அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் 28, 2013 அன்று ரூ.68.80 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி என்பது திடீரென ஏற்பட்டுவிடவில்லை. டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது மட்டுமல்ல எப்போதுமே இருந்ததில்லை. இப்போதைய வீழ்ச்சியும் ஒரே நாளில் திடீரென ஏற்பட்டுவிடவில்லை. 1990 - களிலேயே ரூபாயின் மதிப்பு அதள பாதாளத்தில் விழத் தொடங்கிவிட்டது. அதிலும் கடந்த சில மாதங்களில் இதன் அளவு மிகத்தீவிரமாகியே வந்தது. கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே இதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு....

ஆண்டு   மதிப்பு
1950-60   ரூ.4.76
1970-80   ரூ.11.36
1980-90   ரூ.16.22
1990-2000   ரூ.35.43
2000-2005   ரூ.45.31
2005-2013   ரூ.68.80

நடப்புக்கணக்கு பற்றாக்குறையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என அரசும், பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர். இதன்படி இந்தியப் பொருளாதாரத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது இப்போது மட்டுமல்ல எப்போதுமே நீடிக்கிறது என்பதும் இந்தியப் பொருளாதாரம் ஒரு போதும் வளர்ச்சி நிலையில் இருந்ததே இல்லை என்பதும் தெளிவாகிறது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது ஏற்றுமதியினால் கிடைக்கும் அந்நிய செலாவணிக்கும், இறக்குமதியினால் கிடைக்கும் அந்நிய செலாவணிக்கும் இடையிலான பற்றாக்குறையின் அளவே ஆகும். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரித்தால் பற்றாக்குறையும், இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகரித்தால் உபரியுமாகும்.

மேலே கண்ட புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துவது எப்போதுமே இந்தியா ஏற்றுமதியை விட இறக்குமதியையே அதிகமாக செய்து வருகிறது என்பதைத்தான். இறக்குமதி என்றால் ஒரே வகையிலானதாக அதாவது பாதகமானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மூலதனப் பொருள்களின் இறக்குமதி ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை பறைசாற்றும் கூறாகவும் இருக்க முடியும். அது இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்களை உற்பத்தி பொருட்களாக்கி ஏற்றுமதி செய்வதன்மூலம் மட்டுமே வலிமையானதாக அமையும். இந்த அடிப்படையிலேயே தற்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் “பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் தங்கத்தின் இறக்குமதிக்கு ஆகும் அந்நிய செலாவணி செலவை கட்டுப்படுத்த வேண்டும். இதுவே தற்போதையை பொருளாதார நெருக்கடிக்கு காரணம்” என்றும் கூறியிருக்கிறார். குறிப்பாக தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது மத்திய அரசு. ஆனால் மூலதனப் பொருட்களின் இறக்குமதியின் அதிகரிப்பைப் பற்றி அவர்கள் வாயே திறக்கவில்லை. இதன்முலம் மூலதனப் பொருட்களின் இறக்குமதி என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக ஆட்சியாளர்கள் உருவகப்படுத்துகின்றனர், அதே வேளையில் தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைக்குமாறும், பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை குறைக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

தங்கத்தின் இறக்கும‌தியை குறைப்பதற்கான வரி உயர்வு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டாலும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு இப்படிப்பட்ட தடைகளை அரசுகளால் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால் பெட்ரோலிய பொருட்களுக்கான தட்டுப்பாடு வாகன உற்பத்திக்கு பாதகத்தை ஏற்படுத்தி அது அந்நிய கார் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதிக்கும். இது அவர்களின் மூலதன நடவடிக்கைகளை சுருக்குவதோடு உலக அளவில் இந்தியாவின் மீது அவநம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும். இது நேரடி முதலீடுகளை நீண்டகால அளவிலும், பங்குச்சந்தை வழியிலான முதலீடுகளை உடனடியாகவும் பாதிக்கும். பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறும் நடவடிக்கை அந்நிய செலாவணி கையிருப்பை திவாலாக்கிவிடக்கூடிய தன்மையை உள்ளடக்கியதாகும். ஆகவே மத்திய அரசின் அறிவிப்புகள் அனைத்தும் போலியானவைகளே ஆகும்.

எப்படியானாலும் அந்நிய முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை தடையின்றி செயல்படுத்தவும், அதற்குரிய தடைகளை தூக்கியெறியவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை அதற்குரிய சாதகமான அம்சமாகவும் கருதுகிறது.

அதாவது உலகமயமாக்கல் கோருகின்ற எஞ்சிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுவே சரியான வாய்ப்பாகவும் கருதுகிறது. இதை பிரதமர் மன்மோகன் சிங் ஆகஸ்ட் 30 அன்று ரூபாய் மதிப்பு சரிவு சம்பந்தமாக பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கை மற்றும் ஆற்றிய உரையிலும் குறிப்பிட்டுள்ளார்.

”ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசு மட்டுமே காரணமல்ல, சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தடையாக உள்ள அனைவருமே இதற்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.

அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குத் தேவையான தங்கு தடையற்ற வாய்ப்புகளையும், அவர்களின் லாபத்தை அதிகரிக்கச் செய்வதற்கான தொழிலாளர்களை சுரண்டுவதற்கு தடையாகவுள்ள தொழிலாளர்களின் காப்பீடு, ஓய்வூதிய உத்தரவாதங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும், நாட்டுமக்களின் நலன்களுக்கு மானியங்களைக் குறைப்பது, இல்லாமல் செய்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ள தடைகளையும் உடைக்க வேண்டும். இதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் மேற்கண்ட கோரிக்கையை இந்தியாவில் உள்ள எந்த ஒரு எதிர்க்கட்சியும் சரியான மாற்றுத்தீர்வை முன்வைத்து நிராகரிக்க வில்லை. மாறாக அரசியல் உள்நோக்கிலேயே உப்பு சப்பற்ற வகையில் கூச்சல் போட்டுள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் கையாலாகாத்தனமே நெருக்கடிக்கான காரணம் என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை சரிசெய்து விடுவோம் என்றும் பூடகமாக கூறுகின்றனர். ஆனால் தற்போதைய இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை எப்படி சரிசெய்வோம் என்பதை கூறுவதில்லை. இல்லாத ஒன்றை எப்படிக் கூறமுடியும்?!

மத்திய அரசு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு எஞ்சிய சீர்திருத்தங்களை நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறது. இந்த நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு தமது அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உள்ள வேறுபாடே தவிர அடிப்படையில் வேறுபாடு ஏதுமில்லை. இதை நிரூபிக்கும் வகையில்தான் நடப்புக்கணக்கு பற்றாக்குறையின் அளவின் அதிகரிப்பு மற்றும் மூலதனப் பொருள் இறக்குமதியின் அளவு அதிகரிப்பின் புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நடப்புக் கணக்கு பற்றாக்குறையின் அளவு

வ.எண் ஆண்டு டாலர் மதிப்பு
1 1991-2001 3500 கோடி
2 2004-05 2700 கோடி
3 2005-07 10,000 கோடி
4 2007-08 16,000 கோடி
5 2008-09 28,000 கோடி
6 2009-10 28,000 கோடி
7 2010-11 48,000 கோடி
8 2011-12 78,000 கோடி
9 2012-13 89,000 கோடி

மூலதனப் பொருள் இறக்குமதியின் அதிகரிப்பு அளவு.

வ.எண் ஆண்டு டாலர் மதிப்பில்
1 2004-05 2550 கோடி டாலர்
2 2005-07 3800 கோடி டாலர்
3 2007-08 4700 கோடி டாலர்
4 2008-09 7000 கோடி டாலர்
5 2009-10 7200 கோடி டாலர்
6 2010-11 6600 கோடி டாலர்
8 2011-12 7900 கோடி டாலர்
9 2012-13 9900 கோடி டாலர்
10 2013-14 9150 கோடி டாலர்

மேலே கண்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான முன்னறிவிப்பு பலகை என்பதை அறியாதவர்கள் அல்ல அரசும், எதிர்கட்சிகளும்! ஆனால் இதை எதிர்பார்த்தே அவர்கள் காத்துக் கிடந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டு உற்பத்தியோ 56 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது என்றால் ஏற்றுமதி மட்டுமல்ல, உள்நாட்டில் விற்பனைக்கான சந்தையும் அதற்கு இல்லை என்பதும் தெளிவாகிறது. இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்கள் ஏற்றுமதிக்காக அல்லாமல் இந்திய மக்களின் தலையில் கட்டுவதற்கே கொண்டு வரப்படுகின்றன.

உலக அளவில் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதியின் அளவை வெகுவாக குறைத்துவிடுகிறது. இதுவும் நடப்புக்கணக்குப் பற்றாக்குறைக்கான காரணம் என்கிறார்கள். இது உண்மை என்றால் இதற்கு முன்னர் எப்போதுமே இதே நிலைதானே நீடித்து வருகிறது, எப்போதுமே ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்ற உண்மை தெளிவாகத் தெரியும் போது, அதிலும் உலக மயமாக்கல் கொள்கை நடைமுறைப்பட்ட பின்னர் மூலதனப் பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கை எதையுமே அரசுகள் எடுக்கவில்லை. மூலதனப் பொருட்களின் இறக்குமதிக்கு இணையாக சந்தைக்கான வாய்ப்புகள் பற்றி கணிக்காதது ஏன்? சந்தைக்கான வாய்ப்புகள் சுருங்கி வரும்போதோ (அ) அது இல்லாமல் போகும்போதே மூலதனப் பொருட்களின் இறக்குமதிக்கான அளவை குறைக்காதது ஏன்?

ஆகிய வினாக்களுக்கு ஆளும் கட்சியோ, எதிர்கட்சிகளோ பதில் ஏதும் கூறுவதில்லை. இதற்கு பதில் கூறமுடியாதவர்கள்தான் இந்த நெருக்கடியை தீர்க்கப் போவதாக கூறுவதை நாம் நம்பவேண்டும்!

ஒரு மனிதனின் உடல் தேவைக்கு ஏற்பவே உணவை உட்கொள்ள முடியும், உட்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு மாறாக திணிக்கப்படும் உணவு வாந்தியாகவோ, வயிற்றுப் போக்காகவோ நிராகரிப்பிற்கு உள்ளாகிறது. அதைப் போன்றுதான் இந்தியப் பொருளாதாரமும் அதன் சொந்த தேவைக்காக அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்காக இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறது. இப்படி திணிப்பிற்கு உள்ளான இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மரணப் படுக்கையில் கிடத்திவிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்கள் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, அதன் நலன்களுக்காக என்று இந்திய ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் கூறினாலும், அவைகள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்பதைத்தான் நடப்புக்கணக்கு பற்றாக்குறையும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.

மூலதனப் பொருட்களின் இறக்குமதி அளவின் அதிகரிப்பு பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கானதே ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளோடும், உலகின் வேறு எந்த ஒரு நாட்டோடும் ஒப்பிடும் போது மிகக் குறைந்த மூலதனத்தில் அதிக லாபமீட்டும் வகையில் மிகக் குறைந்த கூலிக்கு மனித உழைப்பு மலிவாகக் கிடைக்கும் நாடு என்ற அடிப்படையிலேயே மனித உழைப்பை அதிகம் கோரும் உற்பத்தி பிரிவுகளை இந்தியாவில் அமைக்கின்றன. இதனோடு மிகக் குறைந்த விலையில், மிக மலிவாக இந்தியாவில் கிடைக்கும் மூலதனப் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும் இந்திய அரசினால் வழங்கப்படும் வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளின் மூலமும் தமது லாப விகிதத்தை உயர்த்திக் கொள்கின்றன. இதை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே தொழிலாளர்களின் காப்பீடு, மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை இல்லாமல் செய்யுமாறு இந்திய அரசுக்கு நெருக்குதலும் தருகின்றன.

இதைப் போன்ற உலகமயமாக்கல் கொள்கையின் நடைமுறை கடப்பாடுகளை ஏற்க மறுக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் நேரடி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் திணிக்கின்றன. இந்த வகையில் இந்தியா முதல் வகையைச் சேர்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனாலேயே தனது தகுதிக்கு ஏற்ப முதலாவதாக திவாலாகும் நாடாகவும் உள்ளது.

மூலதனப் பொருட்களின் இறக்குமதி சுமை பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காக இந்திய மக்களின் தலையில் சுமத்தப்படுகின்றன.

அமெரிக்க மக்களின் மொத்த மக்கள் தொகைக்கு நிகராக வாங்கும் சக்திபடைத்த மக்கள் தொகையையும், அளவிலா இயற்கை வளங்களையும் கொண்டுள்ள நாடு இந்தியா. இதனோடு மலிவான மனித உழைப்பும் அளவில்லாமல் கொட்டிக்கிடக்கும் நாடும் இதுதான்.

எனவேதான் இந்தியாயில் மலிவாக கிடைக்கும் மூலப்பொருட்களையும், மனித உழைப்பையும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடுகின்றன, அதிக மனித உழைப்பைக் கோராத நுட்பமான உயரிய தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் உதிரிபாகங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தமது தாய்நாடுகளில் அமைத்துள்ள உற்பத்தி பிரிவுகளில் உற்பத்தி செய்து, அதைக் கொண்டு பிணைக்கப்படும் பொருட்களை இந்திய மக்களின் தலையிலேயே கட்டுகின்றன. எந்திர உதிரிப்பாகங்களை மூலதனப் பொருட்களாக அதாவது கச்சாப்பொருட்களாக காட்டி இறக்குமதி செய்து ஏய்க்கின்றன. இந்த உண்மை மிக நன்றாகவே தெரிந்தே இந்திய அரசு அவற்றை அனுமதிக்கிறது, இதன் மூலம் அந்நிய செலவானி கையிருப்பு கரைவதுடன், அரசுக்கான வரிவருவாயும் பெருமளவில் குறைகிறது. உண்மையில் நாட்டு நலனின் மீது அக்கறையுள்ள அரசாக இருக்குமானால் பன்னாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உயரிய தொழில்நுட்ப உதிரிப்பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும், ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை பெருமளவு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவைகளுக்கு இந்தியாவில் உற்பத்திக்கான அனுமதியை வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடையாது என்ற நிபந்தனையையும் விதிக்க வேண்டும்.

இதற்கு மாறாக, இந்திய மக்களின் வாங்கும் சக்தியை மேலும் அதிகரிக்கும் வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்குதல் தருகின்றன.

இதற்காக இந்திய மக்களின் வரிப்பணத்தை, - அந்நிய நாடுகளிடம் பெறும் கடன் உட்பட – இந்திய மக்களின் மேட்டுக்குடியினர் கொள்ளையடிப்பதற்கு கதவுகள் அகல திறக்கப்பட்டுள்ளன. இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக செயல்பட்டு நாட்டின் இயற்கை செல்வங்களையும், மக்களின் உழைப்பையும் தம் பங்குக்கு இரண்டாம் முறையாக கொள்ளையடிக்கின்றனர்.

ஆனாலும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பசிக்கு இவைகளும் போதுமானவைகளாக இல்லை.

பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பசிக்கு தன் பங்குக்கு தீனி போடும் வழிமுறைகளை இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் கையாளுகின்றன. இந்த வழிமுறைகள் மூலமாக கரும்பு சாறு பிழியப்படுவதைப் போன்று பலமுறை மக்கள் சாறு பிழியப்படுகிறார்கள்.

இதற்காகவே பல்வேறு இலவசத் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து நடைமுறைப்படுத்துகின்றன. இந்திய மக்களில் இன்னமும் 80 கோடி பேர் ஊட்டச்சத்து பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளோரில் 60 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.

உலகிலேயே மிகவும் வறுமையான நாடுகள் என்று கருதப்படும் ஆப்பிரிக்க நாடுகளைவிட இந்தியாவில்தான் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் என்று ஐநா புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மனிதர்களின் அடிப்படைத் தேவையான உணவைக் கூட முழுமையாக பெறமுடியாத இந்தியாவில்தான் செல்போன்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டையும், இதன் மூலம் இந்தியா வல்லரசாகி வருவதன் ஆதாரம் என்றும் இந்திய ஆட்சியாளர்களால் பெருமை பொங்க பேசப்படுகிறது.

இந்தப் பெருமை போலியானதும், பொய்யானதும் என்பது அதைக் கூறுபவர்களுக்கே நன்றாகத் தெரியும் என்றாலும் அதை அவர்கள் விடாப்பிடியாக கூறுவதற்குக் காரணம் நாட்டைப் பற்றி மக்களாகிய நமக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதால்தான்!

மக்கள் தமது உழைப்பிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து தமது அன்றாட உணவுத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை எப்படி வாங்க முடிகிறது?

இதற்கான அடிப்படையான காரணம் இந்திய மக்களிடையே நிலவும் போலியான, நேர்மையற்ற வாழ்வியல்முறையும் பண்பாட்டுக் கூறுகளும் மற்றும் இதை ஊக்குவிக்கும் ஆட்சியாளர்களின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்.

இந்தியாவில் எல்லா காலங்களிலும் அன்றிலிருந்து இன்று வரை சமூகத்தில் முன்னேறிய பிரிவினரின் பண்பாடுகளும், வாழ்க்கை முறைகளுமே ஒட்டுமொத்த மக்களுக்கான வழிகாட்டிகளாக உள்ளன. உழைக்கும் மக்கள் என்றுள்ள மக்கள் பிரிவினர் அன்றிலிருந்து இன்றுவரை தமக்கான வாழ்வியல் நெறிமுறைகள் என்று எதையும் உருவாக்கிக்கொண்டதும் இல்லை, உறுதியாக அவற்றை கடைபிடித்ததுமில்லை. சமூகத்தில் மேல்நிலையில் உள்ளவர்களின் வாழ்வியல் முறைகளும், பண்பாடுகளுமே தமக்கானவைகளாக கொண்டிருப்பவர்கள்.

அக்காலத்தில் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வியல் முறையை தீர்மானிப்பவர்களாக மேல் வகுப்பினரே இருந்தனர், எனவே அவைகள் நிச்சயமான ஏற்றத் தாழ்வுகளை வெளிப்படையாக கொண்டிருந்தன. இன்று அவைகள் அதே வடிவத்தினால் அல்லது ’பார்த்து ஒழுகுவது’ என்ற அடிப்படையில் பின்பற்றப்படுகின்றன. இதன் மூலம் ஆளும் வர்க்க பண்பாடுகள் தவிர்க்க வியலாத பெரும் சக்தியாக வளர்ந்துள்ளன‌. இவைகள் தவிர்க்கவியலாமல் ஒவ்வொருவரிடத்திலும் தம்மையும் சுரண்டுவோரின் ஒரு பகுதியினராக தம்மை கருதிக் கொள்ளும் மனோநிலையை உருவாக்கி உள்ளது.

இப்படியான பரவலாக்கம் மேட்டுக்குடியினரின் பண்பாட்டைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களின் எண்ணிக்கையை மேலும் விரிவடையச் செய்துள்ளது. இதனால் ஒடுக்குவதற்கு தேவையான வாய்ப்புகள் அனைத்தும் ஒவ்வொருவரிடமும் மேலும் கூர்மைப்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக மேட்டுக் குடியினரின் – மேல்சாதி – மேல் குலத்தினரின் பண்பாடுகள், வாழ்வியல் முறைகள் அனைவருக்குமானவைகளாக ஆக்கப்பட்டுள்ளன. இது ஒரு வகையில் இவர்களிடையே இடைவெளியை இல்லாமல் செய்து விட்டதைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. உண்மை இதற்கு நேர்மாறானதாகும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய மேல்சாதி – மேட்டுக்குடிகளின் வாழ்க்கைத் தரத்தையே நாற்பது ஆண்டுகளுக்குப் பின் கீழ்சாதி, கீழ்தட்டு மக்களில் ஒருசிலர் அடைவதற்கான வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஆனாலும் இவ்விரு பிரிவினருக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வின் இடைவெளி குறையவில்லை என்பதோடு மேலும் அது அதிகரித்துச் செல்கிறது. ஆனாலும் இந்த உண்மையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அவைகளின் வழிமுறை வடிவம் மாறிவிட்டுள்ளது. முன்பு அது நேரடி ஒடுக்குமுறையின் மூலம் செய்யப்பட்டது. இப்போது அது தனிநபர் திறமை என்ற அடிப்படையில் நயவஞ்சகமாக செய்யப்படுகிறது.

இந்த நயவஞ்சகமான வடிவமாற்றம் மேல்சாதி, மேட்டுக்குடியினரின் பண்பாட்டு வாழ்வியல் முறைகளையே தமது வாழ்க்கையின் வழிகாட்டியாக சுதந்திரமாக கற்பனை செய்து கொள்ளும் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கியுள்ளது.

இப்படி பெரும்பான்மை மக்களுக்கு ’அதைப் போல’ என்ற கருத்தாக்கம் உலக மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதாயத்தை பெற்றுத் தரும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

’அதைப் போல’ என்ற போலியான வாழ்வியல் கோட்பாடுதான் அனைவரையும் செல்போன் வாங்கத் தூண்டுகிறது. இதுதான் கஞ்சிக்கு வழி இல்லாதவனையும் திருமணத்தின் போது பெண்வீட்டாரிடம் இருசக்கர வாகனத்தை வரதட்சணையாக கட்டாயமாக வாங்கத் தூண்டுகிறது. இதைத்தான் சமூகவியலாளர்கள் நுகர்வு மோகம் என்று அழைக்கின்றனர்.

’அதைப் போல’ என்ற வாழ்வியல் முறையை, பண்பாட்டை, நுகர்வு மோகத்தை – மேலும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ந‌டைமுறைப்ப‌டுத்துகின்றனர். மக்களின் வாங்கும் சத்தியை அதிகரிக்க அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல் என்ற வகையிலான பொருள் உற்பத்தியை உருவாக்குவதற்கு மாறாக, இலவசங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயத்தைத் தரும் வகையிலான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இதற்காக அரசின் நிதி, மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கொட்டித்தரப்படுகிறது. இவ்வகையான நடவடிக்கைகள் மூலம் மக்களிடமிருந்து அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் கறக்கும் நிதி, மக்களுக்கான இலவசங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திருப்பிவிடப்படுகிறது. அப்பொருட்கள் இல்லாமல் இனி வாழமுடியாது என்ற பண்பாட்டு அடிமைகளாக மக்கள் ஆக்கப்படுகின்றனர்.இந்த அடிமைத்தனம் மக்களின் சமூக அக்கறை இன்மையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

இதனோடு இலவச உணவு தானியங்கள் வழங்குதல் போன்றவைகளின் மூலம் மக்களின் உழைப்பு வருவாயையும் நுகர்வு மோகத்தை பிரபலமாக்குவதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பிடுங்கிக் கொள்கின்றன.

அரசின் ஒவ்வொரு சிந்தனையும் செயல்பாடும் நாடு, நாட்டு மக்களின் நலன் என்பதற்கு மாறாக பன்னாட்டு நிறுவனங்களின் நலனாக மட்டுமே உள்ளது என்பதை இது தெளிவாக்குகிறது.

இலவசத் திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் நிதியை நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வியல் ஆதாரமான விவசாயத்தை லாபகரமாக மாற்றுவதற்கு பயன்படுத்தினால், நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து நிலையான, உத்தரவாதமான தேசிய சந்தை உருவாக்கத்திற்கான அடித்தளத்தை கட்டமைக்க முடியும். இது தேசிய முதலாளித்துவதை வளர்த்து நேர்விகிதத்தில் இது தன்பங்கிற்கு மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும்.

இப்படி கட்டப்படும் சங்கிலிப் பிணைப்பிலான பொருளாதார அடித்தளம்தான் இப்போது வீசுவதைப் போன்ற சூறாவளிகளை தடுத்து நாட்டைப் பாதுகாக்கும் மாங்குரோவ் காடுகளாகத் திகழும்.

ஆனால் தற்போதைய நிலையில் இந்தியப் பொருளாதாரமோ அதன் உள்ளிருந்தே உறிஞ்சிக் கொழுக்கும் குடற்புழுக்களைப் போன்று பன்னாட்டு நிறுவனங்களால் உறிஞ்சப்பட்டு மரணப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தைப் போன்று உலகில் உள்ள வேறு எந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த அளவிற்கு உறிஞ்சியிருந்தால் அவைகள் முற்றாக பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே வீழ்ந்திருக்கும். ஆனால் இந்தியப் பொருளாதாரம் அப்படிப்பட்ட நிலையை அடையாததற்கு இந்தியப் பண்பாடே நம்மை பாதுகாப்பதாகவும் பார்ப்பன பயங்கரவாத கும்பலான இந்து மதவெறி அமைப்புகள் கூறுகின்றன. இதையே அவைகள் மிகப் பெரிய அளவிலான பிரச்சாரமாகவும் செய்து வருகின்றன.

மேற்கண்ட பார்ப்பன பயங்கரவாத அமைப்புகளின் கூற்றை நாம் முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. அவற்றில் அடிப்படை உண்மை இருக்கவே செய்கிறது. ஆனால் அது நேர்மறையில் அல்லாது எதிர்மறையில் உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

’கட்டியாக தின்ன‌ முடியாவிட்டால் கரைத்துக் குடிப்போம்’, என்ற இந்திய மக்களின் பண்பாடுதான் மிகத்தீவிரமான நிலையிலும் இந்தியப் பொருளாதாரத்தில் வெளிப்படையான விளைவுகளை தடுத்து நிறுத்துகின்றன.

வெங்காயம் விலை நாற்பது ரூபாய் விற்கும்போது ஒரு கிலோ வாங்கும் ஒருவன், அதுவே நூறுரூபாய் அளவுக்கு உயரும் போது அரைகிலோவோ, அதற்கு குறைவாகவோ குறைத்துக் கொள்கிறான். எந்த அளவுக்கு விலைவாசி உயர்கிறதோ அந்த அளவிற்கு வாங்கும் அளவை குறைத்துக் கொள்கிறான்.

’விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்ற இந்த முறை இந்திய மக்களின் வாழ்வியலின் பிரிக்க முடியாத அங்கமாக இன்னமும் திகழ்கிறது. இந்தப் பண்பாடு அனைவராலும் உயர்வானதாகவும் போற்றப்படுகிறது. இது நுகர்வுப் பண்பாட்டுக்கு எதிரான ஆயுதமாகவும் புகழப்படுகிறது.

ஆனால் இந்திய மக்களின் இந்த இயல்பு மற்றவர்களால் கூறப்படுவதைப் போன்று சிக்கனம் என்பதை மட்டுமே மையக்கருவாக கொண்டது அல்ல. இந்தியாவில் கர்ப்பிணி பெண்களில் பெரும்பான்மையினர் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களாக உள்ளனர் என்ற தகவலும், இந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் வருங்கால சந்ததியினரின் மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி மோசமான பாதிப்பிற்கு உள்ளாவதால் மொத்த நாட்டின் நலனும் பாதிக்கப்படுகிறது என்பது அதன் விளை பொருளாக இருக்கும்போது இந்தப் பண்பாட்டின் மையக்கரு சிக்கனம் என்பதையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. மனிதர்களின் உயிர்வாழ்வுக்கான அத்தியவாசியத் தேவையான உணவுத் தேவை நிறைவடைந்த பின்னர்தான் சிக்கனம் என்பதற்கான தேவையைப்பற்றி பரிசீலிக்க முடியும்.

ஆனால் உணவுத்தேவை கூட நிறைவடையாத ஒரு நாட்டில் இந்தப் பண்பாடு சிக்கனம் என்ற வறையறைக்கு உட்பட்டதாகக் கூறுவது இட்டுக்கட்டி கூறுப்படும் கட்டுக்கதையே ஆகும்.

’கட்டியாக தின்ன‌ முடியாவிட்டால்’, என்ற நிலை ஏற்படுகிற போதே, அது ஏன் என்ற கேள்வி மனிதர்களிடையே எழவேண்டும். அதை எப்படி சரி செய்வது என்ற ஆய்வு தொடங்கியிருக்க வேண்டும. ஏன் என்ற கேள்வி மிருகங்க‌ளிடம் எழாதது என்பது அதன் இயல்பு. மனிதர்களிடம் அந்த வினா எழவில்லை என்றால் அம்மனிதர்களிடம் சமூகத்தன்மையை விட மந்தத் தனமே மேலோங்கி இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இது தான் ’எல்லாம் அவன் செயல்’ என்ற மத சிந்தனா முறையாக இந்திய மக்களிடையே வேரூன்றியுள்ளது. இதுதான் இந்துத்துவப் பண்பாடாகவும் புகழப்படுகிறது.

இதுதான் பார்ப்பன பயங்கரவாத முகாமைச் சேர்ந்த குருமூர்த்தி போன்றவர்கள் குறிப்பிடும் அந்த இந்துப் பண்பாடாகும். இந்த மந்தைத்தனம் மேலோங்கியுள்ள இந்திய மக்களின் பண்பாடுதான் உலகில் உள்ள நாடுகளிலேயே பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்ட நாடாக, இதன் காரணமாக அதன் நேர்விகிதத்தில் சுரண்டப்படும் நாடாக இந்தியா மாற்றப்பட்டிருந்தாலும், ஏதும் நடவாததைப் போன்ற பாவனையுடன் இருக்க இந்நாட்டு மக்களால் முடிகிறது.

இப்போது மட்டுமல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அலெக்சாண்டர் அதன்பின்னர் அலை, அலையாக இந்த நிலப்பரப்பின் மீது படையெடுத்த படையெடுப்பாளர்கள் அத்துனை பேருக்கும் இன்று வரை இந்தியா என்று இன்று அறியப்படும் இந்தப் நிலப்பரப்பு கொள்ளையிடுவதற்கான சாதகமான களமாக திகழ்கிறது என்றால் அதற்கு இந்த சமூகத்தன்மை குறைவான இந்நாட்டு மக்களின் சிந்தனாமுறையும் அதற்கான அடித்தளமும் உள்ளதே காரணமாகும்.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மட்டுமல்ல, இந்நாட்டில் நிலவும் அத்துனை இழிவுகளையும், சீர்கேடுகளையும் களைவதற்கான முதன்மையான தேவை சமூகத்தன்மையை உயர்த்துவதே ஆகும்.

இந்த சமூகத்தன்மையின் வளர்ச்சியும், மேம்பாடுமே நாடு, நாட்டுப்பற்று, தேசம், தேசிய நலன், தேசியப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கான தேவையை உணர்த்தும். இப்படியான வளர்ச்சி நாட்டின் நலன் என்ற அடிப்படையிலான தீர்வுகளை அரசுகள் முன்வைக்க முன்நிபந்தனையாகும்.

நிர்பந்தமாயினும், தற்காலிகமானதாயினும், உறுதியற்றதாயினும் கூட இந்த விவகாரத்தில் தேச நலன் என்ற அடிப்படையிலான அரசின் தலையீடுதான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தற்காலிகமாக தடுத்து நிறுத்துகிறது.

இது நமக்கு உணர்த்துவது இவைகள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதைத்தான். அதாவது தேசியப் பொருளாதாரம் கட்டியெழுப்பட வேண்டும் என்பதை உறுதியாக நமக்கு உணர்த்தியுள்ளது.

மொத்தத்தில் தேசியப் பொருளாதாரத்திற்கும் அதன் நலன்களுக்கும் எதிரான உலகமயமாக்கலுக்கு எதிரான செயல்பாடுகள் உடனடியாகவே துவக்கப்பட வேண்டும்.

உலகப் பொருளாதார மந்தநிலை இந்தியாவிற்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளையுமே பாதிக்கக் கூடிய ஒன்றாகும்.

அமெரிக்க மத்திய வங்கி மாதத்திற்கு 8500 கோடி டாலர் அளவுக்கு பத்திரங்கள் வாங்கும் தனது திட்ட அளைவை வெகுவிரைவில் குறைக்கப் போவதாக அமெரிக்க கூட்டரசு வங்கித் தலைவரின் மே 22 அன்றைய அறிவிப்புதான் இந்தியா மற்றும் உலகமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நாடுகளை அதிலும் குறிப்பாக பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் நாணய மதிப்பையும் வீழ்ச்சி அடைவதற்கான முதல் தூண்டுதலாக அமைந்தது. அதனோடு நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள இந்தியா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் முற்றாக பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்துள்ளன என்பதையும் காட்டிவிட்டது.

அமெரிக்க வங்கித் தலைவரின் அறிவிப்பு வெளிநாடுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களிடம் தமது முதலீட்டுக்கு உரிய லாபம் இல்லாமல், அவைகள் தமக்கு இழப்பை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. இதன்காரணமாக அவர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளில் இறங்கி இந்தியாவில் தாங்கள் முதலீடு செய்த 1100 கோடி டாலர்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதனால் இந்தியாவின் டாலர் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. டாலருக்கான தேவை அதிகரிப்பு அதன் மதிப்பை செயற்கையாக சந்தையில் உயர்த்தி ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைய வைத்தது.

இந்த விளைவுகளை எதிர்பார்த்தே அமெரிக்க மத்திய வங்கி, பத்திரங்கள் மீதான தனது முதலீட்டை குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டது. இது நன்கு திட்டமிட்ட அமெரிக்காவின் அறிவிப்பாகும்.

ஆனால் அமெரிக்காவின் இந்த அக்கிரமமான நடவடிக்கையைப் பற்றி இந்தியாவிலுள்ள எந்த ஒரு அரசியல் கட்சிகளும், பொருளாதார நிபுணர்களும் வாய்திறப்பதே இல்லை.

மாறாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் கூட தனிநபர்களின் திறமை மீதே ஏற்றி வைக்கின்றனர்.

இதன்மூலம் அமெரிக்காவும், அதன் தலைமையிலான உலகமயமாக்கல் கொள்கையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட எல்லாம் வல்ல இறைவனின் இடத்திற்கு உயர்த்தப்படுகின்றன. இதன் வாயிலாக இதை சரி செய்வதற்கான பாதையும் ஏதுமில்லை என்று சாராம்சமாக அறிவிக்கின்றனர்.

ஆனால் அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் வளரும் நாடுகள் மட்டுமல்ல உலகப் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றான ஜப்பான் மற்றும் அமெரிக்காவையே இன்று மிரளவைக்கும் சீனா ஆகிய நாடுகளின் நாணய மதிப்பையும் நெருக்கடிக்கு தள்ளிவிட்டன.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு இவ்விரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவற்றில் இவ்விரு நாடுகளும் தமக்கிடையிலான வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் அல்லாது தமது சொந்த நாணயங்களின் மூலம் செய்து கொண்டன. இதன் மூலம் டாலருக்கான தேவையை குறைத்துக் கொண்டு தமது நாணய மதிப்பை நிலைநிறுத்திக் கொண்டன. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை திக்குமுக்காட வைத்தது.

ஆனால் இப்படியொரு எதிர் நடவடிக்கையை எடுக்க வேண்டுமானால் அதற்கு தேசியப் பொருளாதாரம் என்பது முன் நிபந்தனையாகும். தேசியப் பொருளாதார அடித்தளமில்லாத அல்லது பலவீனமான அடித்தளத்தை கொண்ட நாடுகளால் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. இந்தப் பொருளாதார அடித்தளம் இருந்தால் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராக எதிர்வினையாற்றும் ஆற்றலையும், துணிவையும் ஆட்சியாளர்களுக்கு வழங்கும்.

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளாக ஐரோப்பிய நாடுகள் விளங்கினாலும், அவைகள் தமது நாடுகளின் நலனைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தையும், தமக்கிடையே பொது நாணய முறையையும் ஏற்படுத்திக் கொண்டு அமெரிக்க கொள்ளையனிடமிருந்து தற்காத்துக் கொள்ள தகுந்த பாதுகாப்பு அரணை அமைத்துக் கொண்டன.

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்ற கனவிலும் கூட நினைக்க முடியாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் அடித்தளமற்றதாக (அ) பலவீனமானதாக உள்ளது என்பதைத்தான் இந்திய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளும், அறிவிப்புகளும் காட்டுகின்றன.

பத்திரங்கள் மீதான முதலீட்டை குறைப்பதான அறிவிப்பு அமெரிக்க ஆட்சியாளர்களால் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டதோ அந்த நோக்கத்தை, "சீர்திருத்தங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும், இதன் மூலமே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியா மீது நம்பிக்கை ஏற்படும்" என்ற மன்மோகன் சிங் அறிவிப்பாக தீர்வாக வெளிப்படுகிறது.

எனவே இப்போதைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இந்திய அமெரிக்க ஆட்சியாளர்களின் கூட்டுச்சதியே ஆகும். இந்த சதியை முறியடிப்பதற்கான ஆற்றல் தேசியப் பொருளாதாரத்திலும், தேசியப் பொருளாதாரம் உருவாக்கப்படுவதற்கான ஆற்றல் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாங்கும் திறனிலும், பெரும்பான்மை மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பிற்கான ஆற்றல் விவசாயம் லாபகரமாக்கப்படுவதிலும், விவசாயம் லாபகரமானதாக ஆக்கப்படுவதற்கான ஆற்றல் சமூக சிந்தனா முறையின் உயர்வு, அதன் அடிப்படையிலான மக்களிடையேயான கூட்டுத்துவ சிந்தனாமுறை, செயல்பாடுகளிலும் பொதிந்து கிடக்கிறது.

இந்த சுற்றுவட்ட பாதை செயல்பாடுகளில் பயணிப்பதே இவைகளை தீர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்!

- சூறாவளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It