சங்க கால வாழ்க்கை முறை இயற்கையமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மக்களின் உணவு, தொழில், பழக்கவழக்கங்கள், பொழுது போக்குகள், மனப்பாங்கு, சமயநம்பிக்கை அனைத்தையும் சங்க இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. சங்க இலக்கிய அகநூலாகிய குறுந்தொகையில் ஐந்திணைகளின் இயல்புகள், நிகழ்ச்சிகள், அஃறிணை உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு - மூலப்படுத்துப்படுகின்றன. இவ்வக இலக்கியப்பாக்கள் முதல், கருப்பொருட்கள் இரண்டும் உரிப்பொருள் விளக்கத்திற்குப் பின்னணியாக அமைந்து மக்களின் மனஉணர்வுகளைப் புலப்புடுத்துகின்றன. பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலம் குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுக்கப்பட்டன என்பதைத் தொல்காப்பியப் பொருள்திகாரம் வழி அறியலாம். தொல்காப்பியர் உலகில் உள்ள காட்சிப் பொருள், கருத்துப் பொருள் இரண்டையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று வகைகளாகப் பகுத்தார்: மக்களின் வாழ்க்கை முறையினை இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.
 
பண்டைத்தமிழர் தம் அன்பின் ஐந்திணைகளுள் ஒன்றான முல்லைத் திணையில் முதற்பொருள் காரும் மாலையும் முல்லை என்று தொல்காப்பியம் வகுத்துக்காட்டுகின்றது. ஆவணி, புரட்டாசி ஆகிய இரு மாதங்கள் மழை பெய்யும் கார்காலமாகும். தலைவன் வினைவயிற் பிரியும் முன் தலைவியிடம், ‘கார்காலம் தொடங்குவதற்கு முன்பு வந்துவிடுவேன்’ என்று உறுதிகூறி விட்டுச்செல்கிறான். கார்காலம் தொடங்குகிறது. முதல் மழை பெய்கின்றது. ஆனால் தலைவி அம்மழையைக் கார்காலமழையாக ஏற்கவில்லை. ‘தலைவனை பொய்யாதவன் சொன்ன சொல் தவறாதவன்’ ஆகையால், தலைவி அவன் வருவதற்குள் பெய்துவிட்ட மழையை ‘வம்ப மழை’ என்று சாடுகின்றாள். அவள், அம்மழையைப் பார்த்து.
 
“வம்பு பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின், வாராரே நம் காதலர்”(குறுந்தொகை - 382)
 
என்று பேசுகின்றாள் ‘மழையே நீ கார்காலம் பருவமழை அன்று கார்காலம் தொடங்குவதற்கு முன்பே’ – என் தலைவன் வருவதற்கு முன்பே பெய்த மழை என்று பேசுகின்றாள்.

விளைமேற் சென்ற தலைவன் வினைமுடித்து இல்லம் திரும்புகின்றான். தலைவி தலைவனை எதிர்கொள்கின்றாள். அவனோடு கூடி மகிழ்கின்றாள். அப்போது மழை பெய்கின்றது. தலைவி அந்த மழையைப் பார்த்து
 
“இடிப்பிடு முரசின் இடித்திடித்து பெய்தினி வாழியோ”(குறுந்தொகை - 382)
 
என்று வாழ்த்துகின்றாள். இதனால் தலைவி மழையைத் தன் மனஉணர்வின் வெளிப்பாடுகளோடு உடனிணைத்துக் காண்பதும் அம்மழையை முன்னிலைப்படுத்தி உரையாடுவதும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த போக்கை உணர்த்துகின்றது.

பண்டைத்தமிழ் மக்கள் இயற்கைச் சூழலில் வாழ்ந்தவர்கள். அச்சூழலில் தாம் கண்ட இயற்கைப் பொருட்களைக் கூர்ந்து நோக்கி, அவற்றின் இயல்புகளைத் தெரிந்து, அவ்வியல்புகளைத் தம் எண்ண வெளிப்பாடுகளோடு இணைத்துக்கொண்டவர்கள். தலைமக்கள் களவொழுக்கத்தில் - கற்பொழுக்கக் காலங்களில் தம் அன்பின் வெளிப்பாட்டிற்குப் பறவைகளைத் துணைக்கழைத்தபான்மையைக் குறுந்தொகை புலப்படுத்துகின்றது.

 களவொழுக்கக் காலத்தில் தலைவன் தலைவியிடம் நின்னைப் பிரியேன். பிரியன் உயிர் தரியேன், விரைவில் வருவேன். என்று உறுதி கூறிப் பிரிந்து செல்கின்றான். தலைவன் கூறிச் சென்ற காலம் கடந்தநிலையில் தலைவி வருத்தமும் அச்சமும் கொள்கிறாள். தலைவனோடு தான் கொண்ட உறவை மெய்ப்பிக்க மனச்சாட்சி இல்லை ஒரு குருகு மட்டும் இருந்தது என்று உள்ளம் மருகும் நிலையை,
 
 “யாருமில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
…………………………………….
…………………………………….ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு யான் மணந்த ஞான்றே”(குறுந்தொகை - 25)
 
என்ற பாடல் தெரிவிக்கின்றது. தலைவி தம்முடைய உறவுகள் ஒரே சாட்சியாக இருந்த குருகு கூட எங்களைப் பார்க்கவில்லை. அது ஒழுகுநீரில் தனக்கு இரையாகிய ஆரல் வருவதைப் பார்த்திருந்தது. நான் என்ன செய்வேன் என்று பறவையின் போக்கைத் தன் உணர்வுகளோடு இணைத்துக் கொண்டு பேசுவது குறிப்பிடத்தக்கது.
 
அன்றில் பறவை

 அன்றில் பறவைகள் தடாமரத்தில் உயர்ந்த கிளையில் கூடுகட்டி வாழும். நள்ளிரவில் அன்றில் பறவைகள் எழுப்பும் ஒலி பிரிந்தவர் உள்ளங்களில் வருத்தத்தை மிகுவிக்கும் என்பதை,

“நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் இறவின் அன்ன
கொடுவாய்ப் பெடையோடு தடவின் ஓங்குசினைக்”(குறுந்தொகை -160)

என்ற பாடல் தெரிவிக்கின்றது. அன்றில் பறவைகள் என்றும் கூடி வாழும் தன்மையன, ஒன்று பிரியின், மற்றொன்று உயிர்தரித்தல் இல்லை. எனவே, என்றும் இணைந்து வாழும் அன்றில் பறவைகளில் ஒலி பிரிந்துவாழும் தலைவியின் ஏக்கத்தை மிகுவிப்பதைப் பாடல் உணர்வுப்பூர்வமாகச் சித்திரிக்கின்றது.

வண்டு

 தலைவன் தலைவி கூந்தலின் மணத்தைப் புகழ்கின்றாள். அவனுடைய கூந்தலின் மணத்தைக் காட்டிலும் மணமுள்ள பொருள் வேறு உள்ளதா என்று அறிய முற்படுகிறாள். அதற்குச் சரியாக விளக்கமளிக்கவல்ல, பூக்களில் தேனைத்தேறும் தும்பியின் - வண்டின் துணையை நாடுகின்றாள்.

 "காமம் செப்பாது கண்டது மொழிமோ
 மயிலியல் செறியெயிற்று அரிவைக் கூந்தலின்
 நறியவும் உளவோ நீயறியும் பூவே” (குறுந்தொகை - 2)
 
என்று கேட்கின்றான். பூஞ்சோலையில் தலைவியுடன் மகிழ்வோடு இருக்கும் தலைவன் - அவள் கூந்தலின் மணத்தால் மகிழ்வேறிய நிலையில், அச்சோலையில் பூக்களில் தேனைத் தேரும் தும்பியை அழைத்துப் பேசுவது, இயற்கையில் காணும் அஃறினை உயிரினங்களையும் தம் அக வாழ்வுடன் இணைத்துக் கொண்ட உள்ளப்பாங்கிளைத் தெரிவிக்கின்றது.
 
முல்லைமலர்

 முல்லை நிலத்திற்குரிய இருத்தல் பண்பாட்டின் அடிப்படையில் தலைவி ஆற்றியிக்கிறாள். மாலை நேரம் வந்ததும் திணைக்குரிய முல்லைக் கொடிகளில் முல்லைமலர்கள் மலர்ந்தன. வினைமுடித்துக் காலந்தாழ்த்தி வரும் தலைவன் அரும்பியிருந்த முல்லை மலர்களைக் கண்டு தலைவிக்குப் பற்றுக்கோடாக இல்லாமல் - காலந்தாழ்த்தி வந்து வருத்தம் செய்தமைக்காக தன்னை நோக்கி எள்ளி நகையாடுவதைப் போல் உணர்கின்றாள். இந்த உணர்வை,
 
 “…… நீ நின்
 சிறுவெண்முகையின் முறவல் கொண்டனை
 நகுவை போலக் காட்டல் தகமோ” (குறுந்தொகை -; 162)

என்று பாடல் சித்தரிக்கின்றது. பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கார்காலம் தொடங்குவதற்கு முன் வந்துவிடுவேன் என்று கூறிச செல்கின்றான். கார்காலம் தொடங்கி, மழை பெய்தது. அக்காலத்தில் முல்லைக் கொடிகள் அரும்புகள் அவிழ மலர்ந்து விளங்கின. அக்காட்சியைக் கண்ட தலைவியின் மனம் இன்பம் கொள்ளவில்லை. மாறாக, கார்காலம் கொடங்கியபின்னமும் தலைவன் சொன்னபடி வரவில்லையாதலால, முல்லைக்கொடிமகள் தன் அரும்புகளாகிய பற்களைக் காட்டித் தன்னை எள்ளி நகையாடுவதாக உணர்கின்றாள்.

இதனால் தலைவியின் துயரம் மிகுதிப்பட அவள் தோழியிடம்,
 
 “பெயல்புறந்தந்த பூங்கொடி முல்லை
 கொகுமுகை இலங்கு எயிறாக
 நகுமே தோழி நறுந்தன காரே” (குறுந்தொகை - 126)
 
என்று தன் ஆற்றாமையைப் பகிர்ந்து கொள்வதைக் குறுந்தொகை புலப்படுத்துகின்றது.

 பண்டைத்தமிழர் இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் முற்றும் உணர்ந்திருந்தனர். அதனால்தான் தம்முடைய அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் இயற்கையை - அஃறிணை உயிரினங்களை உடனணைத்துக் கொண்டு - கண்டு வாழ்ந்தனர். பண்டைத்தமிழரின் இயற்கையை நேசித்து, அதனோடு இயைந்து வாழ்ந்த வாழ்கை, இயற்கையை நேசிக்க மறந்து, அதனை அழிக்க முனைந்துவரும் இன்றைய நூற்றாண்டு மக்களாகிய‌ நாம் என்றும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

- முனைவர் பூ.மு.அன்புசிவா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்- 641 028 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It