Kashmir2_380தினைந்து ஆண்டுகளுக்குச் சிறிது முன்னதாக இருக்கலாம்; சிரீநகரில், எங்கள் வீட்டில், நான் என் அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, சன்னல் வழியாக  வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் காட்சி இப்போது சிறிது மங்கலாகத் தான் நினைவுக்கு வருகிறது. இருந்தாலும் அழிக்கமுடியாத அளவுக்கு மனதில் பதிந்து விட்டது. இறந்து போனவர்களை மனிதர்கள் சுமந்து கொண்டு சென்றார்கள்; பெண்கள் ஓலமிட்டுக் கொண்டு பின் சென்றார்கள். அப்பெண்களின் ஓலத்தினூடே  காற்றில் ஒரு முழக்கத்தின் எதிரொலி கேட்டது; “ஹம கியா சாஹதே? ஆசாதி!” (நாங்கள் என்ன கேட்டோம்? விடுதலைதானே?) “அம்மா நமக்கு ஆசாதிஎப்போது கிடைக்கும்?’’என்று நான் என்னுடைய அம்மாவிடம் கேட்டது நன்றாக நினைவிருக்கிறது. எங்கள் நிலத்தின் மக்கள் ஆசாதிக்காக ஏங்கினார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், ஆசாதி என்றால் என்ன என்று அப்போது எனக்குத் தெரியாது. நான் கேட்ட கேள்விக்கு அம்மா பதில் சொல்லவில்லை; மௌனமாக இருந்தார்.

இன்று, அந்த ஆண்டுகள் அனைத்தும் கழிந்து போன பிறகு, நான் அதே சன்னல் வழியே பார்க்கிறேன். இப்போது சன்னல் கண்ணாடி உடைந்து போயிருக்கிறது; அதே ஏக்கக் குரலுக்கும் கோபத்துக்கும் சாட்சியாக இருக்கிறது. நானும் அதே கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்: “நாங்கள் எப்போது  விடுதலையாவோம்?” வெளிப்புற அழிவின் பாதிப்புகளிலிருந்து எங்களைப் பாதுகாக்க எங்கள் மூத்தவர்கள் எவ்வளவுதான் முயன்ற போதும் அவர்களுடைய முயற்சிகள் தோற்றன. ஊரடங்கு, காவல்துறை திடீர்த் தாக்குதல், தியாகி, டெஹரீக் போன்ற சொற்களைக் கேட்டுக்கொண்டு எனது தலைமுறை வளர்ந்துள்ளது. ‘ஆசாதி’ காற்றில், ரொட்டிக் கடையில், உணவு அறைகளில், பேருந்துகளில், தெருக்களில்  என்று எங்கும் இருந்தது.

எனது குழந்தைப் பருவம் துப்பாக்கியின் நிழலில் கழிந்தது. காதுகளைச் செவிடாக்கும் துப்பாக்கி. கையெறி வெடிகுண்டு ஓசைகளால் கனவுகள் இடைமறிக்கப்பட்டன. எனது சகோதரனின் விருப்பத்துக்குரிய பொழுதுபோக்கை நினைத்துப் பார்க்கிறேன்; அவன் மரத்தில் பொம்மைத் துப்பாக்கி செய்து ‘என்கவுண்டர் என்கவுண்டர்’ என்ற ‘மோதல்’ விளையாட்டை விளையாடுவான். கிரிக்கெட் போட்டிகளின் போது என்னைச் சுற்றியுள்ள ஒருவர் கூட இந்தியாவுக்காக உற்சாகக் குரல் எழுப்பமாட்டார்கள். ஒரு குழந்தையாக நான் அந்த உணர்வைப் புரிந்துகொள்ளவில்லை; இருப்பினும், படிப்படியாக அந்தச் சிறிய ஆனால் வலுவான அறிகுறிகளைக் கொண்டு நான் ஒரு காசுமீரியாக என்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன்.

ஒரு கோடைகாலப் பிற்பகலில், எனது நண்பர்களுடன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். சாலைகளில் தடைகள் வைக்கப்பட்டிருந்தன; படைவீரர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள்; அவர்களில் ஒருவர் எங்கள் பள்ளிப் பைகளைப் பிடுங்கிக் கொண்டார். அவர் என்னுடைய தோழியின் மதிய உணவுப் பெட்டியைக்கூட பறித்துக் கொண்டார். அது என்னை ஆத்திரமடையச் செய்தது. “நாங்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; இது எங்கள் மதிய உணவுப் பெட்டி; நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?”என்று அதை நான் திரும்பப் பறித்தேன். நான் கூர்மையாக அவரைப் பார்த்ததும் அவர் முகம் சிவந்தது. நான் திரும்பி நடந்தேன். கோபமும் பரபரப்பும் என்னைப் பற்றிக்கொள்ள, நான் வீட்டுக்கு விரைந்து சென்று, வீரதீரச் செயல் என்று நான் நினைத்த எனது செயலை விவரித்தேன், ஆனால் அம்மா பயந்து போய்விட்டார். “அந்த இடத்திலேயே அவர்கள் உன்னை சுட்டுக் கொன்று போட்டிருக்க முடியும்,” என்று கூறி என்னைத் திட்டித் தீர்த்தார்.

கல்வி நிலையங்களில், புத்தகங்கள் எங்கள் வரலாற்றை மறைக்கின்றன; வரைபடங்கள் கூடத் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் இங்குக் குழந்தைகள் மோதலில் வாழ்கின்றனர், வாழ்க்கையே மாபெரும் ஆசானாக இருக்கிறது என்பதை இத்தகைய உத்திகளைத் திட்டமிடுவோர் மறந்து விடுகின்றனர்.

ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்த படையினர், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் படையின் காவல் சாவடி, முள்கம்பி வேலிகள், தடுப்பான்கள், பறித்துச் செல்லுதல், இவை அனைத்தும் காசுமீரை விட்டு நான் வெளியே வந்து வேறு ஒரு மாறுபட்ட உலகைக் காணும் வரை, ‘‘இயல்பானவையாக’’த் தெரிந்தன. இப்போதுதான் என்னுடயை தாயகம் ‘‘இயல்பானதாக’’ இல்லை என்று உணர்ந்து கொண்டேன்.

kashmir1_380எங்களைச் சுற்றி நடந்த விவாதங்கள் என்னிடம் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தின. முதலாவது, இந்தியத் தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு தெரிவித்த முறையீட்டிற்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் அவையில் சம்மு காசுமீர் ஒரு தகராறுக்குரிய பகுதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிந்துகொண்டேன். ஐ.நா. அவை ஒரு பொதுவாக்கெடுப்புக்குப் பரிந்துரை செய்தது. அது நேருவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர் 1948இல் அனைத்திந்திய வானொலியிலும் சிரீநகரில் ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தில் ஆற்றிய உரையிலும் சம்மு&காசுமீர்  மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். நேரு இந்த வாக்குறுதியைப் பல முறை அளித்துள்ளார்.

ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, புதுடெல்லி இணைவுச் சட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு நிலையைத் திட்டமிட்ட முறையில் கைவிடுவதில் ஈடுபட்டுள்ளது. 1987 வரை, மாநிலத்தின் ஒரு தேர்தல் கூட ‘சுதந்திரமாகவும் நேர்மையாகவும்’ நடந்ததாகக் கூற முடியாது என்றும் அத்தகைய திணிக்கப்பட்ட ஜனநாயகம் கலகத்தை மட்டுமே பிறப்பிக்கும் என்றும்  அவதானிகள் கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஓர் ஆயுத எழுச்சி தோன்றியது, அதற்குப் புதுடெல்லி ஒடுக்குமுறை மூலம் பதிலளித்தது என்று கூறுவது மிகவும் குறைத்துக் கூறுவதாக இருக்கும். கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை பற்றி தகராறு உள்ளது, ஆனால் 70,000 என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட எண்ணிக்கையாகும்.

இந்தியாவின் இருப்பு மனிதாபிமானம் அற்றதாகவே இருந்து வந்திருப்பதை குழந்தைப் பருவத்திலிருந்து நான் அறிந்துள்ளேன். சித்திரவதை, பாலியல் வன்புணர்ச்சி, தூக்கிக் கொண்டு போய்க் காணமல் போகச் செய்யப்பட்டவர்கள், அடையாளம் தெரிவிக்கப்படாத கல்லறைகள், கணவரை இழந்தோர், அரை விதவைகள், அனாதைகள் ஆகியோரின் பொதுவான முகவரி காசுமீர் ஆகும்.

நான் பயின்ற டிண்டேல் பிஸ்கோ மல்லின்சன் பெண்கள் பள்ளிக்கு வெளியே 2005இல் நடந்த ஒரு குண்டு வெடிப்பு என்னைப் பல நாள்கள் பதட்டத்திலேயே வைத்திருந்தது. எனது வகுப்புத் தோழர்களும் குழந்தைகளும் வலியிலும் வேதனையிலும் கத்தியதும் அலறியதும், இரத்தத்தில் நனைந்த சீருடைகளும் இரத்தம் தெறித்த கதவுகளும் என்னைக் கலங்கவைத்துக் கொண்டிருந்தன. ஊடக ஆள்கள், அவசர உதவி ஊர்திகள், மருத்துவ வாகனங்கள், படைவீரர்கள் நிறைந்த பெரும் கூட்டத்தில் தொலைந்துவிட்ட எனது தம்பியைக் கண்டு பிடிக்க முடியாமல் நான் திணறிக் கொண்டிருந்த பதட்டம் இன்னும் கூட என்னை ஆட்டிப் படைக்கிறது.

காசுமீரின் முழுமையான சித்திரம் என்பது அழகான தால் ஏரியையும் முகலாயத் தோட்டங்களையும் மட்டும் கொண்டதல்ல; அது உலகிலேயே மிகுதியான படைவீரர்கள் குவிக்கப்பட்ட மண்டலம் என்பதும் சேர்ந்ததாகும். இங்கு இளஞ்சிறார்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கொடிய சட்டங்களால் குற்றம் சாட்டப்படுகிறார்கள், அச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்களை இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றிச் சிறையில் வைத்திருக்கலாம். இங்கு இளம் குற்றவாளிகளுக்கான இல்லங்கள் இல்லை. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் இந்தியப் படைகளுக்குத் தேடவும், கைது செய்யவும், சுட்டுத் தள்ளவும்  முழு உரிமை வழங்குகிறது, மேலும் விசாரணையிலிருந்தும் தண்டிக்கப்படுவதிலிருந்தும் அவர்களுக்கு விலக்கு அளிக்கிறது. மனித உரிமை மீறல்கள், புரையோடிப் போன நீதி அமைப்பு, மோசமான நிர்வாகம் ஆகியவற்றை மக்கள் எதிர்த்து வருகிறார்கள்.

குழந்தைப் பருவ நினைவுகள் நிறைந்த எனக்கு, 2010 ஆம் ஆண்டு ஒரு மோதல் காலக் குழந்தையாக என்னை அடையாளம் காண்பதை மீண்டும் பலப்படுத்தியுள்ளது. மேலும் அது எங்களுடைய கூட்டான வேதனையை வெளிப்படுத்தும் ஒரு ஏக்கத்தோடு வந்துள்ளது. எனக்கு எழுதுவது ஓர் ஆறுதலாகவும் தேவையாகவும் ஆகியுள்ளது.

2010 ”அறியாப் பருவத்தினர் கொலை செய்யப்படும்’’ ஆண்டாகக் குறிக்கப்பட்டிருந்தது. அது 16 வயது இனாயத்கான் கொலையுடன் தொடங்கியது. ஜனவரி 8 அன்று அவன் தனிப்பயிற்சி வகுப்புச் சென்று கொண்டிருந்த போது படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். பல நாள்கள் கழித்து, இனாயத்தைப் போன்றே பள்ளிக்குச் செல்லும் வாமிக் பரூக், ஜாஹித் பரூக் ஆகிய இருவரும் அரசப் படைகளின் நடவடிக்கைகளால் பலியானார்கள். இதைவிட மோசமானது அடுத்து வந்தது: ஏப்ரல் 29 அன்று, இந்தியப்படை மசில் பிரிவில் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகில் ஒரு போலி மோதலில் மூன்று காசுமீரி இளைஞர்களைக் கொன்றது.

பள்ளித் தனிப் பயிற்சி வகுப்பில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த 17 வயது டுபாயில் அகமது மட்டூ, சிறிநகரின் கனி நினைவு விளையாட்டு அரங்கிற்குள் கண்ணீர்ப்புகைக் கூம்பால் தலையில் அடிக்கப்பட்டான். அது சூழலை மோசமாக்கியது. அடுத்து வந்த நாள்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் கழிந்தன, 2010இல் கோடைகாலக் கலவரத்தின்போது 118 பேர் கொல்லப்பட்டனர்.

மாபெரும் உருதுக் கவிஞரான பைஸ் அகமது பைஸ் எமது துன்பங்களைத் தொகுத்துக் கூறினார்:

“தூக்கிலிடுபவனின் கரங்கள் தூய்மையாக இருக்கின்றன; அவனது நகங்கள் ஊடுருவக் கூடியவையாக இருக்கின்றன; ஒவ்வொரு கொலைகாரரின் ஆடைகள் கறைபடாமல் இருக்கின்றன; ரத்த அடையாளமும் இல்லை, சிவப்பின் தடயமும் இல்லை...”

காசுமீரிகள் பல பத்தாண்டுகளாக அந்நியப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மறக்கப்பட்டுவிட்ட ஒவ்வொரு வழக்கினாலும் நினைவு கூர்மையடைகிறது. ஒவ்வொரு அநீதிச் செயலுடனும் ஒரு கல்லெறி சிறுவன் பிறக்கிறான். அரசாங்கம் மக்களைச் சென்றடையத் தவறிவிட்டது. ஒரு பதிலுக்குச் செய்வதுபோல, இறந்து போன 13 வயது வாமிக்கைக் கொன்ற கொலைகாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அவன் மீது ஒரு படைவீரரைக் காயப்படுத்தியதாகக் குற்றம் சாட் டியது.

“எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன, அவற்றின் தலைவிதி என்ன என்று எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கு நம்பிக்கை எதுவும் இல்லை. நீண்ட நாள்களுக்கு நீதிமன்றத்தை நாடிக் கொண் டிருக்க முடியாது, நாங்கள் சாதாரண் மனிதர்கள்; ஏழைகளான எங்களுக்குச் செலவுகளைச் சமாளிக்க முடியாது. அல்லா தான் எல்லாவற்றுக்கும் சாட்சி, அதுதான் எங்களுக்கு ஒரே ஆறுதல்”. இவை ஒரு சகோதரரின் சொற்கள். அவரது  சகோதரி கொல்லப்பட்டிருந்தார். இவை இந்த நீதித்துறையின் மீது சாதாரண மனிதர் கொண்டுள்ள நமபிக்கையைப் பற்றி ஏராளமாகப் பேசுகின்றன.

ஆறுதலளிக்கும் செய்கை, பேச்சுவார்த்தை மேசை, உரையாடல் போன்ற சொற்கள் அரசால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு இழிவு படுத்தப்படுகின்றன. உண்மை நிலையில், எறியப் படும் கற்களுக்கு இந்தியாவின் பதில் கொடூரமான தாக்குதலாகும்.  இந்தியாவின் கண்டறிதல் எப்போதும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தாலும், உண்மையான சிக்கலை வேண்டுமென்றே மறதியின் போர்வைக்குள் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். கலகம் பாகிசுத்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., லஸ்கர் இ தொய்பா, ஆகியவற்றால் ஆதரிக்கப்படுவதாக முத்திரை குத்துவது காசுமீரின் உணர்வுகளை இன்னொரு அவமதிப்புக்கு ஆளாக்குவதாகவே காணப்படுகிறது.

எங்களுக்கு அண்டை வீட்டில் உள்ள ஐந்தாவது படிக்கும் மாணவன் கல்லெறிந்து தனது எதிர்ப்பைக் காட்ட, அவனது அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியில் வருகிறான். ஐந்தாவது படிக்கும் அந்தப் பையனுக்கு ஐ.எஸ்.ஐ நிதி அளிக்கிறதா, அல்லது அவன்தான் வேலை கேட்டுக் கூச்சலிடுகிறானா? நீதி வழங்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

துணியால் மூடப்பட்டிருந்த ஒன்பது வயது சமீர் ராவின் உடலை, ஓர் இழுவைப் படுக்கையில் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டேன். அவன் இரக்கமற்ற முறையில் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறான், அவனது உடலைக் கண்டெடுத்த போது அவனது வாயில் பாதி மெல்லப்பட்ட மிட்டாய் இருந்தது. அழுது புலம்பிய அவனது தாயின் முகத்தை என்னால் மறக்க முடியவில்லை, நான் செய்வதறியாது தெருவில் சாட்சியாக நின்றேன். ஒரு மசூதியின் ஒலிபெருக்கியில் சமீரின் நண்பனின் கண்ணீரில் நனைந்த குரல் ஒலித்தது, அது  இன்னும் எனது மூளையில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. “சமீர்!, உனது இரத்தம் புரட்சியைக் கொண்டு வரும்”

சுருள் கம்பிகள், தடுப்புகள், எரியும் உடைகள், அல்லது அவற்றின் மிச்சங்கள், நொறுங்கிய கண்ணாடிகள், சிதறிக் கிடக்கும் கற்கள் ஆகியவை காசுமீரின் ஒவ்வொரு தெருவிலும் அடையாளக் குறிகளாக ஆகிவிட்டிருக்கின்றன. “வெளியேறு இந்தியா வெளியேறு”, “விடுதலை வேண்டும்” என்ற உரத்த, தெளிவான செய்தியைச் சுவரெழுத்துகள் மூலம் காசுமீரில் உள்ள ஒவ்வொரு தெருவும் கூறுகின்றது.

ஆசாதி என்ற கருத்து காசுமீரில் உள்ள ஒவ் வொரு நெஞ்சத்துக்கும் நெருக்கமானதாக இருந்துவரும் வேளையில், துப்பாக்கிகளிலிருந்து கற்களுக்கும் முழக்கங்களுக்கும், மேலும் எதிர்ப்பின் பல வடிவங்களுக்குமான மாற்றம் நடந்து வருகிறது. தெருக்களில் அமைதியான முறையில் நடத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நசுக்கப்படும் வேளையில், மின்னணு வெளியில்  காணொளிகளாக, சித்திரங்களாக, புதுடெல்லியின் படைக்குழுக்களின் இரத்தவெறியின் உண்மை நிலைமைகள் உலகெங்கும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் நாசத்தைக் கட்டுப்படுத்துவதில் சிந்தனை தீவிரமாக இருந்து கொண்டிருக்கும்; மக்களுக்குக் கடும் சோதனைகள் வந்து கொண்டிருக்கும். இந்தக் காலங்களில், நாங்கள் எங்கள் நினைவுகளுடன் யுத்தம் நடத்த வேண்டியிருக்கிறது, இல்லாவிட்டால் நாங்கள் மறந்து போவோம். எங்கள் நினைவுதான் இதுபோன்ற காலங்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதமாகும்.

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அரசுப் படைகள் அவளை அவளது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காததால் நாற்பது நாள்களே ஆன பிஞ்சுக் குழந்தையான ஐராம் இறந்து போனாள். ஐராமின் ஐந்து வயது சகோதரியைக் கேட்டபோது கள்ளங்கபடமின்றிக் கூறினாள்: “வோ மார் கயி, மிலிடரி வாலான் னே ஜானே நஹீ தியா (“படையினர் அனுமதிக்காததால் அவள் இறந்து போனாள்.”)

நான் சிறு குழந்தையாக இருந்த போது செய்தது போல, ஐராமின் சகோதரி இந்த அறிகுறிகளைக் கொண்டு தன்னை ஒரு காசுமீரி என்று அடையாளப்படுத்திக் கொள்வாள். அவள் வளர்ந்து பெரியவளாகும்போது அவளும் கூட ஆசாதியின் (விடுதலையின்) பாடலை இசைப்பாள்.

நன்றி. ‘கன்வேயர்’ (காஷ்மீரின் ஆங்கில மாத இதழ்).

உஸ்மா பலாக்

தமிழில் : வெண்மணி அரிநரன் 

Pin It