கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

1999-ல் ஐ.நா. வெளியிட்ட ‘நிலப் பயன்பாட்டுத் திட்டம்’ பற்றிய தீர்மானம், "நாட்டின் நில வளங்களை எவ்வாறு பிரித்து ஒதுக்கீடு செய்வது என்பது பற்றி முடிவெடுக்க மக்களுக்கு அதிகாரம் வேண்டும்" என்று தெளிவாகக் கூறுகிறது.

ஆனால் இங்கு மக்களை நேரடியாக சந்தித்துப் பேசவே மத்திய - மாநில அரசுகள் அஞ்சுகின்றன. இவர்கள் மக்களையும் நம்புவதில்லை; மாநில அரசுகளுக்கு நில நிர்வாக உரிமையை வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தையும் மதிப்பதில்லை! மாறாக, போலீசு, இராணுவம், அதிகார வர்க்கம், கிரிமினல் அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் அடியாட்களை மட்டுமே நம்புகிறது.

make in india statusபத்து தலைகளின் வலிகளுக்கும் ஒரே நிவாரணம் என்ற தைல விளம்பரம் போல, நாட்டின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு எங்கள் ‘வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமே’ என்று மோடி கும்பல் அடித்துக் கூறுகிறது!.

ஆனால், தனது வளர்ச்சித் திட்டங்களால் மக்களின் ஏழ்மையும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிந்துவிட்டது அல்லது குறைந்து வருகிறது என்று நிரூபிப்பதற்கு நம்பகமான ஒரு ஆதாரமும் இந்த அரசிடம் கிடையாது.

நாடு பொருளாதாரத்தில் முன்னேறி தனது சுயாதிபத்தியத்தை கட்டிக் காப்பாற்றி வருகிறது என்பதை முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் உட்பட பிரபல பொருளாதார நிபுணர்களே கேள்விக்கு உட்படுத்தி வருகிறார்கள். சீனாவில் விவசாய நிலங்களை தொழில் துறைக்கு ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்குச் சமமான அளவு தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மேம்படுத்துவதை அரசின் கொள்கையாக வைத்துள்ளனர். இத்தகைய சுயாதிபத்திய நடவடிக்கைகளை இந்தியா ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா?

இதற்குப் பின்னணியில் மறைந்திருக்கும் ஒரே உண்மை என்னவென்றால், கார்ப்பரேட்டுகளும், அவர்களது கைத்தடிகளும் மட்டுமே ‘வளர்ச்சியின் பலன்களை’ அறுவடை செய்து கொள்கிறார்கள் என்பதுதான்!

அதனால்தான், அரசால் தனது வளர்ச்சித் திட்டங்களின் சாதக - பாதகங்களை ஒளிவு மறைவின்றி மக்களிடம் எடுத்துக் கூறி, மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. ஐ.நா. கூறுவதுபோல "வளர்ச்சித் திட்டங்களில் மக்களின் பங்கெடுப்பையும்" ஏற்படுத்த முடியவில்லை. இவ்வாறு சொந்த நாட்டு மக்களிடமே தனிமைப்பட்டு தோற்றுப் போய் நிற்கிறது இந்த அரசு.

இதனால்தான், குறுக்குவழியில் பயங்கரவாத அடக்குமுறைகளை ஏவிவிட்டு மக்களை உருட்டி, மிரட்டி, பலாத்காரமாக நிலத்தைப் பறிக்கிறது அரசு!

என்ன செய்யலாம்?

தனது வளர்ச்சித் திட்டங்களின் உண்மையான சாதக – பாதகங்களை மக்களிடம் வெளிப்படையாக முன்வைத்து, விவாதித்து, ஒரு பொது முடிவெடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் விரும்புவதில்லை.

எங்கள் வாழ்வாதாரமான நிலங்களைப் பறிக்கும் எந்த வளர்ச்சித் திட்டமும் எங்களுக்கு வேண்டாம், ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மக்கள் போராடுகிறார்கள்.

மாற்று அரசியல் பேசும் அமைப்புகளோ, வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது, மக்கள் நலனுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் ‘விரட்டியடிப்போம்’, ‘முறியடிப்போம்’ என்று தன்னெழுச்சியாகப் போராடும் மக்களுக்குப் பின்னால் ஓடுகின்றன. இதுவும் போலீசு தடியடி, துப்பாக்கிச் சூடு, கைது, வழக்கு, பிணை என்ற வட்டத்திற்குள் முடிந்து விடுகிறது.

இதற்கெல்லாம் பயந்து அரசு தனது திட்டங்களைக் கைவிடுவதில்லை. மேலும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் அடக்குமுறையுடன் மீண்டும் அதே திட்டத்தை அமுல்படுத்துகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் இதுதான் நடந்து வருகிறது. இது போராடும் மக்களிடம் சோர்வையும், அவநம்பிக்கையையும் தான் விதைக்குகிறது.

போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது எப்படி? என்ன கோரிக்கையை மையப்படுத்தி மக்களைத் திரட்டுவது? நடைமுறை சாத்தியமான தீர்வுகள் என்ன? என்பதைப் பற்றி மாற்று அரசியல் பேசுபவர்களிடம் தெளிவான பார்வையோ, கருத்து ஒற்றுமையோ கிடையாது. போராடும் மக்களும் இவர்களை அரசியல் தலைமையாக அங்கீகரிப்பதில்லை. மாறாக ‘நமக்கு சப்போர்ட் பண்றாங்கப்பா’ என்ற அளவில்தான் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே இவர்களும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தோற்றுப் போய்தான் நிற்கிறார்கள்!

மறுபுறத்தில், ‘விவசாயத்தைப் பாதுகாப்போம்’ என்று முழங்கும் விவசாய சங்கங்களிடம் விவசாயத்தை லாபகரமான ஒரு தொழிலாக வளர்த்தெடுப்பது எப்படி என்ற திட்டமோ, அதுபற்றிய புரிதலோ கூட இல்லாமல் உள்ளனர்.

killing developmentவிவசாயத்தைக் காப்போம் என்றால், தற்போது விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் விவசாயத்தையா அல்லது 1960-களுக்கு முன்னால் நடந்த பாரம்பரிய விவசாயத்தையா… எதைக் காப்பாற்றப் போகிறோம்? இது இரண்டுமே சாத்தியமில்லை எனும்போது மூன்றாவது விவசாயக் கொள்கை என்ன? இது பற்றி யாரும் பேசுவது இல்லை.

ஒரு தொழில் என்ற முறையில் விவசாயம் ஏற்கனவே கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அரசு பின்பற்றிவரும் கார்பரேட் அரசியல் - பொருளாதாரக் கொள்கையோ விவசாயத்தை அழிவுப் பாதைக்குத் தள்ளி விடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 18%. ஆனால் நாட்டின் 60% வேலைவாய்ப்பை விவசாயம்தான் வழங்குகிறது. இது விவசாயத்தின் பெருமையைக் குறிக்கும் விவரமல்ல. அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை நம்பி 60% மக்கள் உயிர் வாழ்கின்றனர் என்பதற்கான எச்சரிக்கை!

இவ்வாறு கிராமப்புறங்களில் முடக்கப்பட்டுக் கிடக்கும் இந்த மக்களை (உழைப்புச் சக்திகளை) மீட்டெடுப்பதன் மூலம்தான் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியும். அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தால் இது சாத்தியப்படாது.

எனவே விவசாயமில்லாத பிற தொழில்களின் வளர்ச்சி அவசியமாகும். இது புரியாமல் விவசாயத்தைக் காப்போம் என்றால் அது இன்றைய அவல நிலைமையை மேலும் தீவிரப்படுத்துவதற்கே உதவும்.

தற்போதைய நிலைமையில், விவசாய வருமானத்தை மட்டுமே நம்பி, தனது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எந்த விவசாயிக்கும் கிடையாது. இதனால் விவசாயிகள் மத்தியில், நிலத்தை அதன் சந்தை மதிப்பிலான வெறும் பணமாக மட்டுமே புரிந்து கொள்ளும் மனோபாவம்தான் உள்ளது. சந்தை மதிப்புக்கு ஈடான இழப்பீடு கொடுத்தால் தங்களது நிலங்களை மனமுவந்து விற்றுவிட பெரும்பாலான விவசாயிகள் தயாராக உள்ளனர் என்பதே உண்மை.

மாற்று அரசியல் பேசுபவர்கள் மேற்கண்ட எதார்த்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் "அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்", "புரட்சிதான் தீர்வு" என்று கூறுவது வீர தீரமாக தெரிந்தாலும், எதார்த்தத்தில் அது மக்களை மிரளச் செய்வதாகவே உள்ளது.

எனவே வளர்ச்சித் திட்டங்கள் – நிலவளம் – விவசாயம் என்பதை மையப்படுத்தி மக்களிடம் விரிவான கலந்துரையாடலை நடத்துவது அவசியமாகும். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இப்பிரச்சனைகளை எப்படி கையாள்வோம் என்பதை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். தொழில் வளர்ச்சியின் தேவை, அவசியம் பற்றியும் வலியுறுத்த வேண்டும். நடைமுறை சாத்தியமான உடனடி கோரிக்கைகளையும் பரிசீலிக்கலாம். இவற்றின் மீதெல்லாம் மக்களின் கருத்தறியப்பட வேண்டும். மக்களைக் கற்றுக் கொள்வதற்கும், மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.. உண்மையான மாற்று அரசியலை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கு இதுதான் வலு சேர்க்கும்.

வெற்றுக் கோசங்களால் யாருக்கும் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை. விரயங்கள் மட்டுமே மிஞ்சும்!

- தேனி மாறன்