தொல்காப்பியர் காலந்தொட்டு கி.பி.1766 வரை குமரி மாவட்டம் தமிழக அரசர்களின் கீழ் இருந்து வந்தது. கி.பி.1766-இல் ஆர்க்காடு நவாப் பாண்டியப் பேரரசனிடமிருந்து இந்நிலப்பரப்பைக் கைப்பற்றி திருவிதாங்கூர் அரசனுக்கு வழங்கினான். அன்றிலிருந்து, 1956-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 190 ஆண்டுகள் இந்நிலப்பரப்பை மலையாள மொழியை அரசமொழியாகக் கொண்ட கேரள அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இங்குள்ள தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க மலையாள ஆட்சியாளர்கள் இந்நிலப்பரப்பை மலையாள மயமாக்கினர்; தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். இதனை எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து போராடிய போராட்டமே, குமரித்தமிழர் விடுதலைப் போராட்டமாகும்.

இப்போராட்டம் 1823-இல் தோள்சீலைப் போராட்டத்தில் தொடங்கி 1836-இல் ஐயா வைகுண்டசாமி வழியாக பிரயாணித்து 1956-இல் மார்சல் நேசமணி வழியாக நிறைவு பெற்றது. 190 ஆண்டு கால அடிமை வாழ்க்கை 9 வருடங்களில் (1945-1956) 15 இலட்சம் குமரித் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தின் மூலம் நிறைவு பெற்றது. மார்சல் நேசமணித் தலைமையில் குமரித்தமிழர்கள் இதனைச் செய்து முடித்தனர்.

1948-இல் நடைபெற்ற திருவிதாங்கூர் சட்டமன்றத் தேர்தலின் போது, கேரள அரசு, மாங்காடு தேவசகாயம் மற்றும் கீழ்க்குளம் செல்லையா என்ற இரு தமிழர்களை சுட்டுக் கொன்றது.  பின்னர், ஆகஸ்ட் 11,1954 அன்று நடைபெற்ற விடுதலை அனுசரிப்பின் போது ஏற்பட்ட போராட்டத்தின் போது, மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை என்ற இரு இடங்களில் பட்டம் தாணுப்பிள்ளை தலைமையிலான‌ கேரள அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் பின்வரும் தமிழர்கள் பலியாயினர்.

புதுக்கடைத் துப்பாக்கிச் சூட்டில்,

வண்ணான் விளை A.அருளப்பன் நாடார்,
கிள்ளியூர் M.முத்துசுவாமி
புதுக்கடை N.செல்லப்பாப் பிள்ளை மற்றும்
அம்சி A.பீர் முகமது ஆகிய நான்கு தமிழர்கள் பலியாயினர்.

அதுபோல, மார்த்தாண்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில்,

தேம்பானூர் பொன்னையன்
தோட்டவரம் குமரன்
மணலி பாலையன்
மேக்கங்கரை இராமையன் மற்றும்
தொடுவட்டி பப்பு ஆகிய ஐந்து தமிழர்கள் பலியாயினர்.

இவர்களின் ஈகத்தில் தான் குமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இல்லையென்றால் குமரித்தமிழர்கள், இன்று கேரள மாநிலத்தில் சிக்கி வாடும் தேவிகுளம்-பீர்மேடு தமிழர்களைப் போல் மொழிச்சிறுபான்மையினர் ஆகியிருப்பர். தமிழ்நாட்டுடன் சேர்ந்ததாலேயே, குமரித்தமிழர்கள் மொழிப்பெரும்பான்மையினர் ஆகியிருக்கின்றனர். ஆனால், தமிழக‌ அரசு, 1846 சதுர கிலோமீட்டர் பரப்பைத் தமிழ்நாட்டுடன் இணைத்த மார்சல் நேசமணிக்கு இப்போதுதான் மணிமண்டபமே கட்ட முன்வந்துள்ளது. 

இப்பிரச்சினை சம்பந்தமாக குமரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகள்:

குமரி மாவட்ட மக்களின் தாய்த்தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் நினைவுச் சின்னம் இன்னும் அரசால் அமைக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

புதுக்கடைக்கு 18-10-1974 அன்று வந்த அப்போதைய முதல்வர். கலைஞர் அவர்களிடம் 1945-1956 இல் நடைபெற்ற குமரித்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஒரு வரலாற்று ஆணையம் அமைத்து ஆய்வு செய்து எழுத வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே வரலாற்று ஆணையம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

மார்சல் நேசமணி வரலாறும் குமரித் தமிழர் விடுதலைப் போராட்டமும் இன்னும் பள்ளி மற்றும் கல்லூரி பாடநூல்களில் எழுதப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக இதனை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான உதவித்தொகையை, 7000 ரூபாயாகவும், மருத்துவப்படியை 500 ரூபாயாகவும் உயர்த்தி இருக்கிறது. மேலும், இவர்களுக்கு நடுவண் அரசும் கூடுதலாகச் சலுகைகளை வழங்குகிறது. ஆனால், 1846 சதுர கிலோமீட்டர் பரப்பைத் தமிழ்நாட்டுடன் இணைத்த குமரி மாவட்ட விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு, மாதம் 4000 ரூபாய் உதவித்தொகையும், மருத்துவப்படி வெறும் 15 ரூபாயும் வழங்கி வருகிறது இந்த‌ அரசு. சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும் தாய்த்தமிழக விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும் போராட்டத்தில் என்ன வித்தியாசம் கண்டது இந்த தமிழக அரசு. முந்தையவர்கள் இந்திய தேசியத்திற்காகவும் பிந்தையவர்கள் தமிழ்த் தேசியத்திற்காகவும் போராடினார்கள். இச்சலுகைகளை உயர்த்தி சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு இணையாக தமிழக அரசு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 01லிருந்து வழங்க வேண்டும். இது சம்பந்தமாக, கன்னியாகுமரி மாவட்ட விடுதலைப் போராட்டத் தியாகிகள் சங்கத்தின் துணைத்தலைவர். சி.குமராசுவாமி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடங்களான மார்த்தாண்டம், புதுக்கடை மற்றும் மாங்காடு இடங்களில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் சார்பில் குமரி அனந்தன் அவர்களால் 1985 ஆம் ஆண்டு நினைவுச்சின்னம் வைக்கப்பட்டது. ஆனால், மார்த்தாண்டத்தில் உள்ள நினைவுச்சின்னம் குழித்துறை நகராட்சியால் அப்புறத்தப்பட்டு உள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்நினைவுச்சின்னம் மிகவும் அவசியம். எனவே, குழித்துறை நகராட்சி உடனே நினைவுச்சின்னத்தை மீண்டும் நிறுவ வேண்டும்.

- சா.வாகைச்செல்வன்

Pin It