கடந்த ஜூன் 2இல் துருக்கி பிரதமர் அயிப் எர்டோகன் (Ayyip Erdogan) இஸ்தான்புல் சாலையில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை "கொள்ளைக்காரர்கள்" (çapulcu) என்று அழைத்ததன் மூலம் , ஆங்கில மொழிக்கு புதிய வினைச்சொல் ஒன்றை வழங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து "Everyday I'm Shufflin” என்ற பாப் பாடலின் வரிகளை “Everyday I'm Chapuling” (தினமும் என் உரிமைகளுக்காக போராடுகிறேன்) என்று போராட்டக்காரர்கள் மாற்றி, கடந்த ஜூன் 4ந் தேதி இணையத்தில் வெளியிட்ட புதிய காணொளி விரைவாக பிரபலமடைந்தது. கூடவே, chapul என்ற புதிய ஆங்கில வினைச்சொல் ஒன்றும் பிறந்தது. அதன்பின் அந்த வார்த்தை பிரெஞ்சு மொழிக்குள் நுழைந்து, பிரபல பிரெஞ்சு வாசகமான “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்பதுடன் உன் உரிமைகளுக்காக போராடுகிறாய் (liberty, equality and fraternity: chapulite) என்ற வாசகத்தின் ஒரு பகுதியாக இடம்பிடித்தது.

மே 27ந் தேதி தொடங்கி தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த எழுச்சியை, பன்னாட்டு ஊடகங்கள் விரிவான வகையில் பதிவு செய்து வருகின்றன. இதற்குப் பின் உள்ள காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து இக்கட்டுரை கவனம் செலுத்துகிறது. 

நீதி மற்றும் வளர்ச்சி கட்சியானது (Justice and Development party - AKP) 2002இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இன்று வரை மேற்குலக நாடுகள் மற்றும் அந்நாட்டு ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக விளங்கி வரும் இந்தக் கட்சி, கடந்த 3 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இறுதியாக கடந்த 2011இல் 50% வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்தது. 

துருக்கி நாடாளுமன்றத்தில் ஏ.கே.பி. கட்சிக்கு தற்போது 66 % மேல் பலம் இருப்பதால், தான் நினைக்கும் எந்தச் சட்டத்தையும் அக்கட்சியால் நிறைவேற்ற முடிகிறது. தன் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸ் படையை கொண்டு, தான் நினைக்கும் நபர்களை கைது செய்யவோ, அடக்கவோ செய்கிறது . அதன் வசம் இருக்கும் நீதித்துறை அமைப்பு, யார் மீது வேண்டுமென்றாலும் வழக்குத் தொடுக்க அனுமதிக்கிறது. ஒட்டுமொத்த துருக்கி ராணுவமும் அதன் கட்டுப்பாட்டில் உள்ளதால் , பண்டை கால ஆட்டோமான் (Ottoman) பாணி ஆட்சி கனவுக்கு இது வழிகோலுகிறது. நிதித் துறை அமைச்சகம் முதல் மத்திய வங்கி வரை அனைத்து பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தி,மக்களுக்கான தேவையின் அடிப்படையை விடுத்து, தான் நினைக்கும் பொருளாதார வடிவைப்பை இந்த ஆட்சி கட்டமைத்துக் கொள்கிறது .

ஜனநாயகத்தின் வடிவம் ?

 இஸ்லாமிய நாடுகள் பின்பற்ற வேண்டிய ஜனநாயக வடிவம் என்பதற்காக மட்டுமின்றி, தற்போதைய ஐரோப்பிய பொருளாதார மந்த நிலையில் துருக்கி பின்பற்றி வரும் பொருளாதார அமைப்புக்காகவும் ஏ.கே.பி. கட்சியை மேற்குலக ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. ஏ.கே.பி. கட்சியின் இறுக்கமான பொருளாதார பாணியானது, நவீன தாராளவாத கொள்கை மற்றும் நிதியால் நம் நாட்டில் முன்னெடுக்கப்படும் வளர்ச்சி பாணியை ஒத்தது என்பதை சந்தேகமில்லை.

கெசி சதுக்கத்தில் நிகழ்த்தப்பட்ட போலீசின் அடக்குமுறை, மக்களுக்கு வெளிப்படையாக இழைக்கப்பட்ட அநீதி போன்றவை, இந்த சர்வாதிகார அரசின் மனதில் நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த வெறுப்புணர்வின் கடைசி நிமிட வெளிப்பாடுதான். சமூகக் கொள்கைகளின் வாயிலாக பெண்களையும் இளைஞர்களையும் அச்சுறுத்தி, இஸ்லாமிய அடிப்படைவாத வாழ்க்கைமுறையை ஏற்க அக்கட்சி வற்புறுத்துகிறது. எதிர்ப்பு குழுக்களான குர்துகள், சோஷலிஸ்டுகள், தொழிலாளர் அமைப்புகளை குற்றவாளிகளாக்கி சிறைக்கு அனுப்புகிறது .

பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவது, பெரிய கார்பரேட்களுக்கு வசதியாக இடங்களை வாடகைக்கு ஒதுக்குவது, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பை பலியிடுவது போன்ற தனது பொருளாதார கொள்கைகளின் வாயிலாக, ஏ.கே.பி. கட்சி நவீன தாராளவாத செயல்திட்டத்தை திணித்து வருகிறது . இந்த பொருளாதார பாணியானது குறைந்த கூலி, யூக வணிக நிதி மூலதனத்தின் வரவு, பெரும் வர்த்தக பற்றாக்குறை ஆகியவற்றைச் சார்ந்தது. நாட்டின் வளர்ச்சியில் தொழிற்சாலை உற்பத்தியின் பங்கு குறைந்து, மூலதன சரக்குகள், ஆற்றலுக்கு இறக்குமதியையே பெரிதும் நம்பும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் துருக்கியர்கள் விரும்பும் கபாப் போன்ற இறைச்சிகூட, அர்ஜென்டினா போன்ற தொலைதூர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஏ.கே.பி நிகழ்த்திய பொருளாதார அதிசயம், இரண்டு முக்கிய விஷயங்களின் மேல் எழுப்பப்பட்டது. முதலாவது கட்டுப்பாடற்ற கடன் (excessive credit) மூலம், பொருள் நுகர்வை முடுக்கிவிட்டது. இரண்டாவது பொது நிலங்கள்,இயற்கை வளம், பொதுத்துறைகளை தனியார்மயமாக்கி செல்வத்தைக் குவித்தது . இந்த செயல்முறைகள் நிலைத்த வளர்ச்சியைத் தர வல்லவை அல்ல. வேலையற்ற இளைஞர்களின் சதவீதம் தற்போது 20 % அதிகரித்துள்ளது.

மேலும், இது துருக்கிக் குடும்பங்களின் கழுத்தை மட்டும் நெரிக்கவில்லை, மாறாக கார்பரேட் துறைகளையும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. பன்னாட்டு நிதி அமைப்பிடம் (IMF), ஏ.கே.பி. ஆட்சி தானாக முன்வந்து தனது இறுதித் தவணை கடனைச் செலுத்தினாலும், சர்வதேச நிதிச் சந்தையில் வாங்கிய கடன், அதன் ஆட்சிகாலத்தில் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதன்மூலம் இவர்களது ஆட்சி காலத்தில்தான் அந்நியக் கடன் சுமை, பொதுமக்களிடம் இருந்து தனியாருக்கு மாற்றப்பட்டது. தனியார் துறை வாங்கியுள்ள அந்நிய கடன், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் துருக்கியின் பணமதிப்பு சரிவை காணும்போது, துருக்கிய கார்பரேட் நிறுவனங்கள் கூட்டாக திவால் ஆவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.  

எல்லா திசைகளிலும் கிளர்ச்சி 

துருக்கியில் மே 27ந் தேதி நிகழ்ந்த எழுச்சியை, ஜனநாயகம் இல்லாத தன்மைக்கு எதிரான புரட்சி என்று மேற்குலக ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. ஆனால், இது முழு உண்மையல்ல. ஜனநாயகம் இல்லாத தன்மையால்தான் இப்புரட்சி வெடித்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அத்துடன் அதிகரித்து வரும் ஏற்றதாழ்வு,வேலையில்லாத் திண்டாட்டம், அடிப்படைத் வசதிகளை தனியாரிடம் ஒப்படைத்தது போன்றவற்றுக்கு எதிரான கிளர்ச்சி இது; காலநிலை மாற்றம், சூழலியல், உணவுப் பற்றாக்குறை, ஆற்றல் பற்றாக்குறைக்கு எதிரான புரட்சியும்கூட.

 சாலைகளில் திரண்டிருக்கும் மக்கள் அனைவரும் வெவ்வேறு வயது, மதம், இனம், கொள்கைகள் ஆகியவற்றைத் தாண்டி வீதிக்கு வந்துள்ளனர் . கிளர்ச்சியாளர்களுள் அனார்கிஸ்ட்கள், சூழலியலாளர்கள், சோஷலிஸ்டுகள், தேசியவாதிகள், கேமலிஸ்ட்டுகள், ஏன் ஏ.கே.பி. கட்சிக்கு வாக்களித்த சில வாக்காளர்களும் சாலைகளில் குழுமி இருகின்றனர். இரண்டு வேலைநிறுத்தங்களின் மூலம் தொழிலாளர் அமைப்பும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. பொதுத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஜூன் 4 மற்றும் 5இல் வேலைநிறுத்தம் செய்தது. புரட்சிகர தொழிளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஜூன் 5இல் வேலைநிறுத்தம் செய்தது. குர்து அமைப்பினர், இதுவரை மிகப் பெரிய அளவில் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

எந்த ஒரு குறிப்பிட்ட கோரிக்கையையும் முன்வைக்காத பல்வேறு தரப்பினரின் இந்த எழுச்சி என்ன விளைவை உண்டு பண்ணும் ?

இஸ்தான்புல்லின் போராட்டக்காரர்களுக்கு ரோஜர் வாட்டர்ஸ் (Roger Waters) மற்றும் பிங்க் பிளாய்ட் (Pink Floyd ) எழுதிய கடிதத்தில் இக்கேள்விக்கான சிறந்த பதில் உள்ளது.

“உங்களின் நாடு மேற்குக்கும் கிழக்குக்கும் இடையிலான நுழைவாயிலாக உள்ளது. மனித குல நாகரிக வரலாற்றில் கான்ஸ்டான்டிநோபல் என்றுமே தவிர்க்க முடியாதது .உங்களுடைய இந்த எதிர்ப்பு, நம் அனைவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.”

நாமும் அதையே நம்புவோம் …. 

(தி புல்லெட் எனும் சோஷலிச வலைத்தளத்தில் சப்ரி ஆன்கு (Sabri Oncu) என்ற பொருளியல் அறிஞர் எழுதிய “Chapuling in Turkey:The Turkish Uprising of May 27, 2013 கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

தமிழில்: அருண் நெடுஞ்செழியன்

Pin It