும், உரிமையாகவும் கொண்டிருக்கின்ற “காணிநிலம்” தான் உயிர் என்று சொல்லலாம். ஏனென்றால், இத்தகையோருக்கு அந்த சிறு துண்டு நிலம்தான் வாழ்வாதாரமாகவும், மாண்பையும், மதிப்பையும், வாழ்வதற்கு நம்பிக்கையையும் தருகின்ற ஒரே காரணியாகவும் இருக்கின்றது. இச்சூழலில், நிலத்தை கையகப்படுத்துதல் என்பது மேற்சொன்ன அத்தனை உரிமைகளையும் பறித்து அந்த மனிதரையும், அவருடைய குடும்பத்தையும் நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தி மாண்பையும், மதிப்பையும், நம்பிக்கையையும் இழக்கச்செய்யும் செயலாகும். எனவே நிலத்தைக் கையகப்படுத்த ஒரு தனி நபர் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு அவருக்கிருக்கின்ற உரிமையை அங்கீகரிப்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு நேர்மாறாக, இச்சட்டம் உரிமையாளர்களின் 80 சதவிகித சம்மதம் 70 சதவிகித சம்மதம் என்று நிர்ணயம் செய்கிறது. அதாவது, அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்படுத்தப்போகும் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது, நில உரிமையாளர்களில் 80மூ பேரின் சம்மதம் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதேபோல்

ஒரு தனியார் நிறுவனம் மட்டும் செயல்படுத்த முனையும் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுமாயின் 70மூ நில உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் ஏனையோரின் சம்மதம் ஒரு பொருட்டல்ல என்பதாக இந்த சட்டப்பிரிவு அமைந்துள்ளது.

அரசு தனது திட்டங்களுக்காக (பொது நோக்குக்காக) நிலத்தைக் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களின் சம்மதமே தேவையில்லையென்றும் இச்சட்டம் நில அபகரிப்பை நியாயப்படுத்துகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் இடைத்தரகர்களாக அரசு:

அரசு என்பது இப்போதெல்லாம் தனியாரின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எடுபிடி வேலை செய்யும் அமைப்பாக முற்றிலும் மாறிவிட்டது. இச்சூழலில், சொந்த நாட்டு மக்களின் வாழ்வைப் பற்றி சிறிதும் கவலையின்றி அவர்களின் மிக சொற்ப நிலத்தையும் பறித்து தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் ஏஜெண்டாக அரசை மாற்றுகின்ற சட்டமாகவே இருக்கிறது. பொது நோக்கத்திற்காக அரசு நிலத்தைக் கையகப்படுத்தினாலும், அது பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் கொள்ளை இலாப வெறிக்கு உரம் சேர்ப்பதற்காகவே செய்யப்படுகிறது.

அவசரகால நில அபகரிப்பு

அவசரகால நடவடிக்கையாக சில நிலங்களை கையகப்படுத்துதலை விரைந்து முடிக்க, சில நடைமுறைகளை மீறிச் செயல்படுத்தவும் இச்சட்டத்தில் இடம் உண்டு. இந்தப்பிரிவை பல நேரங்களில், அரசும், தனியார் நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் ஏராளம்.

மக்கள் இடம் பெயர்தல்

இந்தியாவில் ஏற்கனவே, 3-ல் 1 பங்கு மக்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் அவல நிலை. பெரும்பாலும், வேலை தேடி பிழைப்பு நடத்தவே இந்த இடம் பெயர்தல் நிகழ்கிறது. இடம்பெயர்ந்தவர்களில் 10மூ பேர் அரசும், தனியார் நிறுவனங்களும் பல திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தியதன் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர் என்ற புள்ளிவிபரம் சட்டத்தின் துணையுடன் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள மோசடியை அம்பலப்படுத்துகிறது.

தொடரும் குழப்பங்கள்

நகர்ப்புற எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஊரக நிலங்களை எப்படி கணக்கிடுவார்கள் என்பது சட்டத்தில் தெளிவுப்படுத்தப்படவில்லை. இன்று ஊரகப்பகுதியாக இருக்கும் நிலம் மிக விரைவில் நகர்ப்புறத்தோடு இணைக்கப்படும் சூழல் நாட்டில் பல பகுதிகளில் நிலவுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை வளர்ச்சி நடவடிக்கைகளில் அதற்கான தெளிவான விவரங்கள் இல்லை.

சட்டத்தில் ‘குத்தகை” முறை புதிய பகுதியாக உள்ளது. குத்தகை முறையில் கையகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் நிலம், பின்னாளில் குத்தகைக் காலம் முடிந்தவுடன் நிலத்தின் உரிமையாளரையே சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலம் எதற்கு பயன்படும் என்று தெரியாது.

நிலத்தை உரிமை கொள்ளாமல், அந்த நிலத்தினை பயன்படுத்தி வந்தவர்களுக்கும் மறுவாழ்வு குறித்து இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், உரிமையாளர்கள் அவ்வளவு எளிதில் அதை அனுமதிக்கமாட்டார்கள். ஒரு நிலத்திற்கு 2 நபர்களுக்கு இழப்பீடு கொடுப்பது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை.

தனியாருக்கு நிலத்தை கையகப்படுத்தித் தருவதில் இச்சட்டம் அரசை பொது மக்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான இடைத்தரகர் பணியை ஆற்ற வைப்பதாக உள்ளது. இடைத்தரகர் பணியில் எப்போதுமே அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்படும் சூழல் அமைவது உறுதி.

இத்தனை குளறுபடிகளோடு மக்களுக்கு ஏதோ மாபெரும் உரிமை வழங்குவதுபோல தோற்றமளிக்கும் இச்சட்டம் உண்மையில் உரிமை பறிப்பை நியாயப்படுத்தும் ஒரு மோசடி சட்டமே.

Pin It