ஆம் ஆத்மியின் தொலைநோக்கு ஆவணம் எந்த வியப்பையும் ஏற்படுத்தவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் முன்னணித் தலைவர்கள் கூறிவருவதைத்தான் எழுத்தில் வடித்திருகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் மைய அதிகாரத்தை அது வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறது, அதன் முகப்புரையை ஒப்புக்கொண்டு மேற்கோள் காட்டுகிறது. ஆனால் அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைகளை அல்லது ஜனநாயகத்தையே உயர்த்திப் பிடிக்கிறது என்று அதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. இல்லாவிட்டால் அதன் முதல் பிரிவிலேயே பின்வருமாறு கூறியிருக்காது:

“அதிகார மையங்களை அழித்த பிறகு, நாம் அதிகாரத்தை நேரடியாக மக்களிடம் ஒப்படைக்கப் போகிறோம்.” அரசியல் சாசனத்தின் கீழ் இந்தியப் பாராளுமன்றம் தான் அரசியல் அதிகாரத்தின் உயர் மையம் என்று அந்த ஆவணத்தை எழுதியவர்கள், உறுதியாக, அறியாமல் இருக்கமாட்டார்கள். இந்தக் கூற்று அராஜகமும் போனபார்டிசமும் கலந்த ஒரு விந்தையான கலவையாக இருப்பது அவர்களுக்கே தெளிவாகத் தெரியவில்லையா?

நமது அரசியல் சாசனத்தின் முகப்புரையின் தொலைநோக்கு நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்த ஆய்வு எளிமைப்படுத்தலாகவும் திசைதிருப்புவதாகவும் இருக்கிறது. முன்னாள் காலனியச் சுரண்டல் ஆட்சியாளர்களுக்குப் பதிலாக வந்த இந்திய ஆட்சியாளர்கள் “காலனியச் சட்டங்களையும் அமைப்புக்களையும்” ஒட்டுமொத்தமாக அப்படியே வைத்துக் கொண்டதுதான் அனைத்துத் தீமைகளுக்கும் குறைபாடுகளுக்கும் காரணம் என்று ஆவணத்தில் கூறப்படுகிறது. அது எந்தச் சட்டங்களையும் அமைப்புக்களையும் பற்றிப் பேசுகிறது என்ற அத்தகைய ஒரு கூற்றின் மறுபாதி உண்மையை ஒதுக்கி விடுகிறது. அது நமது சட்டமியற்றும், நிறைவேற்றும் அமைப்புக்களில் பங்கேற்பின்மை மற்றும் மறைமுக அம்சங்கள் பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறது. கூடுதலான நேரடிப் பிரதிநிதித்துவம் மற்றும் பங்கேற்பு அமைப்புக்களுக்கு ஆதரவாக வாதிடுவது ஒரு விடயம், அத்தகைய அம்சங்கள் மட்டுமே இந்த அமைப்பின் சுரண்டல் தன்மைக்குக் காரணம் என்று கூறுவது முற்றிலும் மாறுபட்ட ஒரு விடயம் ஆகும். இதைத் தான் அந்த ஆவணம் செய்கிறது.

அது கிராம சபைக்குக் கூடுதல் செயலூக்கமிக்க பங்கினை அளிக்கக் கூடிய கூடுதல் பங்கேற்பு சட்டமியற்றும் அமைப்புக்கள், நிர்வாக அமைப்புக்களைப் பரிந்துரைக்கிறது. மக்களுக்காக சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பொறுப்புடைமையை அதிகரிக்கக் கோருகிறது. சட்டமியற்றும் செயல்முறையில், “பொதுவாக்கெடுப்பு”, “முன்முயற்சி”, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் “திரும்ப அழைத்துக் கொள்ளுதல்” ஆகியவற்றை அறிமுகப்படுத்தப் பரிந்துரைக்கிறது. நிர்வாகத் துறையைக் கண்காணிக்க லோக்பால் அமைப்புக்களை ஏற்படுத்தி ஊழலை வேரறுக்கக் கோருகிறது. அனைத்தும் நல்ல விடயங்கள் தாம். இந்தப் பிரச்சனைகள் பற்றிப் பெருமளவுக்கு மக்களிடையேயும் நிபுணர்களிடையேயும் விவாதம் நடந்துவருகிறது. இந்தக் குறிப்பான பரிந்துரைகள் பற்றி விவாதிக்க இது இடமில்லை. ஆனால் இந்தப் பொருளாதார அமைப்பின் சுரண்டல் தன்மை இத்தகைய நிர்வாக, சட்டமியற்றும் அமைப்புகளை அறிமுகப்படுத்துவதால் மட்டுமே மறைந்துவிடும் என்று கருதுவது முட்டாள்தனமாகும். இந்த அமைப்பின் அடித்தளமாக இருக்கும் சுரண்டல் சக்திகள் இந்தக் கூடுதல் பிரதிநிதித்துவ மற்றும் பங்கேற்பு அமைப்புகளைச் சீர்குலைக்கமாட்டா, உண்மையாக மக்களை மையப்படுத்தும் பொருளாதார அமைப்பாக மாறுவதை எளிதில் அனுமதித்து விடுவார்கள் என்று எண்ணுவதும் முட்டாள்தனமாகும்.

ஆனால் இந்தத் தொலைநோக்கு ஆவணம் இந்த அமைப்பின் சுரண்டல் அடித்தளத்தைப் பற்றிய முக்கியமான பிரச்சனையில் முழுமையாக மௌனம் சாதிக்கிறது. பொருளாதார அமைப்பை மக்களை மையப்படுத்தியதாக இருக்கும் வகையில் மாற்றியமைப்பது பற்றி எந்த நடவடிக்கையையும் தெரிவிப்பதைத் தவிர்க்கிறது. அத்தகைய மௌனம் அந்த ஆவணத்தின் குறையாக இருக்கிறது.

அது நோயை விடுத்து அறிகுறிகளைப் பற்றி மட்டும் பேசுவதன் மூலம் குழப்புகிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் வளர்ந்துவரும் இடைவெளி பற்றி, பெரும் தொழில் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது பற்றி, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி, விலைவாசி உயர்வு பற்றிப் பேசுகிறது, ஊழலைப் பற்றியும் கூடப் பேசுகிறது. ஆளும்வர்க்கங்கள் அனைத்தும் புதியதாராளவாதக் கொள்கைகளைக் கடைபிடிப்பதில் தான் பிரச்சனையின் ஆணிவேர் இருக்கிறது என்பது பற்றி அது எங்குமே பேசுவதில்லை. ஆளும் கட்சிகள், முக்கிய எதிர்க் கட்சிகள் ஆகியவற்றின் கலவையான கூட்டணிகள், உள்நாட்டு, அயல்நாட்டு பெருமூலதனங்கள் மட்டுமின்றி புதிய தாராளவாதக் கொள்கைகளால் பயன்பெற்று, புதிதாகத் தோன்றியுள்ள வசதிபடைத்த நடுத்தர வர்க்கமும், தகவல் தொழில்நுட்பத் துறை அல்லது அதனுடன் தொடர்புடைய துறைகள், நிதிச் சேவைத்துறை, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தும் துறை, அச்சு மற்றும் மின்னூடகம், புதிய பணக்காரர்கள் மற்றும் அல்லது ஆளும்வர்க்கங்களின் உயர்மட்டங்களின் பாதுகாவலர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுவோருக்குச் சேவையளிக்கும் நிலம், வீடு விற்பனைத் துறை ஆகியவை பற்றிப் பேசுவதில்லை. ஆம் ஆத்மியின் கணிசமான ஆதரவாளர்கள் நமது சமுதாயத்தின் இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தான் தொலைநோக்கு ஆவணம் அது பற்றிக் கண்களை மூடிக் கொண்டுள்ளதா?

அந்தத் தொலைநோக்கு ஆவணம் சமகால அறிகுறிகளைப் பார்க்கிறது, தற்போதைய சூழலை நீண்டநாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் ஒரு பகுதியாகப் பார்க்க மறுக்கிறது. அதன் கவலை குறுகியகாலக் கண்ணோட்டம் கொண்டதாக இருக்கிறது. அதன் கவனம் தொலைநோக்குக் கொண்டதாக இல்லை. அது எந்தப் புரட்சிகரப் பகுப்பாய்வையோ நடவடிக்கையையோ முன்வைக்கவில்லை. எடுத்துக்காட்டாக, தலித்துக்கள், பழங்குடிகள், பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் அதன் நிலைப்பாட்டை எடுத்துகொள்ளலாம். நமது சமுதாயத்தின் சில பிரிவினருக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டுவந்த சமூக அநீதிக்காக, இடஒதுக்கீட்டை ஒரு சிறப்பு நடவடிக்கையாக அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனால் அந்த ஆவணம் இந்த நீண்டகால சமூக அநீதி வகைப்பாட்டை, “பொருளாதாரப் பின்தங்கியநிலை” க்குள் அடக்கிவிடப் பார்க்கிறது. அப்படிச் செய்வது இடஒதுக்கீட்டுக்கு எதிரான சக்திகள் எப்போதும் கடைபிடிக்கும் நிலைப்பாடாக இருந்துவருகிறது.

பயனாளி பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டால் இடஒதுக்கீட்டை மறுப்பது பற்றிப் பேசுகிறது. தொடக்கத்திலிருந்தே உயர்வருவாய்ப் பிரிவுக் கருத்தாக்கம் இடஒதுக்கீட்டின் பகுதியாக இருந்துவருகிறது. இதை ஒரு புதிய கண்டுபிடிப்பு போல, இடஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களை ஒதுக்கிவிடும் கருத்தை அந்த ஆவணம் ஏன் கூறுகிறது? இத்தகைய மேலோட்டமான ஆழமற்ற வாதங்கள் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களான உயர்சாதியினரால் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகின்றன. இதையே அந்த ஆவணமும் ஒப்புக்கொள்கிறது. அதன் தொடக்கத்திலேயே ஆம் ஆத்மி இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்த்தது. மொத்தத்தில் அந்த ஆவணம் சமூகநீதி பேசுவதெல்லாம் வாயளவில் தான், அதன் உண்மையான சேவை எங்கு செல்கிறது என்பது வெளிப்படை. இதைப் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமல்ல.

கல்வி பற்றியும் மருத்துவசேவை பற்றியும் அந்த ஆவணம் என்ன சொல்கிறது? மருத்துவப் பராமரிப்பும் கல்வியும் மேலும் மேலும் விற்பனைச் சரக்காக ஆகிவருவது பற்றி அது கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நகராட்சிகளும் அரசாங்கங்களும் நடத்தும் பள்ளிகளின் தரம், மிகுந்த செலவு வைக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்று முன்மொழிகிறது. அத்தகைய இரட்டை முறையும், அடிப்படை மனித உரிமைகள் வணிகமயமாக்கப்படுவதும் நிலைமையை எங்கும் மோசமாக்கவே செய்திருக்கின்றன. கல்வியும் மருத்துவமும் விற்பனைச் சரக்காக்கப்படுவது உடனடியாத் தடுத்து நிறுத்தப்பட்டு, பொது மருத்துவ சேவைகள் பெருமளவுக்கு விரிவாக்கப்படுவதும் பொதுவான அருகாமைப் பள்ளிகள் கட்டாயமாக்கப்படுவதும் உடனடித் தேவையாகும். அத்தகைய கோரிக்கைகள் பொதுமக்களிடையே இருப்பதோடு, அவற்றுக்கு ஆதரவாக சக்திவாய்ந்த இயக்கங்களும் இருக்கின்றன. அவையெல்லாம் இந்தத் தொலைநோக்கு ஆவணத்திற்கு ஏன் தெரியவில்லை? ஆம் ஆத்மியின் வர்க்கச் சார்புதான் இதற்குக் காரணமா?

வகுப்புவாதப் பிரச்சனை குறித்து அந்த ஆவணத்தில் ஒரு சுருக்கமான பத்தி இருக்கிறது. உண்மையான அரசியல் நிலைக்குப் பொருந்தாத, பொருளற்ற வகையில் அழகான சொற்களில் அது சொல்லப்பட்டுள்ளது. மதப் பன்மைத்தன்மையை ஒருவர் மதிக்கவேண்டும், மதம் ஒரு அரசியல் கருவியாக ஆகக் கூடாது என்று அது கூறுகிறது. அது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல இருக்கிறது. இன்றைய உண்மையான பிரச்சனை சிறுபான்மைப் பிரச்சனை, குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மை, பெரும் அரசியல் கட்சிகளின் நேரடியான அல்லது மறைமுகமான அரசியலால் பெருமளவுக்கு அன்னியப்படுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மை இளைஞர்களின் ஜனநாயக சுதந்திரமும் உரிமைகளும் இரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள், சித்திரவதைபடுத்தப் படுகிறார்கள், நீண்டநாட்கள் சிறைவைக்கப்படுகிறார்கள். அமெரிக்க-இசுரேல் ஏகாதிபத்திய மூலஉத்தியின் பகுதியான இசுலாமிய அச்சுறுத்தல் நம்முடைய உள்நாட்டு அரசியலிலும் ஒப்புக்கொள்ளப்படாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய ஒரு சூழல் வெறும் கண்துடைப்பு அறிவிப்புக்களால் மாற்றப்பட முடியாது.

அதேபோல, பழங்குடியினர் நிலங்களும் வாழ்வாதாரமும் வசிப்பிடமும் இரக்கமற்ற முறையில் பறிககப்படுவதும், “நாட்டின் பாதுகாப்புக்கு முதன்மையான அச்சுறுத்தல்” என்ற பெயரில் அவர்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தத்தை எதிர்த்த அவர்களுடைய சீற்றமிகு போராட்டமும் பற்றிய பிரச்சனையும் இருக்கிறது. அதுபற்றி, தாதுக்களும் வன நிலங்களும் உள்ளூர் மக்களின் ஒப்புதலுடன் தான் எடுக்கப்படவேண்டும் என்பது போன்ற பொருளில், ஒரு நேரடியான சொற்கள் இல்லாமல் கூறப்படுகிறது.

விவசாயப் பிரச்சனையில், அந்த தொலைநோக்கு ஆவணம் இரண்டு மிக முக்கியமான பிரச்சனைகளைத் தொடுகிறது. அவையும் அடிப்படையாக இல்லாமல் அறிகுறிகள் தொடர்பானவையாகத் இருக்கின்றன. சாராம்சத்தில், கிராமசபையின் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தப்படக் கூடாது என்றும் விவசாயிக்கு அவருடைய உற்பத்தி மதிப்பை விட 150 விழுக்காடு நியாயவிலை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இப்போது நில எடுப்புப் பிரச்சனை நிலப்பிரச்சனையின் ஒரு துணைப் பிரச்சனையாகத் தான் இருக்கிறது. முதன்மையான பெரிய பிரச்சனையைத் தீர்க்காமல் அதன் துணைப் பிரச்சனையைத் தீர்ப்பதால் ஒன்றும் விளையப்போவதிலை. வனமோ, நிலமோ, சுற்றுச் சூழலோ தொடர்பான கிராமசபை ஒப்பதல் எனபது பலநேரங்களில் வெளித் தோற்றத்திற்கு சில சட்டநடவடிக்கைகள் மூலம் பொய்யாகத் தயாரிக்கப்படுகிறது. மேலும் அரசாங்கத்தின் நில எடுப்பு நிகழ்ச்சிப்போக்கை விட, சந்தை விவசாய மக்கள்தொகையிடமிருந்து நிலத்தைப் பறிப்பது பலமடங்கு மிகுதியாக நடைபெறுகிறது. சந்தையின் இந்தத் தடுத்துநிறுத்த முடியாத தாக்குதல் குறித்து அந்த ஆவணம் எதுவும் பேசவில்லை.

விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய நியாயவிலை பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கமுடியாது. ஆனால் உலக விவசாயச் சந்தையுடன் இணைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சந்தையில் அதை எப்படி ஒருவர் உத்த்தரவாதப்படுத்த முடியும்? மிகவும் முக்கியமாக, நமது விவசாய வர்க்கத்தின் ஒரு மிகச்சிறிய விழுக்காடு தான் சந்தைக்கு கொண்டுசெல்லக் கூடிய மிகையை உற்பத்தி செய்கிறது என்பது அந்த ஆவணத்தை எழுதியவர்களுக்குத் தெரியுமா? சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் தாம் நமது விவசாய வர்க்கத்தின் 92 விழுக்காடாக இருக்கின்றனர். அவர்களுக்கு விவசாயம் என்பது பெரும்பாலும் அவர்களுடைய பிழைப்புக்கானதாக இருக்கிறது.

நிலப்பிரச்சனைக்கு எளிய தீர்வு ஒன்றும் இல்லை. லெனின் கூறியது போல, “நிலப் பிரச்சனை என்பது மூலதனத்தின் பிரச்சனையாகும்”. அதற்கு ஒருவர் எளிய, அறிகுறிகள் அடிப்படையிலான, அடையாள ரீதியிலான தீர்வுகளைக் காண முடியாது. இந்தியாவில் நிலப்பிரச்சனை அல்லது விவசாயப் பிரச்சனை உற்பத்தி முறையில் முழுமையான சீரமைத்தலைக் கோருகிறது. ஆனால் இதுவும் பிரச்சனையின் இன்னொரு தெளிவற்ற பார்வையாகும்.

வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனையில், அந்த ஆவணம், பொதுச் சேவை பதவிகளுக்கு ஒரு வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான நியமனங்கள், சிறு வணிகத்தில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிக் கடன் வசதி ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. நம்பினால் நம்புங்கள், வேலையற்றோருக்கு வேலைவாய்ப்பைத் தேடித்தரும் பொறுப்பை கிராமப் பஞ்சாயத்துகள் வசம் ஒப்படைக்கிறது. புதிய தாராளவாதப் பொருளாதாரம் வழங்கும் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி உருவாக்கும் பிரச்சனயை அந்த ஆவணம் குறிப்பிடும் எளிமையான நடவடிக்கைகளால் மாற்றிவிட முடியாது. உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பு அடிப்படையிலான வளர்ச்சி மாதிரியும் மேலும் மேலும் பெரிய அளவிலான மூலதன வருகைகளும் தாறுமாறாகச் சென்று தோல்வியை எதிர்கொண்டுள்ளவையாகும். முழுமையான பகுப்பாய்வும் முற்போக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான விருப்பமும் இல்லாவிட்டால், வேலையில்லாப் பிரச்சனயை வெற்றிகரமாகச் சமாளிக்கும் சாத்தியம் இல்லை. ஆனால் அந்த ஆவணத்தில் அந்தகைய சிந்தனை இல்லை.

அந்த ஆவணத்தின் நன்றாகத் தெரிகிற குறைபாடு அதன் குறுகிய பார்வையாகும். குறுகிய, உள்ளீடற்ற பார்வைக்குள் அது முடங்குகிறது. இந்திய அரசியல் பிரச்சனைகள் அதன் சொந்த எல்லைக்குள் அடங்கிவிடுவது போலப் பேசுகிறது. அதன் எல்லைகளுக்கு அப்பால் எந்தப் பிரச்சனையும் இல்லாதது போலப் பேசுகிறது. உண்மையில், எல்லைப் பகுதி மாநிலங்களிலும் எல்லைப் பகுதிகளிலும் வாழும் நமது சொந்த மக்களின் பல உண்மையான பிரச்சனைகளிலிருந்து அது ஒதுங்கிக் கொள்கிறது. நமது எல்லைகளுக்கு அப்பால் எந்த உலகமும் இல்லை என்பது மட்டுமின்றி, எல்லைப் பகுதிகளும் மக்களும் இல்லை என்பது போலவும் இருக்கிறது.

முதலில் எல்லைப்பகுதி மக்களின் பிரச்சனைகளைப் பார்ப்போம். காஷ்மீர் பற்றி அந்த ஆவணத்தில் எதுவுமே இல்லை எனலாம். ஆம் ஆத்மியின் முன்னணியில் உள்ள (துணிவும் ஒப்படைவும் கொண்ட) ஒருவர் இந்தப் பிரச்சனையில் நேர்மையான, ஒப்புக்கொள்ளக் கடினமான ஒரு கருத்தைத் தெரிவித்தார். அது உடனேயே தீவிர வலதுசாரி, அதிதீவிர தேசபக்த, மேலாதிக்க வட்டாரங்களிலிருந்து தீவிரமான எதிர்ப்பையும் மோசமான எதிர்க்கருத்தையும் தூண்டிவிட்டது. ஒருவேளை அதன் காரணமாக இந்த விடயத்தில் அந்த ஆவணம் மௌனம் சாதித்திருக்கலாம்.

இந்தியாவின் பிற பகுதிகளில் ஊழலுக்கு எதிரான போராட்டம், பங்கேற்பு மட்டும் நேரடி ஜனநாயகத்தை நிறுவுவது ஆகியவை காஷ்மீர் பிரச்சனயை விட மிகவும் முக்கியமானதாக ஆம் ஆத்மிக்குத் தெரிந்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், அந்தத் தொலைநோக்கு ஆவணத்தின் குறுகிய பார்வையை மறைப்பது கடினமே.

அதே கண்ணோட்டத்தில், அமெரிக்க-இசுரேல் கூட்டுப் புதிய ஏகாதிபத்தியம் பற்றியோ, நமது எல்லைகளில் அதன் அச்சுறுத்தல் பற்றியோ, ஒட்டு மொத்த மேற்காசியாவில் உள்ள கொந்தளிப்புப் பற்றியோ அந்த ஆவணத்தில் எதுவும் இல்லை. காலப் போக்கில் அந்த ஆவணத்துடன் இன்னொரு அத்தியாயம் சேர்க்கப்படவேண்டும் என்று கூறவரவில்லை. அரசியல் அதிகாரத்தின் கடிவாளத்தைப் பற்றிக்கொள்வதை எதிர்பார்க்கும் ஒரு அரசியல் கட்சி உலகளாவிய நிகழ்ச்சிப் போக்குகள் பற்றி, குறிப்பாக, நமது அரசியலிலும் சமுதாயத்திலும் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும், புதிய ஏகாதிபத்தியத்தின் முன்னேறிக் கொண்டிருக்கும் கொடுங்கரங்கள் பற்றி முற்றிலும் மௌனம் சாதிப்பது என்பது திகைக்கவைக்கும் ஒன்றாக இருக்கிறது. அது வெறும் குறுகிய நோக்கு தானா? அல்லது அந்த நிகழ்ச்சிப் போக்குகளை மௌனமாக ஆதரிப்பதா? அது தோன்றிக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மியின் வர்க்க அடிப்படைக்கு வரவேற்கத்தக்கதாக இருக்கலாமோ?

அடிப்படையான விடயங்களில் இவ்வாறு முழுமையாக மௌனம் சாதிப்பதுடன், அதற்கு ஈடாக அற்ப விடயங்களுக்கு அளவுக்கு அதிகமான விவரம் காணப்படுகிறது. இருபது பக்க ஆவணத்தில் மூன்று முழுப் பக்கங்களில், கட்சிப் பிரச்சாரத்தை எவ்விதம் மேற்கொள்வது, தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், தேர்ந்தெடுக்கப்படுகிற உறுப்பினர்கள் எவ்விதம் வாழ்வார்கள், எவ்விதம் பயணம் செயவார்கள் என்பன போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளதை வேறு எப்படி விளக்குவது?

_______________________________________________________
*ஆம் ஆத்மியின் பெயரில் இந்தியில் வெளியிடபட்ட தொலைநோக்கு ஆவணம் www.aamaadmipary.org இல் பிரசுரிக்கபட்டுள்ளது.

நியூஸ்கிளிக்.

தமிழில்: வெண்மணி அரிநரன்

Pin It