இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற இயற்கை எரிவாயுவின் விலையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஒரு யூனிட்க்கு 4.2/MMBTU டாலரிலிருந்து 8.4/MMBTU டாலராக அதாவது இரண்டு மடங்காக மத்திய உர மற்றும் மின்சார துறை அமைச்சகத்தின் எதிர்ப்பையும் மீறி உயர்த்தியிருக்கிறது. இந்த விலை உயர்வானது அடுத்த வருடம் 2014 ஏப்ரலில் அமலுக்கு வரும்.

விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்?

1987க்குமுன் உள்நாட்டில் உற்பத்தியாகும் வாயுவின் விலையை ONGCயும் ,OIL INDIA ஆகிய நிறுவனங்களே நிர்ணயித்துக் கொண்டிருந்தன. பின் அதை முறைப்படுத்த அரசே ஒரு முறையை அதாவது உற்பத்தி செலவு மற்றும் லாபம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு விலையை நிர்ணயித்தார்கள். ஆனால் உள்நாட்டில் வாயு எடுக்கும் உரிமையை தனியாருக்கு தாரை வார்த்த பின் 2005ல் முதன் முதலாக ரிலையன்ஸ் இந்த விலையேற்ற முறை சரியில்லை என்று கூறியதோடு இல்லாமல் விலையை ஏற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பொழுது அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யரிடம் கோரியது. அதற்கு அவர் மறுக்கவே அவரின் அமைச்சர் பதவி உடனடியாக காலி செய்யப்பட்டு அவருக்குப் பதில் அங்கு ஜெயபால் ரெட்டி அமைச்சர் பதவி ஏற்றார். அவர் புதிய விலையை நிர்ணயிக்க ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். இந்த குழுவானது ஒரு சிக்கலான சூத்திரத்தை அரசுக்கு பரிந்துரைத்தது.

ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளும் அதன் பாதிப்புகளும்

விலை நிர்ணயத்தில் ஒரு குறிப்பிட்டதை அப்படியே (CONSTANT) வைத்துக்கொண்டு இறக்குமதி செய்யப்படும் வாயுக்களின் விலையோடு, வெளிநாடுகளில் உற்பத்தி செய்யும் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் விலையையும் ஒப்பிட்டு உள்நாட்டில் தயாரிக்கப்படும் வாயுக்களின் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற சிக்கலான சூத்திரத்தை (FORMULA) ரங்கராஜன் குழு சொன்னது. இதை அப்போதே பொருளாதார நிபுணர்கள் பலரும் எதிர்த்தார்கள்.

காரணம் இறக்குமதியின் விலையைப் பொறுத்து உள்நாட்டு உற்பத்தியின் விலையை நிர்ணயம் செய்யும் போது அதை எந்த நாட்டில் உற்பத்தி செய்கிறார்களோ அதன் பொருளாதாரம், அதை இங்கு கொண்டுவருவதற்க்கு தேவையான கப்பல் செலவு மற்றும் வரிகள் போன்ற பலவும் இறக்குமதி விலையில் சேரும். ஆனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொழுது மற்ற இதர செலவுகள் இருக்காது. எனவே இவ்வாறு ஒப்பிட்டு பார்த்து விலை நிர்ணயம் செய்வது தவறு. இந்த கொள்கையால் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைவதோடு மட்டுமில்லாமல் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேறி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்கள்.

ஏன் இந்த இரண்டு மடங்கு விலையேற்றம்?

இந்த விலையேற்றத்திற்க்கு மத்திய அரசு சொல்லும் காரணம் என்பது உள்நாட்டில் உற்பத்தி செய்து விற்கும் எரிவாயு விலையானது குறைவாக இருப்பதால் அந்நிய நிறுவனங்கள் வர தயங்குகிறது. ஆகவே அந்நிய முதலீட்டை அதிகரிக்கவே இந்த விலையேற்றத்தை அறிவிக்கிறோம் என்று சொல்லுகிறது.

இது சரியான வாதம் அல்ல. இதன்படியே பார்த்தால் மின்சார உற்பத்தியிலும் இதே காரணத்தை சொல்லித்தான் விலையை ஏற்றினார்கள். ஆனால் இன்றுவரை மின்சாரத் துறையில் அந்நிய முதலீடு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இதனால் இங்குள்ள தனியார் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் லாபம் அடைந்தன‌ என்பதே சமீபத்திய உதாரணம். இப்படி அரசின் தவறான கொள்கையால் தனியார் லாபமடைந்து அரசுக்கும் பொதுமக்களுக்கும் நட்டம் ஏற்பட்டது. இப்படி ஒருமுறை தவறு செய்தபின்னும் மீண்டும் அதே தவறை செய்ய இந்த காங்கிரஸ் அரசு முயலுவது ஏதோ உள்நோக்கம் கொண்டதோ என்று சந்தேகம் எழுகிறது.

மேலும் உள்நாட்டில் கிடைக்கும் எரிவாயு என்ற இயற்கை வளமானது இங்குள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. அதை அந்த மக்களுக்கு சரியான விலையில் கொடுக்க வேண்டும் என்பதே ஒரு அரசின் கடமை ஆகும். அதைவிடுத்து தனியாருக்கும் அந்நிய நிறுவனங்களுக்கும் இயற்கை வளங்களை விற்பது நாட்டை விற்பதற்கு சமமாகும்.

இந்த விலையேற்றத்தால் ஏற்படும் விளைவுகள்

இந்த விலையேற்றத்தால் எரிவாயுக்களை மூலப்பொருட்களாகவும் அல்லது அதனை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும். குறிப்பாக மின்சார உற்பத்தி செய்ய இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் மின்நிலையங்களில்(POWER PLANTS)இதுவரை ஒரு யூனிட்க்கு ரூ 2.93ஆக விலை இருந்தது. ஆனால் இந்த இரு மடங்கு விலையேற்றத்தால் ஒரு யூனிட் விலையானது ரூ6.40ஆக மாறும். இதனால் மின்சாரத்திற்குத் தொடர்புடைய அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.

அடுத்து முக்கியமானது யூரியா தயாரிப்பில் இது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். உதாரணமாக அரசு நிர்ணயித்திருக்கிற இந்த 8.4MMBTU விலையால் யூரியா தயாரிப்பிற்கு வருடத்திற்கு 9000 கோடி ரூபாய் அதிகமாக தேவைப்படும். இதனால் அரசுக்கு 8300கோடி கூடுதல் நிதி சுமை ஏற்பட்டு அதை சமாளிக்க புதிய கொள்கையை கொண்டுவந்து அந்த சுமையை ஏழை மக்களின் மீதுதான் வரி என்ற பெயரிலோ அல்லது விலைவாசி என்ற பெயரிலோ சுமத்துவார்கள்.

இந்த விலையேற்றத்தால் யாருக்கு லாபம்?

உள்நாட்டில் இயற்கை எரிவாயுக்கள் எடுக்கும் முக்கிய நிறுவனங்கள் ONGC,OIL INDIA மற்றும் RELAIANCE INDUSTRIES LTD(RIL)ஆகும். இதில் கிருஷ்ணா கோதாவரி (KG D6)பகுதியில் எண்ணைய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அங்கு முதலில் அதற்கான பூர்வாங்க வேலையை பல கோடிகளை கொட்டி செய்தது மத்திய அரசு நிறுவனமான ONGCதான். ஆனால் எல்லா செலவையும் செய்து எரிவாயு எடுக்கும்போது அதை அரசு ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டது.

இந்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அரசு, வாயுவை எடுக்க சில ஒப்பந்தங்களைப் போட்டது. அதன்படி ஒரு நாளைக்கு 61MMSCMD வாயுவை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும் என்று சொன்னது. அதற்கு அவர்கள் கேட்ட விலையான 2.63 டாலர் அரசு நிர்ணயித்தது. பின்னர் இந்த விலையானது போதுமானதாக இல்லை என்று விலையை 4.2 டாலராக உயர்த்த வேண்டும் என்று அப்போதைய பெட்ரோலிய துறை அமைச்சரான மணிசங்கர் அய்யரிடம் ரிலையன்ஸ் கோரியது. அதற்கு அவர் ரிலையன்ஸ் சொன்ன விலையை ஏற்கமுடியாது என்று சொன்னார். இதனால் அதுவரை 61MMSCMD வாயுவை உற்பத்தி செய்து கொண்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனம் திடீரென்று உற்பத்தியை 2010ல் 29.74MMSCMD குறைத்தது. விலை சரியாக இல்லாததால் எடுக்க முடியவில்லை என்று சொல்லி உற்பத்தியைக் குறைத்து அரசை பயமுறுத்தியது. அதன்பின்னும் விலையை ஏற்றாததால் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஜெயபால் ரெட்டி அந்தத் துறைக்கு புதிய அமைச்சராக வந்தார்.

அவரிடமும் 4.2 டாலரை 8.4 டாலராக உயர்த்த வேண்டும் என்று மீண்டும் ரிலையன்ஸ் கோரியது. அப்பொழுது அமைச்சகம் "ஏற்கனவே நீங்கள் ஒப்பந்தத்தின் படி உற்பத்தி செய்யவில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரித்திருக்கிறது" என்றதோடு, மேலும் இது சம்பந்தமாக ரிலையன்ஸ் நிறுவனத்தை தணிக்கை செய்ய ஏற்பாடும் செய்தது. அதில் அந்த நிறுவனத்தின் பல மோசடிகள் வெளிவந்தன. உடனே அந்த நிறுவனத்திற்க்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்ட வேளையில் மேலும் அந்த நிறுவனம் தனது உற்பத்தியை 15MMSCMDக்கும் கீழாக குறைத்தது. அதோடு இல்லாமல் அமைச்சரும் மாற்றப்பட்டு விரப்ப மொய்லி அமைச்சராகி 8.2டாலராக உயர்த்தியிருக்கிறார்.

இப்படி உற்பத்தியைக் குறைக்க ரிலையன்ஸ் சொல்லும் காரணம் லாபமில்லை என்பதுதான். இது உண்மையில்லை. காரணம் ரிலையன்ஸின் 30%சதவிகித பங்குகளை பிரிட்டிஷ் கம்பெனி வாங்கியிருக்கிறது. லாபமே இல்லாத கம்பெனியின் பங்குகளை யாராவது வாங்குவார்களா? ஆகவே ரிலையன்ஸ் சொல்லும் இந்த காரணம் உண்மையானதல்ல. இதன் உண்மையான காரணமென்பது விலையை ஏற்ற வேண்டும் என்பதே.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் விலைஉயர்வைப் பற்றி பேசுகிறதே தவிர அதன் உற்பத்தி செலவை சொல்ல மறுக்கிறது. உதாரணமாக இப்பொழுது ONGCயின் உற்பத்தி செலவு 3.7 டாலர் மற்றும் OIL INDIAவின் செலவு 3.2டாலராக இருக்கிறது. இப்படியிருக்க இவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் 4.2 டாலர் என்பது ஒரளவுக்கு சரியானதாக இருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை தனது உற்பத்தி செலவை சொல்ல மறுப்பதோடுமில்லாமல் நஷ்டம் என்று பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த விலை உயர்வால் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமில்லாமல் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் லாபம் அடைகிறதே என்று தங்களை பெரிய பொருளாதார நிபுண‌ர்களாக நினைத்துக் கொள்ளும் ஒரு சிலர் சொல்லலாம். ஆனால் உண்மை என்ன?இந்த விலையேற்றத்தால் யூரியா மற்றும் மின்சார விலையால் ஆண்டுக்கு ஏற்படப் போகும் கூடுதல் செலவான 49000கோடி (9000+40000)இழப்பை அரசு மானியமாக கொடுத்தால் இதற்கான தொகையை பொதுத் துறை நிறுவனங்களின் லாபத்திலிருந்துதான் தர முடியும். ஆனால் இதனால் வரும் மொத்த லாபமும் ரிலையன்ஸ்க்குத்தான். இப்பொழுது சொல்லுங்கள் இந்த விலையேற்றம் யாருக்கு லாபம் என்று.

ஆகவே சொந்த நாட்டில் இருக்கும் இயற்கை வளங்களை சொந்த நாட்டு மக்களுக்கு பயன்படும்படிதான் ஒரு அரசு செயல்பட வேண்டும். ஆனால் இந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தனியார் நிறுவனங்களின் லாப நோக்கங்களுக்காக செயல்படுகிறது. அப்படியில்லாமல் பொது மக்களை பாதிக்காத வண்ணம் இந்த விலையேற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

- சு.கி.கொண்டல், மே17-இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It