மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவந்ததிலிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. நிலங்களிலிருந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதோடு அவர்களின் வாழ்வியல் உரிமைகளை மறுப்பதாகவும் உணவு தானிய உற்பத்திக்கு இந்த சட்டம் பெரும் தடையாக மாறும் என்று எதிர்கட்சிகளும், விவசாய அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும் உறுதியாக போராட்டங்களை நடத்தின. ஆனால், மோடி அரசோ நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியா வல்லரசாவதற்கும் இந்த நில அபகரிப்பு சட்டம் அவசியம் என்று கிளிப் பிள்ளை போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லியது.

இப்போது மோடி அரசு பிறப்பித்திருந்த அவசர சட்டம் ஆகஸ்டு 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. மத்திய அரசு மீண்டும் அதை நீட்டிக்கவில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013-ல்(காங்கிரசு அரசு கொண்டு வந்தது) அடங்கிய 13 மத்திய சட்டங்களை ஒன்றிணைத்து ஒரு நிர்வாக உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. பீகார் தேர்தலைக் கருத்தில் கொண்டும் மாநில அரசுகளின் ஊடாக தான் விரும்பியபடி இச்சட்டத்தை அமல்படுத்திக் கொள்ளலாம் என்பதே உண்மை. மூன்றில் ஒரு பங்கு மாநில அரசுகள் பா.ச.க. வசம் உள்ளது. பீகார், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் தேர்தல்கள் வர இருக்கின்றன. இவை மூன்றில் இன்னொரு பங்கு. எனவே, நிலத்தைக் கையகப்படுத்தி கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் இந்திய, தமிழக வரலாற்றை உற்று நோக்க வேண்டியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 70% மக்கள் கிராமப்புறங்களைச் சார்ந்தும், வேளாண்மை மற்றும் வேளாண்மையின் சார்பு தொழில்களை சார்ந்தே மக்கள் இருந்தனர். உலகமயமாக்களுக்குப் பிறகு தொழில்துறை வளர்ச்சி நேரடி அந்நிய மூலதன இறக்குமதி, நகரமயமாக்கல், உற்பத்தி சாராத சேவை தொழில்களின் வளர்ச்சியைக் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையின் வேகமான வளர்ச்சி இவைகளின் காரணமாக வேளாண்மை சாராத மக்களின் எண்ணிக்கைபடிப்படியாக அதிகரித்தது. இதே காலத்தில்தான் விவசாயமானது பசுமை புரட்சியின் எதிர்விளைவாக தொடர் சரிவைச் சந்தித்து விவசாயிகளை கடன்காரன்களாக்கி தற்கொலைக்கு தள்ளியது. தற்கொலையின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக வாழ்வதற்கே வழியில்லாத கிராமப்புறவிவசாய கூலி ஏழை மக்களும், குறிப்பாக சிறுகுறு விவசாயிகளும் நிலம் சார்ந்த விவசாய வேலைகளிலிருந்து திவாலான நிலையில் வெளியேறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் என்ற பெயரில் நாட்டை நவீனப்படுத்துகின்றோம் என்று சொல்லி பெரும்பான்மை மக்களுக்கும், நாட்டின் உணவுக்கும் முதுகெலும்பாக உள்ள நிலத்தைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கெனவே உள்ள நில கையகப்படுத்தும் சட்டத்தில் உள்ள குறைந்தபட்ச உரிமைகளைக் கூட புதைத்துவிட்டு நில அபகரிப்பு சட்டத்தை கொண்டுவர மோடி துடியாய் துடித்தார்.

தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் சிப்காட், டிட்கோ, சிட்கோ என்ற பெயரில் 80-களின் இறுதியிலும், 90-களின் தொடக்கத்திலும் தொழில் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. பல மாவட்டங்களில் தனியார் நிலங்களையும் இதற்காக அரசு வாங்கியது. ஒசூர், இராணிப்பேட்டை, அம்பத்தூர், பெருந்துறை, கோவை போன்ற பகுதிகளில் தொழிற்பேட்டைகளை உருவாக்கியது. சிப்காட்டிற்காக நில ஒதுக்கீடு செய்யப்படாத மாவட்டம் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை. 1991-க்கு பிறகு பல இடங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்டது. குறிப்பாக ஸ்ரீபெரும்பத்தூர், ஒரகடம், டைடல் தொழில்நுட்பப் பூங்கா போன்ற பகுதிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், ஒரு ஏக்கர் 5 ரூபாய், 10 ரூபாய் ஆண்டு கட்டணம் என ஒதுக்கீடு செய்யப்பட்டன. தடையற்ற மின்சாரம், பாதிவிலையில் மின்சாரம், 15 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு, கட்டுப்பாடற்ற ஏற்றுமதி இறக்குமதி, இரவுப்பணி செய்யப் பெண்களுக்கு அனுமதி, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக்கொள்ளவும், யாரை வேண்டுமானாலும் நீக்கவும் கம்பெனிகளுக்கு அதிகாரம், தொழிற்சங்க உரிமைகளை மறுத்தல் இவையெல்லாம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் ’சிறப்பு’ அம்சங்கள்.

 இத்தனை சலுகைகளையும் 10 ஆண்டுகளாக அனுபவித்த நோக்கியா நிறுவனம் 40,000 கோடி வரி பாக்கியை அரசுக்கு செலுத்தாமல், வேலை செய்த சுமார் 40,000 தொழிலாளர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு போய்விட்டனர். இதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் இன்றைய சிறப்பு அம்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. நாடு முழுக்க உள்ள சுமார் 50 சிறப்பு பொருளாதார மண்டலங் களிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நோக்கியா போன்ற 150 நிறுவனங்கள் இலாபங்களைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டனர். அதாவது இந்த நிறுவனங்கள் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு வரி வருவாய், வேலை வாய்ப்பு மூலம் கிடைத்த வருமானம் அனைத்தையும்விட பலமடங்கு நாட்டு வளங்களைச் சுரண்டியுள்ளனர். குறிப்பாக தண்ணீர், காற்று, நிலம், மனித உழைப்பு இதன் மதிப்பு கணக்கில் அடங்காது. இந்த பாதிப்புகளை நிச்சயமாக இவர்களால் நமக்கு திருப்பி தர முடியாது.

நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள்தான் இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், உள்நாட்டுப் பெரும் தொழில் நிறுவனங்களும் இங்குதான் குவிந்துள்ளன. இந்த மாநிலங்களில் எல்லாம் மாநில அரசின் தொழில்துறையின் மூலமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மத்திய அரசின் தொழில் வளர்ச்சிக்கான நோக்கத்திற்காக கையகப்படுத்தபட்ட நிலங்கள் மட்டுமல்லாது, நேரு காலந்தொட்டு இன்றுவரை கனரக தொழில், இராணுவப் பயன்பாடு, பொதுத் துறை நிறுவனங்களுக்கான பயன்பாடு போன்ற திட்டங்களுக்காக இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி அரசு தன்வசம் வைத்துள்ளது. இந்த நிலங்கள் விவசாய உற்பத்தியிலும் இல்லை, தொழில் துறை உற்பத்தியிலும் இல்லை. இவை பயன்பாட்டில் இல்லாத கையிருப்பு நிலம் என்று அரசின்வசம் உள்ளது.

1991-க்கு பிறகு சென்னையின் மெப்ஸ், மும்பையின் செப்ஸ், நொய்டாவின் செப்ஸ், பால்டாவின் செப்ஸ் (மேற்கு வங்கம்) போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோற்றுவிக்கப் பட்டன. உற்பத்தி மற்றும் சேவை துறையின் ஏற்றுமதி அதிகரிப்பது நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்பைப் பெருக்குவது, ஏற்றுமதியைப் பெருக்குவது போன்றநோக்கத்தை முன்வைத்தனர். கார்ப்பரேட் வரியிலிருந்து 15ஆண்டுகளுக்கு சலுகை, இறக்குமதி செய்வதற்கு உரிமம் தேவையில்லை, சேவை வரியிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளை அரசு கொடுத்தது. ஆனால் வேலை வாய்ப்பைப் பொருத்தவரை  CAG அறிக்கையின்படி SEZ மூலம் சராசரியாக கடந்த 20 ஆண்டுகளில் 8% வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கபட்டிருக்கிறது. 2006 முதல் 2013 ஆம் ஆண்டுவரை சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் நிறுவனங்கள் 83,104 கோடி ரூபாய் வரிச்சலுகைகளை அனுபவித்துள்ளன. அதுமட்டுமல்லாது, 2011 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் இலாபத்தின்மீது விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்றுவரி மற்றும் டிவிடண்ட் வரி 15% விதிக்கப்பட்டது. இந்த வரி முறையை நீக்க வேண்டும் என்றும் உடனடியாக 7.5% ஆக குறைக்க வேண்டுமென்றும் நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன.

இந்தியா முழுமையும் 436 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இதுவரை அனுமதிக்கப்பட்டன. மேலும் 32 சிபொமகளை அனுமதிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இப்போது நாடு முழுவதும் 199 சிபொம-கள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 36 சிபொமகைள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் பெரும்பாலான சிபொம-கள் ஐ.டி. துறையைச் சார்ந்தது. மொத்தமுள்ள 436 சிபொம-களில் 9% மட்டுமே உற்பத்தி துறையைச் சார்ந்தவையாகும்.

 தொழில்துறை வளர்ச்சிக்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் ஒரிசாவில் 96.6%-மும், மேற்கு வங்கத்தில் 96.3%-மும், மராட்டியத்தில் 70.1%-மும், கர்நாடகத்தில் 56.7%-மும், தமிநாட்டில் 49%-மும், (ஒன்றுபட்ட) ஆந்திரா 48.3%-மும், குஜராத்தில் 47.5% நிலமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. நிலைமை இப்படி இருக்க தொழில் வளர்ச்சியைக் காரணம் காட்டி நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரிலும் மேலும் மேலும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கி முதலாளிகளுக்கு சலுகை விலையில் கொடுப்பதன் நோக்கத்திற்கு பின்னே ஒளிந்திருக்கும் காரணம் என்னஎன்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. தொழில் புரட்சி தோன்றிய காலத்தில் பண்ணையடிமைகள் கூலி உழைப்பாளர்களாக மாற்றப்பட்டு பெரும் ஆலைகளை நோக்கித் தொழிலாளர்களாக முதலாளிகளால் திருப்பப் பட்டார்கள். இந்த வரலாறு தலைகீழாக மாறி வருகிறது. அதாவது நிலத்தை நம்பியிருக்கும் பழங்குடிகளும் கூலி விவசாயிகளும் சிறுகுறு விவசாயிகளும், பணக்கார மற்றும் பெரும் விவசாயிகளும் நிலங்களிலிருந்து துரத்தப்பட்டு நில உரிமையாளர்களாக கார்ப்ரேட் கம்பெனிகளும் உள்நாட்டு பெரு முதலாளிகளும் மாற்றப்படுகின்றனர். அதற்கான முன்னேற்பாடுகள்தான் கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக இந்தியாவில் நடந்து வருகிறது. காடு, மலை, மண், ஆறு, கடல் அனைத்தும் முதலாளிகளுக்கே சொந்தம் இதற்குப் பெயர்தான் வளர்ச்சியும் முன்னேற்றமும். இதுதான் மோடியின் தாரக மந்திரம்.

பொறுத்தது போதும் விண்ணும் மண்ணும் நமக்கே சொந்தம், மண்ணிலிருந்து மட்டுமில்லை இந்த அண்ட வெளியிலிருந்தே இந்த சுரண்டல் கும்பலை விரட்டியடிப்பது நமது தலையாய கடமையாகும். 

Pin It