எப்படியும் பி.ட்டி.கத்தரியைத் திணித்து விடவேண்டும் என்ற முனைப்போடு இந்திய அரசு செயல்படுகிறது. அதற்காக மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழுவில் பகாசுர அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் கையாள் அறிவியலாளர்களை நிரப்பியது. ஆனால் அக்கறையுள்ள அறிவாளர்களும், உழவர்களும் எளிதில் விடுவதாக இல்லை.

பி.ட்டி.கத்தரியை அனுமதிக்கலாமா கூடாதா என்று தீர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு2ல் இருந்தவர்கள் மான்சான்டோவின் கையாள்கள் என்பதை டவுன் டு எர்த் (Down to Earth) 2009 டிசம்பர் 16--31 இதழ் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியிருக்கிறது. அது வருமாறு:

வல்லுனர் குழுவில் உள்ள கே.கே.திரிபாதி மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்து,அது நடுவண் புலனாய்வுக்குழுவின் விசாரணையில் உள்ளது. மான்சான்டோவின் துணை நிறுவனமான மஹைகோவுக்கு சாதகமாக தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் திரிபாதி என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

வல்லுனர் குழுவின் அடுத்த உறுப்பினர் மதுராராய். இவர் வாரணாசியில் உள்ள இந்திய அரசின் காய்கறி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர். இந்நிறுவனத்தின் சார்பில் அமெரிக்க நிதியுதவிக் கழகத்தின் நிதி ஏற்பாட்டில் மஹைகோ பி.ட்டி.கத்தரியைப் பரப்புவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக புல ஆய்வில் ஈடுபட்டவர் இந்த மதுராராய்

வல்லுனர் குழுவின் இன்னொரு உறுப்பினர் வசந்தா முத்துசாமி. மற்றொருவர் பி.சசிகரன். இந்த இருவரும் இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர்கள். அப்போது அமெரிக்க நிதியுதவியில் மான்சான்டோவின் மரபீனி உணவுப் பயிர்களை தெற்காசியாவில் பரப்புவது குறித்து ஆய்வு நடத்தியவர்கள். அடுத்த உறுப்பினர் பி. ஆனந்தகுமார். இவர் பி.ட்டி கத்தரி வளர்ப்பவர்.

மற்றொரு உறுப்பினர் திலீப்குமார். மான்சான்டோவின் துணை நிறுவ னமான மஹைகோ நிதி ஏற்பாட்டில் ஆய்வு நடத்தியவர். பி.ட்டி. கத்தரியை மீன் உணவாக பரப்புவது குறித்த ஆராய்ச்சியே அது.

இவ்வாறான கையாள் வல்லுனர்கள் மான்சான்டோவுக்கு ஆதரவாக பி.ட்டி.கத்தரியை அனுமதித்ததில் வியப்பேதும் இல்லை.

ஆயினும்,பி.எம் பர்கவா, தேவீந்தர் சர்மா, ராமாஞ்சனேயலு, நம்மாழ்வார் போன்ற அறிஞர்களும், க்ரீன்பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், பல்வேறு உழவர் அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதால் தில்லி அரசு வேறு வழியின்றி பொது விசாரணைக்கு உத்தரவிட்டது.

கொல்கத்தா, புவனேஸ்வர், ஆமதாபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் பொது விசாரணை நடந்துள்ளது. இங்கெல்லாம் பெருந்திரளான உழவர்களும், அக்கறையுள்ள அறிவாளர்களும் கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர்களில் எண்பது விழுக்காட்டினர் பி.ட்டி.கத்தரிக்கு எதிரான கருத்துகளையே பதிவு செய்ததாக இக்கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஜ ெயராம் ரமேசே ஒத்துக்கொண்டார்.

புவனேஸ்வரில் இப்பொதுவிசாரணை அரங்கிற்கு உழவர்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் கைகளில் இயற்கை வேளாண்மையில் விளைந்த கத்தரிக்காய்கள். அந்தக் காய்களை அமைச்சருக்குப் பரிசாக வழங்கி பி.ட்டி.கத்தரி வேண்டாம் என முழங்கினர்.

ஏற்கெனவே கேரளா, ஆந்திரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பி.ட்டி.கத்தரியைத் தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்து விட்டன. கர்நாடக அரசு மரபீனி மாற்ற உணவுப்பயிர்களை அவசரப்பட்டு அனுமதித்து விடமாட்டோம் என்று அறிவித்துள்ளது.

ஆனால் தமிழக அரசு மான்சான்டோவின் ஊதுகுழலாக செயல்படுகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட பி.ட்டி.கத்தரி என்ற பெயரால் இதனைத் திணிக்க முனைந்துள்ளது. மான்சான்டோவின் முகமூடியாக வேளாண் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்துகிறது. அதற்கேற்ற விஞ்ஞானிகள் அப்பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்புகளில் அமர்ந்துள்ளனர்.

இந்திய அரசும், தமிழக அரசும் எப்படி முயன்றாலும் பி.ட்டி.கத்தரியைத் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கக்கூடாது. இந்த மண்ணையும், மண்ணின் மரபான வேளாண் அறிவையும் நசுக்கி, தமிழர்களை வெள்ளைக்கார முதலாளிகளின் அடிமையாக மாற்ற முயலும் அரசுகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக எத்தகைய தியாகம் செய்யவும் அணியமாக வேண்டும்.

- கி.வெ.