மாணவர்களே! தமிழக மக்களே!

லயலோ கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், தமிழ் ஈழ ஆதரவாளர்களின் ஓட்டுக்களைப் பெற தமிழ் ஈழ விடுதலை ஆதரவு கபட நாடகமாடும் ஜெயலலிதா அரசின் அடக்குமுறையால் தடுக்கப்பட்டாலும்,

அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை

ஆங்கோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தனிந்தது காடு - அதில்

மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ...

என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கு ஏற்ப லயலோ கல்லூரி மாணவர்களால் தூண்டி விடப்பட்ட அக்னி, அடக்கு முறை என்னும் பெரும் காற்றால் ஊதி விடப்பட்டு தமிழகம் முழுவதுமான மாணவர்களின் போராட்டமாக வெடித்துள்ளது.

சிங்களப் பேரினவாதி ராஜபக்சே அரசின் இனப்படுகொலைக்கு சாட்சியாக நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள் சேனல் 4-ல் ஏற்கனவே வெளிவந்த நிலையில், சில நாட்களுக்கு முன் சேனல் 4-வெளியிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் படுகொலை காட்சிகள்... கள்ளம் கபடமற்ற, வரும் ஆபத்தை உணராத அந்த மழலை முகம் நம் இதயத்தை பிழிந்தெடுக்கிறது. மழலை முகம் மாறா பாலசந்திரனை சிங்கள பேரினவாதி ராஜபக்சேவின் இராணுவம் சிறைபிடித்து சுட்டுக் கொன்றுள்ள கொடூர காட்சி எந்த மனிதனின் நெஞ்சத்தையும் பதறவைக்கும்.

madurai_students_640

நம் தொப்புள்கொடி உறவுகள், தமிழ் ஈழ சகோதர, சகோதரிகளைக் கொடூரமாக கொன்று குவித்த ராஜபக்சேவை, தமிழ் ஈழ மக்களின் செல்ல மகன் பாலச்சந்திரனை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்ற ராஜபக்சேவை, மத்திய அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை கிஞ்சித்தும் மதிக்காமல் திருப்பதியில் ராஜமரியாதை கொடுத்து வரவேற்கிறது.

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்சித் அய்.நா.மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானத்தை பார்த்துத்தான் முடிவெடுப்போம் என்கிறார். நம் தமிழக மக்களின் உணர்வைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இலங்கையை நட்பு நாடு என அறிவிக்கிறார். அன்னிய நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிட உரிமையில்லை என்கிறார். பெரிய சனநாயகவாதியைப் போல் சகோதர மனப்பான்மையுடன் இந்திய அரசு நடந்து கொள்ளுமே தவிர, பெரியண்ணனாக (Big Brother)இந்தியா நடந்துகொள்ளாது என்கிறார்.

வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் அன்னிய நாட்டுப் பிரச்சனைகளில் தலையிட மாட்டோம் என்று சனநாயக வேடமிடும் காங்கிரசு அரசின் லட்சணம் நமக்குத் தெரியாதா?

நடந்து முடிந்த வரலாறுகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற திமிரில் பேசுகிறார்களா?

சல்மான் குர்சித் பிக் பிரதராக இந்தியா நடக்காது என்ற உண்மையை ஒத்து கொள்கிறார். ஆனால் இந்தியா, தெற்காசியாவின் பிக் பாஸாக (Big Boss) நடந்து கொள்கிறது என்ற உண்மையை மட்டும் வேண்டுமென்றே மக்களவையில் சொல்லாமல் விட்டுவிட்டார்.

இந்தியாவின் பிக்பாஸ் அணுகுமுறைக்கு வரலாற்று சான்றும் எண்ணிலடங்காமல் உள்ளது என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.

- காங்கிரசு கட்சியின் தலைவி இந்திராகாந்தி ஆட்சியில் பங்களாதேசின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்திய ராணுவத்தை அனுப்பி நாட்டாமை செய்ததை மக்கள் மறந்துவிடவில்லை.

- இதே இந்திராகாந்தி ஈழச்சிக்கலில் ரா மூலம் மூக்கை நுழைத்து ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இலங்கை அரசை மிரட்டி பெருமுதலாளிகளின் சந்தை, சுரண்டலுக்காக இலங்கையை பணிய வைக்க முயற்சித்ததை மக்கள் மறந்துவிடவில்லை.

- காங்கிரசு கட்சியின் தலைவர் ராஜீவ்காந்தி ஆட்சியில் இலங்கை அரசு இந்தியாவிற்கு பணிந்து, இந்தியாவுடன் கைகோர்த்துக் கொண்டவுடன் அமைதிப் படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கும், ஈழவிடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்குமான வேலையை இந்திய அரக்கர் படை மேற்கொண்டதை மக்கள் மறந்து விடவில்லை.

- பூட்டான், மாலத்தீவு நாடுகளின் உள்நாட்டு சிக்கலில் இந்திய இராணுவத்தை அனுப்பி நாட்டாமை செய்ததை மக்கள் மறந்து விடவில்லை.

- நேபாள நாட்டில் மாவோயிஸ்டுகள் அரசியல் அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக இன்றுவரை நேபாள நாட்டின் உள்விவகாரத்தில் பிக் பாஸாக நடந்து வருதை மக்கள் மறுந்து விடவில்லை.

இந்தியா அன்னிய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது என்று கேப்பையில் நெய் வடிவதாக நம்மை நம்பச் சொல்லி சனநாயக நாடகமாடுகிறார்கள் காங்கிரசும், இந்திய அரசும்.

உண்மையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பது எது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம்.

வெள்ளையனிடமிருந்த அரசியல் அதிகாரம், இந்திய பெரு முதலாளிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டதே 1947 சுதந்திரமாகும். பெருமுதலாளிகள் தங்களது சந்தைக்காகவும், சுரண்டலுக்காகவும், இந்தியப் பெரும் சந்தையை, இந்தியா என்ற ஒற்றை தேசத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். 1947 சுதந்திரத்திற்குப் பின் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள தமிழகம் உட்பட அனைத்து தேசங்களும், தங்களுக்கான குடியரசை அமைத்துக் கொள்வதற்கான சனநாயகத்தை வழங்காத இந்திய அரசு, தமிழகம் உட்பட ஒவ்வொரு தேசமும் விருப்பப்பூர்வமாக (பொது வாக்கெடுப்பின் மூலம்) மத்திய அரசில் இணையலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானித்து கூட்டரசை உருவாக்கும் சனநாயக வழிமுறைக்கு மாறாக, இந்தியாவில் உள்ள அனைத்து தேசங்களையும் வலுக்கட்டாயமாக, சனநாயகமற்ற அதிகாரத்துவ வழியில் இந்தியா என்ற சிறையில் அடைத்து வைத்துள்ளது. இன்றைய இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ளது.

இந்திய பெருமுதலாளிகள் தங்களது லாப வெறிக்காக இந்திய துணைகண்டத்தில் உள்ள தேசங்களை சிறைபடுத்தியதோடு நின்று விடாமல், தெற்காசியா முழுவதும் தங்கள் சந்தையை, சுரண்டலை விரிவுபடுத்த, இந்திய அரசின் ஆதிக்கத்தின் கீழ் தெற்காசியா முழுவதையும் கொண்டுவர எத்தகைய கொடூரத்தையும் செய்யத் தயாராய் உள்ளனர்.

பெரும் முதலாளிகளின் நலன் மற்றும் இவர்களின் கூட்டாளியான ஏகாதிபத்தியத்தின் நலன் என்ற அடிப்படையில்தான் இந்திய வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது. மற்றபடி அண்டை நாட்டுப் பிரச்சனையில் தலையிடமாட்டோம் என்பதெல்லாம் நம் காதில் பூச்சுற்றும் வேலைதான்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசு வெளியுறவுக் கொள்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதாவது அய்.நா - மன்றத்தில் முன்வைக்கப்படும் உள்நாட்டு விவகாரங்களில் இந்திய அரசு கலந்து கொள்ளாது என்று முடிவெடுத்தனர். அன்னிய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடகூடாது என்ற இந்த திடீர் முடிவுக்கு சனநாயக அடிப்படை ஒன்றும் கிடையாது. கீழ் வரும் உண்மைகளே காரணம்.

- பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை அய்.நா.மன்றத்துக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதும்...

- வடகிழக்கு மாநிலங்களான நாகா, மிசோராம், மணிப்பூர் மக்களின் “பழங்குடி தேசங்களுக்கான” போராட்டத்தை இந்திய அரசு மனிதத் தன்மையற்ற முறையில் இராணுவத்தைஜ் கொண்டு ஒடுக்கி வருவது உலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளதும்...

- சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் உள்ள கனிம வளங்களை பெருமுதலாளிகளும் மற்றும் இவர்களின் கூட்டாளியான ஏகாதிபத்தியங்களும் கொள்ளையடிப்பதற்காக பழங்குடி மக்களை தாய் நாட்டிலேயே அகதிகளாக்கும் முயற்சிக்கெதிராக மாவோயிஸ்டுகள் தலைமையில் பழங்குடி மக்கள் நடத்தும் போராட்டத்தை ஒடுக்க இந்திய இராணுவத்தின் மூலம் மேற்கொண்டுவரும் கொடூரமான மனித தன்மையற்ற அடக்குமுறை நடவடிக்கைகள் சனநாயக சக்திகள், உலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளதும்...

மேற்கூறிய இந்திய அரசின் மக்கள் விரோத, சனநாயகமற்ற நடவடிக்கை அய்.நா. மன்றத்தில் மற்ற நாடுகளால் முன் வைக்கப்படுமோ என்ற அச்சத்தில்தான் இத்தகைய வெளியுறவு கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டத்தில் - நமது கண்ணோட்டம்

இந்தியா தெற்காசியப் பகுதியின் வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்திய பெருமுதலாளிகள் தங்களின் சந்தைக்காக, சுரண்டலுக்காக இந்தியாவில் உள்ள தேசிய இனங்களை அடிமைப்படுத்தி சிறைபடுத்தியுள்ளதோடு, தங்களின் சந்தையையும், சுரண்டலையும் விஸ்தரித்து தெற்காசியா முழுவதையும் ஆக்டோபஸ் போல் இறுக்கி தன் பிடிக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தெற்காசியாவில் எந்த ஒரு தேச விடுதலைப் போராட்டமும் தங்கள் நாட்டின் ஆளும் வர்க்கத்தை மட்டும் எதிர்த்து வெற்றியடைய முடியாது, இந்திய விரிவாதிக்கத்தை எதிர்த்து வீழ்த்தும் போதுதான் தங்களின் தேசிய விடுதலையை அடைய முடியும் என்ற சமூக, பொருளியல், அரசியல் எதார்தத்தை நாம் உணர வேண்டும்.

தமிழ் ஈழ விடுதலைக்கான போராட்டம் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் பின்னுக்கு தள்ளப்பட்டதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று ஈழ விடுதலைப் போராட்டத்தில் எதிர்த்து வீழ்த்த வேண்டிய சக்தியாக இந்திய விரிவாக்கத்தை பார்க்காததே ஆகும்.

ஈழ விடுதலைக்காக உண்மையாக குரல் கொடுப்பதாக, போராடுவதாக கூறிக்கொள்ளும் நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் போன்ற அனைவரும் இந்தியா தலையிட்டு தமிழ் ஈழச்சிக்கலை தீர்க்க வேண்டும் என்று திருடன் கையில் சாவியை கொடுக்கச் சொல்லி கூப்பாடு போடுவதையே, தமிழ் ஈழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டமாக செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழ் ஈழச் சிக்கலில் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் பிழைப்புவாதிகளாகவே உள்ளனர். தமிழ் ஈழ விடுதலைக்கான போராட்டத்தை ஆதரித்து குரல் கொடுப்பதாக, போராடுவதாக கூறிக்கொள்ளும் சில இயக்கங்கள் தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதால் கிடைக்கும் செல்வாக்கு, பணத்திற்காக, அரசியல் பிழைப்பிற்காக ஆதரவு நாடகமாடி கொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் தலைமை தாங்கும் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் தமிழக மக்களிடம், தமிழ் ஈழ விடுதலைக்காக பெருகி வரும் ஆதரவை ஓட்டுக்களாக மாற்றும் ஒற்றை குறிக்கோளோடு, ஈழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டத்தை முன்னெடுப்பவர்களாக தங்களை அடையாளம் காட்டி அரிதாரம் பூசி வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க இரண்டுமே இந்திய பெருமுதலாளிகளுக்கு சேவை செய்யும் ஆளும் வர்க்கக் கட்சிகள் என்பதை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது.

madurai_students_641

காங்கிரஸ், பி.ஜே.பி - இரண்டு கட்சிகளுமே பெருமுதலாளிகள், மற்றும் இவர்களின் கூட்டாளியான ஏகாதிபத்தியங்களின் கைத்தடிகளே. இவர்கள் இந்திய விஸ்தரிப்பு கொள்கையை ஏற்று, தெற்காசியாவில் இந்தியாவை வல்லரசாக நிலைநிறுத்துவதையே தங்களது அடிப்படை கொள்கையாக கொண்டவர்கள்.

தமிழகம் முழுவதும் ஆர்த்தெழுந்து போராடிவரும் மாணவர்களும், தமிழ் ஈழ விடுதலையை ஆதரித்து போராடிவரும் அனைத்து மக்களும், இயக்கங்களும் மேற்கூறிய அடிப்படை உண்மைகளை உணர்ந்து தங்களது போராட்ட வியூகங்களை அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மாணவர்களின் தமிழகம் தழுவிய இப்போராட்டம், திட்டவட்டமான கோரிக்கைகளை முன்வைத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த கோரிக்கைகள்தான் நமது தலைமையாகும். இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கும் அதே வேலை இந்திய அரசின் நிலையையும், அய்.நா மன்றத்தின் நிலையையும், அமெரிக்க தீர்மானத்தின் வெத்து வேட்டையும், ஈழ சிக்கலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் உண்மை முகத்தையும், தெள்ளத் தெளிவாக உணர்ந்து போராடுவது மாணவர்களின் அரசியல் தெளிவை உலகிற்கு பறைச்சாற்றியுள்ளது. இனி மாணவர்களின் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேட முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது மிகவும் வரவேற்கதக்கதாகும்.

இத்தகைய தெளிவோடு தமிழகம் முழுவதும் போராடி வரும் மாணவர்கள் தங்களுக்குள் மாநில, மாவட்ட மட்டங்களில் ஒருங்கிணைப்பை கட்டியமைத்துக் கொள்வதோடு, தங்களது போராட்டத்தை தமிழக மக்களோடும், சனநாயக சக்திகளோடும், தமிழ் ஈழ விடுதலைக்காக உண்மையாக - உறுதியோடு போராடும் கட்சிகள் -இயக்கங்களோடும், தமிழ் இன உணர்வாளர்களோடும் ஒன்றிணைந்து திட்டமிட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

எங்களின் மக்கள் சனநாயக மாணவர் பேரவையும் மக்கள் சனநாயக இளையோர் பேரவையும், மக்கள் சனநாயக குடியரசு கட்சியும் மாணவர்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

அய்.நா. மன்றமே!

¨ சிங்கள பேரினவாதி ராஜபக்சே மீது போர் குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக பகிரங்க விசாரணை நடத்து!

¨ தனி ஈழத்திற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்து!

¨ ஈழ தமிழர்களின் இனப் படுகொலைக்கு பின்னின்ற இந்தியாவை பகிரங்க விசாரணை நடத்து!

¨ ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை அய்.நா. மேற்பார்வையில் உடனடியாக நடைமுறைப்படுத்து!

¨ சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்து நடத்தும் ஈழ தமிழர்களின் இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!

இந்திய அரசே!

¨ சிங்கள பேரினவாதி ராஜபக்சேவை போர்குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக பகிரங்கமாக அறிவி!

¨ ஈழ தமிழர் படுகொலையில் பகிரங்க சுய விசாரணைக்கு உட்படுத்திக் கொள்!

¨ தனி ஈழத்தை அங்கீகரி!

மாணவர்களே! தமிழக மக்களே!

¨ அடிமையின் குரல் அம்பலமேறாது! ஈழ விடுதலைக்கான உண்மையான ஆதரவு - தமிழக விடுதலையே!

¨ சுதந்திர தமிழ்நாட்டிற்காக போராடுவோம்! சுதந்திர தேசங்களின் (பொது வாக்கெடுப்பின் மூலம்) கூட்டரசை படைப்போம்!

¨ தெற்காசிய வல்லரசு இந்தியாவிற்கெதிராக தெற்காசிய மக்களின் போராட்டங்களை ஒன்றிணைப்போம்!

மாணவர்களின் இப்போராட்டம்...

¨ சர்வதேச நீதிமன்றத்தில் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை நிறுத்தி - தூக்கிலிடும் வரை,

¨ அய். நா மன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் அமையும் வரை.

¨ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில், இந்திய அரசின் இரத்த படிந்த கரங்களும் உள்ளது என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் வரை

¨ இந்திய பெருமுதலாளிகள் சந்தைக்காக, சுரண்டலுக்காக தெற்காசியாவை இந்திய அரசின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவர எத்தகைய கொடூரத்தையும் செய்ய தயாராய் உள்ள இந்திய அரசின் ஆதிக்க வெறியை அடியோடு வீழ்த்தும் வரை

¨ ஈழச் சிக்கலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் அரசியல் கட்சிகளின் - இயக்கங்களின் முகத்திரை கிழியும் வரை,

அலை... அலையாய்... முன் செல்லட்டும்

இலங்கைத் தீவை அதிர வைக்கட்டும்

உலகின் மனசாட்சியை உலுக்கியெடுக்கட்டும்

இந்திய அரசை மண்டியிட செய்யட்டும்

மாணவர்களின் இப்போராட்டத்திற்கு ஆதரவாய்... அனைத்து தமிழக மக்களும், சனநாயக சக்திகளும் தமிழ் ஈழம் அமைய உண்மையாக, உறுதியாக போராடும் கட்சிகளும் - இயக்கங்களும். தமிழ இன உணர்வாளர்களும் ஓரணியில் திரள்வோம். ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுப்போம்.

தொடர்புக்கு

- பழனி (9176264717), பொதுச் செயலாளர், மக்கள் சனநாயக குடியரசு கட்சி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.