பரந்த நிலத்தைத் தழுவியபடி அமர்ந்திருக்கிறது ஒரு துப்பாக்கி. அதன் மீது ஒரு சுத்தியலுடன் குறுக்கே ஒரு அரிவாள்; சுத்தியலின் தலை மீது இருவரின் மார்பளவு வெண்கலச் சிலை. இது தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாயில் உள்ள தோழர்கள் அப்பு, பாலன் சிலை. தருமபுரியில் நீடித்து வந்த சாதி, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக சாவு மணி அடித்த தோழர்கள் பாலன் மற்றும் அப்பு ஆகியோரின் நினைவாக, தருமபுரி முழுக்க பல்லாயிரக்கணக்கான அனைத்து தரப்பட்ட, சாதி கடந்த கூலி, ஏழை விவசாய மக்கள் திரண்டு அமைத்த வரலாற்று நினைவுச் சின்னம் இது. இதிலிருந்து கூப்பிடும் தூரத்திலேயே நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்கள் உள்ளது.

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மாலை வன்னிய சாதியைச் சார்ந்த ஆயிரக் கணக்கானோர் கும்பலாக அணிதிரட்டப்பட்டு, வன்கொடுமைத் தாக்குதலை இந்த 3 கிராமங்களின் மீது நிகழ்த்தினர். தலித் மக்களின் அனைத்து வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டு, உழைப்புக் கருவிகளும், வாகனங்களும் சேர்த்து தீக்கிரையாக்கப்பட்டன. 25 ஆண்டுகளாக சிறுக, சிறுக ஒவ்வொருவரின் கடின உழைப்பால் சேர்த்து வைக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் திருடிச் செல்லப்பட்டன. “30 ஆண்டுக் கணக்கைத் தீர்த்துவிட்டோம்!” என ஆதிக்க சாதி வெறியர்கள் கொக்கரித்தனர். போ­லிசும், அரசின் உளவுத்துறையும் உச்சி குளிர்ந்தனர். தற்போது கண்களில் வெறுமையுடனும், தீராக் கோபத்துடனும் அனைத்தையும் இழந்த மக்கள் வீதிகளில் நிற்கின்றனர்.

அரசின் உளவுத்துறை, காவல் துறை, ஆதிக்க சாதிவெறியர்களின் கூட்டுச் சதி

இத்தாக்குதல் நடத்தபடுவதற்கு உடனடி காரணமாக இளவரசன் - திவ்யா காதல் திருமணம் கையில் எடுக்கப்பட்டது. தலித் இளைஞனான இளவரசனும், வன்னிய சாதியை சேர்ந்த திவ்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க., அதிமுக எனக் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் கட்சியைச் சார்ந்த உள்ளூர் ஆதிக்க சாதி வெறியர்களும் பெண்ணை திரும்ப ஒப்படைக்குமாறு மிரட்டினர். பெண்ணின் தந்தை நாகராஜ் இப்பிரச்சினையைக் கைவிடக் கோரிய பின்னரும் கூட, வலுக்கட்டாயமாக அவரையும் இணைத்து முன்னிறுத்தி கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளனர். இது அனைத்தும் திருமணம் நடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடந்தது. நவம்பர் 7 அன்று நாகராஜ் "தற்கொலை' செய்து கொண்டதாகக் கூறி அவரது சடலத்தை முன்வைத்து இம்மாபெரும் வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர்.

சாதி மறுப்புத் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகரிப்பு இருந்தும் 20 நாட்களுக்கு மேலாக நடந்த இந்தக் கட்டப்பஞ்சாயத்தில் காவல் துறை, அரசு நிர்வாகம் தலையிடவில்லை. இச்சம்பவம் நடப்பதற்கு கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்பு இந்த கிராமங்கள் அமைந்திருக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியிலும், அதற்கு முன்பு மாமல்லபுரத்திலும் பா.ம.க வின் காடுவெட்டி குரு, சாதி வெறியூட்டும் வகையில் காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக பேசி சென்றதும்,  இத்தாக்குதல் நடப்பதற்கு கருத்தியல் தயாரிப்பாக இருந்தது. மேலும் இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு நக்சல்களை கண்காணிக்கின்றோம் என்ற பெயரில் நக்சல் ஒழிப்பு பிரிவு, க்யூ பிரிவு, இன்னும் பிற உளவுத்துறையினரும் இக்கிராமங்களுக்கு தொடர்ந்து வருவதும், போவதுமாக இருந்தனர். தாக்குதல் குறித்த திட்டவட்டமான தகவல் தெரிந்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஒத்துழைத்தனர்.

தாக்குதல் தொடங்கி கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாகியும், அந்த ஊர்களுக்கு ஒரு பாதைத்தான் இருப்பது போல காவல் துறையினர் முக்கிய சாலைகளில் நின்றவாறே வேடிக்கை பார்த்தனர். மரத்தை வெட்டி சாலையில் போட்டதால் கிராமத்திற்கு சென்று தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று காரணம் வேறு கூறினார்கள். உளவுத் துறை அதிகாரிகளோ பாதிக்கப்பட்டு ஓடி வரும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு வித நகைப்புடன் சோளக் காட்டுக்குள் ஒளிந்து கொள்ள வழி காட்டினரே தவிர தீயிட்டு கொளுத்திக் கொண்டிருப்பவர்களைத் தடுக்கவில்லை.

மேற்கூறியவை அனைத்தும் இச்சம்பவத்தை தலைமை தாங்கி, சுற்றி உள்ள வன்னிய சாதியைச் சார்ந்த கிராம நபர்களை கும்பல் சேர்த்து, முன்னின்று நடத்திய குறிப்பிட்ட ஆதிக்க சாதி வெறிக் கும்பலுக்கும், அரசுக்கும் இருந்த கூட்டுறவையே காட்டுகின்றது. குறிப்பாக இந்த 3 கிராமங்களில் இப்படிப்பட்ட சம்பவம் நிகழ வேண்டும் என்ற பார்ப்பனிய, சாதிய மனோபாவம் கொண்ட அரசின் உள்நோக்கத்தை நாம் இதில் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசின் அலட்சியத்தால் சரி செய்யப்படாத இயல்பு வாழ்க்கை:

தாக்குதலில் பொருட்களையும், வீடுகளையும் இழந்து நின்ற மக்களுக்கு இது வரை அரசு மொத்த இழப்பீடுகளையும் சரி செய்யவதில் ஆமை வேகத்தை காட்டி வருகின்றது. வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு 3 மாதம் அரிசி, பருப்பு, தங்குமிடம் என அனைத்து அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்று விதிகள் இருப்பினும், இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே அடிப்படைப் பொருட்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டது. அவர்களுக்கு சேர வேண்டிய உரிய நிவாரணத் தொகையை வழங்காமல் கண்துடைப்பு நடவடிக்கையாக வெறும் 50,000த்தை மட்டுமே வழங்கியது. அதையும் கூட முறையாக ஊர் கமிட்டி மூலம் அனைத்து மக்களுக்கும் வழங்காமல், ஒரு பகுதினருக்கு நேரடியாக வழங்கியும், சிலருக்கு வழங்காமலும் அவர்களிடையே சலசலப்பை உண்டு பண்ணியது.

வீடுகள், நிவாரணங்கள், பாதுகாப்புகள் ஆகியவற்றை உரிய முறையில் வழங்காமல் திட்டமிட்டே அம்மக்களிடையே பிரிவையும், சலிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

ஒருபுறம் பாதிக்கப்பட்ட தலித் கிராமங்கள் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதுமுள்ள தலித் கிராமங்களில் தொடர்ந்து அச்ச உணர்வு ஊட்டப்பட்டு வருகின்றது. இந்நேரத்தில் அம்மக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ள இயலாமல் நிர்கதியாக நிற்கின்றனர். நியாயமாக பார்த்தால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டபடி வன்கொடுமை நிகழ்ந்த, நிகழ்த்தப்பட அபாயமுள்ள பகுதிகளிலுள்ள தலித் மக்களுக்கு ஆயுதமும், அதற்கு தேவையான உரிமத்தையும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் குண்டுப்பட்டி என்ற கிராமம் தாக்கப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினர் தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிவிட்டனர். இந்நிலையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வழியில்லாத மக்கள் கம்பிகளையும், சிறு சிறு கம்புகளையும், தடிகளையும் சேகரித்து வைத்தனர். ஆனால் மக்களை பாதுகாக்க வக்கற்ற காவல் துறையினர் இப்பொருட்களையும் கூட இரவோடு இரவாக திருடிச் சென்றனர்.

மறுபுறத்தில் இத்தாக்குதலுக்கான திட்டத்தை தீட்டி கும்பல் சேர்த்து, தலைமை தாங்கி முன்னின்று நடத்தியவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதால், அவர்கள் மற்ற கிராமப்புறப் பகுதிகளில் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டியும், ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் வன்னிய உழைக்கும் மக்களை தலித்துகளுக்கு எதிராக கும்பல் சேர்த்துக் கொண்டும், அடுத்தக் கட்டத் தாக்குதல்களையும், நாசவேலைகளையும் திட்டமிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு நேரடித் தொடர்பில்லாத, முக்கியமில்லாத பல நபர்களையும், அமைதியை விரும்பும் அப்பாவி வன்னிய உழைக்கும் மக்களையும் அரசு கைது செய்துள்ளது.

முதன்மைக் குற்றவாளிகளின் பட்டியல் தன் கையில் இருக்கும் போதே அவர்களை விட்டுவிட்டு வன்னிய கிராமங்களில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பரபரப்பை உண்டு செய்வது, போலிக் கைதுகளை மேற்கொள்வதன் மூலம் சூழலை மேலும் பதட்டத்திற்குள்ளாக்குகின்றது அரசு. மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் வன்னிய சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களையும் கூட தலித் மக்களுக்கு எதிராக நிறுத்தும் வேலையை செய்து வருகின்றது.

பெண்விடுதலைக்கு, சாதி ஒழிப்பிற்கு எதிராக தலைதூக்கும் ஆதிக்க சாதி வெறி அரசியல்

இன்று தலை தூக்கியுள்ள ஆதிக்க சாதி வெறி அரசியல், குறிப்பாக சமூகத்தின் கடைக் கோடி நிலைமையில் வைக்கப்பட்டு உழைப்புச் சுரண்டலும், வாழ்க்கை உரிமையும் பறிக்கப்பட்டு வரும் தலித் மக்களை எதிரியாகச் சித்தரித்து அனைத்து பிற்படுத்தப்பட்ட, தலித் அல்லாதோரை அவர்களுக்கு நேர் எதிராக நிறுத்தும் கேவலமான நடவடிக்கையை செய்து வருகின்றது. ""பிற்படுத்தப்பட்ட பெண்களை, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நாடகத் திருமணம் செய்து தங்களின் சொத்துகளை அபகரித்து செல்வதாக'' ஓலமிடும் இராமதாசுகளும், ஈஸ்வரன்களும் தான் பெண்களுக்கு சொத்துரிமையே கூடாது என்கின்றனர்.

சாதிய நிலவுடைமை சிதைவடைந்து தகர்வதைத் தடுத்துப் பாதுகாக்கவே இவ்வாறான நிலைபாட்டை எடுக்கின்றனர். நிச்சயமாகத் தங்கள் சொந்த சாதிப் பெண்களை பாதுகாக்க அல்ல. மாறாக பெண்ணுக்கான சொத்துரிமையை, சமூக உரிமையை மறுத்து தங்கள் சொந்த சாதிப் பெண்களின் மீதான ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதுன் மூலம் சாதிய நிலவுடைமையைக் கட்டிக்காக்கின்றனர். இது சமூகத்தில் பண்டமாக நடத்தப்பட்டு வரும் நிலைமையை எதிர்த்து தங்களின் சுயஉரிமையை நிலைநாட்ட முற்படும் அனைத்து தரப்பட்ட பெண்களுக்கும் விடப்பட்ட சவாலாகும். இது சமூக முன்னேற்றத்தை பின்னோக்கி இழுத்து செல்வதாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களை எதிரிகளாக சித்தரிக்கும் இராமதாஸ், ஈஸ்வரன் போன்ற அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களும் சொந்த சாதி நலனுக்கான இடஒதுக்கீட்டை முன்னெடுப்பது போன்று அதை சிதைத்து அந்த சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கே துரோகம் செய்கின்றனர். இவர்களின் ஆதிக்க சாதி வெறியால், வறுமையில் உழன்று தவிக்கும் எந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் துளி அளவும் பயனில்லை. மேலும் இவர்கள் தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற பெயரில், ஒட்டு மொத்த தலித் மக்களையும் பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதி மக்களுக்கும் எதிரானவர்களாக, சமூகத்திற்கு அச்சம் ஊட்டக் கூடிய சக்திகளாக சித்தரிக்கும் வேலையை செய்து வருகின்றனர். பார்ப்பனரல்லாதோர் இயக்கம் என்ற பெயரை இது போலி செய்யப்பட்டதாக இருந்தாலும் அடிப்படையில் அதற்கு நேரெதிரானதும், பார்ப்பனியத்திற்கு சேவை செய்யக் கூடியதுமாகும்.

சாதியத்தை கட்டிக் காக்கும் பார்ப்பனியம் என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. பார்ப்பனல்லாதோர் கூட்டமைப்பு என்பது பெரியார் கால கட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக முன்னனெடுக்கப்பட்டது. அது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தையும், பார்பனியத்திற்கு எதிரான அவர்களது உரிமைக்கான போராட்டத்தையும் கூர்மைப்படுத்தியது. ஆனால் இத்தகைய தலித் அல்லாதோர் கும்பலை சேர்ப்பதென்பது பாப்பனியத்தால், சாதியத்தின் கடைக் கோடியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்கு எதிரான இத்தகைய கூட்டுத் தாக்குதலும் பார்ப்பனியத்தின் நவீன வடிவமும், சேவை செய்வதும் ஆகும்.

மேலும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியை தூண்டும் வண்ணமும், பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களை எதிரெதிராக நிறுத்தும் வண்ணமும், பெண் விடுதலை, இடஒதுக்கீடு ஆகியவற்றிற்கு எதிராகவும், போராடிப் பெற்ற வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தொடர்ந்து பேசி, செயல்பட்டு வரும் இராமதாஸ், காடுவெட்டி குரு, அன்புமணி, ஈஸ்வரன் மற்றும் சாதி ஆதிக்க வெறியர்களை தொடர்ந்து செயல்பட வைப்பதன் மூலம், ஊக்குவிப்பதன் மூலமும் பார்ப்பனிய ஜெயா அரசு சாதியத்தை கட்டி காக்கும் வேலையை செய்து வருகிறது.

மேலும் குஜராத்தில் நரேந்திர மோடிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்கும் பார்ப்பனிய ஜெயலலிதா, இங்குள்ள பாதிக்கப்பட்ட கிராமங்களை இதுவரை எட்டிப் பார்க்கவோ, வாய் திறக்கவோக் கூட இல்லை என்பதிலிருந்து ஜெயாவின் பார்ப்பனிய - சாதிய முகத்தை காணலாம்.

தருமபுரியில் - அரசின், சாதி ஆதிக்க வெறியர்களின் இந்த வன்மத்திற்கு என்ன காரணம்?

இதற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த தருமபுரியை நாம் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. ஆதிக்கச் சாதியை சேர்ந்த பண்ணை நிலப்பிரபுக்களின் நிலங்களில் கூலிகளாக இன்னும் சரியாக சொல்லப்போனால் கொத்óதடிமைகளாக தலித் மக்கள் வாடி வந்தனர். கந்துவட்டி கொடுமைகளால் அவதிப்பட்ட பெருந்திரளான மக்கள் தங்களின் நிலங்களை கந்துவட்டிக்காரர்களிடமும், நிலவுடைமையாளர்களிடமும் இழந்து கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்தனர். இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட ஆர்த்தெழுந்த இளைஞர்கள் பலர் நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தோழர் பாலன். புரட்சிகர இயக்கங்களின் மூலம் தர்மபுரி - நாயக்கன்கொட்டாய் பெரியண்ண செட்டி போன்ற கந்துவட்டிக்காரர்களும், நிலவுடைமையாளர்களும் தண்டிக்கப்பட்டனர். இவர்களின் பிடியிலிருந்த எண்ணற்ற உழைக்கும் மக்கள் விடுவிக்கப்பட்டனர்.

தோழர் .பாலன் போன்றவர்கள் இரட்டைக் குவளை உடைப்பு போராட்டம், கந்துவட்டி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டப் போராட்டங்களைப் பெருந்திரளான உழைக்கும் மக்களை திரட்டி நடத்தினர். இப்போராட்டங்களில் தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஓரணியில் நின்று சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக போர் முழக்கம் செய்தனர். அன்றைய எம்.ஜி.ஆர் அரசின் காவல்துறை 20க்கும் மேற்பட்ட புரட்சியாளர்களை சுட்டுக் கொன்றது. இதைக் கண்டித்து பல்வேறு மக்கள் திரள் போராட்டங்கள் நடந்தன. இத்தகையதொரு கூட்டத்தில் தோழர். பாலனை மேடையிலிருந்து இறக்கிக் கைது செய்து பின்னர் சுட்டுக் கொன்றது காவல்துறை. ஆனாலும் மக்களின் போராட்டத்தை அரசால் அடக்க முடியவில்லை. மக்களின் எழுச்சி ஒடுக்கப்பட முடியாததாக உரம் பெற்றுத் திகழ்ந்தது. இத்தகைய மக்களின் எழுச்சியானது சாதி வேறுபாடுகளைக் கடந்ததாக, உழைக்கும் மக்களின் எழுச்சியால் கட்டியமைக்கப்பட்டதாக இருந்தது.

தொடர்ந்து 1990களில் ""செத்த மாட்டைத் தூக்க மாட்டோம், சாவுக்கு பறையடிக்க மாட்டோம், பண்ணையடிமைகளாய் இனியிருக்க மாட்டோம்'' என தலித் உழைக்கும் மக்கள் அனைவரும் கிளர்தெழுந்து பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுடன் ஒன்று கலந்து, ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராகவும், கந்துவட்டிக் கொடுமைகளுக்கு எதிராகவும் முற்போக்கு இளைஞர் அணி (தவக) போன்ற முற்போக்கு அமைப்புகளின் தலைமையில் ஒன்றிணைந்து நின்றனர். தொடர்ந்து உழைக்கும் மக்களின் ஒற்றுமை என்ற பேராயுதத்தின் மூலம் நிலவுடைமையாளர்கள், உள்ளுர் ஆதிக்க சக்திகள், சமூக விரோதிகள் தண்டிக்கப்பட்டனர். அவர்களின் நிலங்கள் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்'  என்ற அடிப்படையில் கூலி, ஏழை விவசாயிகளுக்கு பகரிந்தளிக்கப்பட்டது. அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்களுள் ஒருவன்தான் தற்போதைய தாக்குதல் நிகழ்வின் முக்கிய குற்றவாளியாக உள்ள வி.பி.மதியழகனின் தந்தை வி.ஏ.பச்சையப்பன் ஆவான்.

தங்களுடைய சாதிய மேலாதிக்கத்தின் மூலமான நிலவுடைமை உழைப்பு சுரண்டல் பாதிக்கப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக மனதிற்குள் வஞ்சத்துடனும், அதே நேரத்தில் முற்போக்கு இளைஞர் அணி (தவக), உழவர் உழைப்பாளர் மாமன்றம் போன்ற அமைப்புகளின் போராட்டங்களினால் ஏதும் செய்ய இயலாதவர்களாக ஆதிக்க சக்திகள் வாழ்ந்து வந்தனர். அரசிற்கோ நிலவும் சாதியக் கட்டமைப்பிற்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு அணிதிரள்வது என்பது எங்கே தங்களின் அரசியல் அதிகாரத்திற்கு - நிலவுடைமை, ஏகாதிபத்திய அடிவருடித்தனம் நிறைந்த ஆட்சியதிகாரத்திற்கு - எதிரான மக்கள் எழுச்சியாக வளர்ந்து விடுமோ என்ற அச்சத்தைக் கொடுத்தது.

எனவே அரசானது முற்போக்கு அமைப்புகள் மற்றும் அதற்கு ஆதரவான மக்கள் மீது ஒடுக்குமுறையையும், கருப்புச் சட்டங்களையும் ஏவுவது, சீர்குலைவு நபர்களை உருவாக்குவதுடன் மக்களுக்கு எதிரான உளவாளிகளை, அமைப்புகளுக்கு எதிராக அரசியல் சதிகாரர்களைத் திட்டமிட்டு வளர்ப்பதையும், ஆதிக்க சாதி வெறியை ஊக்குவிப்பதையும் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளது. இந்நடவடிக்கைகளில் அரசின் சூழ்ச்சி ஓரளவு வெற்றி பெற்றது. இந்நிலையில் சாதிய நலன்களுக்காக பாடுபடுவதாகக் கூறித் தங்களை வளர்த்துக் கொண்ட சாதி வெறி ஓட்டுக் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சியின் செல்வாக்கை இக்கிராமங்களில் நிலை நாட்டத் தொடங்கினர்.

குறிப்பிட்ட  30 ஆண்டுகளில் சாதியத்திற்கு எதிரான, தலித் மக்கள் மீது நடந்து வந்த கொடுர வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் முற்போக்கு அமைப்புகளால் கூர்மைப்படுத்தப்பட்டன. வன்கொடுமைத் தாக்குதல்கள் நிகழ்த்தத் திட்டமிடப்படும் போதெல்லாம் அவை முறியடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பை வலியுறுத்தின. மக்கள் அமைப்பு வழியில் திரண்டிராத தற்போதைய சூழலும், அரசின் நயவஞ்சகத் திட்டமும், தலித்துகளுக்கு எதிரான தொடர்ச்சியான சாதிய வன்கொடுமைத் தாக்குதலும், அரசியல் கட்சிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் சாதியச் சங்கங்கள் தற்போது ஓட்டுக்காக முன்னெடுத்து வரும் ஆதிக்க சாதி வெறி அரசியலும் ஒன்றிணைந்து இச்சம்பவத்தின் மூலமாக கோர தாண்டவமாடியுள்ளன.

சாதியச் சமூகம் – இராச இராச சோழன் முதல் ஜெயா வரை

நமது சமூகமும் மக்களும் கடந்து வந்த பாதை கொடுர ஒடுக்குமுறைகளும், அதற்கெதிரான கடினமான போராட்டங்களும் இணைந்து உருவாகிய வாழ்க்கை பாதை. நிலவுடைமைச் சமூகத்தின் முக்கியப் பண்பான சாதியத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என அனைத்து உழைக்கும் மக்களும் கொடூரமான சாதிய படிநிலைக்குள் வாழ்ந்து வந்தனர். இதற்கெதிராக நந்தன் முதல் அம்பேத்கர், பெரியார் முதலான சாதிய எதிர்ப்பாளர்கள் போராடும் மக்களை பிரநிதித்துவம் செய்து வந்துள்ளனர். சாதி மறுப்பை நசுக்கவும், சாதிய - நிலவுடைமை சமூகத்தை கட்டிக் காக்கவும் ராச ராச சோழன் முன்னிட்டு இன்றைய ஜெயா, மன்மோகன் வரையிலான நிலவுடைமை ஆட்சியாளர்களும், ஏகாதிபத்திய அடிவருடிகளும், இத்தகைய  போராட்டங்களின் மீது கொடுர ஒடுக்குமுறைகளையும், கருப்புச் சட்டங்களையும் ஏவி தொடர்ந்து ஒடுக்கி வந்துள்ளனர்.

சாதிய – நிலவுடைமை சமூக கட்டமைப்புக்கான உற்பத்தி ஒழுங்கு  நடவடிக்கையாக பிறப்பின் அடிப்படையிலான சாதிய வேலைப் பிரிவினையும், பண்ணையடிமை முறையும், மறுபுறத்தில் சாதிய நிலவுடமை உற்பத்திக்கான சமூக ஒழுங்கு நடவடிக்கையாக அகமண முறையும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த சாதிய உழைப்பு பிரிவினையை மீறி சமய வழிபாடு செய்ய முயன்ற நந்தன் எரிக்கப்பட்டான். தர்மபுரி – நாயக்கன்கொட்டாய் பகுதியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வன்னிய சாதியைச் சேர்ந்த கொடகாரி அகமணமுறையை மீறி தாழ்த்தப்பட்ட இளைஞனை காதலித்த காரணத்தால் எரிக்கப்பட்டாள். இவ்வாறான வாழ்க்கை பயணத்தில்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். நாமும் இதையே எதிர் கொள்ள வேண்டியுள்ளது. ó அம்பேத்கரும், பெரியாரும், கம்யூனிச போராளிகளும் போராடி பெற்று தந்த இடஒதுக்கீடு உரிமைகளும், சனநாயக உரிமைகளும் மற்றும் அவர்தம் போராட்ட சிந்தனை களுமே நம் கண்முன்னே உள்ள இந்த போராட்டத்திற்கான ஆயுதங்களாகும்.

இப்போராட்ட மரபின் ஒரு பகுதியாகவே சுயமரியாதை திருமணங்கள் உள்ளிட்ட சாதி மறுப்பு திருமணங்கள் பெரியார் காலக் கட்டத்தில் தொடங்கியது. அது இன்றைய சமூக நிகழ்வுப் போக்கின் அன்றாட நிகழ்வாக மாறியது. மேலும் இக்காலக்கட்டத்தில் பெண்களைப் பண்டமாக, சொத்துரிமையாக நடத்தும் சமூகத்திற்கு எதிராக, ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண் விடுதலைக் கருத்துகளும் முளைவிட ஆரம்பித்தன.  பிரிட்டிஷ் காலனியாவாதிகள் புகுத்திய தொழில் உற்பத்தி நடவடிக்கையின் பகுதியாக நகர்புறங்களை நோக்கி தள்ளப்பட்டதன் விளைவாகவும், பெரியார், அம்பேத்கர், மற்றும் கம்யூனிச போராளிகளின் நடவடிக்கைகளின் விளைவாகவும் நகர்புறங்களில் சாதி நிலவுடைமையின் கோரப்பிடியில் இருந்து ஓரளவு விடுபட்டனர்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதான நிலைமை கல்வி, வேலை வாய்ப்பின் மூலம் மிகச் சொற்பமான அளவில் மேம்பாடு அடைந்தது என்றாலும் இவைகள் சாதியின் இறுக்கத்தை உடைக்கவில்லை. நகர் பகுதிகள், கிராம பகுதிகள் என எங்கும் நிறைந்துள்ள ஊர் - சேரி, காலனி கட்டமைப்பை தகர்க்கவுமில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் நக்சல்பாரி எழுச்சியினைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் பயணித்த கம்யூனிச புரட்சியாளர்கள் இதன் மீது முதன் முறையாகத் தாக்குதலை தொடுத்தனர். சாதியத்திற்கு எதிரான போர் நடவடிக்கையாகவே இது இருந்தது.

இந்நிலையில் நக்சல்பாரி எழுச்சியால் உந்தப்பட்டு கிராமங்களை மையமாகக் கொண்டு இயங்கிய நக்சல்பாரி புரட்சியாளர்கள் அப்பு, பாலனின் செயல்பாடுகளை இதன் பகுதியாகவே நாம் காண முடியும். இவ்வரலாற்றிலிருந்து நாம் கற்பதென்னவெனில், சாதியக் கொடுரம் நிறைந்த இந்த அரைக் காலனிய – அரை நிலவுடைமை சமூகத்தில் சாதி ஒழிப்பு என்பது அகமணமுறையையும், உற்பத்தி ஓழுங்காக உள்ள சாதிய - நிலவுடைமை உற்பத்தி உறவுகளையும் தகர்ப்பதே ஆகும். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இதை முன்னெடுப்பது சாதி ஒழிப்பு சனநாயக சக்திகளின் முதன்மைக் கடமையாகும்.

சாதி ஒழிப்பிற்காக அணிதிரள்வோம்

சாதி மறுப்புத் திருமணம் என்பது சாதி ஒழிப்பிற்கான துணை அம்சமாகவே உள்ளது. சாதி மறுப்பு திருமணம் என்பதும், சாதிய ஒழிப்பு என்பதும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கானதாகவும், தலித் அல்லாத பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதாகவும் சித்தரிப்பது, பார்ப்பனிய சித்தாந்தத்தை உள்வாங்கிய, ஆதிக்க சாதி வெறிபிடித்த ஆளும் வர்க்க கைக் கூலிகளின் நயவஞ்சகப் பிரச்சாரம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சாதி என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களை பெருஞ் சுமையாய் அழுத்தும் ஒரு அழுக்கு பேய். நமது சமூகத்தை பீடித்துள்ள ஆட்கொல்லி நோய். அது அனைத்து சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களின் விடுதலைக்கும், ஒற்றுமைக்கும் எதிரானதாகத் திகழ்கின்றது. உழைக்கும் மக்களை இருவேறு பகை முகாம்களாக பிளவுபடுத்தி நிற்க செய்வதுடன் நமது உண்மையான எதிரிகளான சாதிய நிலவுடைமையாளர்கள், தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள் மற்றும் இவர்களின் அடிவருடி ஆட்சியாளர்கள் ஆகியோரின் சுரண்டலை, ஒடுக்குமுறையை மூடி மறைக்கவும், நியாயப்படுத்தவும் செய்கின்றது. ஆகவே தலித் மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மக்களை நிறுத்த முயலும் ஆதிக்க சாதி வெறிஅரசியல் என்பது சமூக முன்னேற்றத்தை, அவர்களது வாழ்க்கையை பின்னுக்கு இழுக்கும் சதியாகும்.

சாதி ஒழிப்பு என்பதே தலித் மக்களின் உண்மையான விடுதலையாகும். இத்தகைய சாதி ஒழிப்பு என்பதே தலித் மக்களின் விடுதலைக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்கும், ஒட்டுமொத்த சமூக விடுதலைக்கும் முன்நிபந்தனையானதாகும். இத்தகைய சாதி ஒழிப்பு நடவடிக்கையின் மூலமே புதியதொரு சமூக மாற்றத்திற்கான பாதையை அமைக்க முடியும். எனவே சாதி ஒழிப்பிற்காக தாழ்த்தப்பட்ட மக்களுடன், பிற்படுத்தப்பட்ட மக்கள் கைகோர்த்து ஓரணியில் நிற்பது என்பது வரலாற்றுக் கடமையும், இன்றைய சூழலின் அவசியத் தேவையும் ஆகும். இதற்கு அனைத்து சனநாயக, முற்போக்கு சக்திகளும், சமூக நல விரும்பிகளும் ஒன்றிணைந்து முன்முயற்சி எடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளே!

  • நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய பாதிக்கப்பட்ட தலித் கிராமங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கு!
  • வீடுகளை இழந்த மக்களுக்கு 5,00,000 ரூபாய் செலவில் கான்கீரிட் வீடுகளை உடனடியாகக் கட்டிக் கொடு!
  • தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்து, தாக்குதலுக்குத் துணை நின்ற உளவுத்துறை, நக்சல் ஒழிப்பு பிரிவு, மாவட்ட காவல் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நபர்களை கைது செய்! பதவி நீக்கம் செய்!
  • 3 கிராமங்களின் மீதான தாக்குதல் திட்டத்தைத் தீட்டி, கும்பல் சேர்த்து, தலைமை தாங்கி முன்னின்று நடத்திய ஆதிக்க சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!
  • தலித் மக்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரித்து மக்களிடையே ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவரும் இராமதாஸ், காடுவெட்டிகுரு, அன்புமணி, ஈஸ்வரன் போன்ற ஆதிக்க சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!
  • தாக்குதலில் தொடர்பில்லாத, முதன்மையல்லாத நபர்களை கைது செய்வதன் மூலம் உழைக்கும் மக்கள் ஒற்றுமையைக் கூறு போடாதே, பிளவுபடுத்தாதே!
  • தருமபுரி வன்கொடுமைத் தாக்குதலின் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடு!
  • தாக்குதலில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கெதிரான நீதிக்கான போராட்டத்தில் உயிர் நீத்த வீரமங்கை மங்கம்மாள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு! மங்கம்மாள் இறப்பைக் கொலை வழக்காக பதிவு செய்!
  • சந்தேக மரணமடைந்த நாகராஜின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கு! இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்து!
  • பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுதம் வழங்கு! அதற்கான உரிமையை அங்கீகரி!                                                                   தமிழக உழைக்கும் மக்களே……!
  • ஆதிக்க சாதி வெறிக் கட்சிகளை, சங்கங்களை, தலைமைகளைத் தனிமைப் படுத்துவோம், தகர்த்தெறிவோம்!
  • ஆதிக்க சாதி வெறிக்குத் துணை நிற்கும் பார்ப்பனிய ஜெயா அரசிற்கு எதிராக அணிதிரள்வோம்!
  • பாதிக்கப்பட்ட தருமபுரி தலித் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கப் போராடுவோம்!
  • சாதி ஒழிப்பில்லாமல், தலித் மக்கள் விடுதலை இல்லை!
  • தலித் மக்கள் விடுதலை இல்லாமல் சமூக மாற்றம் இல்லை!
  • சமூக மாற்றம் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் விடுதலை இல்லை!
  • சாதி ஒழிப்பிற்காக அனைத்து உழைக்கும் மக்களும் ஓரணியில் கை கோர்த்து நிற்போம்!

(சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி "தருமபுரி - நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி தலித் கிராமங்களின் மீது தாக்குதல்: அரசு-ஆதிக்க சாதி வெறி அரசியலின் கூட்டுச்சதி" என்ற தலைப்பில் சனவரி 6 அன்றைய பொதுக்கூட்டத்திற்காக வெளியிட்ட துண்டறிக்கை)

Pin It