தாய்த் தமிழகத்தில், தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடியதால் ஒரு பெரும் பிரிவினர் நீண்ட காலமாக சிறைக்கொட்டடிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பெரும்பான்மையான இயக்கங்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஆம் அவர்கள்தான் முஸ்லீம்கள்.

இந்து மதவெறி அமைப்புகளின் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு தமிழகத்தின் தொழில்வளங்களையும், கனிம வளங்களையும் சூறையாடிக் கொண்டிருக்கும் வடநாட்டு பார்ப்பனிய, பனியாக்களும், மார்வாடிகளும் மதக்கலவரங்களை மூட்டி இசுலாமியர்களை குறிவைத்து வேட்டையாடினர்.

இசுலாமிய மக்கள் தங்கள் உயிர்களைக் காக்க மட்டும் போராடவில்லை. தமிழ்நாட்டின் தொழில்களையும், வளங்களையும் பாதுகாக்கவும் சேர்த்துதான் போராடினார்கள். தமிழ்நாட்டைக் காக்க இம் மண்ணின் மைந்தர்களான இசுலாமியர்கள் இயல்பாக போராடினார்கள். அவர்களின் தியாகங்கள் ஈடு இணையற்றவை.

ஆம். அது இயல்பு. அதனால்தான் இன்றைக்கும் அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு பாதுகாப்பு என தமிழ்நாட்டின் உரிமைக்கான போராட்டங்கள் அனைத்திலும் இசுலாமிய இளைஞர்கள் முன்னணியில் உள்ளனர்.

இம் மண்ணின் மைந்தர்களை போதுமான அக்கறையோடு முற்போக்கு இயக்கங்கள் பாதுகாக்க வேண்டாமா..?

பல்லாண்டு காலமாக பல்வேறு வழக்குகளில் சிறைப்பட்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கான கோரிக்கைகள் இன்று தமிழகத்தில் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இசுலாமிய மக்களின் மீதான தாக்குதல்களும் அதற்கு எதிர்வினையான சம்பவங்களும் நிகழ்ந்த வேளையில் சட்டம் இசுலாமிய மக்களை மட்டுமே ஒடுக்குவதில் குறியாக இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கியது. தமிழகம் முழுவதும் பயங்கரவாத, தீவிரவாத பூச்சாண்டிகளைக் காட்டி இசுலாமிய இளைஞர்கள் ஒடுக்கப்பட்டார்கள். சிறைகளில் தனித் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டு இன்றைக்கு வரை 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் வாட விடப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் சட்டம் வழங்கிய பிணையில் செல்லும் உரிமைகள் கூட இசுலாமியர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை சிறைவாசிகளாகவே சிறையில் இருந்து தனி நீதிமன்றங்களின் வழக்கை சந்தித்தவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை சுதந்திரமாகக்கூட தெரிவிக்க இயலாத கடுமையான சூழ்நிலையில் ரகசிய விசாரணைகள் நடந்தது. சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா.? என்ற அளவிற்கு எம் சகோதரர்கள் பட்ட துன்பங்களுக்கு அளவில்லை.

14 ஆண்டுகள் கடந்தும் கூட மற்ற சிறைவாசிகளுக்கு பொதுமன்னிப்பு என்ற உரிமைகளை வழங்கிய அரசுகள் 'மத வழக்குகள்' என்ற காரணம் காட்டி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யாமல் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் உறுதிப்படுத்தும் 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற கோட்பாடுகளை கேலிக்குரியதாக்கினார்கள்.

ஆயுள்சிறைவாசம் என்றால் வெள்ளையர்கள் ஆண்டபோது 20 ஆண்டுகள் என்றும், பொதுவாக அரசுகள் அறிவுரை கழகத்தின் மூலம் 14 ஆண்டுகளில் விடுதலை பற்றி பரிசீலிக்கப்படுகிறது என்றும் இருக்கிறது

ஆனால் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்புரையில் அதற்கு விளக்கம் அளிக்க முற்படும்போது 'ஆயுள் சிறை என்றால் அம் மனிதனின் ஆயுள்காலம் வரையே' என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 161, தண்டனையை குறைப்பதற்கான அதிகாரத்தை மாநில ஆளுனர்களுக்கு வழங்குகிறது. அப்படி முன் விடுதலை செய்யப்படும் ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சம் பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்று அதே உச்சநீதிமன்றம் பல தீர்ப்புரைகளில் கூறி இருக்கிறது. ஆனால் அப்படிதான் பாரபட்சம் காட்டாமல் சட்டத்தின் வழி ஆட்சி நடத்துவதாகக் கூறுபவர்கள் நடந்து கொண்டார்களா…….?

ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை விசயத்தில் மற்ற மாநிலங்களில் எவ்வாறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது?

தமிழகத்தில் பஸ்கட்டணம், மின்சாரக் கட்டணம், பால் விலை உயர்வைப் பற்றி கேட்டால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே உள்ளது என்று புள்ளிவிபரங்களைக் காட்டிடும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலையில் மற்ற மாநிலங்கள் சனநாயகத் தன்மையோடு, மனிதாபிமான நோக்கோடு எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்க வேண்டாமா..?

தமிழகத்தை மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக மாற்றுவோம்; முன் உதாரணமாகத் திகழ்வோம் என்ற ஆட்சியாளர்கள் சிறைவாசிகள் முன் விடுதலை விசயத்தில் ஏன் பாரபட்ச போக்கோடு நடந்து கொள்கிறார்கள்…?

கேரளாவில் 7 ஆண்டுகளில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதையும், ஆந்திராவில் 5 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதையும், உத்திரப்பிரதேசத்தில் கன்சிராம் பிறந்த தினத்தை முன்னிட்டு 10,000த்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகளை மாயாவதி அரசு விடுதலை செய்ததையும், மகாராஸ்ட்ரா, மேற்குவங்கம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்படுவதையும் பார்க்கிறோம்.

ஆனால் தமிழகத்தில் தாங்கள் விடுதலை செய்யப்படுவோமோ, இல்லை சிறையிலேயே செத்து விடுவோமோ என்று தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் நிகழ்வே நடந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசிற்கு முன் விடுதலை செய்யக்கூடிய தனி அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கி இருந்தாலும் தன் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப முன் விடுதலையை வழங்கி வரும் போக்கையே நாம் காண்கிறோம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 161, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 54ன் படி நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனையை நிறுத்தி வைக்கவோ, அல்லது மாற்றி அமைக்கவோ அதில் ஒரு பகுதியை குறைக்கவோ அல்லது தண்டனையை முற்றிலுமாக நீக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுகள் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்வதில்லை. அப்படியும் முன் விடுதலை செய்தால் சமூக வழக்குகள் என்ற காரணம் காட்டியும் சில குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்றவர்கள் என்ற காரணத்தினால் இசுலாமியர்கள், தலித்கள், தமிழ்த் தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்வதில்லை.

கடந்த ஆட்சியில் 2008ம் வருடம் அரசின் பொதுமன்னிப்பின் கீழ் தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்ற 1405 சிறைவாசிகள் 7 ஆண்டுகள் கழித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் அதில் ஒரு முஸ்லீம் சிறைவாசிகூட இல்லை. ஏன் இந்த பாரபட்சம்..?

கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்யக் கோரி, அரசின் கவன ஈர்ப்பு தொடர் பிரச்சார பொதுக்கூட்டங்ளை அரசின் கவனத்திற்கு சாத்தியப்பட்ட அனைத்து வகையிலும் நாம் எடுத்துச் சென்றோம்

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், மனித உரிமையாளர்கள் என அனைவரிடமும் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரிக்கையை நாம் கொண்டு சென்றோம். அதில் நாம் கற்ற பாடங்கள் ஏராளம். இனி என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் இங்கு முக்கியம். ஏதோ இக்கோரிக்கையைப் பற்றிப் பேசினோம் இனி அடுத்த வேலையைப் பார்ப்போமா..? அல்லது கோரிக்கையை வெல்லும் வரை போராடப் போகிறோமா? என்பதுதான் இங்கு முக்கியக் கேள்வி.

களத்தில் கற்றதும்.! பெற்றதும்..!

அரசியல் சிறைவாசிகளுக்காக அவர்களின் விடுதலை வேண்டிய போராட்டம் என்பது சீசன் போராட்டமல்ல என்பதும் அரச ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் சிறைபடுவதும் சிறைப்பட்டவர்களை மீட்கப் போராடுவதும் இந்த உளுத்துப்போன சமூக அமைப்பில் நீண்ட நெடிய போராட்டங்களே என்பதை உணர்ந்தே நாம் களமாடினோம்.

இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரிக்கை தொடர்பில் நாம் சந்தித்த பெரும்பாண்மையான அரசியல் கட்சித் தலைவர்கள் இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரு தலைவர் எங்களிடம் சிறைவாசிகளை மீட்கப் போகிறேன் என்று நீங்கள் ஜெயிலுக்கு போய்விடாதீர்கள் என்று மிரட்டும் தொனியில் அறிவுரை வேறு…!

இன்னொரு தலைவரோ நாந்தான் முதலில் விடுதலை செய்யச் சொல்லி வருடம் தவறாமல் அறிக்கை கொடுப்பேன், பின்புதான் மற்றவர்கள் அறிக்கை கொடுப்பார்கள் என்று பெருமை வேறு. அந்தப் பெருமையை வைத்து இதுவரை ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்பது வேறுவிடயம். சிறைவாசிகளின் விடுதலைக் கோரிக்கைக்காக நடக்கும் நிகழ்விற்கு வாருங்கள் என்று அழைத்தபோது வரமுடியாது என்று முகத்தில் அடித்தது போன்று கூறியவர், வழக்கம் போல் பேப்பர் அறிக்கை விட்டதோடு, தொலைக்காட்சியில் தோன்றி நானும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளுக்காகப் பேசினேன் என்று பதிவு செய்து கொண்டார். வருடாந்திர சடங்கை இந்த வருடமும் நிறைவேற்றினார்..

"கஸ்ட்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்” என்று ஒரு காலத்தில் பாடிய கம்யூனிஸ்டுகள் மற்றவர்களின் சிரமம் புரிந்தவர்கள். இந்திய சூழலில் அதிகமாக நெருக்கடிகளையும், சிறையின் சித்திரவதைகளையும் அனுபவித்தவர்கள். மரணத்தையும், தூக்கு மேடைகளையும் கண்டவர்கள். அதனால் சிறையின் சிரமங்கள் புரிந்திருப்பவர்கள். நிச்சயமாக சிறைவாசிகளின் சிரமம் போக்க அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பிப் போனோம். ஆனாலும் அவர்களிடமிருந்து போதிய ஆதரவும் விடுதலைக் குரலும் வராதது எமக்கு ஏமாற்றமே..

இப்படி ஏராளமான அனுபவங்கள் இருந்தாலும் கட்டுரையின் நீளம் கருதி, சில விடயங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். அவசியம் ஏற்படின் முழுமையாக அனைத்தையும் அம்பலப்படுத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்.

மேற்குறிப்பிட்டவர்கள் அனைவரும் தங்களை மாற்று அரசியல் தலைவர்களாக காட்டிக்கொள்பவர்கள். தி,மு.கவைப் பற்றி சொல்லவே வேண்டாம். திருடனுக்குத் தேள் கொட்டியது போல் வாய் மறந்தும் சிறைவாசிகள் விடுதலை பற்றி பேசவில்லை.

விடுதலைக் கோரிக்கையை புறந்தள்ளிய தமிழக அரசு

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் சிறைவாசிகள், ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி கவன ஈர்ப்புப் பிரச்சாரங்களை நாம் முன்னெடுத்துள்ளதால் அரசு ஏதாவது பதில் சொல்லும் என்ற எம்முடைய எதிர்பார்ப்பு வீணானது. அரசு மறந்தும் கூட இவ்விடயத்தில் எந்த பதிலும் சொல்லவில்லை. சிறையில் சிறைவாசிகளை நாங்கள் சென்று சந்தித்தபோது அவர்கள் எங்களை ஆற்றுப்படுத்தி, 'நாங்கள் வருடம் வருடம் ஏமாற்றத்தில் கழிக்கிறோம். எங்களுக்கு ஏமாற்றம் பழகிவிட்டது. நீங்கள் கவலைப்படாதீர்கள்' என்று கூறும் பக்குவமும், வாழ்க்கையைப் பற்றிய எதிர்பார்ப்பும் அற்றவர்களாக இருந்தனர். விரக்தியில் பேசும் அவர்களின் உயிர் மொழி எத்தனை பேரால் புரிந்து கொள்ளப்படும் என்று எமக்குத் தெரியவில்லை.

அன்பான தமிழ்த் தேசியப் போராளிகளே…

பெரியாரிய இயக்கத் தோழர்களே…

மனித உரிமையாளர்களே…

தலித் விடுதலைப் போராளிகளே….

இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய் என்ற கோரிக்கையை வைத்தவுடன் நமக்கும் இசுலாமியர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று இருந்து விட்டீர்களா..?

உங்களின் பாரமுகத்திற்கான காரணம் என்ன? அரசிடம் இருக்கும் பாரபட்சமும் இசுலாமிய விரோதப் போக்குக்கும் உங்களின் போதுமான அக்கறை இன்மைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றுதான் நாங்கள் உணர்கிறோம்.

தலைவர்கள் மட்டத்தில் விவாதிக்கப்படும்போது அது பெரும்பான்மையான அணிகளிடம் போய்ச் சேராமல் தடுத்தது எது..?

இசுலாமிய சிறைவாசிகளை விடுவித்தால் சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் போன்ற தோழர்களையும் விடுவிக்கவேண்டும் என்ற அரசியலும் இதற்குப் பின்பு உள்ளது என்பதையும் நீங்கள் ஏன் மறந்தீர்கள்? நாங்கள் போராடியது இசுலாமிய சிறைவாசிகளுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல் சிறைவாசிகளுக்கும்தான். 26 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் வீரப்பனின் அண்ணன் மாதையனுக்கும் சேர்த்துதான்

ஆனால் எமது போராட்டம் ஏதோ தனிப்பட்ட போராட்டமாக பார்க்கப்பட்டதின் விளைவு இன்று போராட்டத்தின் நோக்கம் தற்காலிகமாக தோல்வியைக் கண்டிருக்கிறது… என்ன செய்யப் போகிறீர்கள்…?

(கடந்த ஆறு மாத காலமாக எம்மோடு இணைந்து களமாடிய தோழர்கள் அனைவரையும் இவ்வேளையில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். தோழர் கொளத்தூர் மணி, தோழர் சீமான், தோழர்.திருமாவளவன், பேரா.தீரன், தோழர் தியாகு, 'மே பதினேழு' திருமுருகன், 'சேவ் தமிழ்' பரிமளா, சட்டமன்ற உறுப்பினர்.தோழர் தனியரசு, தோழர் புகழேந்தி, கீற்று நந்தன் இன்னும் இன்னும் தோழர்களுக்கு எமது நன்றியும் நேசிப்பும்)

அன்பான இசுலாமியத் தலைவர்களே…

அன்பான இசுலாமிய மக்களே…

அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் வீரம் செறிந்த போராட்டங்களை முன்னெடுப்பதிலும் உங்கள் தியாகங்கள் மகத்தானது. இருப்பினும் சில விடயங்களை சுய விமர்சனத்தோடு பார்க்கவேண்டிய நேரமிது.

சிறையில் பல்லாண்டுகாலமாக வாடிவரும் இசுலாமிய சிறைவாசிகளுக்கான உங்களுடைய நீண்ட போராட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய போராட்டங்களின் தொடர்ச்சிதான் தற்போது நாங்கள் முன்னெடுத்திருக்கும் போராட்ட வழி முறையாகும். ஒரு சிறு வித்தியாசம் என்னவென்றால் எப்போராட்டமானாலும், எக்கோரிக்கையை வெல்லவேண்டும் என்றாலும் தொடர்ச்சி வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டாமா..? அவர்களின் போராட்டம் இன்று உலக அளவில் அவர்களின் கோரிக்கையை கொண்டு சேர்த்திருப்பதை நாம் பார்க்க வேண்டாமா..?

கடந்த ஆறுமாத காலமாக தங்களின் பங்களிப்பையும், ஒத்துழைப்புகளையும் நாங்கள் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். ஆயினும் நமது கோரிக்கையை அரசு புறந்தள்ளிய காரணத்தை நாம் ஆராய வேண்டாமா..?

அண்ணல் நபியை இழிவுபடுத்தி திரைப்படம் எடுத்த யூதனுக்கு எதிராகவும் அவனுக்கு வக்காலத்து வாங்கும் அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிராகவும் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் உணர்வுமிக்க போராட்ட வடிவமாக எழுந்து அரசுகளை நிலைகுலைய வைத்திருக்கிறது. இயக்கம், அமைப்பு, ஜமாத் வேறுபாடு பார்க்காமல் ஒன்றிணைந்து அனைத்து இசுலாமிய மக்களும் ஒன்று கூடி (அண்ணனின் ஜமாத் எப்பொழுதுமே தனி ஆவர்த்தனம் தான், அதனால் அவர்கள் குறித்து எதுவும் பேசுவதற்கு ஒன்றும் இல்லை) ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். நல்ல தொடக்கம்தான். இதே ஒற்றுமையோடு கடந்த காலங்களில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக ஒன்று கூடி போராடி இருந்தால்….?

15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளும் தங்களின் சுய நலனுக்காக சிறைப்பட்டவர்கள் அல்ல. சமூக அவலங்களையும், சமூகத்தின் மீதான தாக்குதல்களையும் எதிர்கொண்டு தங்கள் குடும்பம் விட்டு, தங்களை தியாகம் செய்த தியாக தீபங்கள். அவர்களின் விடுதலையை இன்னும் கூடுதலான அக்கறையோடு அணுக வேண்டாமா..? நமது போராட்டங்கள் இன்னும் அழுத்தமாக இருக்க வேண்டாமா..?

தமிழகம் முழுவதும் தற்சமயம் நடந்து வரும் போராட்டங்களைப் போல் எழுச்சியோடு ஒருவேளை கடந்த செப்ட்டம்பர் 15க்கு முன் நாம் ஒன்றிணைந்து போராடி இருந்தால் நமக்கு அரசிடம் இருந்து உரிய பதில் கிடைத்திருக்குமோ என்ற கேள்விதான் எமக்கு ஏற்படுகிறது.

(கடந்த ஆறு மாதகாலமாக எமக்கு ஆக்கமும் ஊக்கமுமாக இருந்த தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாக்கரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாத். இந்திய தேசிய லீக் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும், அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் எங்களின் நன்றியும் நேசிப்பும்)

அன்பானவர்களே…

பல்லாண்டுகாலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலை கோரி எழுச்சிகரமான போராட்ட வடிவங்களை முன்னெடுப்போம்.

அனைத்து அரசியல் ஆற்றல்களையும் இணைத்திடுவோம்.

இயக்கம், அமைப்புகள், பொதுமையாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைப்போம்.

அரசியல் சிறைவாசிகளின் விடுதலையை வென்றெடுப்போம்

- உமர்கயான்.சே. வழக்கறிஞர். முதன்மை ஒருங்கினைப்பாளர்,
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
தமிழ்நாடு

Pin It