இராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனையை நிறுத்தக்கோரி தமிழகம் எங்கும் எழுந்த உணர்வலைகளுக்கு பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தமிழகம் எங்கும் மீண்டும் ஓர் உணர்வலை தற்போது எழுந்துள்ளது.அதிலும் கல்லூரி மாணவர்களிடையே உருவாகியுள்ள இந்த உணர்வலை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எழுந்த எழுச்சிக்கு இணையானதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

தமிழகத்தை கடந்த இரண்டாண்டுகளாக இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டுக்குக் எதிராகக் கூட எழாத இந்த உணர்வலை ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களை அதிலும் மாணவர்கள், இளைஞர்களை உணர்ச்சி கொள்ள ஒரே அம்சமாக இருந்து வருவது ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை.

ஆனால் இந்த உணர்வலை ஒரே சீரானதாக, ஒருங்கிணைக்கப்பட்டதாக அல்லாமல் வெவ்வேறான அளவிலும், தன்மையிலும் குழுக்குழுவான நடவடிக்கையாக சிதறிய அளவில் மட்டுமே இருந்துள்ளது. இந்த ஒப்புமை இப்போது எழுந்துள்ள உணர்வலைக்கும் பொருந்துவதாகும்.தமிழக அரசியல் கட்சியினரிடையே எத்துனை பிளவுகள், குழுக்கள், கருத்துக்கள் உள்ளனவோ அத்துணையும் மாணவர்களின் போராட்டங்களின் ஊடாக வெளிப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற வகையிலான குரல்கள்தான் பெரும்பான்மையாக வெளிபட்டு வருகிறது.அமெரிக்காவின் இந்தத்  தீர்மானம் உண்மையில் இலங்கையின் போர்க்குற்ற நடவடிக்கையை அம்பலப்படுத்தக் கூடிய உள்ளடக்கத்தை கொண்டதல்ல என்ற மிகச்சாதரண உண்மைக் கூட மாணவர்களிடையே  காணப்படவில்லை.

இந்த தீர்மானத்திற்கு இந்தியா முன்மொழிந்துள்ள திருத்தம் இதை முழுமுற்றாக சாகடித்துவிட்டது.அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை மட்டுமல்ல இறுதிகட்டப்போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களையும் அன்று கொலைசெய்ததும் இந்தியாதான்.இந்திய நேரடி ராணுவ பங்கேற்புடன் தான் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தனது சொந்தநாட்டு அரசின் இந்த அநீதிக்கு எதிராக போராட முடியாத, நாம் இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போவானாம்!

நமது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் நித்தம், நித்தம் சாகடிக்கப்படுகிறார்கள். இந்திய அரசின் ஆதரவோடுதான் நாங்கள் உங்களைத் தாக்குகிறோம் என்று இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களிடையே பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கு நமது பலவீனம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டப் பிறகும், அதற்கு எதிராக கிளர்தெழாமல் மீனவர்களை தன்னந்தனியாக தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் நாம் ஈழத்தமிழர் உரிமைகளை  எப்படி பெற்றுத்தர முடியும்?

தனது அரசியல், பொருளாதார நலன்களுக்காக சொந்த நாட்டு மக்களின் உயிரைக் கூட காவு – காட்டி – கொடுக்கும் இந்திய அரசின்  கோரமுகத்தைக் கூட முற்றாக அடையாளம் காண முடியாமல், பாமர்களாக உள்ள நமக்கும், நமது போராட்டங்களுக்கும் இலங்கை அரசு எந்த அளவிற்கு மதிப்புக் கொடுக்கிறது என்பதற்கு ஆதாரம்தான் தமிழக மீனவர்கள் மீதான அதன் தாக்குதல்கள்.தமிழகத்தில் எந்த அளவிற்கு இலங்கை இனவெறிக்கு எதிரான உணர்வுகள் மேலோங்குகிறதோ, அந்த அளவிற்கு அது இலங்கை கடற்படையின் சிங்கள இனவெறியாய் தமிழக மீனவர்கள் மீது  பாய்கிறது.

தனது இரு கடற்படை வீர்ர்களுக்காக இத்தாலி அரசு இந்திய அரசுடனான தனது உறவையே முறித்துக் கொள்ள தயாராக இருக்கிறது.ஆனால் இந்திய அரசோ, தனது சொந்தநாட்டு மக்களின் ஆயிரக்கணக்கான உயிரையே இலங்கை அரசுக்கு காவு கொடுத்து அதனுடனான தனது உறவை பாதுகாத்துக்கொள்கிறது.

இத்தாலி அரசு தனது இரு கடற்படை வீரர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினால், அதனால் தனது சொந்த நாட்டு மக்களின்  எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சுகிறது. இந்தியாவுடனான உறவை விட தனது நாட்டு மக்களின் உணர்வே மேலானது என்று தீர்மானிக்கிறது.ஆனால் இந்திய அரசோ இந்தியாவிலுள்ள எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளைப் பற்றி மயிரளவிற்கு கூட கவலைப்படவில்லை.

இப்படி இந்திய அரசு நமது உணர்வுகளை இந்த அளவிற்கு உதாசீனப்படுத்துகிறதே அது ஏன் என்பதைப்பற்றி என்றைக்காவது நாம் பரிசீலித்திருக்கிறோமா?இப்படி பரிசீலிப்பதற்கு அன்று நமது தந்தை பெரியார் இருந்தார். நமது  தந்தையின் கருத்துக்கள் நம்மை ஒருங்கிணைத்தது. இந்த ஒருங்கிணைப்புகள் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக, மாணவர்களிடையே வெடித்தது அன்று!இப்போது தமிழக மாணவர்களிடையே எழுந்துள்ள உணர்வலைகளை இந்தி எதிர்ப்பு  போராட்டத்தோடு ஒப்பிடுவதாலேயே இப்போராட்டம் அதனோடு இணைந்து விடாது.

இப்போராட்டம் ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். சரியான இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.அன்று நமது தந்தையையே காட்டிக் கொடுக்க ஒரு அண்ணதுரை இருந்தார். இன்று ஆயிரம் அண்ணாதுரைகள் அணி, அணியாக  அணிவகுத்து நிற்கிறார்கள்!ஆயிரம் தடைகள் அணி வகுத்தாலும் அதையெல்லாம் தகர்க்கும் ஆற்றல் மாணவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் செய்து முடிக்க உறுதுணையாய், ஓரணியில் அணிதிரள்வோம், ஆதரவளிப்போம் !

தொடர்புடைய பதிவுகள்:

1.தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!

2.ஈழப்படுகொலை : இந்தியாவை காக்கும் அமெரிக்காவின் நாடகம்!

Pin It