இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

"அண்டை நாடான இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக தங்கியுள்ளனர்.

அவர்களின் அடிப்படை உரிமைகளான உணவு, மருந்துப் பொருள்களுக்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளதோடு, யாழ்ப் பாணத்தை பிற பகுதிகளோடு இணைக்கக் கூடிய ஒரே தரை வழிப்பாதையான ஏ-9 பாதையையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடிவிட்டது.

சர்வதேச போர் நெறி முறைகளுக்கு எதிராக, இலங்கை அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அப்பாவி மக்கள் மீது விமானக் குண்டு வீச்சுக்களை நடத்தி வருகிறது. அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பத்திரிகையாளர்களும் படுகொலை செய்யப்படு கிறார்கள்.

நார்வே முயற்சியால் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் இலங்கை அரசு தன்னிச்சையாக இரத்து செய்துள்ளது.

இந்தச் சூழலில் இலங்கைக்கு, இந்தியா இராணுவப் பயிற்சிகளையும், ஆயுதங்களையும் தந்து வருவதாக இந்தியாவின் இராணுவத் தளபதிகளும், உயர் அதிகாரிகளும் கூறி வருவது, தமிழ்நாடு மற்றும் புதுவையில் வாழும் தமிழர்களிடையே கொந்தளிப்பையும், கவலையையும் உருவாக்கியுள்ளது.

தமிழர் பிரச்சினைகளை இராணுவத் தாக்குதலால் தீர்க்க முடியாது என்று இந்தியாவின் மத்திய அமைச்சர்களும் சர்வதேச சமூகமும் கருத்து தெரிவித்து வரும்போது, இந்தியாவின் இராணுவ உதவியால் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமாகிவிடக் கூடாது என்ற கவலையில் இந்தியா, இராணுவப் பயிற்சி மற்றும் ஆயுதம் உள்ளிட்ட எந்த இராணுவ உதவியையும் வழங்கிடக் கூடாது என்று கேட்டுக் கொள் கிறோம். இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் 10 இலட்சம் மக்களிடம் நாங்கள் பெற்றுள்ள கையெழுத்துப் படிவங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.

தெற்காசியாவின் வலிமை மிக்க நாடாகத் திகழும் இந்தியா, இலங்கை பிரச்சினையில் இராணுவ மோதலுக்குத் துணை போகக் கூடாது என்பதே, தமிழகத்தில் வாழும் தமிழர்களின் அழுத்தமான கருத்து - உணர்வு என்று தெரிவிக்க விரும்புகிறோம்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Pin It