இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் பயனடையப் போவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா தான். அவருக்குத்தான் உற்சாகம். அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இப்போது தேர்தல் களத்தில் இறங்குகிறார். இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்பது சரிந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கொடுத்து அவருடைய தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரித்திருக்கிறது என்பது தெளிவு.

walmart_india_640

அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு எது நல்லது என்பது ஒபாமாவுக்கு நனறாகத் தெரியும்; பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அமெரிக்காவின் நலனில் என்ன அடங்கியிருக்கிறது என்பது தெரியும். எடுத்துக்காட்டாக, அமெரிக்க வேலை வாய்ப்பை பாதுகாக்க வெளிநாடுகளுக்கு வேலை கொடுத்துப் பெறும் முறையை நிறுத்த விரும்பினார். இந்தியா என்ன சொல்லியும் அவரை இணங்க வைக்க முடியவில்லை. அதேபோல சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கே தெரியும். அவர் பொருளாதார சீர்திருத்தத்தில் ஒரு புதிய அலையை தொடங்கி வைத்திருந்தார். ஆனால் திருவாளர் ஒபாமா நமக்கு எது நல்லது என்று சொல்வது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

ஸ்டாண்டர்ட் & புவர், பிட்ச் மற்றும் மூடி ஆகிய நம்பிக்கை அளவீட்டு முகாமைகளின் உதவியுடனும் தூண்டுதல் பெற்றும் இந்தியா இறுதியாக உலகலாவிய நெருக்குதலுக்குப் பணிந்தது. இந்தியாவும் ஜி-20 நாடுகளின் அமைப்பின் கீழ் பலமுத்திரை சில்லறை வணிகத்தின் வளர்ச்சிக்கு உள்ள அனைத்துத் தடைகளையும் நீக்கும் கடப்பாடுடையது என்பது வெளியே தெரியாமல் இருக்கிறது.

ஆனால் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு உண்மையில் இந்தியாவுக்கு நல்லதா? அது கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துமா, விவசாய உற்பத்தி வீணாவதைக் குறைக்குமா, மேலும் விவசாயிகளுக்கு அவர்களுடைய பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்யுமா? சில்லறை வணிகத்தின் நன்மைகள் பற்றி நிறைய எழுதியும் பேசப்பட்டும் வந்திருக்கிறது. சில பெரிய நன்மைகள் என்று கூறப்படுபவை குறித்துப் பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.

விவசாயம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு விவசாயிகளுக்குப் பெரிய வரம் என்று பிரதமர் திரும்பத் திரும்ப உயர்த்திப் பிடித்து வருகிறார். துரதிர்ஷ்டவசமாக இது உண்மையல்ல. அமெரிக்காவில் கூட பெரிய சில்லறை வணிக நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உதவவில்லை. அமெரிக்கக் கூட்டாட்சி ஆதரவு தான் விவசாயத்தை லாபகரமாக வைத்துள்ளது. கடந்த 2008ல் கொண்டுவரப்பட்ட அதன் விவசாயச் சட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு விவசாயத்திற்கு 307 பில்லியன் டாலர் சலுகை வழங்கியுள்ளது.

பெரிய சில்லறை வணிகம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்கிறது என்றால் இவ்வளவு பெரிய சலுகை எதற்கு வழங்கப்படவேண்டும்? மேலும் ஏராளமான மானியங்கள் இருந்தும் கூட ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஐரோப்பிய விவசாயி விவசாயத்தை கைவிட்டுச் செல்கிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

‘பெரிய சில்லறை வணிகம் விவசாயிகளை இடைத்தரகர்களிடமிருந்து விடுவிக்கிறது, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்கிறது’ என்பது இரண்டாவது வாதம். இதுவும் உண்மைத் தகவல்களின் படி சரியல்ல. அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டில் 70 விழுக்காடா இருந்த விவசாயிகளின் நிகர வருமானம் 2005ல் வெறும் 4 விழுக்காடாகக் குறைந்து போயுள்ளது என்பதைச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால் பெரிய சில்லறை வணிக நிறுவனங்கள் உண்மையில் புதிய இடை மனிதர்கள் வரிசையைக் கொண்டுவந்துள்ளது. அவர்களின் பெயர்கள் தரக்கட்டுப்பாட்டாளர், தரப்படுத்துபவர், சான்றிதழ் முகாமை செயல்படுத்துபவர், பொட்டல ஆலோசகர் மற்றும் இன்னபிற ஆகும். இந்த இடை மனிதர்கள் தாம் லாபங்களை அள்ளிச் செல்கின்றனர். விவசாயிகளின் பிழைப்புக்கு வாழ்வாதாரம் மானியங்கள் தாம்.

ஏகபோக சக்தி இந்த நிறுவனங்களை கற்கால விலை நிலவரங்களுக்குக் கொண்டுசெல்ல உதவுகிறது. லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் பேரங்காடிகளில் நுகர்பொருள் விலைகள் குறித்த அனுபவ ஆய்வுகள் வெளிச் சந்தை விலைகளை விட 20-30 விழுக்காடு கூடுதலாகவே இருந்து வருவதைக் காட்டுகின்றன.

பல முத்திரை சில்லறை வணிகம் அறிவியல்பூர்வ இருப்பு வைப்பு முறைகளை வழங்கி பல லட்சக்கணக்கான டன்கள் உணவு தானியம் அழுகிப் போவதிலிருந்து பாதுகாக்கும் என்று வாதிடப்படுகிறது. உலகில் எந்த நாட்டில் பெரிய சில்லறை வணிக நிறுவனங்கள் தானிய இருப்பு வைப்பு கிடங்கு வசதிகளை வழங்கியிருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை.

இருப்பு வைப்பில் நேரடி அந்நிய முதலீடு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது; எந்த முதலீடும் வரவில்லை. ஒற்றை முத்திரை சில்லறை வணிகத்தில் 30 விழுக்காடு உள்ளூரில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டும் அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கேள்விக்கான பதிலை வர்த்தக அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது.

வேலைவாய்ப்பு : 40,000 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய சில்லறை வணிகச் சந்தையில் 120 லட்சம் சில்லறை வணிகர்கள் உள்ளனர். இதில் 4 கோடி பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். வால்மார்ட்டின் மொத்த விற்பனை மட்டுமே 42000 கோடி டாலர். அது 21 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சில்லறை வணிகத் துறையில் வேலை பார்ப்போரில் ஒரு மிகச் சிறிய எண்ணிகையை மட்டும் வைத்துக்கொண்டு வாலமார்ட் அதே விற்பனை அளவை எட்ட முடியுமானால, பெரிய சில்லறை வணிகம் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று எப்படி நம்ப முடியும்? பெரும் சில்லறை வணிக நிறுவனங்கள் பல லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவே செய்யும்.

மாநில அரசின் தனிப்பட்ட உரிமை: சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் இறுதி முடிவை மத்திய அரசு தந்திரமாக, மாநில அரசாங்கத்திடம் விட்டுவிட்டுள்ளது. இது பெரிய அங்காடிகளுக்கு எதிராக உள்ள மாநில அரசுகளை ஓரளவு சமாதானப்படுத்தும். இருப்பினும், பன்னாட்டு வர்த்தக நிபந்தனைகளின் படி உறுப்பினர் நாடுகள் தேசிய அளவில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அன்னிய சில்லறை வணிக நிறுவனங்களுக்குத் தெரியும். இருதரப்பு முதலீட்டு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் இந்திய அந்நிய முதலீட்டாளர்களுக்கு தேசிய அளவில் வாய்ப்பை வழங்கவேண்டும். 70க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுவிட்டன. எனவே மாநில அரசுகள் பேரங்காடிகளைத் திறக்க அனுமதித்தாக வேண்டும், இல்லாவிட்டால் அவை நீதிமன்றங்களை நாடி அனுமதி பெற்றுக்கொள்ளும்.

மேலும், மிக முக்கியமாக, பெரிய நகரங்களில் தான் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும் பேரங்காடி நச்சுக்கிருமி எப்படிப் பரவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். மெக்சிகோவில் பத்தாண்டுகளில் வால்மார்ட் எப்படி ஏறத்தாழ நாட்டின் 50 விழுக்காடு சில்லறை வணிகச் சந்தையைக் கைப்பற்றியது என்பது பற்றி அண்மையில் நியூயார்க் டைம்ஸ் இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. ‘வால்மார்ட் துணை நிறுவனங்கள மூலம் லஞ்சம கொடுத்து 2011ல் 431 அங்காடிகளைத் திறந்துள்ளது, இது பற்றிய உள் விசாரணை அதன் தலைமையகத்தால் மறைக்கப்பட்டுவிட்டது’ என்று நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவில், வால்மார்ட் மட்டுமே ‘செல்வாக்கு’ செலுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.52 கோடி செலவிட்டுள்ளது என்பது அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் வெளியிடபட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது அண்மையில் அதற்குப் பயனளித்துள்ளது.

நன்றி: இந்து நாளிதழ், 15.09.2012.

- தேவிந்தர் சர்மா                       

தமிழில்: வெண்மணி அரிநரன்

Pin It