இந்திய அரசு ஒருபோதும் ஈழத்தை ஆதரிக்கப் போவது கிடையாது. ஈழமக்களின் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்கப் போவதும் கிடையாது. இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் தனி ஈழம் ஒன்றே தீர்வு என்கிறார்கள். அப்படி கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் நாகா, காஷ்மீர், சீக்கிய, அஸ்ஸாமிய, மணிப்பூர் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசு ஈழமக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என ஈழ ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. இன்று ஈழமக்களுக்காக குரல் கொடுப்பதாக நடிக்கும் பா.ஜ.க. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்போதும் கடுமையாக எதிர்த்தே வந்துள்ளது. இந்து ராஜ்ஜியத்தை கட்டியமைக்க நினைக்கும் பா.ஜ.க. தேசிய இனப் போராட்டங்களை எதிர்க்கின்றது. காங்கிரசோ ஏகாதிபத்திய நாடுகள் இங்குள்ள வளங்களை கொள்ளையிடவும் இங்குள்ள பெரு முதலாளிகளின் கொழுத்த லாபத்தை உறுதி செய்வதற்கும் தேசிய இனபோராட்டங்களை ராணுவத்தின் மூலம் ஒடுக்கி அமைதியான இந்தியாவை உருவாக்க நினைக்கின்றது.

 மேலும் பார்ப்பன இந்து தேசியத்தாலும் ஏகாதிபத்தியங்களாலும் அரசியல் பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டு, பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களும் ஒடுக்கப்படுவதை மறுகாலனியாக்கமும், பார்ப்பன பாசிசமும் மேலும் தீவிரமாக்கியிருக்கின்றன. மறுகாலனியாக்கமோ தேசிய இனங்களின் அரசியல் பொருளாதார உரிமைகளைப் பறிப்பது மட்டுமின்றி, அவற்றின் பண்பாடுகள், மரபுகள் ஆகிய அனைத்தையும் இல்லாதொழிக்கிறது.

 இந்திய அரசின் உளவுத்துறை உருவாக்கிய கூலிப்படைகளின் சீர்குலைவு வேலைகள் காரணமாகவும் தேசிய இனப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள போராளிக் குழுக்களின் குட்டி முதலாளித்துவத் தன்மை காரணமாகவும் பின்னடைவைச் சந்தித்த போதிலும், இந்திய இராணுவத்தின் அடக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அதிகரித்துள்ளன.

 அசாம் ரைபிள்ஸின் பாலியல் வன்முறை, கொலையை எதிர்த்து மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம், உலக முழுவதும் இந்திய ராணுவத்தின் யோக்கியதையை அம்மணமாக்கியது. மணிப்பூர் கவிஞரான இரோம் ஷர்மிளா ஆண்டுக்கணக்காக நடத்திவரும் உண்ணாவிரப் போராட்டம் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கவும் இராணுவத்துக்கு அதிகாரம் தரும் “ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை' அம்பலமாக்கியது.

 தன்னுடையை மறுகாலனியாக்கக் கொள்கைகளின் நோக்கத்துக்கு ஏற்ப, போராடும் தேசிய இனங்களை நிறுவனமயப்படுத்த முயலும் அதே நேரத்தில் மறுகாலனியாக்கம் மேலும் மேலும் மையப்படுத்தலைக் கோருவதால் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆளும் வர்க்கம் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதுடன், இத்தகையை போராட்டங்களின் மீதான ஒடுக்குமுறையை இன்னும் தீவிரப்படுத்தவே செய்யும்

 பெரும் முதலாளிகள் தங்களது முதலீடுகளுக்கு தேவையான பாதுகாப்பு, தொழிலுக்குத் தேவைப்படுகின்ற அமைதி, தங்களது இலபாத்தை உத்திரவாதப்படுத்தும் சட்டதிட்டங்கள், அவற்றை உறுதி செய்யும் அரசமைப்பு என்பனவற்றுக்கான உத்திரவாதமில்லாமல், இந்திய ஆளும் வர்க்கமோ ஏகாதிபத்தியங்களோ தங்களது மூலதனத்தை எந்த நாட்டிலும் பணயம் வைப்பதில்லை. எனவே இலங்கையின் சந்தையை கைப்பற்றுவதற்குத் தடையாக அங்கு நடந்த உள்நாட்டுப் போர் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு தேவையற்ற பிரச்சனையாக இருந்து அதனாலேயே அது முடித்து வைக்கப்பட்டது.

 இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் அது கூட அவர்களை இலங்கையின் சிங்கள பேரினவாத ஆளும்வர்க்கப் பிரிவினருக்கு எதிராக நிறுத்தி, இலங்கை மீதான இந்திய ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகத்தானே அன்றி, வேறு எதற்காகவும் இல்லை. ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையைப் பெற்றுத் தருவதற்காக நிச்சயம் இல்லை. இதை இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 உலகமயமாக்கலை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இந்திய அரசு மூலதனம் பாய்வதற்குத் தடையாக உள்ள அனைத்து போராட்டங்களையும் ஒடுக்கவே செய்யும். தெற்காசியப் பிராந்தியத்தில் பிராந்திய வல்லரசாக உருவாக நினைக்கும் இந்திய அரசிடம் இருந்து வேறு எதையும் நாம் எதிர்பார்க முடியாது.

 ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் இங்குள்ள ஒடுக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். அவர்களுடன் ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வல்லரசு வெறி பிடித்து பேயாட்டம் போடும் இந்திய அரசையும் அதன் மேலாதிக்கக் கொள்கையும் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றுபடுத்தி அரசியல்படுத்த வேண்டும்.

Pin It