‘இருப்பவர் கையிலேயே எல்லாப் பொருளும் போய்ச் சேர்ந்து, உழைப்பவன் கையில் ஒன்றுமில்லாத நிலை வந்தால் என்னவாகும் இவ்வுலக இயக்கம்?

ஒரு பொருள் அதீத ஆற்றலால் உச்ச நிலைக்குச் சென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு வந்தே தீர வேண்டும் என்பதே இயற்பியல் விதி அதுவே இயற்கையின் நியதியும் கூட.

walmart india 640ஆக மாற்றம் ஒன்றே மாறாதது. இதுதான் நம் தலைவிதி என்று ஏமாந்து போக வேண்டிய நிலை இவ்வுலகில் யாருக்கும் இல்லை என்பதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்கும்.

சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கைப் பாதையில் இரண்டறக் கலந்து விட்டது மளிகைக் கடைகள்.

மனிதன் தன் தேவைகளின்; நிமித்தம் மற்றொருவரைச் சார்ந்து வாழ்வது இயல்பு. அதுவே ஒரு சமுதாய அமைப்பைக் கட்டமைக்கிறது. இங்கு யாரும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவர்கள் அல்ல.

ஆனால் அவ்வாறு சமூகக் கட்டமைப்பில் அதிகாரம் செய்ய முற்படுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை ஏகபோக ஏகாதிபத்திய அமைப்பாக மாற்ற ஆளும் வர்க்கத்தின் துணையை நாடுகின்றன.

இந்நேர்வில் இடையில் இருக்கும் பற்பல சிறுவணிகக் கடைகள், திமிங்கலம் வாயில் மாட்டிய சிறுமீன்களாய் காணாமல் போகின்றன.

எப்படி, கடல்வாழ் சூழலில் சிறு மீன்கள் இல்லாமல் போவது கடலின் பல்லுயிர்த் தன்மையை சிதைக்கிறதோ அதைப் போலவே, சிறு மளிகைக் கடைகளின் மறைவு, உழைக்கும் வர்க்க சமூகத்தின் வேலைவாய்ப்பை சீர்குலைத்து சமூகக் கட்டமைப்பை இல்லாமல் செய்து விடுகிறது.

அண்ணாச்சிக் கடையில் அது வாங்கினேன், இது வாங்கினேன் என்ற நிலை மாறி, ஆன்லைனில் பொருள்கள் வாங்கும் காலமிது.

தமிழ் இலக்கணத்தில் ஆகுபெயர் என்ற இலக்கண வகை ஒன்று நடைமுறையில் உள்ளது. அதாவது ஒன்றைக் குறிக்கும் வண்ணம் இன்னொரு பெயரைத் தாங்கி வருவது ஆகுபெயர். உலகம் என்பது இடவாகுபெயர். உலகத்தில் வாழும் மக்களைக் குறிக்கும் வண்ணம் உலகம் என்னும் இடத்தை தாங்கி வருவது என்பது இதன் பொருள். அதைப் போலவே, அண்ணாச்சி என்னும் சொல்லும் ஒரு வகை ஆகுபெயரே. அது குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களைக் குறிப்பதல்ல. காலை 5 மணிக்கு கடையைத் திறந்து, 11 மணிவரை நின்று கொண்டே உழைத்துக் கொண்டிருக்கும் மளிகைக் கடை நடத்துவோர் மட்டுமல்லாமல், உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருமே அண்ணாச்சிகள்தான்.

மளிகைக் கடைகளில், அந்தக் கடை நடத்தும் வீட்டில் உள்ளோருக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் (தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கும் விதமாக) நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்நிய நேரடி முதலீடு என்னும் பெயரில் அனைத்து நாடுகளிலும் கடை விரிக்கும், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரம் சிறு வணிக நிறுவனங்களை மூடவும், அடிப்படை வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல் செய்யும் அடாவடிப் பொருளாதார நடவடிக்கைகளை மிகத் துல்லியமாக செயல்படுத்துகின்றனர்.

நம்மூர் மளிகைக் கடையில், மாதக்கணக்கில் கடன் வைத்து பொருள் வாங்குவோரும் உண்டு. குறிப்பாக மாதச் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் உழைக்கும் வர்க்கம், சம்பளம் கிடைத்த பின்பே மாதம் முழுவதும் தன் குடும்பத் தேவைக்கு வாங்கிய பொருட்களுக்கான தொகையை, மளிகை, காய்கறி, பால் கடைக்காரர்களுக்கு அளிப்பது மாதாந்திர பொருளாதார நடவடிக்கையின் முக்கிய அம்சம்.

இன்று, பல இடங்களில், சூப்பர் மார்க்கெட்டுகள் என்ற பெயரில், பெரிய வணிக நிறுவனங்கள் நகரின் முக்கியப் பகுதிகளில் முளைத்து விட்டன. டோர் டெலிவரி செய்து, மக்களைக் கவர்கின்றனர். இங்கே பெருமளவில் மளிகைப் பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப் படுகின்றன. அண்ணாச்சிக் கடைகளில், பேப்பரில் பொட்டலம் கட்டப்படும் பொருட்கள் பயன்படுத்தப் பட்டது. பேப்பரை தூர எறிவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

இந்நிலையில், பிளாஸ்டிக்கைத் தடை செய்வோம் என்று சூளுரைக்கும் ஆளும் அரசுகள், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களின் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து வாய் திறப்பதில்லை.

பேப்பர் பொட்டலம், சணல் கட்டுகள் என்று இயற்கையைக் காப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவை அண்ணாச்சிக் கடைகள்.

அந்நிய முதலீடு அல்ல, அழிவிற்கான முதலீடு என்று சொல்லும் அளவிற்கு இம்முதலீட்டின் பின்னணியில் பல தீமைகள் தேங்கிக் கிடக்கின்றன.

ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய நாட்டின், சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்ய பல சலுகைகள் முக்கியமாக வரிச் சலுகைகள் மத்திய ஆளும் வர்க்கத்தால் வாரி வழங்கப் படுகின்றன. இத்தகைய முதலீட்டுக்கு வரிப் பிடித்தம் கிடையாது. லாபம் வரும் நேரத்தில், முதலீட்டையும் லாபத்தையும் ஒரு சேர எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் அந்நிய நிறுவனங்கள், வங்கிகளில் வாங்கிய கடனை அப்படியே விட்டுச் செல்கின்றன. இதற்கு எந்தக் கடிவாளமும் போட ஆளும் வர்க்கம் தயாராக இல்லை.

தனியார் மயம், தாராளமயம், உலகமயம் பெற்றெடுத்த ஊதாரிப் பிள்ளையான, அந்நிய முதலீடு, செல்லும் இடமெல்லாம், சிறு வணிகர்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சீரழிவை ஏற்படுத்தி வரும் இன்றைய நிலையில், அதனைச் சீர்படுத்த எந்தப் பொருளாதார நிபுணர்களும் முன்வருவதில்லை. பதவியை இராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கா செல்வதே அப்பொருளாதார நிபுணர்களுக்கு இப்போதைய சூழலில் தெரிந்த ஒரே உபாயம்.

அமெரிக்காவின் வளர்ப்புப் பிள்ளையான வால்மார்ட், உலகமயத்தை நன்கு பயன்படுத்தி, நாடு நாடாகச் சென்று பெரு நிறுவனங்கள் வைத்திருப்போரிடமிருந்து அந்நிறுவனங்களை ஆளும் வர்க்க உதவியுடன் கைப்பற்றி, பல கோடிக் கடைகளின் வருமானத்தை கபளீகரம் செய்வதில் கவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முக்கால்வாசிப் பங்குகளை கைப்பற்றியுள்ள வால்மார்ட், தன் சிறுவணிக அழிப்புத் தொழிலை துவங்கியுள்ளது. எவ்வாறு அமெரிக்க அரசாங்கம் மற்ற நாடுகளை மிரட்டி அந்நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்ட போர் தொடுக்கிறதோ, அதைப் போலவே வர்த்தகப் போரை காரியக்கார வால்மார்ட் உலக நாடுகளில் சத்தமில்லாமல் ஆளும் வர்க்க உதவியுடன் நடத்தி வருகிறது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், வால்மார்ட்டின் வளர்ச்சி, உலக நாடுகளில் உள்ள பெருமுதலாளிகளுக்கு சற்றே கலக்கத்தைத் தந்தாலும் அம்முதலாளிகளின் வர்க்கப் பாசம் வால்மார்ட்டின் முறைகேடுகளுக்கு துணை போகச் செய்கிறது. இதனால், ஆதாரம் இல்லாத சேதாரத்திற்கு உள்ளவாது என்னவோ, சிறுவணிகர்களும், உழைக்கும் மக்களும்தான்.

தமிழகம் உட்பட, இந்தியாவின் பல்வேறு நகரங்களில், சில்லரை வர்த்தகக் கடைகளை நிறுவத் திட்டமிட்டிருக்கும், வால்மார்ட் கிராமப் பகுதிகளுக்கும் பார்சல் மூலம் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யத் திட்டமிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் முதலில் அனைத்து வாடிக்கையாளர்களையும், சிறுவணிகர்களின் தொடர்பிலிருந்து பிரித்து, பின்னர் வழக்கம் போல் தங்கள் வேலையைக் காட்டத் தயாராக உள்ளது வால்மார்ட் நிறுவனம். சொந்த நாட்டு மக்களான அமெரிக்க மக்களையே விலைவாசி உயர்வில் தத்தளிக்க வைத்த வால்மார்ட் நிறுவனம், மற்ற நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையா தரும்?

அமெரிக்க நாட்டு தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வளர்ந்த நிறுவனமான வால்மார்ட், பெரும் நிறுவனமாக இன்று பல நாடுகளில் கால் பதித்துள்ளது.

இந்நாட்டில் பல கோடி மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு இல்லை. பலரும் மளிகைக் கடை மற்றும் சிறு வணிகம் போன்ற சொந்தத் தொழில் மூலமே பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

ஏழ்மையை ஒழிப்பதென்றால், ஏழைகளை ஒழிப்பது என்ற கொள்கை உடைய மத்திய ஆளும் வர்க்கத்திடம் கருணையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது அசரிரீ கூறாத அருள்வாக்கு.

இளம் தொழில் முனைவோர் மாநாட்டிற்கு ஹைதராபாத் நகரத்திற்கு, அமெரிக்க ரியல் எஸ்டேட் தொழிலபதிராக இருந்து, அமெரிக்க அதிபராக மாறிய டொனால்ட் டிரம்பின் மகள் இவானோ டிரம்ப் வருகை தந்தபோது, அவர் கண்ணில் படாமல், அந்நகர பிச்சைக்காரர்களை நகரத்தை விட்டே துரத்தியது ஆளும் மத்திய அரசின் சாமர்த்தியமான நடவடிக்கை என்றால் அது மிகையல்ல. அத்தகைய சாமர்த்தியம் ஏழைத் தாயின் மகன் நடத்தும் அரசு என்று சொல்லிக் கொள்வோருக்கே வரும்.

இந்தியா முழுவதும் பல கோடி பாமர மக்கள் சில்லரை வணிகத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இவர்களை ஒருங்கிணைத்து புதிய உழைக்கும் வர்க்கத்தை கட்டமைப்பதற்குப் பதிலாக வணிகர் சங்கங்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் சிக்கி மூச்சு திணறிக் கொண்டிருக்கின்றன.

பெரு முதலாளிகளுக்கு தன்னைப் போன்ற முதலாளிகளின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, ஒன்று சேர்ந்து, இந்திய நாட்டின் இயற்கை வளத்தை, மக்களின் செல்வத்தை மிகுந்த உற்சாகத்தோடு, ஆளும் வர்க்கத்தின் துணையோடு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் காலமிது.

இத்தகைய சூழ்நிலையில், உழைக்கும் பாமர மக்களிடையே, ஜாதிய, மத உணர்வுகளைத் தூண்டி, பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, உழைக்கும் வர்க்கத்தை ஒன்றுபட விடாமல், தொடர்ந்து தடுக்கும் வண்ணம், மக்கள் தங்கள் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்க விடாமல், இனவாத மதவாதக் கருத்துக்களை முதலாளித்துவ ஊடகங்கள் மூலம் பரப்பி, ஆளும் அரசுகள் தங்கள் அராஜக சட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, ஜி.எஸ்.டி மூலம், சிறுதொழில் புரிவோரை, தொழிலை விட்டு விரட்டிய மத்திய அரசு, இப்போது வால்மார்ட்டுக்கு சில்லரை வர்த்தகத்தில் அனுமதி வழங்கி, தன் முதலாளித்துவ விசுவாசத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது.

கப்பலோட்டிய தமிழனின் கப்பல் போக்குவரத்தை நசுக்க முதலில் குறைந்த கட்டணத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் கப்பலை இயக்கிய ஆங்கிலேயர்கள், பின்னாளில், சுதேசி கப்பல் நிறுவனம் வலுவிழந்தவுடன் தன் ஏகபோக ராஜ்ஜியத்தை கடல் பரப்பில் நாட்டியது.

சுதேசி நாயகன் வ.உ.சிதம்பரனார் பிறந்த இம்மண்ணில், விதேசிகளான அந்நிய வால்மார்ட்டுகள் விஜயம் செய்திருப்பது, இந்திய தொழில்வளத்தை அழிப்பதற்கான துவக்கமாகவும் எச்சரிக்கையாகவும் கருதப்பட வேண்டும்.

உலக வங்கியின் உருப்படாத உத்தரவுகளுக்கு மயங்கிக் கிடக்கும் ஆளும் வர்க்கத்தினர், வளர்ச்சி என்பதை ‘வரி வசூலில்' மட்டுமே அதிகரித்து வருவது மோசமான நிர்வாகச் சூழலாகும்.

முதலாளித்துவ நிறுவனங்களின் வளர்ச்சி என்பது, ஆரோக்கியமான தொழில் போட்டி என்றில்லாமல், போட்டி நிறுவனங்களை இல்லாமல் செய்து எவ்வகை எதிர்ப்புமின்றி, லாபம் சம்பாதிப்பது. இத்தகைய ஆடுபுலி ஆட்டத்தில், பாமர மக்களின் வாழ்வாதாரம் பாதாளத்திற்குத் தள்ளப் படுகிறது.

இந்நிலையை மாற்ற, இக்கட்டான நிலையினை முறியடிக்க உழைக்கும் வர்க்கம், வர்க்கப் பாசத்தோடு அனைத்து சிறுதொழில் புரிவோரையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி உழன்று கிடக்கும் உழைக்கும் வர்க்கத்தின் சமூகக் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தருணமிது.

இன்று விவசாயம் பல இடங்களில் கைவிடப்பட்டு நலிவடைந்த நிலையில், கட்டுமானத் தொழிலையும், சிறுவணிகத்தையும் நம்பி, வாழும் பல கோடி மக்களை, பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் பெரும் சக்தியாக உழைக்கும் வர்க்கம் அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- சுதேசி தோழன், மாதவன்குறிச்சி – 628206,திருச்செந்தூர் - தாலுகா

Pin It