1950-களில் மத்தியிலும் மாநிலத்திலும் பேராயக் கட்சி (காங்கிரஸ்) ஆட்சியிலிருந்த காலம். தமிழகத்தைச் சேர்ந்த ஓ.வி.அழகேசன் அப்போது நடுவணரசில் தொடர்வண்டித் துறை (ரயில்வே) அமைச்சர். திருச்சி மாவட்டம் அரியலூர் அருகே மழைவெள்ளம் பெருகி, பாலம் உடைந்து ரயிலிருந்து இருபது-முப்பது பேர் வரை பலியானார்கள்.

"அரியலூர் அழகேசா ஆண்டது போதாதா

மக்கள் மாண்டது போதாதா"

வளர் பருவத்திலிருந்த தி.மு.க வெளியிட்ட இச் சுவரொட்டி 

1. நிர்வாகத் திறனின்மை

2. மக்கள் துயர்

3. மொழிவீச்சு

மூன்றையும் சரியாய் சேர்த்து, மக்களை ஒரு கணம் உற்றுத் திரும்பிப் பார்க்க வைத்தது.

1960-களின் தொடக்கம், சென்னைத் துறைமுகத்தில் தொழிலாளிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு தொழிலாளி மரணமடைந்தார். 1962-ல் சட்டப் பேரவை நடத்திய தேர்தல் வந்த போது, ரத்தக்கறை படிந்த சட்டையைக் கையில் ஏந்தி கண்ணீர் வடிக்கும் பெண்ணின் படம்.

“கூலி உயர்வு கேட்டார் அத்தான்

குண்டடி பட்டுச் செத்தார”

நீட்டு வசத்தில் போடப்பட்ட சுவரொட்டி நியாயம் கேட்டு, தமிழ்நாடு முழுக்க பயணித்தது.

அடுக்கு மொழியில், அளவான வார்த்தைகளில் சுவரொட்டி போடும் உத்தியை தி.மு.க. கையிலெடுத்தது. கருத்துப் படம் போடுதல், சிறு சிறு சுவரொட்டிகளாக்கி வெளியிடுதல் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது

1. பத்திரிகை

2. சுவரொட்டி

3. நாவன்மை

மூன்றையும் கலையாக்கி, மக்களிடம் கொண்டு வந்தது; நான்காவதாய் அதிவீச்சுள்ள திரைப்படக் கலையை கைவசப்படுத்தியது. அரசு ஒரு அடக்குமுறைக் கருவி என்ற சமூக விஞ்ஞானக் கருத்து சரியானதாக இருந்தாலும், அப்போதிருந்த பேராயக்கட்சி (காங்கிரஸ்) அரசு, ஒவ்வொரு சுவரொட்டியும் காகிதத்தில் சுருட்டப்பட்ட குண்டு என அறியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் சுவரொட்டிகள் அச்சிட, ஒட்ட தடை ஏதுமில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத உருட்டல், மிரட்டல் இல்லாததால் அச்சகப் பெயர் துணிச்சலுடன் போடப்பட்டது.

ஈழத் தமிழ்ப் பகுதிகளில் பீரங்கி வெடித்து மூளை சிதறிய சிறுமி, பிணமாய்க் கிடக்கும் கர்ப்பிணித் தாயின் வயிற்றிலிருந்து பிணமாய்த் துருத்திய குழந்தை, விமானக் குண்டு வீச்சால் அறுபட்ட கோழிகள் போல் கழுத்து துண்டான மனித உடலங்கள்,; - கொஞ்சம் முன்னர்தான் அவர்கள் உயிரோடு உலவினார்கள் என்று நம்ப முடியாத பிணக்குவியல்.

இன்றுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் பெரும் வீச்சைத் தரும் சுவரொட்டிகளாக இக் கொடூரங்களைக் கொண்டுவர முடியும். கையளவு வெளியீடுகளாய் முட்டைத்தோடு போன்ற வழவழப்பில் தேர்தல் பரப்புரைக்கு எடுத்துச் சென்றிருக்க முடியும். ஆனால் தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த வழியில் கடந்த நாட்களில் நடந்து வந்தார்களோ, அந்தக் கதவுகளை அடைததார்கள்.

உரிமைகளை எடுத்துக் கொள்ளல் என்ற பக்கத்துக்கு முன் உரிமைகள் வழங்கல் என்ற முதல்பக்கம் ஒன்றுளது. இந்த முதல்பக்கத்தை ஆட்சிக்கு வருகிற எவரும் மறந்து போவர். உரிமை பறித்தல் என்ற புள்ளியில் உரிமை மீட்டெடுப்புப் போராட்டம் உருவாகிறது. தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உரிமையையும் மற்றவர்க்கும் வழங்குதல் என்ற சனநாயகத்தின் விதியை ஐந்தாவது முறையாக ஆட்சியில் ஏறிய திராவிட முனனேற்றக் கழக ஆட்சியாளர்கள் புறக்கணித்தனர்.

“தமிழினப் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரசைத் தோற்கடிப்பீர்”

மதுரையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நண்பர்கள் சுவரொட்டியை அச்சடித்து வெளியிட்டார்கள். தமிழினப் படுகொலையை நடத்துவது இலங்கை சிங்கள இனவெறி அரசு. உண்மையில் அதன் உட்கோடு வழியாக நடந்து போனால் இந்தியாதான் இந்தக் கொடூரத்தை நிகழ்த்துகிறது என்ற அதிர்ச்சி தரும் புள்ளியை வந்தடைய முடியும்

“நமது இலங்கை ராணுவம் களத்தில் நிற்பது என்பது ஒரு பேருக்குத்தான்; உண்மையில் இந்திய ராணுவத்தினர்தான் இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று இலங்கை ராணுவத் தளபதி ஒருவர் இந்த அதிர்ச்சியை எளிதாகத் துடைத்தெறிவது போல் கூறினார்.

“இந்தியாவின் துணையில்லாமல் நாம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க முடியாது. இந்தியா எல்லாவகையிலும் நம்முடன் வந்ததால்; விடுதலைப் புலிகளை ஒழிக்க முடிந்தது”

டி.சில்வா என்ற அமைச்சர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தந்துள்ளார். எனவே “தமிழினப் படுகொலையை நடத்தும் காங்கிரசைத் தோற்கடிப்பீர்” என்று தானே இருக்க வேண்டும் என்று சுவரொட்டி அச்சிட்ட மதுரை நண்பர்களிடம் கேட்டேன்.

“அப்படித்தான் போடும்படி சொன்னோம். அச்சகத்துக்காரர் மறுத்து விட்டார்” என்றார்கள். அச்சகத்தின் பெயரில்லாமல் வெளியானது.

“யாருக்காக பேசுகிறார் அ.மார்க்ஸ்” என்றொரு சிறு வெளியீட்டை நான் கொண்டு வந்தேன். ஈழப் பிரச்னையை மையப்படுத்திய அ.மார்க்ஸ் நேர்காணல் ஒன்றுக்குப் பதிலுரையாக அது பின்னப்பட்டிருந்தது. அச்சிறு வெளியீட்டில் அச்சகத்தின் பெயர் இருக்காது. “ஈழப் பிரச்னைதானே, அச்சகத்தின் பெயர் வேண்டாம்”. என்று உரிமையாளர் தவிர்த்து விட்டார். காவல்துறை, அரசு அதிகாரத்தின்; நெருக்கடி அச்சகக்காரர்களின் தண்டுவடத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஈழவிடுதலை ஆதரவாளர்கள், தமிழுணர்வாளர்களின் விருப்பத்தை; வணிகப் பார்வையில் கூட நிறைவேற்ற முடியாதவர்களாய் அச்சகத்தினர் ஆகிவிட்டனர்.

“காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்துக்குப் போடும் தூக்கு” - என்ற முழக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் முதலிடத்தில் நின்றது. ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விமரிசித்து கருத்துப்பட சுவரொட்டியை அச்சிட்டு ஒட்டிய தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

அதனால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று சுவரொட்டிகள், வெளியீடுகள் அச்சிட்டுக் கொண்டு வரப்பட்டன- அதுவும் அச்சகப் பெயரில்லாமல்.

உரிமைகள் சட்டத்தை பயன்படுத்தலை எதிர்க்கட்சியாக இருக்கிறபோது ஒரு மாதிரியாகவும், ஆளுங்கட்சியாகிற போது எதிர் நிலையாகவும் கையாளுவதில் தி.மு.க. வினர் திறமை சாலிகள் என்பதை 2009 - மே 16-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் காட்டிவிட்டது.

இவர்கள் எதிர்பார்க்காத ஒரு திசையிலிருந்து, புதிய புயல் கிளம்பியது. ஈழத்தமிழர் துயரத்தை, விடுதலையைப் பேசுகிற ‘என்ன செய்யப் போகிறோம்; எமக்காகவும் பேசுங்களேன்| இறுதி யுத்தம், கருணாவின் துரோகம் போன்ற குறுந் தகடுகள் விநியோகமும் திரையிட்டுக் காட்டலும் முனைப்புடன் நடந்தன. எதிர்ப்பையும். தடையையும் முன்னுணர்ந்ததால் எடுத்த எடுப்பில் ஆயிரக்கணக்கில் பிரதிசெய்து விநியோகிக்கப்பட்டன. புத்திரிகைத் தடைச்சட்டம், அச்சக விதிகள், திரைப்படத் தணிக்கை போன்ற தணிக்கை விதிகள் குறும்படங்களுக்கு இல்லாததால் மளமளவென்று தீ கீழே இறங்கிப் பரவியது.

குறிப்பாக குறும்படங்களைத் திரையிடத் தடையில்லை என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு தேர்தலுக்கு முந்திய நாள் வந்தது. மக்கள் தொலைக்காட்சி தடைநீக்கம செய்யப்பட்ட குறும்படங்களை மாலையிலிருந்தே மக்கள் பார்வைக்கு ஒளிபரப்பியது. 12-5-09 மாலை முதல் மறுநாள் 13-5-09 காலை வாக்குச் சாவடிக்குப் போகிற வரை மக்களை விழிப்புப்படுத்தியபடி அனுப்பிக் கொண்டிருந்தது.

2001-ல் ஜெயலலிதா இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார் ‘ஐயோ என்னைக் கொல்றாங்க, என்னைக் கொல்றாங்க’ - என்று பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்ட கருணாநிதியின் அலறலுடன் சன்தொலைக்காட்சி, சன்செய்திகள், கே.டி.வி மூன்றும் விடியலில் மக்களை எழுப்பின. தேநீர்க்கடைக்கோ, காலை நடையாகவோ, அலுவலகவேலைக்கோ சென்ற ஒருவர் “என்னைக் கொல்றாங்க, என்னைக் கொல்றாங்க” என்ற அலறலைக் கேட்டபடியே ஒவ்வொரு வீடாய்த் தாண்டிப் போனார். காட்சி ஊடகத்தின் அசுரத்தனத்தை தமிழகம் உணர்ந்த அந்த முதல் வாய்ப்புக்குப் பிறகு இப்பொழுதுதான் மக்கள் தொலைக் காட்சி மூலம் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டை மக்கள் உணரமுடிந்தது.

பெரியார் திராவிடர் கழகம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், ஈழத்தமிழர்களால் நடத்தப்பெறும் கணினிதமிழ் நிறுவனம் (புதிய பராசக்தி, மனோகரா, கொலைஞர் - போன்ற ரீமிக்ஸ் குறும் படங்கள்) - போன்றவை மீது போலீஸ் பாய்ந்து பறிமுதல் பண்ணி கைது, வழக்கு என பிரவேசித்தது இந்த ஊடகங்களின் மீது அரசு செலுத்திய வன்முறை.

ஊடகங்கள் மீதான அரசவன்முறை, ஊடகச் செயல்பாட்டின் எல்லைப் பரப்பைச் சுருக்கியது என்றால், ஊடக வன்முறையும் இணைந்து மக்களின் கருத்தறியும் உரிமையில் சுருக்குக் கயிற்றை இறுக்கியது. எடுத்துக்காட்டு பிரபாகரன் மரணம் பற்றிய பரப்புரை.

ஒரு செய்தி பற்றி குறைந்த பட்ச உண்மைத் தேடல் கூட இல்லாமல் மே-17 மாலை, மே - 18 ஆகிய நாட்களில வடஇந்திய ஆங்கில ஊடகங்கள் நடத்திய வன்முறை பற்றி கொழும்பிலிருந்து தமிழ் ஆய்வறிவாளர் ராஜசிங்கம் கூறுகிறார்;

“அது இலங்கையிலிருந்து வந்தது. 3மணி நேரத்தில் போர் முடிந்துவிடும் என உறுதியாக அந்தச் செய்தி கூறியது. இதுவே எனக்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனப் புரியவைத்தது. ஆனால் அவர் காலைவரை இருக்க மாட்டார் என்பதாகவும அந்தச் செய்திகூறியது. அதற்குப் பொருள் காலையில் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்பதாக நமக்கப் புரியவைக்க முயற்சித்த செய்தி அது. இதையடுத்து கொழும்பிலிருந்து ஒரு செய்திவந்தது. அதில் பிரபாகரனும் சூசையும் இறந்து விட்டார்கள் என்று கூறினார்கள். ‘அவர்கள் சரணடைந்தார்கள், ஒரு வெள்ளைப் பவுடர் அவர்கள் வாயில் வீசப்பட்டது. நாளை அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி கூறப்படும்”.

எல்லைகளற்று, எது பற்றிய கவலையுமற்று, எந்த அறமதிப்பீடுக்கும் உட்படாது செயல்படுகிற ஊடக பயங்கர வாதத்துக்கு மற்றுமொரு சான்று இலங்கை ராணுவத் தாக்குதலின் காயமடைந்த 25,000 மக்கள் மரணம் என்று கடற்புலிகள் தலைவர் சூசை கொடுத்த செய்தியை அலட்சியப்படுத்தி, துளிச்சிந்தனையும் கவனமும் அதில் பதிந்து விடக்கூடாது என்பதில் இலங்கை அரசுடன் இந்திய ஊடக பயங்கரவாதம் கைகோர்த்த புள்ளி.

புலிகள் முழுமையாய் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியை ஊடகங்கள் இறக்கை கட்டிக் கொண்டு பரப்பின. “எமது யுத்தம் புலிகளுக்கு எதிரானது. அப்பாவித் தமிழர்களுக்கு எதிரானது அல்ல” என்று நாடாளுமன்றத்தில் ராசபக்ஷே அறிவித்தார். எந்த விமரிசனமும் அற்று ஊடகங்கள் வழிமொழிந்தன. போராளிகள், தலைவர்கள் மரணம், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மரணம் - என இலங்கை ராணுவமும் அரசும் தந்த எல்லாவற்றையும் அப்படி அப்படியே ஆயிரம் தடவை காட்டி, ஆயிரம் தடவை அறிவித்தன. குறிப்பாய் வட இந்திய ஆங்கில தொலைக் காட்சிகள் சலிக்காமல் தொடர்ந்தன. இலங்கை அரசு கொடுத்ததை அப்படியே காட்டிய ஊடகங்களில் ஒருவருக்காவது “அந்த இடத்துக்கு எங்களை அழைத்துப் போய்க் காட்டு,” - என்று கேட்கிற துணிவு வரவில்லை. ஏன் நம்மை அந்த இடத்திற்கு அழைத்துப் போக மறுக்கறார்கள் என்று கேள்வி எழுப்புகிற குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் போனது.

இராசபக்ஷே என்ற இட்லரைக் கண்டு நடுங்குகிறவர்கள் இவர்கள். களத்தில் உள்ளே அனுமதிக்காது, தான் வழங்குகிற செய்திகளை மட்டுமே ஊடகங்களைப் பேசவைத்தது அரச பயங்கரவாதமெனில், அதை அப்படியே வாய்பொத்தி ஏற்று, வெளியிட்டது ஊடக பயங்கரவாதம்.

அக்னி நட்சத்திர நாளில் காற்றேயில்லாது அமுங்கிக் கிடக்கிறது காலைப் பொழுது. எதனையும், எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்ளும் வெப்பம் கண்திறந்து வருகிறது. ஓரிருநாள் இயற்கையை தாங்கிக் கொள்ள மாட்டாமல் இங்கு தமிழினம் புரளுவதை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. அங்கு கஞ்சியில்லாமல், தண்ணீரில்லாமல், காயத்துக்கு மருந்தில்லாமல், இயற்கையின் எந்த வேற்றுமையையும் உணரக் கூடாமல் பைத்திய மனோநிலையில் ஒடுக்கிவைக்கப் பட்டுள்ள தமிழ்க் கூட்டத்தின் கதி என்ன? எதையும் உணரமுடியாத பிணங்கள் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

“ஏனெனில் மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் போது செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும். உலகம் உண்மையிலேயே இணைக்கப்பட்டதாக இருக்கும் எனில் இந்தப் பயங்கரம் குறித்த செய்தி உலகில் எங்காவது எதிர்ப்பைத் தூண்டியிருக்கும். உலகின் 24 மணி நேர செய்தி ஊடகங்களில் ஒரு சிறு பகுதியாவது இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்துச் சிறிய அளவாவது செய்தி வெளியிட்டிருக்கும்”.

இந்தப் பிரச்னையைப் பேசுகிற, அலசுகிற, மனித சுபாவமே இல்லாத ஊடகங்களைப் பற்றி ராஜிவ் டோக்ரா என்ற முன்னாள் இந்திய ராஜதந்திரி இவ்வாறு பேசுகிறார். எவருக்கு கண்களும் காதுகளும் உண்டோ, அவரே உலகின் மற்ற காதுகளுக்கும் கண்களுக்கும் மனித அவலத்தைக் கொண்டு போக முடியும். ஒரு நாளில் 25 ஆயிரம் மனித உயிர்கள் மரித்ததை, இதனினும் கூடுதலாய் லட்சக் கணக்கில் பட்டினிச் சாவுக்குள் போவதை - இவர் மரணம், அவர் மரணம் என்று இட்டுக்கட்டிய பரபரப்புக்குள் எளிதாய்த் தூக்கி எறிந்து விட்டுப் போக முடிந்தது ஊடகங்களால்..

“சிங்கள இனவாதம் என்ற ஒரு வஸ்து நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டு வருவதையே மறுக்கும் தி ஹிண்டு வின் மூடத்தனத்தைக் கண்டிக்க சொற்களே இல்லை. கருத்துச் சுதந்திரம் என்பது ஈனத்தனமான கருத்துக்களையும் பரப்பும் சுதந்திரம் தான் என்பதை உணர்ந்து பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய காலகட்டம் இது” என்று காலச்சுவடு மார்ச் 2009 - இதழ் தலையங்கத்தில் எழுதப் பட்டிருப்பது இந்து நாளிதழை பற்றியது மட்டுமேயல்ல.

சென்ற நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் இருந்த நிலையில் இன்று ஈழத் தமிழர்கள் விடப் பட்டிருக்கிறார்கள். மூச்சுப் பரியாமல் கழுத்து நெறிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகயுத்தத்தின் பின் பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் பாதுகாப்பு அளிக்க, அமெரிக்க உதவியோடு இல்லாத ஒரு நாட்டை யூதர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் இருந்த பூமியை இழந்திருக்கிறார்கள்.

ராஜிவ்டோக்ரா சொல்வது போல இலங்கை எனும் சின்னஞ்சிறு பகுதியில் என்ன நடக்கிறது என்று கவனம் செலுத்தியிருக்கவேண்டும். கவனம் செலுத்த வைக்கிற காரியத்தை ஊடகங்களும், அரசியல் ஆய்வு அறிஞர்களும் செய்ய தவறியிருக்கிறார்கள். தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் செய்கிற வேலைக்கு பல சக்திகள் முயன்னின்றிருக்கின்றன. ஒரு இனவிடுதலைப் போரின் பின்னடைவை முன்னெடுப்பதில் பல சக்திகளும் தீவிரமாய முனைந்தார்கள்.

1. அனைத்துக் கட்சிகளின் அக் - 14 துரோகம்

15 - நாளில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுறுத்தவில்லையென்றால் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றிய போது காட்டிய வீரம் செயல் முறைக்குக் கொண்டுபோவதில் வெளிப்படவில்லை. முடிவு செயலாகியிருந்தால், ஈழத் தமிழரின் மண்ணில் வெளிச்சத்தின் விதை ஊன்றப்பட்டிருக்கும். முதல் பதவி விலகல் கடிதத்தை தன் மகள் கொடுக்க, பிறகு ஒவ்வொரு தி.மு.க உறுப்பினரும் தந்த கடிதங்களை - மக்களவைத் தலைவருக்கு அனுப்பாமல் தானே சேகரித்து வைத்துக் கொண்ட முதல்வர் கருணாநிதியின் அக்டோபர் 14 - துரோகம் அது.

“அரசியல் வாதி அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கிறான்; அறிஞர்கள் அடுத்த தலைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்” என்று சொல்லப்படுகிற வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. எதிர்வரும் தலைமுறைகளின் வாழ்வொளியில், தடையாய்ப் பரவும் இருட்டை முன்கூட்டி விலக்கும் தத்துவம், செயல்முறைச் சாதனைகளுக்குரிய அறிஞர்களை தலைமுறைகளின் தலைவர் எனக் குறிப்பிடுவார்கள். அரசியல் வாதியையும் அவ்வாறு குறிப்பிடமுடியும். அவர் பத்துத் தலைமுறைகளுக்குக் சொத்துச் சேர்த்துவைத்திருக்கிறார். ஆகவே தலைமுறைகளின் தலைவர் என்று கூறிக் களிப்படையலாம். இந்த அர்த்தத்தில் கருணாநிதியும் தலைமுறைகளின் தலைவராக முதலிடம் பிடிக்கிறார்.

2. இந்தியா, இந்தியா, இந்தியா

தேசிய இனப்பிரச்னை என்ற சோற்றுப் பானையை இந்தியா கழுவிக் கவிழ்த்து வைத்து அரைநூற்றாண்டுக் காலம் கடந்து விட்டது. தேசிய இனங்களின் உரிமைகளுக்கு முகம் கொடுத்தறியாத இந்தியா, அண்டையிலுள்ள ஈழத்தமிழர் இனவிடுதலைக்காக குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏறத்தாழ அனைத்து நாடுகளும், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்த போது, இந்தியாவின் தொண்டைக் குழியிலிருந்து ஒரு சொல்லும் எழும்பவில்லை. தன்னுடைய ஆதிக்க நலன்களுக்கு கட்டுப்பட்ட ஒன்றாக, தனது காலடிக்குக் கீழுள்ள சின்னஞ்சிறு புழுவாகவே வைத்திருக்க விரும்புகிறது. இந்தியாவின் கண்காணிப்புகளையும் மீறி சீனாவும், பாகிஸ்தானும் அந்தச் சின்னஞ்சிறு தீவில் திடமாகக் கால் பதித்துள்ளன. இந்தியாவின் கையை மீறி, அல்லது கையை உதறி சீனாவை, பாகிஸ்தானை தனக்குள் ஏந்த ஆரம்பித்துவிட்ட நிலையில், இலங்கை ஒரு புழு அல்ல் கொட்டும் தேள் என்பது புரிய ஆரம்பிக்கும். ஈழத் தமிழினத்தை அழிப்பதில் எல்லாமுமாய் இருந்ததின் மூலம் தாயகத் தமிழினத்துக்கு முதல் எதிரியாய் மாறியுள்ளது இந்தியா.

3. பாழ்பட்ட உலகு

ஓவ்வொரு நாடும் தனது தேசிய நலன்கள் என்ற நிகழ்ச்சி நிரலிலிருந்து உலக அசைவுளை அளவிடுகிறார்கள். ஒரு நாட்டின் தலைமை சக்தியாய் இயங்கும் ஆளும் வர்க்கக் குழுக்களின் நலன் தான் தேசிய நலனாக இருந்து வருகிறது. ஆப்கானிலும், ஈராக்கிலும் அமெரிக்கக் கால்கள் பதிந்ததை, அங்குள்ள ஆளும் வர்க்கக் குழுக்களின் பசிக்குத் தீனிபோடும் செயலாகவே காணமுடியும். அது புரட்சிகரப் போராட்டமாக இருக்கட்டும்; இனவிடுதலைப் போராக இருக்கட்டும்; காலனிய ஆதிக்க நுகத்தடிகளிலிருந்து விடுபடுவதாக இருக்கட்டும்; பயங்கரவாதத்துக்கு எதிரான போராகவே ஆளும்வர்க்கங்கள் காண்பார்கள். ஒரு நாடு இன்னொடு நாட்டின் மீது கொள்ளும் நல்லெண்ணம் என்பது, இன்னொரு நாட்டில் எவ்வளவு கைவைக்கலாம் என்ற திட்டமிடுதலில் தான் உருவாகிறது. இலங்கைக்கு உதவிய எல்லா நாடுகளின் முகமும் இந்த ஒரு புள்ளியில் குவிகிறது.

உலகில் எங்கெங்கு மக்கள் விடுதலைப் போர் இனி முளைவிட்டாலும் பயங்கரவாத முத்திரை குத்தி ஒழித்து விடலாம் என்பதற்கு சிங்களப் பேரின இலங்கை முன்மாதிரியாகியிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முழக்கத்தினை 2001, அக்டோபர் 11- க்குப் பின் அமெரிக்கவின் புஸ் முன்வைத்தார். இலங்கையின் இட்லர் அதைக் கையிலெடுத்து வெற்றி கண்டுள்ளார். எது விடுதலைப் போர், எது பயங்கர வாதம் என்று பிரித்துக் காணவேண்டிய பரிதாபத்திற்கு சிந்தனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

4. உண்மைக்கும் மக்களுக்கும் எதிரான ஊடகம்

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அனைத்துலக சமூகத்தின் தலையீட்டில், 20 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்தன ஊடகங்கள். குறிப்பாக இந்தியாவைத் தாண்டி வெளியே இருக்கிற மேற்குலக ஊடகங்கள் தமது தோளில் சுமந்த பொறுப்பினால் இஸ்ரேலியத் தாக்குதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 20 - நாட்களில் ஒரு இன அடக்கு முறையை முடிவுக்குக் கொண்டுவர முடிந்த இவர்களால் - அறவழிப் போராட்டத்தில் 28 ஆண்டுகள், ஆயுதவழிப் போரில் 32 ஆண்டுகள் அறுபது ஆண்டுகளாகியும் ஒரு பேரினவெறியை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை எனில் உலக ஊடகங்கள் ஒரு பங்கும் ஆற்றவில்லை என்பது உண்மையாகிறது. அதனால் எதிர் நிலை எடுத்தன என்பதும் பொருளாகிறது. இந்திய ஊடகங்கள் திட்டவட்டமாக எதிர் நிலையைக் காட்டின. அதேநேரத்தில் இந்த இனவிடுதலைப் போரில் படுபாதகப் பங்காற்றின.

மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டநேசனலின் உயர்மட்டக் குழு உறுப்பினராக பணியாற்றியவரும் இல்லினாய்ஸ் பல்கலைகழக பேராசிரியருமான பிரான்சிஸ் அந்தோணி பாய்ல் உலக ஊடகங்கள் இனவேற்றுமை பாராட்டியதை பின்வருமாறு அம்பலப்படுத்தியுள்ளார்.

“பாலஸ்தீனத்தின் மீதும் போஸ்னியா மீதும் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. கெடுவாய்ப்பாக அவை இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. இதை இன வெறி என்றே நான் கூறுவேன். இது தோலின் நிறம் பார்த்து செய்யப்படும் கொடுமை. சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் நடை பெறும் இனப்படுகொலைகளையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் போர்க் குற்றங்களையும் பிடிவாதமாக கண்டு கொள்ள மறுக்கின்றன. உலக ஊடகங்கள் போஸ்னியா மீது கவனம் செலுத்தின. மிக அண்மையில் கடந்த டிசம்பர் - சனவரியில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. தமிழர்கள் திராவிடர்கள். உள்நாட்டு மக்கள். கறுத்த தோலுடையவர்கள். இந்தியாகூட வெள்ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்களால் ஆளப்படும் நாடு. இவையெல்லாம் என் கருத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை.”

இந்திய ஊடகங்களும், உலக ஊடகங்களும் அவர்களுக்குரிய பங்கையும் இனவேற்றுமை அடிப்படையில் வெளிப்படுத்தியதன் காரணமாக முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 25 ஆயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டதற்கும், முட்கம்பி வேலிகளுக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டதற்கும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்கள். அவரவர் தன்னலன்கள் அடிப்படையில், விடுதலைப் போரின் பின்னடைவை விரைவுபடுத்தியிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

இப்போது ராஜீவ் டோக்கராவின் கேள்வியை மீண்டும் கேட்போம்.

“மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும்.”

ஆன்மா செத்துப்போனவர்கள் யார்?