வீட்டிற்கு வந்திருப்பது எதிரியாகவே இருந்தாலும் உட்கார வைத்து, உபசரித்து, உள்ளம் குளிர்வித்து அனுப்புகிற உலகின் மேன்மை மிக்க பண்பாடு கொண்ட தமிழினம், தனக்கான நியாயத்தை, நீதியை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்து நிற்கிறது. வீட்டுத் தாழ்வாரத்தில் கட்டிக் கிடந்த குட்டி நாயுடன் கொஞ்சி விளையாடிய பிஞ்சுக்குழந்தைகள் தொட்டு, ஊன்றுகோல் உதவியுடன் நிமிர்ந்து நின்ற முதியவர்கள் வரை... தமிழ் இனத்தில் பிறந்தே ஒரே காரணத்துக்காக ரத்தமும், சதையுமாக சாலையிலும், ஓரத்திலும் சிதறிக் கிடந்தார்கள். பறிகொடுத்தவர்கள் பரிதவித்து நிற்கிறார்கள். பலி கொண்டவர்களோ இன்னும் பழி தீர்க்க காத்திருக்கிறார்கள்.

இவர்களை யார் நீதி கேட்பது; இழந்தவர்களுக்கு யார் நியாயம் சொல்வது? வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம், தீர்ப்புச் சொல்ல வேண்டிய நியாயவான்கள், நீதித்தராசை வீதியில் எறிந்து விட்டு கண்களையும், காதுகளையும், இருதயத்தையும் இறுக்க மூடிக் கொள்கிறார்கள். அக்கிரமச் செய்கைக்காரர்களை பழி தீர்ப்பதல்ல, இழந்து தவிக்கும் இனத்தின் நோக்கம். மறுக்கப்பட்ட, முடக்கப்பட்ட உரிமைகளை உலகின் காதுகளுக்கு உரத்துச் சொல்லி, மிஞ்சிக் கிடக்கும் கொஞ்ச உயிர்களுக்காவது நீதி வழங்கப்படவேண்டும் என்பதே அவர்களின் கடைசி எதிர்பார்ப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கிற இலங்கைக்கு எதிரான தீர்மானம், வறண்டு, வெடித்துக் கிடந்த உலகத் தமிழர் இதயத்தில் மீண்டும் புதுவெள்ளம் பாய்ச்சியிருக்கிறது. ‘அமெரிக்கா அரசியல் செய்கிறது. தெற்காசிய பிராந்தியத்தில், தனது ஆளுமையை நிலைநாட்டுவதற்காக, மிகுந்த சுயநலத்துடன் இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது’ என்று, ஒரு கூட்டம் இன்னமும் புலம்பிக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில், காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட, இதே குரலை அழுத்தமாக ஒலித்திருக்கிறார்கள்.

எந்தப் பிடிப்பும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்த தமிழனுக்கு, அமெரிக்கா கொண்டு வந்திருக்கிற இந்தத் தீர்மானம், சிறியதாக ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை விதைத்திருக்கிறது. அதையும் கெடுப்பானேன்? அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்துக்குப் பிறகுதானே, உலகத் தமிழினம் மீண்டும் தனது புரட்சிக் கரங்களை உயர்த்தி நிற்கிறது? உலகம் முழுக்க உள்ள தமிழ் சகோதரர்களும், சகோதரிகளும் உணர்வால் ஒன்றுபட்டு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களுமாய் இணைந்து நிற்பதற்கு, அமெரிக்கா கொண்டு வந்த அந்தத் தீர்மானம்தானே காரணம்? தீர்மானம் சுயநலமா; பொதுநலமா என்கிற ஆராய்ச்சிகள் அப்புறம். அந்த முன்னெடுப்புக்குப் பிறகுதானே, தமிழன் அனுபவித்த கொடுமைகளை உலகம் உற்றுக் கவனிக்கத் துவங்கியிருக்கிறது.

அமெரிக்காவின் தீர்மானம், அவர்களின் சொந்த நலன் கருதியது என்று கூறும் மதிப்பார்ந்த காங்கிரஸ் பொதுநலவாதிகள், அமெரிக்காவுக்கு பதிலாக, அவர்களே அந்தத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வர முயற்சிதான் செய்திருக்கலாமே! தானும் செய்யமாட்டார்கள். செய்கிறவனையும் விடமாட்டார்கள். இதுதான் இவர்கள் கற்று வளர்ந்திருக்கிற நியாயம்.

அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்களும், மனித நாகரீகங்களை இன்னமும் மதிக்கத் தெரிந்தவர்களும் கெஞ்சிக் கூத்தாடியும் எந்தப் பலனும் இதுவரை இல்லை. ‘தமிழர்களுக்கு அதிகாரப்பரவல் அளிக்குமாறு இலங்கையை இந்தியா வற்புறுத்திக் கொண்டிருக்கிறது’ என்கிறார் ‘எல்லாம் தெரிந்த’ பிரதமர். ‘அதெல்லாம் முடியவே முடியாது. தமிழர்களுக்கு அதிகாரப்பரவல் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என இலங்கையின் அதிபர் ராஜபட்சே படு திட்டவட்டமாக, முகத்தில் அறைந்தது போல அறிவித்து விட்டார். அதுகுறித்து ஒரு வார்த்தை பேச திராணியற்றவர்கள், ‘இலங்கையை வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம்’ என அதே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் தீர்மானம், இலங்கையை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதில், இலங்கையைக் காட்டிலும் அதிக அக்கறை எடுத்து களமாடிக் கொண்டிருக்கிறது இந்திய அரசாங்கம். ‘தீர்மானத்தின் மீது என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்’ என ஒவ்வொரு முறை கேட்கும் போது கள்ள மவுனம் காக்கும் மன்மோகன், ‘அமெரிக்க தரப்புடன், இலங்கையை பேசி சுமுகத்தீர்வு காணுமாறு வலியுறுத்தி வருகிறோம்’ என்கிறார். இலங்கையின் சொந்தப் பிரச்னைக்கு சுமுகத்தீர்வு காணத் துடிக்கிற அக்கறை, தமிழனத்துக்கு எனும்போது மட்டும் ஏன் வர மறுக்கிறது?

"இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் இந்தியா தலையிடாது. அண்டை நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதை இந்தியா ஒரு கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறது," என்று அறிவித்திருக்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். யாரை ஏமாற்றுகிற நோக்கம்? அண்டை நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பது, இந்தியாவின் கொள்கை முடிவாக இருக்கிற பட்சத்தில், பக்கத்தில் இருக்கிற மாலத்தீவு விவகாரத்தில் நேரடியாக களத்தில் இறங்கி அரசியல் செய்து அவமானப்பட்டது ஏன்?

மாலத்தீவு நாட்டு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. உடனடியாக 12 எம்.பி.களுடன், தலைநகர் மாலேயில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்து விட்டார் நஷீத். சர்வதேசச் சட்டங்களின் படி, மற்றொரு நாட்டு தூதரகத்துக்குள் போலீசார் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த விதியை இறுகப் பிடித்துக் கொண்ட இந்திய அரசு, தனது தூதரகத்துக்குள் நஷீத்தை அனுமதித் தது மட்டுமல்லாமல், அங்கிருந்து அரசியல் காய்களை அவர் நகர்த்தவும் முழுவதுமாக ஒத்துழைத்தது. இந்தியாவின் இந்த அத்துமீறல் செயலுக்கு மாலத் தீவு அரசு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. தனது நாட்டு உள் விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்தது.

பதினோரு நாட்கள் தஞ்சம் கொடுத்த, இந்திய அரசால், இறுதி வரை நஷீத்தை காப்பாற்ற முடியவில்லை. பிடித்து உள்ளே தள்ளி விட்டது மாலத்தீவு. சர்வதேச அரங்கில், ‘வல்லரசு - 2020’க்கு எவ்வளவு பெரிய அவமானம்? அவமானம் ஒரு பக்கம் இருக்கட்டும். மாலத்தீவு என்கிற அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் என்ன காரணத்துக்காக இந்திய அரசு தலையிட்டது? ‘அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிடுவது இந்தியாவின் கொள்கை அல்ல’ என்று சத்தியம் செய்யும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மாலத்தீவை, இந்தியாவின் 29வது மாநிலமாகவா நினைத்துக் கொண்டிருக்கிறார்? மாலத்தீவு விஷயத்தில் தலையிடும் போது, ஏன் இலங்கை விஷயத்தில் தலையிடக்கூடாது?

‘ஐக்கிய நாடுகள் சபையில், அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது...’ - இப்படி ஆவேசமாக பேட்டி கொடு த்திருக்கிறவர் ராஜபட்ஷேவோ, அவரது உடன்பிறப்புகளோ அல்ல. கோமாளித்தன அறிக்கைகளுக்கு பெயர் போன சுப்பிரமணியசுவாமி. இப்படிச் சொன் னது மட்டுமல்லாமல், இலங்கைக்கே சென்று, ரத்தம் படிந்த ராஜபட்சேவின் கரங்களை இறுக்கப் பிடித்து குலுக்கி, குலாவி வந்திருக்கிறார். இவர், இன்றல்ல... என்றுமே சிங்களர்களை விடவும் அதிகமாக இலங்கையின் நடவடிக்கைகளை ஆதரிக்கக்கூடியவர்.

பத்து நாட்களுக்கு முன் சென்னையில், இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு வாரத்துக்கு தங்கள் அருமை, பெருமைகளை உலகிற்கு அறிவிக்கிற மாநாடு ஒன்று நடத்தின. அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தியவர்களில் இந்த சுப்பிரமணியசுவாமியும் ஒருவர். இந்து மதத்தின் பெருமைகளை அந்த மாநாட்டுக் கூட்டத்தில் உயர்த்திப் பிடித்துப் பேசிய சுவாமி, உண்மையாகவே அவர் இந்துவாக இருந்திருந்தால்... ராஜபட்சேவின் கரங்களைப் பிடி த்துக் குலுக்கையில், ‘எங்கள் கோயில்களை இங்கே இடித்துத் தரைமட்டமாக்குவது ஏன்? அவற்றை பவுத்த விகாரங்களாக்குவது என்ன நியாயம்’ என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கலாமே? குறைந்தபட்சம், தனது கண்டனத்தையாவது பதிவு செய்திருக்கலாமே? இந்து மத உணர்வாளர்கள், சுவாமியிடம் நியாயம் கேட்பார்களா?

சுவாமியோ, சல்மானோ, மன்மோகனோ... தமிழனம் இவர்கள் யாரிடமும் நியாயத்தை எதிர்பார்த்து நிற்கவில்லை. கொடுப்பதற்கு இவர்கள் நியாயவான்களும் இல்லை. ‘எந்த ஒரு வினைக்கும், அதற்கு சமமான எதிர்வினை நிச்சயம் உண்டு...’ - அறிவியலும், ஆன்மீகமும் மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிற, நம்புகிற விஷயம் இது. தமிழினம்... அந்த இயற்கையை நம்புகிறது. எங்களுக்கு நியாயம் கொடு நீதிதேவனே என்று மன்றாடி நிற்கிறது!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It