“பஜ்ரங் பாலி, பாலி “ என்று முழக்கம் போட்டார் மோடி. “பா.ஜ.க காலி, காலி “ என்று ஓட்டு போட்டு விட்டார்கள் கர்நாடக மக்கள்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின், தொண்டர்களின் உழைப்பு மகத்தானது. ராமன் அணில் முதுகில் மூன்று கோடுகள் போட்ட கதைபோல, பா.ஜ.க நெற்றியில் மூன்று கோடுகளைப் போட்டு அனுப்பி விட்டார்கள் கர்நாடக மக்கள்.

காங்கிரசின் இந்த வெற்றி ஒன்றியம் முழுதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொன்னவர்களுள் ஒருவரான மம்தா பானர்ஜியின் பிடிவாதம் தளர்ந்து விட்டது.

2024 பொதுத் தேர்தலில் “காங்கிரஸ் வலுவுள்ள இடங்களில் நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். அதுபோல் அவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்” என்று அறிவித்துவிட்டார் மம்தா பானர்ஜி. கெஜ்ரிவாலும், சந்திரசேகரராவும் விரைவில் மம்தாவின் முடிவுக்கு வந்து விட வாய்ப்பு இருக்கிறது.

ஒன்றியத்தின் தென் மாநிலங்களில் இருந்து பா.ஜ.க துடைத்து எறிந்ததைப் போல வடக்கிலும் சில பகுதிகளில் அது வலுவிழந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதற்காக அக்கட்சியை எளிதாக எண்ணி விடக் கூடாது.

மக்கள் நலன் என்று சொல்லிக் கொண்டு, மதவெறி, இந்துத்துவம் என்ற மதச் சித்தாந்தத்தைப் பல்வேறு வழிகளில் முன்னெடுக்க பா.ஜ.க தயங்காது. அதற்கு எதிராக திராவிடச் சித்தாந்தமாகிய சமூக நீதியை ஒன்றியம் முழுவதும் மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

மிக முக்கியமாக எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். தி.மு.க தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதற்கான முன்முயற்சியை டில்லியில் எடுத்தார். அப்போது

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் துணை நின்றனர்.

முதல்வர் ஸ்டாலினின் 70 ஆம் பிறந்த நாளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் 2024 தேர்தலை நினைவூட்டுவதைப் போலக் கரம்கோத்து நின்றார்கள். நிதிஷ் குமார் எதிர் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

காலம் அதிகம் இல்லை. காலம் கனிந்து வருகிறது. தேன்கூடு கலைந்து விடக் கூடாது. காங்கிரஸ் அல்லாத 3ஆம் கூட்டணி கவைக்கு உதவாது.

“பா.ஜ.க காலி, காலி “ என்று இந்திய ஒன்றியம் முழுவதும் ஓட்டு போடும் அந்த நாள் எதிர்கட்சிகளின் கைகளில், அவைகளின் ஒன்றிணைவில் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It