காவல்துறையின் சாதி வெறி

சாதாரணமாக முடிய வேண்டிய ஒரு சம்பவத்தை சாதிப் பதட்டமாக வாடிப்பட்டி காவல்துறை மாற்றியது. இந்தச் சம்பவம் சாதி ஒடுக்குமுறையில் காவல்துறையின் பாத்திரம் குறித்த வகைமாதிரி என்பதால் பகிர்கிறேன். இந்த கட்டுரையில் காவல்துறை பற்றிய வேறு சில செய்திகளை நான் பகிர்ந்துகொள்ளவில்லை. உரிய காலம் போகவேண்டியிருக்கிறது.

rajendiran_dalit_360கச்சைகட்டி கிராமத்தைச் சேர்ந்த கள்ளர்களும் தலித்துகளும் (பள்ளர் பிரிவு) ஒரே நாளில் பாரி வேட்டைக்குத் தனின்தனியே செல்வார்கள். ஒரு முயலை வேட்டையாடிவருவதுதான் பாரி வேட்டை.

12 மார்ச் அன்று முயலைப் பிடித்துக்கொண்டு வழக்கப்படி ஆடிப்பாடி வந்த தலித் இளைஞர்களை கள்ளர் இளைஞர் சிலர் எங்கள் ஊருக்குள் வர முடியுமா என்று சீண்ட, கோபமுற்ற இளைஞர்கள் சிலர் கள்ளர் தெருவுக்குள் நுழைந்து சவாலைச் சந்தித்துவிட்டதாக குரல் கொடுத்துள்ளனர்.

இதனால், கோபமுற்ற கள்ளர்கள் விரட்ட, தங்கள் தெருவுக்கு திரும்பிய இளைஞர்களை தலித் பெரியவர்கள் திட்டினர். தவறைச் சுட்டிக் காட்டினர். கண்டித்து வைத்தனர்.

ஆனால், சற்று நேரத்தில் வந்த காவல்துறை, தலித் பெரியவர்கள் எடுத்த முயற்சியைப் பாராட்டி, சமூகக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதற்கு மாறாக, கள்ளத் தெருவுக்குள் நுழைந்தவர்களைக் கைது செய்வோம் என்று மிரட்டியது. நிலைமையை எடுத்துச் சொல்லியும் எந்தப் பயனும் இல்லை. இரவு முழுவதும் ‘எவளையும் தூங்கவிடமாட்டோம்’, என்று ஒரு காவல் அதிகாரி மிரட்டியுள்ளார். ‘எத்தன ஆயிரம்போட்டு எங்களக் கட்டின?’ என்று தலித் பெண்கள் முற்றுகையிட்டனர். காவல்துறை பின்வாங்கியது.

ஆனால், (13, மார்ச்) மறுநாள் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி, மூன்று தலித் இளைஞர்களைக் காவல்துறை கைது செய்தது. தேவையற்ற இந்த நடவடிக்கை தலித்துகளின் கோபத்தைத் தூண்டினாலும் அமைதி காத்தனர்.

அன்று மாலையே சம்பந்தமேயில்லாத குழந்தைவேல் என்ற தலித் இனp பெரியவர் கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைகிறார். தாக்கியது கள்ளர்களைச் சேர்ந்த ஒரு இளைஞர். (இதில் குறிப்பிட வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. தாக்கப்பட்ட குழந்தைவேல் அதிமுகவின் கிளைச் செயலாளர்!)

குழந்தை வேல் கல்லால் அடித்து வீழ்த்தப்பட்டதால் கோபமுற்ற அவரின் பேரன் ராஜேந்திரன் கள்ள சாதியினர் தெருவை நோக்கி ஓட, இரண்டு பகுதிகளையும் பிரிக்கும் ஊர் மந்தையில் காவலுக்கு நின்ற பெண் உதவி ஆய்வாளரும் மற்றொரு காவலரும் ராஜேந்திரனை இறுக்கிப் பிடித்துக் கொண்டனர். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த கள்ளர் சாதியினர் திரண்டு ஆயுதங்களுடன் ஓடி வந்தனர். “அந்தம்மா ராஜேந்திரனை தடுத்து நிறுத்திய பின் ஜீப்பில் ஏற்றவில்லை. இரண்டு அடியைப் போட்டு எங்களிடமும் ஒப்படைக்கவில்லை”, என்று சம்பவ இடத்தில் இருந்த தலித் பெண்கள் என்னிடம் குறிப்பிட்டனர்.

மாறாக, ராஜேந்திரனை காவல்துறை அதிகாரி பிடித்துக்கொள்ள, அவன் கழுத்தில் அரிவாள் இறங்கப் பார்த்திருக்கிறது. அவன் தலையைக் குனிந்துகொண்டதால் கையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப அவன் மீது அறிவாள் பாய்ந்தும் காவல்துறை உதவி ஆய்வாளர் விடவில்லை. சூழ்ந்து கொண்டவர்களின் தாக்குதலால் இரத்தம் கொட்ட அவன் சரியும்வரை அவனை அந்த பெண் அதிகாரி விடவில்லை.

இந்த பெண் அதிகாரியின் பெயர் சுதா. மார்ச் 12 இரவே காவலுக்கு வந்துவிட்ட அந்த அதிகாரி, ‘கள்ளத் தெருவுக்குள்ள பள்ளங்க நெழயுறதா? எனக்கு இரத்தம் கொதிக்குது… இதுக்கெல்லாம் சும்மா விடமாட்டோம்’, என்ற தலித் பெண்களை பலமுறை மிரட்டியிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

அதன் பின்னும் தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த எமது கட்சி கிளைச் செயலாளர் முத்தம்மா களத்தில் நின்று போலீசோடு போராடியிருக்கிறார். காவல்துறையின் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி நியாயம் கேட்டிருக்கிறார்.

பின்பு என்னை தொலைபேசியில் அழைத்து தகவல் சொன்னார். நான் உடனடியாக காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டு செய்தியைச் சொல்லி, காவல்துறை ஒரு சார்புடன் செயல்படுகிறது என்பதையும் சொல்லி எச்சரித்தேன்.

மறுநாள் நானும் தோழர் முத்தம்மாவும் காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தோம். முத்தம்மா சொன்னதை விரிவாகக் கேட்டுக்கொண்ட அதிகாரி, முறையான விசாரணை நடத்தி உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இப்போது காவல்துறை பின்வாங்கிக்கொண்டு இரதரப்பு பேச்சு வார்த்தைக்கான முயற்சி நடக்கிறது.

இரண்டு நாட்கள் போய்விட்டன. என்ன நடக்கிறது என்று கவனித்துக்கொண்டுள்ளோம்.

- சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It