சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சித் திடலில் ஜனவரி 11 ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகின்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் 36 ஆவது புத்தகக் காட்சியில், உங்கள் தேடலுக்கு உதவியாக எனது பார்வையில் சுருக்கமாக சில தகவல்களைத் தருகின்றேன்.

1.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்: சென்னை தரமணியில் இயங்கி வருகின்ற இந்த நிறுவனம், தமிழ் மொழி, பண்பாடு, கலை குறித்த, விரிவான ஆய்வு நூல்களை நிரம்ப வெளியிட்டு உள்ளது.

2. Asian Educational Serivces: ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருவாசகம் உள்ளிட்ட, இந்தியாவின் பழமையான பல நூல்களின் பதிப்பாளர்கள். புது தில்லியைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகின்றார்கள். இவர்களது புத்தகங்கள் அனைத்திலும், அட்டைக் கட்டுமானம் தோலால் ஆனவை. நூற்றாண்டுகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

3. தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம், 1975 முதல் ஒளிபரப்பிய, சிறந்த நிகழ்ச்சிகளின் ஒளிப்படக் குறுவட்டுகளை விற்பனைக்குக் கொண்டு வந்து உள்ளனர். கிருபானந்த வாரியார், எம்.எஸ். சுப்புலெட்சுமி உள்ளிட்ட அந்த நாள்களில் புகழ்பெற்ற பல மேதைகளின் சொற்பொழிவுகள், இசைநிகழ்ச்சிகள் அடங்கிய அரிய புதையல் பெட்டகங்கள், அந்த ஒளிப்படக் குறுவட்டுகள். இதேபோல, அனைத்து இந்திய வானொலியும், தமது குரல் படைப்புகளைப் பார்வைக்கு வைத்து உள்ளனர்.

4. விகடன் பிரசுரம்: தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களுள் முதன்மையானது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக, பதிப்புத்துறையில் அனுபவம். 400க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டு உள்ளனர். இந்த ஆண்டு, உ.வே.சாமிநாத ஐயரின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டு உள்ளனர். 2011 ஆம் ஆண்டில், மூல ஓவியங்களுடன் இவர்கள் தொகுத்து வெளியிட்ட, பொன்னியின் செல்வன், விற்பனையில் சாதனை படைத்து உள்ளது. மேலும், உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை விளக்கும், உச்சி முதல் உள்ளங்கால் என்ற நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டு வந்தனர். தற்போது, ஒன்றாம் தொகுதி மட்டும் அதே பெயரில் வெளியாகின்றது. மற்ற இரண்டு தொகுதிகளில் இடம் பெற்று இருந்த கட்டுரைகளை, கூடுதல் தகவல்களுடன் தனித்தனியாகப் பிரித்து, வெளியிட்டு உள்ளனர். உலகத் தமிழர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய தொகுப்புகள் இவை. அதேபோல, பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பும் இவர்களிடம் உள்ளது.

 5. வானதி பதிப்பகம், திருமகள் நிலையம், மணிவாசகர் பதிப்பகம், பாரி நிலையம், மணிமேகலைப் பிரசுரம், கலைஞன் பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம் போன்றவை நிறுவனங்கள் தமிழின் முன்னணி பதிப்பகங்கள் ஆகும். தமிழ் வாசகர்கள் அனைவரும் அறிந்த பெயர்கள். பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வாலி, வைரமுத்து உள்ளிட்ட, தமிழின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளை இந்த நிறுவனங்களின் கடைகளில் காணலாம்.

7. காந்தளகம் (கடை எண்: 292) மற்றும் மித்ர பதிப்பகங்கள்: ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும், தமிழரின் வரலாற்று ஆவணங்களையும் தொடர்ந்து பதிப்பித்து வெளியிடுகின்றார்கள்.

8. மலையாள மனோரமா: மலையாள நாள் இதழ்களுள் முதன்மையான இடத்தையும், அனைத்து இந்திய அளவில், மாநில மொழிகளின் அளவில், 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட படிகளை நாள்தோறும் விற்று, சாதனை புரிந்து கொண்டு இருக்கும் முன்னணி நிறுவனம். ஏராளமான புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றனர். தமிழில், முதன்முதலாக ஓராண்டுத் தொகுப்பு நூல்களை வெளியிட்டது, இந்த நிறுவனம்தான். இன்றைக்கும் அந்த வகையில், இவர்களது படைப்புகளே சிறப்பாக உள்ளன. மேலும், சுரா புக்ஸ், நக்கீரன் பதிப்பகம் ஆகியோரும், கடந்த சில ஆண்டுகளாக, ஓராண்டுத் தொகுப்பு நூல்களை வெளியிட்டு வருகின்றனர். விகடன் பிரசுரம், இந்த ஆண்டில், முதன்முதலாக ஓராண்டுத் தொகுப்பு நூலை வெளியிட்டு இருக்கின்றது.

9. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: பொது உடைமைப் படைப்புகளின் தேடல்களுக்கான புகலிடம் இதுதான்.

10. தந்தை பெரியார் எழுதிய நூல்கள் மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள், பேரறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகள், பல அரங்குகளில் விற்பனைக்கு உள்ளன. அம்பேத்கரது படைப்புகள் தனி அரங்கில் கிடைக்கின்றன.

11. சாகித்திய அகடமியின் விருது பெற்ற படைப்புகள், அனைத்து இந்திய மொழிகளின் நூல்களை இவர்களது அரங்கில் பெறலாம்.

12. விடியல் பதிப்பகம் மற்றும் அலைகள் வெளியீட்டகங்கள்: இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளின் படைப்புகள் உள்ளிட்ட பிற மொழிப் படைப்புகளை தமிழ் ஆக்கம் செய்து வெளியிட்டு வருவதில் சிறப்பு இடம் பெற்ற நிறுவனங்கள்.

13. சுரா புக்ஸ்: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும், பொது அறிவுத் தேர்வுகளை எழுதுவோருக்கான நூல்களை, இங்கே பெறலாம். தமிழில் கணினி நூல்கள், ஒளிப்படக் குறுவட்டுகளை, சாஃப்ட்வியூ மற்றும் வளர்தொழில் அரங்குகளில் பெறலாம்.

14. உயிர்மை: புதுமை இலக்கியப் படைப்புகளில், அண்மைக் காலங்களில் கவன ஈர்ப்புப் பெற்ற நிறுவனம். உயிர்மை இலக்கிய இதழையும் வெளியிடுகின்றார்கள்.

15. பூவுலகின் நண்பர்கள்: 21 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுமையும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் முதல் இடத்தைப் பெற்று உள்ள, சுற்றுப்புறச் சூழல் தொடர்பான பிரச்சினைகள் குறித்த புதிய படைப்புகளை வெளியிட்டு வருகின்றார்கள்.

16. ஆழி பதிப்பகம் (கடை எண் 187): 'எங்கே போகிறது நாம் தமிழர் கட்சி?' புத்தகமும், குட்டி ரேவதி, கீரனூர் ஜாகீர்ராஜா, பேயோன், எச்.பீர் முஹம்மது ஆகியோரின் புத்தகங்களும் கிடைக்கின்றன. புதிய செய்தி இதழான 'தமிழ் ஆழி' இங்கே கிடைக்கிறது.

17. அடையாளம் பதிப்பகம் (கடை எண் 355): யமுனா ராஜேந்திரனின் 'ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்' & 'அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல்' புத்த‌க‌ங்க‌ள் கிடைக்கின்ற‌ன‌.

18. தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கி, செய்திகளுக்கு வரவேற்பு பெற்ற புதிய தலைமுறை நிறுவனத்தார், அதே பெயரில் வார ஏடு வெளியிட்டு வருவதுடன், புத்தக வெளியீடுகளையும் கொணர்ந்து உள்ளனர்.

19. பெப்பிள்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள், குழந்தைகளுக்கான கதைகள், திருக்குறள் உள்ளிட்ட எளிய தமிழ் இலக்கிய நூல்களின் ஒளிப்படக் குறுவட்டுகளை வெளியிட்டு வரவேற்புப் பெற்று உள்ளன. பதிப்புத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சி இது.

20. வைகோ நூல்களும், நான் எழுதிய நூல்களும், காந்தளகம் அரங்கில் (கடை எண் 292) விற்பனைக்கு உள்ளன. விகடன் பிரசுரத்திலும், கலைஞன் பதிப்பக அரங்கிலும் வைகோவின் சில நூல்கள் கிடைக்கும்.

21. நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (கடை எண் 119): கோவி.லெனின் எழுதிய 'திராவிட(ர்) இயக்கம் - நோக்கம், தாக்கம், தேக்கம்' ம‌ற்றும் ம‌னுஷ்யபுத்திர‌ன் எழுதிய‌ 'எதிர்க்குர‌ல்' புத்த‌க‌ங்க‌ள் முக்கிய‌மான‌வை.

புத்தகக் காட்சியின் நுழைவாயிலில், தமிழை முழுமையாகப் புறக்கணித்து, குமுதம் வார ஏடு வைத்து உள்ள ஆங்கிலப் பெயர்ப்பட்டியலில், மேற்கண்ட பதிப்பங்களின் கடை எண்கள் பற்றிய குறிப்புகளைப் பெறலாம். பபாசி இணையதளத்திலும் தகவல்கள் கிடைக்கக்கூடும். ஆங்கில நூல்களை மட்டுமே விற்றாலும் சரி, அந்தக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளின் பெயர்களையும் தமிழில் எழுதி வைக்க வேண்டும் என்று புத்தகக் காட்சி அமைப்பாளர்களால் வலியுறுத்த முடியாமற் போனது வேதனை அளிக்கின்றது. ஒருவேளை தேவை இல்லை என்று கருதுகிறார்களோ என்னவோ? தமிழில் ஏன் எழுத வேண்டும் என்று எதிர்வினா எழுப்பாமல் இருந்தால் சரி.

தமிழின், தமிழகத்தின் தலைநகரில் பெயர்ப்பலகைகளைக் கூடத் தமிழில் வைக்க முடியாமல், இவர்களே தமிழைப் புறக்கணித்தால், தமிழ் எப்படி வளரும்? இப்படியே நிலைமை தொடர்ந்தால், இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் ஆங்கிலப் புத்தகங்களின் காட்சிக்கூடமாக மாறி விடுமோ? என்ற ஐயம் எழுகின்றது.

கடந்த ஆண்டு வரையிலும், புத்தகக் காட்சியின் நுழைவுப்பகுதியில் அமைந்து, புத்தகங்கள் குறித்து நாள்தோறும் சொற்பொழிவுகள் நிகழ்ந்த அரங்கத்தை, இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்குப் பின்புறம் கொண்டு போய் ஒதுக்கி, ஓரமாகத் தள்ளி விட்டார்கள். விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே அங்கே சென்று அமருவார்கள். புதிய வாசகர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது. கடந்த ஆண்டுகளில், சரியாக ஆறு மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி எட்டு மணிக்கு முடித்தார்கள். இந்த ஆண்டு, ஜனவரி 11, 12 என முதல் இரண்டு நாள்களில், நான் பார்த்தவரையில், ஏழு மணி வரையிலும் நிகழ்ச்சிகள் தொடங்கவே இல்லை. ஏனென்றால், பார்வையாளர்களாக பத்துப் பேர்தான் உட்கார்ந்து இருந்தார்கள். நுழைவுப் பகுதியில் இருந்திருந்தால் ஐந்து மணிக்கே புதிய பார்வையாளர்கள், நூல்களைத் தேடி நடந்த களைப்பைப் போக்குவதற்காகவேனும் நூற்றுக்கணக்கில் நாற்காலிகளில் அமர்ந்து இருப்பார்கள்.

மேலும், பார்வையாளர்கள் அமர்ந்து இருந்த பகுதியின் இரண்டு ஓரங்களிலும் மட்டுமே ஒளிவிளக்குகளைக் கட்டி இருக்கின்றார்கள். அதனால், நடுவில் அமர்ந்து உள்ள பார்வையாளர்களின் முகங்களின் நிழல் படிந்து இருக்கின்றது. எனவே, மேடையில் பேசுகின்ற பேச்சாளரால், பார்வையாளர்களின் முகங்களைச் சரியாகப் பார்க்க முடியாது; உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது.

மற்றொரு குறை, புத்தகக் காட்சி அரங்கத்துக்கு உள்ளே தரை சமதளமாக இல்லை. பல இடங்களில், உள்ளே அமுங்குகிறது; தரைவிரிப்புகளின் இணைப்புகள் சரியாகப் பொருத்தப்படவில்லை. எனவே, போகோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற கேலிக் காட்சிகளைப் போல, புத்தகக் கடைகளின் பெயர்களைப் படித்துக் கொண்டும், புத்தகங்களைப் பார்த்துக் கொண்டும் நடந்து வருகின்ற வாசகர்கள், பல இடங்களில் தடுமாறி விழுந்ததைப் பார்த்தேன். நானே ஒன்றிரண்டு இடங்களில் தடுமாறி, தரையில் விழாமல் சமாளித்துக் கொண்டேன். முதியவர்களால் முடியாது.

உங்கள் பார்வையில், இக்கட்டுரையில் இடம் பெறவேண்டிய தகவல்களை பின்னூட்டமாகத் தருவதை வரவேற்கின்றேன். புத்தகக் காட்சி ஜனவரி 23ம் நாள் நிறைவு பெறுகின்றது.

- அருணகிரி

Pin It