periyar 668இந்திய சட்டசபை மாகாண சட்டசபை ஆகியவைகளின் காலாவதி ஒரு வருஷ காலம் ஒத்தி போடப்பட்டாய் விட்டதால், திரு. சீனிவாச அய்யங்கார் பிரசாரமும், அவர் ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் ஒத்தி போட்டாய் விட்டது. ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்களது நெல்லூர் மாகாண மகாநாட்டை ஒத்தி போட்டு விட்டார்கள். அதுபோலவே, திரு. கல்யாண சுந்தர முதலியாரது ஆஸ்திகப் பிரசாரமும், சைவப் பெரியார்கள் மகா நாடுகளும் அநேகமாக ஒத்தி போடப்பட்டு விடும். திரு.வரதராஜுலுவின் உத்தியோகமேற்கும் பிரசாரமும் அவருக்கு அடிக்கடி காயலா வருவதன் மூலம் ஒத்தி போடப்பட்டாய் விட்டது.

இதுமாத்திரமல்லாமல் திரு.சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் மதுவிலக்கு பிரசாரமும், திரு.ஜம்னாலால் பஜாஜின் தீண்டாமைப் பிரசாரமும், திரு.சங்கர்லால் பாங்கரின் அன்னியத் துணி பகிஷ்காரமும் கண்டிப்பாய் ஒத்தி போடப்படலாம். அன்றியும் “தேசமே பிரதான” மென்கின்ற உத்தியோகப் பிரதான கட்சியாரின் தேசாபிமானப் பிரசாரமும் கண்டிப்பாய் ஒத்தி போடப்பட்டு விடும்.

இவற்றையெல்லாம் விட, 1929-ம் வருஷம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரவு 12 மணி 5 நிமிஷத்திற்குள் நேரு திட்டப்படி குடியேற்ற நாட்டு அந்தஸ்து கொடுக்கப்படா விட்டால் கண்டிப்பாய் ஒத்துழையாமை நடத்துவது என்கின்ற திரு.காந்தியின் வாய்தாவும் கண்டிப்பாய் யார் தடுத்தாலும் நிற்காமல் ஒத்தி போட்டாய் விடும்.

(குடி அரசு - அறிக்கை - 02.06.1929)

Pin It