இந்தியா அரசும் அதன் அங்கமான உச்சநீதிமன்றமும், குடியரசுத் தலைவரும் இந்திய அரசியல் சாசன அடிப்படையில் வெவ்வேறான அதிகாரங்களையும், விருப்புரிமைகளையும் பெற்றிருக்கிறார்கள். இந்திய நாட்டின் தொல் முன்னோர்களிடமிருந்து தமக்கான அரசியல் கோட்பாடுகளையும், மனித பண்பாட்டு விழுமியங்களையும் இந்தியா பெற்றிருக்கிறது. அந்த அடிப்படையில் எழுந்ததே ‘பஞ்சசீல கொள்கை’ என்ற வெளியுறவுக் கொள்கை. ஆனால் அந்த கொள்கையை இந்தியா கைவிட்டு நீண்டநாள் ஆகிறது. தனது பாரம்பரிய கலப்பு பொருளாதார கொள்கையை கைவிட்டு ஆதிக்க நாடுகளின், பன்னாட்டு நிறுவனங்களின் விருப்ப இசைக்கேற்ப நடனமாடும் பெண்ணாக இந்தியத் தாய் உருவம் மாற்றப்பட்டுவிட்டது. இந்திய இறையாண்மை என்பது வெளிநாட்டு நிதி வரவுக்கு கைமாறாய் அளிக்கும் கையுரைப் பொருளாகிவிட்டது.

இந்தியாவில் ‘சட்டத்தின் ஆட்சி’ நடப்பதாக நம்பப்பட்டு வந்தாலும் இந்தியர்களுக்கு ‘வாழும் உரிமை’ உட்பட அடிப்படை உரிமைகள் இருப்பதாக நம்பப்பட்டு வந்தாலும், அரசியல் சாசன அடிப்படைக்குள் வராத வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் இந்திய அரசியல் சட்டங்களும் அரசியல் சாசன அடிப்படை உரிமைகளும் சிதைக்கப்பட்டுவிட்டன. இந்திய அரசியல் சாசன “பாதுகாவலரான” இந்திய உச்சநீதிமன்றம், அவ்வப்போதைய அவசர சட்டங்கள் மூலமும், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலமும், வெளியுறவு கொள்கை முடிவுகள் மூலமும் இந்திய அரசு அரசியல் சாசனத்தை மீறும்போது தனது கண்டிப்பான பாதுகாப்பு கடமையை செய்யாமல் இந்திய அரசின் முடிவுகளோடு அரசியல் சாசனம் ஒத்துப்போகும் படியான விளக்கங்களை அளித்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது.

ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்களை இலங்கை அரசு கொன்று வந்தாலும் அரசியல் சாசனப் பிரிவு 21ன் படியான அடிப்படையுரிமை அடிப்படையிலும் வாழ்வுரிமை அடிப்படையிலும் அவர்களைக் காப்பாற்ற கடமைப்பட்ட உச்ச, உயர்நீதிமன்றங்கள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு இடப்படும் இந்தியத் தமிழர்களின் உயிர்ப் பலியை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் குட்டி நாடான இலங்கையின் உச்சநீதிமன்றம் இந்திய இலங்கை ஒப்பந்தம் செல்லாது என அறிவித்து ஆற்றலும், உயிரோட்டமும் உள்ள நீதிமன்றமாக இருக்கிறது. பாகிஸ்தானிய இராணுவ ஆட்சியாளரான முசாரப்பை கைது செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டதன் மூலம் தமது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தியதை கண்டு நாம் பெரூமூச்சு விடுகிறோம். இந்திய மக்களின் எதிர்பார்ப்பு விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக பஞ்சாய் புல்லருக்கு தூக்குத் தண்டனை அளிப்பதாக கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதானது, நீதிமன்றங்கள் சட்டங்களைத் தாண்டி ஊடகங்களின் உசுப்பல் செய்திகளையே சட்டமாகவும் சான்றதாரமாகவும் கொள்வதைக் காட்டுகிறது. நீதிதுறையின் சட்டம் சார்ந்த வளர்ச்சி பக்கச்சார்பாக மாறுவதை இது காட்டுகிறது.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் “பொடா சட்டம் செல்லாது” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டு, அந்த சட்டத்தின் கீழ் காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எடுக்கப்பட்ட வாக்குமூலங்கள் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது எப்படி என்பது வழக்கறிஞர்களுக்கு மன உளைச்சலை. ஏனெனில் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் காவல் துறையிடம் கொடுக்கும் வாக்குமூலத்தை மட்டுமே கொண்டு தீர்ப்பளிக்க சட்டத்தில் இடமில்லை என்பதுதான். சாதாரணமாக மாவட்ட நீதிமன்றத்தில் அளிக்கப்படும் தூக்கு தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றத்திற்குமான இரண்டு மேல்முறையீடு வாய்ப்பு உண்டு. ஆனால் பொடா நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தான் ஒரு மேல் முறையீடு செய்ய முடியும். உயர்நீதிமன்றத்தில் செய்யப்படும் முதல் மேல் முறையீட்டு உரிமையை பொடா சட்டம் மறுக்கிறது.

இங்கே இரண்டு கேள்விகள். ஒன்று ஒரு சட்டத்தின் மூலம் உயர்நீதிமன்றத்தின் ஆள்வரையை பறிக்க முடியுமா? இரண்டாவது பொடா சட்டம் செல்லாது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு முதல் மேல்முறையீட்டிற்காக மாற்றித்தானே உத்தரவிட முடியும். உச்சநீதிமன்றமே, எப்படி விசாரிக்க முடியும்? முதல் மேல்முறையீட்டில் அவர்களுக்கு விடுதலையாகும் வாய்ப்பிருப்பின் அவ்வாய்ப்பை உச்சநீதிமன்றம் பறித்தது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான “வாழும் உரிமையை” பறித்ததாகிவிட்டதே என்பது தான்.

இவ்வழக்கில் இவர்களின் கருணை மனு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அதை உச்சநீதிமன்றத்தில் வழக்காக தாமே எடுத்துக் கொள்ள முடியுமா? தரப்பல்லாத நபர் கருணை மனு தொடர்பான வழக்கில் மூன்றாம் தரப்பு வழக்காளராக யாரும் வழக்கிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு இருக்கும் போதே இவ்வழக்கை உச்சநீதிமன்றம் மூன்றாம் தரப்பினர் போட்ட வழக்கின் மூலம் எடுத்துக்கொண்டது எப்படி? இதிலும் தண்டனை அளிக்கப்பட்டவருக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கிடும் உரிமை பரிக்கப்பட்டு விட்டதே? சென்னை உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கும் என உச்சநீதிமன்றம் நம்பவில்லை அதனால் தான் அவ்வழக்கை தாமே எடுத்துக் கொண்டது. இந்திய உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என வழக்கிட்டால் வேறு எங்கு மாற்றி விசாரிக்க உத்திரவிடமுடியும்?

கருணை மனு மீது இந்திய குடியரசுத் தலைவர் முடிவெடுப்பது என்பது இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் இந்திய மக்கள் அவருக்கு அளித்துள்ள அதிகாரம், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தூக்குத்தண்டனை கைதி எவருடைய மனுவையும் 'அவர் தூக்கிலிடப்படுவது மனசாட்சிப்படியும் தரவுகளடிப்படையிலும் தவறு' என உணரும் போது குடியரசுத் தலைவர் அம்மனுவை நிலுவையில் வைத்துக் கொள்வதன் மூலம் அக்கைதி தூக்கிலிடப்படுவதை தமது தாமத நடவடிக்கையின் மூலம் அத்தூக்கை தடுத்து வைக்கிறார். இது அவருக்கான அதிகாரம். அந்த அதிகாரத்தை குறைத்து அவர் உடனே அம்மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்திரவிட உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. குடியரசு தலைவரின் ஆளுரிமையை இதன் மூலம் பறிப்பதோ கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுக்க முடியாது. அவ்வாறு உத்திரவிட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் “முற்றுரிமை, அதிகாரம்” பெற்றதாக மாறிவிடும். இது ஒருபக்க சாய்வான வளர்ச்சியே தவிர முன்னோக்கிய வளர்ச்சியல்ல.

இந்திய நீதிமன்றங்கள் குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் முகப்பிலும் அதன் முத்திரையிலும் மூன்று சிங்கங்களும் அசோக சக்கரமும் இருப்பது எதனால்? நாங்கள் அசோகரின் வழிவந்தவர்கள். அவர் மூலம் பெறப்பெற்ற அமைதியையும், மக்கள் நல அரசுக் கோட்பாட்டையும் நீதியையும் பின்பற்றுகிறோம் என்பதற்கும் தான். இதன் மூலம் இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் அசோக சக்கரவர்த்தியின் மரபுரிமை பெற்றவை என்பதற்காக பெருமைப்படுவதாக, மூன்று சிங்கங்களும் அசோக சக்கரமும் அரசு – நீதிமன்ற முத்திரைகளிலும் தேசிய கொடியிலும் இடம் பெற்று இந்நிறுவனங்களுக்கு பெருமை அளிக்கிறது. நமது அரசியல் கோட்பாடுகளும், நீதிமுறைமைக்கான கோட்பாடுகளுக்கும் நமது முன்னோரிடமிருந்தே நமக்குக் கிடைத்தவை. அசோகரிடமிருந்தும், சிலப்பதிகாரத்திலிருந்தும், அக்பர் நாமாலிருந்தும் பழந்தமிழர்களிடமிருந்தும் நமக்குக் கிடைத்த மூலங்களே நாம் இன்று பின்பற்றும் நெறிமுறைகள். இவைகளே நமக்கு வாழ்கை மூலங்களும் சட்டமூலங்களும் ஆகும்.

இந்தியாவில் நீதிபரிபாலன சம்பவங்களைப் பார்த்தால் உலகில் நீதிபரிபாலனத்தில் பின்பற்ற வேண்டிய முன்தீர்ப்புகளும் தீர்ப்புச் சட்டங்களும் முதன்மையானவைகளாக இங்கே பின்பற்றப்பட்டிருக்கின்றன. தனி ஒரு பெண் அரசனை சிலம்பாலடித்து நீதி கேட்ட வரலாறும், அபலைப் பெண்ணுக்கு அநீதி இழைத்து விட்டோம் என்று நினைத்த அக்கணமே உயிர் கொடுத்து (இழந்து) நீதிகாத்தவன் பாண்டிய நெடுஞ்செழியன், இணை நீதிபதியாய் இருந்த பாண்டிய அரசி கோப்பெருந்தேவியும் அக்கணமே உயிர்விட்டு நீதிகாத்தாள். இந்திய உச்ச உயர்நீதிமன்ற நீதிமான்களுக்கு இவ்விருவருமே பின்பற்ற தக்க முன்னோர்கள். கோவலனை அவையின் முன்நிறுத்தி உன்மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டுக்கு, நீ என்ன பதில் சொல்கிறாய்? என்று தொன்றுதொட்டு பின்பற்றி வந்த இயற்கை நீதி கோட்பாட்டை பின்பற்றாமல் “கொன்று கொனர்க சிலம்பை” என கட்டளையிட்டு சட்டம் வழுவியதற்கு முன்னுதாரமாகிவிட கூடாது என்பதற்காகவும் தவறான நீதிவழங்கலுக்கு உயிர் கொடுத்தாலும் சமமாகாது என்ற உயரிய கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்காகவும் விலையாக உயிரைத் தந்தவர்கள் பாண்டிய மன்னனும் அரசியும்.

அந்த பாண்டிய மரபில் வந்த அதிவீரராமபாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் தருகிறான். “இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே, இருவரும் பொருந்தவுரையா ராயின் மனுமுறை நெறியின் வழக்கிழந்தவர்தம், மனமுற மறுகிநின்றழுத தண்ணீர், முறையுறத் தேவர் மூவர் காக்கிலும், வழி வழி யீர்வதோர் வாளா கும்மே”– நறுந்தொகை இதன் கருத்து (1) இரண்டு தரப்பையும் ஏழு தடவை கேட்க வேண்டும். (2) பசுவின் வழக்கை அது மிருகம் தானே என அலட்சியம் செய்யாமல் அதன் வழக்கை கேட்டு தீர்ப்பளித்த மனுநீதி சோழனைப் போல் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கை பரிவோடும் ஒர்ந்து கண்ணோட்டம் இன்றியும் வழக்கில் சம்மந்தப்பட்டவர் தம்மகன் என்று சாய்காலின்றியும் கேட்க வேண்டும். (3) இரு தரப்புக்கும் பொருந்தும்படியாக, மேல்முறையீட்டிற்கு தேவை எழாதபடிக்கு தீர்ப்பளிக்க வேண்டும் - முறை செய்தல் வேண்டும். (4) மேற்கண்டவாறு செய்யாததால், பாதிக்கப்பட்டவர் மனம் பதைத்து அழுத கண்ணீரானது அந்த தவறான நீதிவழங்கிய நீதிபதியை சிவன் - விஷ்ணு – பிரம்மாவாகிய மூன்று கடவுள் சேர்ந்து காப்பாற்றினாலும் அந்த அநீதிமானையும் (அநீதியாக தீர்ப்பளித்தவர்) அவர் சந்ததி முழுவதையும் அழிக்கும் வாளாக அக்கண்ணீர் இருக்கும் என்கிறார்.

மக்களாட்சியில் படித்து பதவிக்கு வந்த நீதிமான்கள் உணர வேண்டிய நீதி இது. இராசீவ்காந்தி கொலை வழக்கில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதா? இந்திய மக்களாகிய நமக்கும் நமது இந்திய அரசுக்கும் இந்திய நீதிமன்றத்திற்கும், இந்திய குடியரசு தலைவருக்கும் நமது முன்னோரான அசோகர் இட்ட கட்டளை என்ன தெரியுமா? இந்த சட்டமூலங்கள் மூலம் இராசீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 17 வருடங்களாய் சிறையிலிருப்பவர்களின் வழக்கிலும் குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மனு மீதும் தமிழக ஆளுநரிடம் இருக்கும் கருணை மனு மீதும் நமது முன்னோர் அசோகர் நமக்களித்த கட்டளைப்படி அவர் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்றும்படி நடந்து கோள்வோமா?

“தௌலி கல்வெட்டு” :- நீதிவழங்கும் போது சிலருக்கு சாதாரண தண்டனையும் மற்றும் சிலருக்குக் கடுமையான சிறை தண்டனையையும் வழங்க வேண்டியதாகிவிடுகிறது. இப்படிப்பட்ட வழக்கில் சிறைதண்டனையை ரத்து செய்யும் ஆணையை (கருணை மனு ஏற்பை) சிலர் தற்செயலாகப் பெற்றுவிடலாம். ஆனால் மற்றவர்கள் நீண்ட காலத்துக்குச் சிறையில் வாட வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அனைத்து கைதிகளுடனும் குற்றவாளிகளுடனும் நீங்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி நடந்து கொள்ள வேண்டும்” என்கிறார். ஆனால் உச்சநீதிமன்றம், சமூக மனச்சான்றுக்காகவும், அரிதிலும் அரிதான வழக்கு, பயங்கரவாத வழக்கு என தண்டனை பெற்றுவிட்ட குற்றவாளிகளிடையே பாரபட்சம் காட்டுகிறது. இச்சொற்றொடர்கள் சட்டத்தில் இடம்பெறாத தண்டனை சரத்துக்கள்.

“பொறாமை, கோபம், கடுமை, அவசரம், உறுதியின்மை, சோம்பேறித் தனம், சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படும் அதிகாரி பாரபட்சமின்றி நடுநிலையோடு செயல்படமுடியாது. எனவே இப்படிப்பட்ட குறைகளுக்கு ஆளாகாமல் உங்களைப் பாதுகாத்திட வேண்டும். ஒரு அதிகாரி வெற்றிகரமாக நீதிவழங்க கோபத்தையும், அவசர புத்தியையம் கைவிட வேண்டும். உடல் சேர்வுற்றிருந்தால் சரியாக கடமையாற்ற முடியாது. எனவே இந்த குறைகளை யாரிடமாவது கண்டால் அந்த அதிகாரிக்கு நீங்கள் எடுத்துக் கூற வேண்டும்”.

“கீழ்கண்ட நோக்கத்தோடு இந்த ஆவனம் எழுதப்பட்டுள்ளது. இந்த நகரில் நீதிவழங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளைப் பாரபட்சமின்றி செய்ய வேண்டும். இவர்களின் அதிகாரத்திற்கு கீழ்வரும் குடிமக்கள் தேவையில்லாத சித்ரவதைக்கோ, சிறைத்தண்டனைக்கோ ஆளாகக் கூடாது”.

அசோகரின் “மன்சோரா” பாறைக்கல்வெட்டு கீழ்கண்டவாறு அறிவிக்கிறது.

“இறைவனின் அருளுக்கு பாத்திரமான பிரியதர்சி மன்னன் சொல்வது என்னவென்றால், மற்றவர்களுக்கு நன்மை செய்வது என்பது கடினமான செயல்தான். அதனால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய தொடங்கபவன் மிகக் கடினமான ஒரு செயலை நிறைவேற்றுகிறான். என்னால் பல நற்காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த உலகம் அழிந்து போகும் வரையில் என்னுடைய மகன்களும் பேரன்களும் மற்றும் அவர்களுடைய சந்ததியினரும் இவ்வாறு நற்செயலைச் செய்வதன் மூலம் பெருமை வாய்ந்த ஒரு செயலைச் செய்தவர்களாக விளங்குவர். ஆனால், அதே நேரத்தில் இம்மியேனும் இந்த நற்செயலைச் செய்யத் தவறுபவர்கள் கொடுமையான ஒரு செயலைச் செய்தவர்களாகிவிடுவார்கள். பாவம் செய்வது என்பது மிக எளிது.

“சிறையில் உள்ளவர்களின் நலத்திற்காகவும், மற்றவர்களின் தூண்டுதலால் குற்றம்புரிந்தவர்கள் மற்றும் வயதானவர்களை விடுவிக்கவும் மகாமாத்திரர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள்”.

“இந்த ஆவணம் கீழ்கண்ட காரணத்திற்காக உருவாக்கப்பட்டது. தர்மம் நீண்ட நாட்களுக்குத் தொடர வேண்டும் என்பதோடு அவ்வாறு தொடர்வதை என் சந்ததியினர் உறுதி செய்ய வேண்டும்”.

திர்னர் கல்வெட்டு : - “மக்கள் நலனுக்குப் பாடுபடுவதைவிட வேறு எந்த பணியும் முக்கியமானதாக நான் நினைக்கவில்லை. இந்த உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டதாக எண்ணியே என் கடமைகளை நிறைவேற்றுகிறேன்”.

போஸ்கரி கல்வெட்டு: - “தனக்கு எதிராக நடந்து கொள்ளும் ஒருவரை மன்னிக்க முடியும் என்றால் அவ்வாறு மன்னிக்க இறைவனின் அருளுக்குப் பாத்திரமான மன்னன் தயாராக இருக்கிறான். பேரரசின் காட்டுப் பகுதிக்குள் வசிக்கும் காட்டுவாசிகளும் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும். இறைவனின் அருளுக்கு பாத்திரமான மன்ன் தான் செய்த தவறுக்கு (கலிங்கப் போர்) வருந்துகிற அதே நேரத்தில், குற்றம் புரிபவர்களைத் தண்டிக்கம் அதிகாரம் படைத்தவராக விளங்குவதையும், தவறு செய்தவர்கள் திருந்துகிற பட்சத்தில் தண்டிக்கப்படுகிறார்களே தவிர கொல்லப்படமாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.”

டெல்லி தேப்ரா கல்வெட்டு:- “மேலும் அவர்கள் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்று நான் விரும்புவது, வழக்கு தொடர்பான விசாரணையிலோ தண்டனை அளிப்பதிலோ ரஜ்ஜுகர் பாரபட்சமினறி நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். தூக்குத் தண்டனைக் குற்றவாளிக்கு கூட தூக்கிலிடும் நாளுக்கு முன் மூன்று நாட்கள் ஒய்வு தரப்படுகிறது. இந்த மூன்று நாளில் குற்றவாளியின் உறவினர்கள் தண்டனையை குறைக்குமாறு அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம். அல்லது மரணமடையப் போகும் நபரை சமாதானப்படுத்தலாம்”.

பேராசிரியர் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட போது அவரின் உறவினர்களுக்கு தெரிவித்தபிறகோ, உறவினர்கள் சந்தித்த பிறகோ தூக்கிலப்படாமல் அதற்கு முன்பாகவே அவசரமாக அந்தப் பேராசிரியர் தூக்கிலிடப்பட்டார். இவைகளைப் பின்பற்றாத உச்சநீதிமன்றமும், குடியரசுத் தலைவரும், தமிழக ஆளுனருக்கு ஆலோசனை கூறிய தமிழக அமைச்சரவையும் அசோகச் சக்கரத்தையும் மூன்று சிங்கங்களையும் வைத்துக் கொள்வது போலி அலங்காரமும் பொருளற்றதும் ஆகும். அசோகரின் மேற்கண்ட கட்டளைகளை அவரின் சந்ததியாகிய இந்திய மக்கள் உறுதி செய்வோமாக.

- வழக்கறிஞர் ம.பாரி, 4, லா சேம்பர், உயர்நீதிமன்ற வளாகம், சென்னை – 104., செல்: 9444117722

Pin It